இதழ்: 25     ஐப்பசி (November 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
   
சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ.
--------------------------------
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர் - டிராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
இயக்குனர் ப. ரஞ்சித் நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் - சரவணன்
--------------------------------
இயக்குனர் கமலக்கண்ணன் நேர்காணல் - காளிமுத்து
--------------------------------
இயக்குனர் நவீன் நேர்காணல் - ஜெயகாந்தன்
--------------------------------
இயக்குனர் ரமேஷ் நேர்காணல் - அருண் தேவா
--------------------------------
இயக்குனர் வினோத் நேர்காணல் - ஐயப்பன்
--------------------------------
தயாரிப்பாளர் சி.வி. குமார் நேர்காணல் - யுகேந்தர்
--------------------------------
தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் நேர்காணல் - தமிழரசன்
--------------------------------
   

   

 

 

"சதுரங்க வேட்டை” இயக்குனர் வினோத் - நேர்காணல்


மாற்று பாடங்கள் என்ற ஒன்று இல்லை

- ஐயப்பன்

உங்கள் பால்யகால வாழ்க்கை பின்னணி குறித்து?

என் அப்பா விவசாயம் மற்றும் ௯ட்டுறவு வங்கியில் வேலை பார்த்தார் .நான் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு சென்னையில் மூன்று வருட டிப்ளமோ முடித்து, பல நிறுவனங்களில் வேலை பார்த்தேன், ஆனால் எந்த வேலைகளிலும் ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை .குறிப்பிட்ட வேலையில் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை எனும்போது அடுத்த வேலைக்குச் செல்வேன். இதற்கிடையில் எங்கள் ஊர் வழக்கப்படி சிங்கப்பூர்ல வேலைக்கு முயற்சி பண்ணினேன் .இந்தசமயத்தில்தான் ஏன் திரைப்பட துறைக்கு போகக்கூடாது? என்ற எண்ணம் தோன்றியது, அடுத்த ஆறு மாதத்தில் நண்பர் தொடர்பில் பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பச்சை குதிரை படத்தில் ஒன்றரை ஆண்டுகள் வேலைபார்த்தேன் .அதன் முடிவில் எனக்கு ஒரு விஷயம் தெளிவாகதெரிந்தது அது ”சினிமாவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பது.
அதன் பிறகு யாரிடமும் வேலை பார்க்கவில்லை.அடுத்த முன்று ஆண்டுகளும் சினமாவை பற்றி படிப்பது,பேசுவது,படங்கள் பார்ப்பது என்று, சிறுபயிற்சிகளில் கலந்துகொள்வது என்று நாட்களை செலவிட்டேன். பின்பு ராஜுமுருகனின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் ”சந்திரபாபு” என்ற படத்தில் வேலைபர்த்தேன். ஆனால் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது, அவரிடம் நிறையவே கற்றுக்கொண்டேன் . அடுத்து ”கோலிசோடா”வின் முதல்பாதியில் வேலைபார்த்தேன். அப்போது பண்ணிய கதைதான் ”சதுரங்கவேட்டை”.


தீவிர வாசிப்பு பழக்கம் உண்டா ?

உண்டு. தீவிரமாக வாசிப்பேன் என்று சொல்லமுடியாது. அதிகபட்சமாக ஜி.நாகராஜன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று வாசிப்பேன். என்னை ஈர்க்கும் எழுத்துகளை படிப்பேன் என்று சொல்லலாம் .பிரமிள், புதுமைப்பித்தன் போன்றவர்களின் எழுத்துக்கள் பக்கம் போனதில்லை.

குறும்பட இயக்குனர்கள் பற்றி?

குறும்பட இயக்குனர்கள் தான் ஏற்கனவே இருந்த பெரிய இயக்குனர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். புதிய இயக்குனர்களின் வருகை, புதிய சிந்தனைகளின் வருகையும் நிகழவே செய்யும். அதை தவிர்க்க முடியாது. அதேசமயம் குறும்படம் இயக்கியது மட்டும் தகுதியாக கொள்ள முடியாது. நலன் குமாரசாமியோ, கார்த்திக் சுப்புராஜோ அப்படி வந்தவர்களாக நான் நினைக்கவில்லை.ஒன்பது, பத்து ஆண்டுகளாக திரைப்படங்களை பற்றி படித்து ,அதைக் கவனித்து, ஒரு முழு திரைப்படம் இயக்கம் தகுதியோடுதான் அவர்கள் திரைப்படத் துறைக்கு வந்ததாக நான் நினைக்கிறேன். குறும்படம் இயக்கியதை மட்டும் தகுதியாக கொண்டவர்கள் வெற்றிபெறவில்லையே.

சதுரங்கவேட்டையை முதல் படமாக பண்ண என்ன காரணம்?

பெரிய காரணம் ஒன்றுமில்லை. தேவைதான். அஜித், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணத்தான் வருகிறோம், ஆனால் அப்படி முதல் படம் பண்ணுவது ரொம்ப கடினம் .ரொம்ப அரிதாகவே முதல் படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கிறது.ரொம்ப பெரிய ஹீரோக்கள் பக்கம் போகாமல் மிடில் ஹீரோக்களை வைத்து படம் பண்ணலாம்னு தீர்மானித்தேன். அந்த நேரத்தில்தான் குறும்பட இயக்குனர்களின் வருகை நிகழ்ந்தது. ”பிட்சா”, ”நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” போன்ற படங்களின் வெற்றி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது, ஐம்பதுலட்சத்தில் கதை , ஒரு கோடியில் கதை சொல்லுங்கள் என்று புதிய தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுக்க தொடங்கினார்கள். இதைப் பார்த்து பெரும் தயாரிப்பளர்களும் இதையே சொல்ல தொடங்கினார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து, நான் கேட்ட சில சுவாரசியமான சம்பவங்களை இணைத்துப் பண்ணிய கதைதான் சதுரங்கவேட்டை.

உங்கள் படத்தில் தீமையை ஹீரோயிசத்துடன் முன்வைப்பதை பற்றி?

ஆமாம், உண்மைதான். ஒரு படம் பண்ணவேண்டும் என்று தீர்மானத்துடன் நான் முதலில் பார்த்தது பணம் போட்டு தயாரிப்பவருக்கும் பணம் கொடுத்து பார்க்கும் பார்வையாளனுக்கும் அது நேர்மையான பிசினஸ் ஆக இருக்கவேண்டும் என்பதுதான் .என் முதல்படத்திற்கு பிறகு எனக்கு அடுத்த படம் கிடைக்கவேண்டும். இது என் வாழ்க்கை சம்மந்தப்பட்ட ஒன்று.

நான் கணக்கில் எடுத்துக்கொண்டது , நான் எப்படிப்பட்ட பார்வையாளனுக்கு படம் பண்ணுகிறேன் , அவர்களுடைய ரசனை, திரைப்படம் பற்றிய புரிதல், அவர்களுடைய அரசியல் புரிதல், அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைத்தான் கவனத்தில் கொண்டேன். அடுத்து தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு, அவர்களிடம் புதிதாக ஒரு விஷயத்தை சொல்லியெல்லாம் சம்மதிக்க வைக்கமுடியாது. கதைக்களம் புதிதாக இருக்கவேண்டும் அதேசமயம் தமிழ்சினிமா போலும் இருக்கவேண்டும். அல்டிமேட்டாக ஒரு புதிய விஷயத்தை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். அவர்களுக்கு தெரிந்தவிசயமாக இருக்கவேண்டும் அதேசமயம் தெரியாத களமாக இருக்கவேண்டும். ஒரு con திரைப்படம் பண்ணலாம் என்று நினைத்தேன். ஏனெனில் அதை யாரும் இதுவரை பண்ணவில்லை, எனக்கு இது ஆச்சிரியமாக இருந்தது. என்னுடைய கதை துண்டுதுண்டு சம்பவங்களாக இருந்தது, இவற்றை சுவாரசியமாக இணைக்க வேண்டும், பார்வையாளனை தொடர்ந்து கதையை பின்தொடர செய்யவேண்டும், அவன் கவனம் சிதறக்கூடாது. எந்தக் கதாபத்திரத்தை வைத்து இதைச் செய்யலாம் என்று வரும்போது ,கதாநாயகனைவைத்து இதைச் செய்யலாம் என்று தீர்மானித்தேன். அதற்காக அந்தக்கதாபத்திரத்தை வலிமையாக உருவாக்கினேன். அவன் புத்திசாலிதனத்தை பார்வையாளனை ரசிக்கும்படி செய்துவிட்டால் முக்கால்வாசி வேலைமுடிந்தது. நான் நன்மை, தீமை என்ற விசயத்துக்குள்ளேயே போகவில்லை. நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றோ அவன் கடைசியில் திருந்தவேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை.

.ஈ.மு கோழி போன்ற மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டது கீழ் நடுத்தர வர்க்க மக்கள்தான் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை ஒரே நாளில் இழந்தார்கள். இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு படத்தில் எந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே ?

எப்படி கொடுக்க முடியும்? நான் கதை சொல்வது ஏமாற்றுபவனின் point of view எனவே பாதிக்கபட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது . நான் ஏமாந்தவர்களின் கதையை எடுக்கவில்லையே. ஏமாத்துபவனின் கதையை அல்லவா எடுத்திருக்கிறேன்

அப்படி என்றால் திரைப்படங்களை வியாபாரம் என்று மட்டுமே சொல்கிறீர்களா?

நான் முன்பே சொன்னதுதான் பணம் போடுபவருக்கும், பணம் கொடுத்து பார்ப்பவர்களும் லாபகரமாக இருக்க வேண்டும். ஆனால் நேர்மையான பிசினஸ் ஆக இருக்க வேண்டும். சின்னதாக அறிவுரை சொல்லலாம் சின்னதாக பொழுதுபோக்கு பயன்படுத்தலாம் சின்னதாக அரசியல் பேசலாம் அவ்வளவுதான் பண்ண முடியும் சினிமாவில் புரட்சி பண்ண முடியாது சினிமா மூலமாக ஏகப்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டு விட்டன அதையெல்லாம் மக்கள் எடுத்துகொண்டு இருந்தால் மிகபெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

நான் bussines பண்ணுவதை பற்றி சொல்லவில்லை திரைப்படத்தை கலை பூர்வமாக அணுகுவதைப் பற்றி கேட்கிறேன்?

எனக்கு கலை பற்றி எந்த அறிவும் கிடையாது.

விவசாயம், ஈழம் பற்றி அதிகமாக பேசுகிறோம் ஆனால் அவைகளைப் பற்றி திரைப்படங்கள் எடுப்பதில்லை. நீங்கள் விவசாய பின்னணியை கொண்டவர் என்பதால் விவசாயத்தை பற்றி படம் இயக்குவீர்களா?

விவசாயத்தில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. நான் diploma படிக்கும் போது நிறைய வேலை வாய்ப்புகள் இருந்தது ஆனால் நான் படிப்பை முடித்து கொண்டு வெளியே வரும் போது do n fall. பல நிறுவனம் மூடப்பட்டன. நான் அப்பாவிடம் சென்று ஊரிலேயே விவசாயம் செய்கிறேன் எனக்கு அது தான் பிடித்திருக்கிறது என்று சொன்னேன். எனக்கு விவரம் தெரிந்து அன்றுதான் அப்பா என்னை கடுமையாக திட்டினார்., விவசாயிக்கே விவசாயம் பிடிக்கவில்லை , காரணம் என்னனு பார்த்தா விவசாயிகள் ஆண்டு முழுவதும் உழைத்தும் மிக குறைவாக சம்பாதிக்கிறார்கள், ஆனால் வேறு தொழில் செய்பவரோ, சாப்ட்வேரில் இருப்பவரோ, வெளிநாடு செல்பவரோ , கார் ,நல்ல வீடு என்று வசதியாக இருக்கிறார்கள் ,எனவேதான் விவசாயிகள் தங்களின் அடுத்த தலைமுறையை விவசாயத்தில் ஈடுபடுத்துவதில் விருப்பம் கொள்ளவில்லை. நிலத்தை விற்றாவது தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்க நினைக்கிறார்கள் . எனக்கு விவசாயத்தில் விருப்பம் இருந்தும் அதில் ஈடுபடமுடியாமல் போய்விட்டது.

விவசாயம் சார்ந்த கதைகளைத் தாரளமாக பண்ணலாம், அதற்கான கதைகள் கூட என்னிடம் இருக்கிறது அனால் இப்போது பண்ண முடியாது. அதை நம்முடைய பணத்தில் பண்ணவேண்டும் என்று நினைக்கிறேன்.

படம் பார்க்கும் போது ரெஸ்ட்லேஸ் (Restless) ஆக உணர்ந்தேன். அதைப் பற்றி ?

ஆமாம் உண்மைதான். படம் ரொம்ப ரேசஸ்ட்லேஸ் ஆக இறுக்கும், எனக்கும் அந்தப் பயம் இருந்தது . படத்தை பார்வையாளர்கள் எற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது பார்வையாளர்கள் படத்தின் ஒரு காட்சியை புரிந்து கொள்வதற்குள் அடுத்தடுத்து சம்பவங்கள் வந்துவிடும். அனால் அதுவே தான் படம் வெற்றி அடைந்ததற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

உங்களைப் போன்ற சிலரை புதிய அலை இயக்குனர்கள் என்றும் உங்கள் படங்களை மாற்று படங்கள் என்று முன்வைக்க படுவதை எப்படி பார்க்கிறீர்கள் ?

மாற்று பாடங்கள் என்ற ஒன்று இல்லை. இருப்பதெல்லாம் இரண்டே படங்கள்தான், ஓடும் படங்கள் ஓடாத படங்கள், அவ்வளவுதான் சம்பாதிக்கும் படம், சம்பாதிக்காத படம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </