இதழ்: 25     ஐப்பசி (November 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
   
சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ.
--------------------------------
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர் - டிராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
இயக்குனர் ப. ரஞ்சித் நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் - சரவணன்
--------------------------------
இயக்குனர் கமலக்கண்ணன் நேர்காணல் - காளிமுத்து
--------------------------------
இயக்குனர் நவீன் நேர்காணல் - ஜெயகாந்தன்
--------------------------------
இயக்குனர் ரமேஷ் நேர்காணல் - அருண் தேவா
--------------------------------
இயக்குனர் வினோத் நேர்காணல் - ஐயப்பன்
--------------------------------
தயாரிப்பாளர் சி.வி. குமார் நேர்காணல் - யுகேந்தர்
--------------------------------
தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் நேர்காணல் - தமிழரசன்
--------------------------------
   

   

 

 

இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல்

நம்மை ஒருபடியாவது மனதளவில் உயர்த்தும் படங்களை எடுக்க வேண்டும்

- கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

வழக்கமான மசாலா பாணிகளை தவிர்த்து, பெரும் வணிக சமரசங்கள் இன்றி, ஒரு வித்தியாசமான முயற்சியாய் வந்து வெற்றிபெற்ற, பல அடுக்குகளில் கவனிக்கப்பட்ட திரைப்படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன், திரைப்பட கல்லூரியில் படத்தொகுப்பு பயின்றவர். அவரின் பாதையைப் பற்றியும் படங்களைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் ஒரு நீண்ட நேர்காணல்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம், வழக்கமான மசாலா பாணிகளை விட்டு சற்றே விலகியிருந்தது. இது உங்களின் திரைக்கல்வி, உங்கள் சினிமாக்களின் வடிவங்களுக்குமான முதல்படியா?

உண்மைய சொல்லனும்னா நான் அத ப்ளான் பண்ணி பண்ணல. நான் மசாலா படங்களை ரசிக்காதவன் அல்ல. நிறைய படங்களை ரசித்திருக்கிறேன். ஆனால், சிறு வயதில் என் வாசிப்பு பழக்கம் மிக அதிகமாக இருந்தது. புரிகிறதோ இல்லையோ, ஒரு கதை நன்றாக இருக்கிறது என்று யாராவது சொன்னால், உடனே அதை வாங்கி படித்துவிடுவேன். நான் திரைப்படக் கல்லூரியில் குறும்படங்கள் எடுக்கும்போதுதான், சிறுகதைகளின் அமைப்பு எப்படி இருக்கின்றது என்பதை சிந்திக்க தொடங்கினேன். மிகவும் சிறிய சிறிய விஷயங்களில் இருந்து கதை உருவானதை பார்க்க முடிந்தது. அதன் மூலம் நான் உணர்ந்த முக்கியமான விஷயம், ஒரு கதையை சொல்லவேண்டும். அதற்கு தேவையில்லாததை சொல்லக் கூடாது. தேவையில்லாத விஷயங்களை சொல்லும்போது தான் போரடிக்கும். சொல்றதுக்கு விஷயம் இல்லனா தான் தேவையில்லாத விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கும். சொல்றதுக்கு விஷயம் இருக்கும்போது, அத தெளிவா சொல்றதுதான அவசியம். அதனால பாட்டு, சண்டை போன்ற விஷயங்கள் பத்திலாம் நான் யோசிக்கல. அது தேவையும் படல. ஒருவேளை, கமர்ஷியல் சினிமா படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருந்தால், எனக்கு அந்த எண்ணங்கள் வந்திருக்குமோ என்னமோ தெரியவில்லை. ஆனால் நான் பிற இயக்குனர்களின் கதை விவாதங்களில் கலந்து கொண்டபோது கூட, தேவையில்லாமல் பாடல்கள் திணிக்கப்படுவதை எதிர்த்திருக்கிறேன். அதெல்லாம் கதையை டைலுட் பண்ற மாதிரி இருக்கும். நான் மனசுல வச்சுகிட்ட ஒரே விஷயம் என்னன்னா, நான் புது இயக்குனர். எனக்கு பெரிய ஸ்டார்களை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு இருக்காது. அதனால் ஒரு குறைந்த பட்ஜெட்டில் ஒரு சுவாரசியமான படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படி ஒரு கதையை எழுதி முடித்து, என் தயாரிப்பாளர் ராஜ்குமாரிடம் சொன்னபோது, ‘இந்த கதையில் பாட்டு இருக்கக்கூடாது, இப்ப இருக்கற மாதிரியே எடுங்க’ என்று சொன்னார். அனைவரின் முன்கதையை சொல்லும் பாடல் மட்டும் அவர் கொடுத்த யோசனை.

ஆனால் பட வியாபாரத்தில் பாடல்கள் இல்லையென்ற விஷயம் எங்களுக்கு பெரும் தடையாக வந்தது. பாடல் இல்லாததால் அதை வாங்குபவர்களிடம் ஒரு பெரும் தயக்கம் இருந்தது. இத்தனைக்கும் இது ஒரு காமெடி படம்தான். ஆனால் அதற்கே இந்த நிலைமை. அப்போதுதான் வேறு ஒரு உலகம் இருப்பது தெரிந்தது.

மிக முக்கியமான, ந.கொ.ப.கா திரைப்படம், கதாநாயக பிம்பத்தை வேறு கோணங்களில் காட்டியது. தமிழ்த்திரைப்பட சூழலில் புரையோடியிருக்கும் கதாநாயக பிம்பம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

இத ரெண்டு வகையா பார்க்கலாம். ஒன்று, இப்படிலாம் ஒருத்தன் இருந்தா, இப்படிலாம் அவன் செஞ்சா எப்படியிருக்கும் என்ற கற்பனையில் எழுதுவது. இன்னொன்று, நிஜ வாழ்வின் பிரதிபலிப்பாக அந்த கதாப்பாத்திரம் இருக்கலாம். என் படத்தில் வரும் ப்ரேம் கதாப்பாத்திரம் அப்படியே எனது ஒளிப்பதிவாளர் நண்பன் ப்ரேம்தான். நாம் வாழ்க்கையில் இருந்து ஒரு கதாப்பாத்திரத்தை எடுக்கும்போதே ஒரு புதிதாகத்தான் தெரியும். ஆனா, ஒரு ஹீரோ என்று முடிவானவுடன், அதன் பின்னால் இணைக்கப்படும் பல க்ளிஷேக்கள் தான் மிகவும் அலுப்பூட்டும். துருதுருவென்று இருப்பது, பெண்கள் பின்னால் சுத்தாமல் இருப்பது, அல்லது பெண்கள் பின்னால் சுத்துவது என்று ஒரே போன்று வருவதால் போரடித்துவிடுகிறது. அப்படி துருதுருவென இருப்பதற்கு பதிலாக சோம்பலாம் ஒருத்தன் இருப்பான்னு கூட வைக்கலாம். அட்லீஸ்ட் இதுவாவது புதிதாக இருக்கும்.

தமிழ்த் திரைப்படங்களில் திணிக்கப்படும் பாடல் காட்சிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் படத்தில் கூட பாடல்கள் இல்லையென்றாலும், இடைவேளைக்குப் பின் ‘ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க’ என்ற கார்டுடன் ஒரு பாடல் வரும். அது வணிக ரீதியான சமரசத்திற்கான முயற்சியா?

கிட்டத்தட்ட உண்மைதான். வணிக ரீதியான வேண்டுகோளுக்காகத்தான் அது சேர்க்கப்பட்டது. டிஸ்ட்ரிபியூட்டர்கள் உள்ளிட்டவர்கள் ஒரு பாடல் இருக்கவேண்டும் என்று சொன்னதால், அதனால் படத்தின் வியாபாரத்தில் தடை வந்ததால், வேறு வழியில்லாமல், டிவி ப்ரோமோஷனுக்காக ஷுட் செய்த அந்த பாடலை இடைவேளைக்கு பின் சேர்த்தோம். அதை படத்திலேயே சேர்க்க சொன்னார்கள். அது இன்னும் ஆபத்தானது. அதனால்தான் இடைவேளைக்குப் பின் சேர்த்தோம். மற்றபடி, ரசிகர்கள் எங்க கேட்டாங்க நம்மட்ட ?
மத்தபடி, படத்தை எந்த ஜானரில் எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்துதான் பாடல்களுக்கான தேவையிருக்கிறது. கதையை நகர்த்தும் மாண்டேஜ் பாடல்கள் என்றால் பரவாயில்லை. ஆனால், யதார்த்தமாக படம் எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு, 5 நிமிடங்கள் படத்தை நிப்பாட்டி, உதட்டசைப்போடு நாயகன் பாடும்போது, அங்கேயே அந்த யதார்த்தம் நின்றுவிடுகிறதே. மற்றபடி, ஒரு ஃபேண்டசி படம் என்றால், அங்கே இதுபோன்ற பாடல்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, எடுத்துககொள்ளும் ஜானர்தான் பாடலின் அவசியத்தை தீர்மானிக்கும்.

திரைக்கல்லூரி மாணவனாக இருக்கையில் குறும்படங்கள் எடுத்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் குறித்து…

நான் திரைக்கல்லூரியில் எடிட்டிங் படித்தேன். அதுதான் படத்திற்கு தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் படத்தில் வைக்கக்கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது. எனக்குத் தெரிந்து எடிட்டிங்கும் டைரக்சனும் வேறு கிடையாது. அதனால்தான் உலகளவில் பல எடிட்டர்கள் இயக்குனர்களாக மாறியிருக்கின்றனர்.
நான் முதலில் நண்பர்களின் குறும்படங்களுக்கு படத்தொகுப்பு செய்து வந்தேன். அப்படி செய்த ‘பரமபதம்’ என்ற படத்திற்கு என் நண்பருக்கு தேசிய விருது கிடைத்தது. அங்கு கிடைக்கும் ப்லிம்களின் அளவால், மிகத் தெளிவாக திட்டமிட்டு, ஷாட் டிவிஷன் செய்து, படம் எடுத்தோம். அதனால் நிறைய டிஸ்கஸ் செய்தோம். அது எனக்கு நெட் ப்ராக்டீஸ் போல அமைந்தது. அப்படி நான் படத்தொகுப்பு செய்த ‘சுவடுகள்’ குறும்படத்திற்கு மாநில விருது கிடைத்தது.

அதன்பின், பரமபதம் எடுத்த நண்பருக்கு குறும்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அதற்காக கதை ஏதும் இருக்கிறதா என்று எனக்கு கேட்டார். நான் என் நிஜ வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னேன். எல்.எல் சந்துரு ஃபோர்த் பி. பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் எனக்கு சிறுவயதில் முத்தம் கொடுக்கையில் தெரியாமல் அது உதட்டில் பட்டுவிட்டது. அதன்பின் எனக்கு ஒரு பயம் வந்துவிட்டது. அந்த அக்கா முத்தம் கொடுத்துட்டாங்களே. இதனால அவங்க கர்ப்பம் ஆய்டுவாங்களோ. நான் அப்பா ஆய்டுவேனோ. நான் அப்பா ஆய்ட்டா எங்கப்பா எப்படி ஒத்துப்பாரு என்று நிறைய பயந்தேன். அப்போலாம் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. டிவியில் பாடல்களில், முத்தம் கொடுக்கும்போது முகத்தை திருப்பிக்கொள்வார்கள் அல்லது மறைத்துக் கொள்வார்கள். அன்று வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது காலில் அடி. சரி கடவுள் தண்டிக்க ஆரம்பிச்சுட்டாரு என்று பயந்தேன். ஆனால் அந்தக்கா கர்ப்பம் ஆகவில்லை. ஆனால் அப்பப்போ அந்த பயம் வந்துபோகும். இந்த பயம் விலக பல வருடம் ஆகியது.

இதுபோன்ற ஒரு சூழலில், நிஜத்தில் வேறு ஒரு காரணத்தால் அந்தக்கா கர்ப்பம் ஆகியிருந்தால், இந்த சிறுவன் நிலை என்ன ஆகியிருக்கும் என்று யோசித்து கதை செய்தோம். அதை ப்லிமில் எடுத்தோம். ஆனால் முழு திருப்தியோடு அந்த படம் எடுக்கப்படவில்லை. ஆனால் அது எங்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. நாம் என்ன எடுத்தாலும் அதை தெளிவாக சொல்லிவிட வேண்டும் என்ற பாடத்தை கற்றேன்.
அதன் பின் ‘சம்மர் லீவுல’ என்ற குழந்தைகள் படத்தை எடுத்தேன். ஐந்தாம் க்ளாஸ் படிக்கும் பையன் சம்மர் லீவில், வெளிநாட்டில் இருந்து வரும் அவனது அத்தை பெண்ணுடன் சேர்ந்திருக்கிறான். அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகள்தான் படம். அதை வைத்து கதை செய்து அந்த குறும்படத்தை எடுத்தேன். அதற்கு பல அங்கீகாரங்கள் கிடைத்தது. அந்த படம்தான், என்னால் படத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

அந்த சமயத்தில் எனக்கு உதவி இயக்குனர் வேலையை குறித்த பெரிய பயத்தை அனைவரும் ஏற்படுத்தியிருந்தார்கள். அடிப்பார்கள், திட்டுவார்கள் என்று என்னென்னவோ சொல்லி பயமுறித்தியிருந்தார்கள். நான் உதவி இயக்குனராக யாரிடமும் சேராததற்கு முக்கிய காரணமே அதுதான். அந்த சமயத்தில் இந்த படம் பெரும் பலத்தை கொடுத்தது. நமக்குத் தெரிந்த கதையை தெளிவாக சொல்ல வேண்டும். அவ்வளவுதான். இயக்கம் எளிது என்று தோன்றிது. ஒரு அம்பு விட்டுட்டு, சுற்றி வட்டம் போட வேண்டும். வெளியில் இருந்து பார்த்தால், வட்டத்தில் அம்பு விட்டது போல் இருக்கும்.

தமிழ்நாட்டில் குறும்படங்களுக்கான வீச்சு எந்தளவில் இருக்கிறது? குறும்படங்களின் மைய நோக்கமும் பயன்பாடும் எதுவென்று நினைக்கிறீர்கள்? தற்போது குறும்படங்கள் திரைப்படங்களுக்குள் நுழையும் துருப்புச்சீட்டாகவே பயன்படுத்தப் படுகின்றது. அதனாலேயே குறும்படங்கள் தங்களின் வீரியத்தை இழந்து வணிக மசாலாக்களுக்குள் சிக்கிக் கொள்வது போல் உருவாக்கப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து?

ஆமாம். உண்மைதான். ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது அதைச் சுற்றி சில கெட்ட விஷயங்கள் நடக்கும் இல்லையா, அதுபோல் இதுவும். நானும் சில குறும்பட வெளியீடுகளுக்கு சென்றிருக்கிறேன். சரியான கதை இல்லை, நோக்கம் இல்லை. ஆனால் அவர்களே பாராட்டிக்கொண்டு, விருது கொடுத்து, பேட்டி கொடுத்து, இணையத்தில் போட்டு அதன் வெற்றியை கொண்டாடி என்று நிறைய நடக்கிறது. இது தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நிறைய பேரின் நோக்கம் இது மட்டுமாகவே இருக்கிறது. நம் படத்தை யாராவது பாராட்டினால் அது மகிழ்ச்சிதான். ஆனால் அந்த புகழ்ச்சிக்கும் பெருமைக்குமாக மட்டுமே நிறைய குறும்படங்கள் எடுக்கப்படுகிறது. அதுதான் தவறு. நான் அனைவரையும் குறை கூற மாட்டேன். ஆனால் நானும் சில விழாக்களுக்கு சென்றிருக்கிறேன். அதை வைத்து கூறுகிறேன்.

நாங்கள் குறும்படங்கள் எடுக்கும்போது, எங்களுக்கு மனத்தில் நினைத்த கதையை தெளிவாக எடுக்க வேண்டும் என்ற கலைநோக்கமும் ஆசையும் மட்டுமே இருந்தது. அதன் பின் அதை தயாரிப்பாளரிடம் போட்டு காண்பிப்பது வேறு. ஆனால் இப்போது, குறும்படம் எடுக்கும்போதே, இந்த நோக்கத்திற்காக எடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.

அடுத்தது, சில கதைகள் குறும்படங்களாத்தான் எடுக்க முடியும். சிறுகதையை போன்றது ஒரு குறும்படம். அதை நாவலாக்க முயலக்கூடாது. அதன் வடிவம் மாறினால் கருத்து சிதைந்துவிடும். எனக்கு ஒரு கதை தோன்றியது. நல்ல சுவாரசியமான கதை. ஆனால் அது 90 நிமிடத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் அதை என்னால் இரண்டரை மணி நேரத்துக்கு இழுக்க முடியாது. அதனால் அதை தள்ளிவைத்தேன். இன்னும் கூட குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

ஆவணப்படங்களின் முக்கியத்துவம் என்னவென்று நினைக்கிறீர்கள்? அது நம் சமூகத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றதா? அதற்கான ஏற்பாடுகள் எப்படி இருத்தல் வேண்டும்? குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சந்தைப்படுத்த நீங்கள் முன்வைக்கும் யோசனை என்ன? இணையத்தில் படங்களை போடுவதின் மூலம் அதற்கான சந்தை உருவாகாமல் போய்விடும் அல்லவா?

ஆமாம். அது உண்மைதான். அப்படிச் செய்கையில் சந்தை உருவாகாமல்தான் போய்விடும். ஆவணப்படங்களின் முக்கியத்துவம் இங்கே உணரப்படவில்லைதான். ஆனால் ஆவணப்படங்களுக்கு பெரிய சந்தை உருவாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கே எல்லாமே எண்டர்டெயின்மெண்ட் சார்ந்து மாறிவிட்டது. ஆனால் நாம் செலவளித்து ஒரு ஆவணப்படம் எடுத்து, ஒரு சந்தையில் மதிக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான். அதனால் அதை எடுப்பவர்களுக்கான சர்வைவல் என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆனால் இப்போது சமீபமாக, பெரும் திரையரங்குகளில் சில ஆவணப்படங்கள் திரையிட்டார்கள். டிவிடிக்களும் விற்கின்றன. இதுபோன்ற விஷயங்களைப் பார்க்கும் போது ஒரு சிறிய நம்பிக்கை வருகிறது. ஆனால் இதுபோன்ற ஆவணப்படங்களும், குறும்படங்களும் திரைப்பட விழாக்களில் சம்பாதிக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் விழாக்களில் பணம் வருவது சாதாரண விஷயமல்ல. பெரும்பாலும் ப்ராண்ட் சார்ந்து படங்கள் அங்கே தேர்வாவதுண்டு. டாக்குமெண்டரி என்றாலே போர் என்று இங்கே ஒரு கருத்து உள்ளது. ஆனால் அப்படி கிடையாது. பெரிய தாக்கத்தோடு இருக்கும் ஆவணப்படங்கள் பல உள்ளன.

தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும், சமூக கலாச்சார அடையாளங்களோடே வந்துகொண்டிருக்கின்றன? இதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்? சமூக அறிவியல் பார்வையாடு படங்கள் அதிகம் வராததற்கு என்ன காரணம்?

முதலில் கலாச்சார பார்வையில் இங்கே ஒரு படம் எடுப்பதே தகிடுதத்தோம் தான். அதைத்தாண்டி இங்கே திரைப்படம் எடுப்பதைத் தாண்டி, அதற்கான வியாபாரம் அது இது என்று எத்தனையோ இருக்கிறது. முக்கியமாக, இங்கே ஒரு படம் முடித்தவுடன், அது இயக்குனரின் கையில் இருந்து போய்விடுகிறது. முக்கியமாக, புதிதாக ஏதாவது செய்ய வந்தாலே அது ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற பயம் இருக்கிறது. இந்த விஷயத்தில் மொத்தமாக படைப்பாளிகளை பழி சொல்லிவிட முடியாது. எந்த நல்ல படமாக இருந்தாலும், அது ஓடி, தயாரிப்பாளர்களுக்கு லாபம் தர வேண்டிய அவசியம் இருக்கிறது. எல்லாருக்கும் சர்வைவல் வேண்டும். இங்கே கோடிகளில் புரளும் முதலீடு இருக்கிறது. அந்த முதலீடு திரும்ப வரவில்லை என்றால், அடுத்ததாக நாம் சொல்ல நினைத்த எதையும் நம்மால் சொல்ல முடியாது. நல்ல கதையை சுவாரசியமாக கொடுப்பவர்களே இங்கே குறைவு. அதில் சமூக அறிவியலோடு, அந்த கதையை சுவாரசியமாக சொல்லத் தெரிந்துவிட்டால், அது வேற லெவல். அவன் செம டைரக்டர். ஒரு சமூகத்திற்கு ஒரு விஷயம் சொல்வதுபோல், ரசனையை உயர்த்துவது போல், கொஞ்சமேனும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுபோல் இயக்குனர்கள் வந்தார்கள் என்றால், அது நிச்சயம் ஆரோக்கியமானதுதான்.

மாற்று சினிமா குறித்த உங்கள் பார்வை? எதிலிருந்து சினிமா மாற வேண்டும்?

ஒரு படத்த பார்த்தா, ஒரு கதையை படிச்சா, கொஞ்ச நேரம் அது நம்மள மனிதனா உணர வைக்குதுல. அதுதான் ஒரு சிறந்த படைப்பு. உதாரணத்திற்கு ‘அப்பாவிடம் எப்படிச் சொல்வது?’ என்ற அசோகமித்திரனின் ஒரு கதை. ஒரு சாதாரண மனிதனாக நம்மை உணர வைக்கும். அது படித்த கொஞ்ச நேரத்திற்கு, இன்னொரு மனிதன் மேல் கோபப்படவே தோன்றாது. நம்மை நமக்கே உணர வைத்து, நமக்குள் இருக்கும் மனிதத்தை வெளியே கொண்டு வருவதுதான் சிறந்த படைப்பு. அதற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களில் இருந்தும், சினிமா மாற வேண்டும்.

அதை நோக்கி செல்ல வேண்டும். நல்ல கலை என்ற ஒன்று இல்லையென்றால், நம் உணர்வுகள் மழுங்கிப்போய் விடுமோ என்றே தோன்றுகிறது. ஜெயகாந்தன் சொல்வார், ‘ஏதோ ஒரு வகையில் படிப்பவனை ஒரு படி உயர்த்த வேண்டும்’ என்று. அதுதான் படைப்பு. மிகவும் குழப்பமான சூழலில் நான் இருந்தபோது, என்னை மீட்டெடுத்தது அதுபோன்ற படைப்புகள்தான். அது சிறந்த கதைசொல்லிகளால் தான் முடியும். ஒரு கதையை சொல்வதைத் தாண்டி, அதை சரியாக சொல்லத் தெரிய வேண்டும்.

எனக்குத் தெரிந்த கமர்ஷியல் படங்களும் வரும். நல்ல சினிமாக்களும் வரும். சில சமயங்களில் கமர்ஷியல் படங்கள் அதிகமாக வரலாம். ஆனால், நிச்சயமாக நல்ல சினிமாக்கள் அழியாது.

மாற்று சினிமாக்கள் உதயமாக, சினிமா ரசிகர்களின் சினிமா ரசனையும் ஒரு அத்தியாவசியம் இல்லையா? இங்குள்ள சினிமா ரசனை எப்படி இருக்கிறது? சினிமா ரசனையை மேற்படுத்த என்ன செய்யலாம்? சினிமா குறித்த கல்வி இங்கே தேவையா? சாத்தியமா?

நான் மிக வெளிப்படையாக சொல்வேன். ஒரு சில பள்ளிகளில் வகுப்பறைகளில் வகுப்பெடுக்கும்போது சினிமாக்களைப் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் அதைத் தவிர்த்து, கேன்டீன், ஆண்டுவிழா, பாத்ரூம் என்று அத்தனை இடங்களிலும் சினிமாவைப் பற்றி பேசுவார்கள். எப்படி, ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடப்புத்தகங்களில் நல்ல சிறுகதைகள், கவிதைகள் இருக்கின்றதோ, அதே போன்று, சினிமாக்களை பற்றிய ஒரு பகுதியும் வேண்டும். நம்மை சுற்றி முழுதும் சினிமாதான் இருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ. சினிமாவின் வீச்சு இப்படி பூதாகாரமாக இருக்கும்போது, அதை மறுப்பது என்ன பயன் தந்துவிடும்? குறைந்தபட்சம், சினிமாக்களை ஒழுங்காக புரிந்துகொள்ளலாமே. அதை பாடத்திட்டத்தில் கொண்டு வருவது கூட, மிகவும் நல்லதுதான். அப்போதுதான் அதை முறையாக முழுமையாக புரிந்து கொள்ள முடியும். சரியாக ரசிக்க முடியும். முன்னால் ரசித்து பார்த்த சினிமாவை இப்போது நாம் கிண்டலடிப்பதற்கு காரணம் ரசனை மாற்றம்தானே. ஆனால் சரியான ரசனையோடு பார்க்கப்படும்போது, சினிமா இன்னும் தரமாக வளரும் என்பது என் நம்பிக்கை. அப்போது இயக்குனர்களின் பொறுப்பு இன்னும் அதிகமாகும். சும்மா வியாபார ரீதியாக ஒரு படத்தை எடுத்துவிட்டு போகும் தைரியம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. ஒரு பயம் இருக்கனும். ஒரு பொறுப்பு இருக்கனும். எல்லாருக்கும் சினிமா தெரியும். சினிமா பார்ப்பவன் தெளிவாக, நல்ல ரசனையோடு இருக்கான், தப்பு பண்ணா கண்டுபிடித்துவிடுவான் என்ற பயம் வந்தாலே நல்ல சினிமா கண்டிப்பா வந்துரும் சார்.

இப்போ, பள்ளிகளில் பாடப்புத்தகங்களில் கவிதைகள் படிக்கும் பையனிடம், நான் ஒரு மோசமான கவிதை செய்தால் அவன் கிண்டலடித்துவிடுவான். சிறப்பாக கல்ச்சுரலில் கலக்கும் மாணவர்களிடம் ஒரு மொக்கை படத்தை தந்தால் கிண்டலடித்துவிடுவார்கள். இதுவேதான் அனைத்திற்கும் அடிப்படை. தரத்தை நிர்ணயித்துக்கொள்வது எப்போதும் எங்கும் நல்லதுதானே. முக்கியமாக சினிமாவின் தரம் தெரிவது மிகவும் நல்லது. இப்போ, குத்துப்பாட்டுக்கள் தான் பிடிக்கிறது என்றால், குத்துப்பாட்டு மட்டுமா கேட்கிறார்கள்? கேட்கிறார்கள்தான். ஆனால் பெர்சனலா அனைவருக்கும் பிடிப்பது பெரும்பாலும் மெலடியாகத்தான் இருக்கும். அதனால் மெலடி போட்டால் கேட்க மாட்டார்கள் என்று கிடையாது. நிச்சயம் அந்த மெலடி அவர்களை ஈர்த்தால் அவர்கள் அதை நிச்சயம் கேட்பார்கள். அப்படிப்பட்ட படங்களை தர வேண்டியது நமது பொறுப்பு. அப்படி எடுத்துட்டா, தப்பு பண்ணாதுன்றது நம்பிக்கை. அப்படி அந்த படங்கள் ஈர்க்கும்போது, மக்களும் அந்த படங்களை நோக்கி வருவார்கள்.

சென்சார் போன்ற அமைப்புகள் ஒரு கலாச்சார காவலர்களாக செயல்படுகிறார்கள். இதனால் சினிமாக்களின் கருத்து சுதந்திரமும் வீரியமும் பாதிக்கப்படுகிறதா?

கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுதான்னு கேட்டா, ஆமாம் பாதிக்கப்படுது. அதுல சந்தேகமே இல்லை. ரொம்ப சிக்கல்ல தான் ஒவ்வொரு படமும் வருது. இப்ப நான் ஒரு ஏரியா படம் எடுக்கறேன்னு வச்சுக்கோங்களேன், நான் ஏரியா படம் மாதிரி எடுக்கலாம். ஆனா, ஏரியா படம் எடுக்க முடியாது. ஸ்கூல் லைஃப் மாதிரி காட்டலாம். ஆனா ஸ்கூல் லைஃப்ப காட்ட முடியாது. ஓப்பனா நிறைய விஷயங்கள சொல்ல முடியாது. அந்த விஷயங்கள சொல்றதுல எனக்கு எந்த தப்பான உள்நோக்கமும் கிடையாது. தரங்கெட்டு நான் வியாபாரம் பண்ணல. உண்மையா சில விஷயங்கள சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கு. இல்லனா, அந்த லைஃப்ப தொடாமலேயே போய்டலாம். சில பேர் தப்பான மோட்டிவேஷன்ல படம் எடுத்துருக்காங்க. ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை இருக்கு. சென்சார் போர்ட தாண்டி பல வகைல அது பாதிக்கப்படுது. ‘ஏ’ சர்ட்டிபிக்கேட் கொடுத்தா கூட, டாக்ஸ் ப்ரீ கிடைக்காது. சாட்டிலைட் ரைட்ஸ் போகாது. இப்படி நிறைய பிரச்சினை இருக்கு. ஒரு நல்ல படத்த ரிலீஸ் பண்ண எவ்ளோ போராட்டம் நடந்துச்சுன்னு நான் பாத்துருக்கேன். உதாரணத்துக்கு, ஆரண்ய காண்டம் படத்த ரிலீஸ் பண்றதுல அவ்ளோ பிரச்சினை இருந்துச்சு. அதனால, இதுக்கு ஒரே ஒரு தீர்வுதான் சார். ஒரே அளவுகோள்ல எல்லா படத்தையும் பாக்கக் கூடாது. ஒவ்வொரு படத்தையும் அந்தந்த படத்துக்கு ஏத்த வகைல பாக்கனும். ஒரே ஸ்கேல்ல வச்சுட்டு எல்லா படத்தையும் அதனால அளப்பேன்னு சொன்ன அது முடியாது சார். ஒவ்வொரு படத்துக்கு ஏத்த மாதிரி அந்த அளவுகோள் மாறனும். உங்களுக்கு படம் பாக்கும்போதே தெரியும், அதுல சில விஷயங்கள் தப்பான நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டிருக்கா, இல்ல படத்துக்கு தேவையான அளவுல பயன்படுத்த பட்டுருக்கான்னு படம் பாக்கும்போது தெரிஞ்சுரும். அத வச்சு முடிவு பண்ணிக்கலாம். இதுதான் இதுக்கான தீர்வுன்னு தோணுது.

சிகரெட், மது போன்றவற்றிற்கே தடைபோடும் சென்சார், வேறு சில உள்ளார்ந்த வன்மங்களை திரைப்படங்களில் அனுமதிக்கிறார்களே. உதாரணமாக, பெண்களுக்கெதிரான சித்தரிப்பு, திருநங்கைகளை பற்றிய சித்தரிப்பு... இன்னைக்கு வரைக்கும் எல்லா படத்துலயும் பெண்களோட கவர்ச்சி நடனம், ஆடைக்குறைப்பு எல்லாம் இருக்கு. ஆனா அந்த படங்கள் ‘யு’ சர்ட்டிபிக்கேட்டோட தான் வருது. குடும்பத்தோட போய் பாத்தா, இந்த மாதிரி விஷயங்கள்தான் இருக்கு. அவங்க வச்சுருக்கற அளவுகோள வச்சு மட்டுமே எல்லா படங்களையும் அளந்தா இதுதான் கதி. ஒரு சட்டை தைச்சு வச்சுட்டு, எல்லாருக்கும் அதே சட்டையை தான் மாட்டுவேன்னே, எப்படி அது ?

சமீப கால படங்களில், பாடல்கள், வசனங்கள் போன்றவற்றில் இந்த பெண்களுக்கெதிரான வன்முறை அதிகமாக தூவப்படுகிறதே. அதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள் ? சமூகத்தில் பரவியிருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடுகளா இவை அல்லது அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வணிக உத்தியா?
ரொம்ப சிம்பிள் சார். கைத்தட்டல் மற்றும் டார்கெட் ஆடியன்ஸை திருப்திப்படுத்துவது. ரெண்டுதான் காரணம். டிஸ்கஷன்லயே பேசுவாங்க. இந்த இடத்துல பசங்களாம் கைத்தட்டுவாங்க பாரேன்னு. இன்னொரு விஷயம், அவங்களுக்கு தேவைப்படற இடத்துல பெண்கள உயர்த்தியும் பேசுவாங்க. பாருங்க, இங்க செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகும்னு.

அரசியல் சினிமாக்கள் குறித்த உங்கள் பார்வை என்ன? இந்தியா போன்ற ஒரு நாட்டில் அரசியல் சினிமாக்களின் தேவையும் சாத்தியப்பாடும் என்னென்ன?

ரொம்ப தேவை. ஆனால், ரொம்ப கஷ்டம். ‘அமைதிப்படை’ போன்ற படங்களே கூட வருவது ரொம்ப கஷ்டம்தான்.

தமிழ் சினிமா மேலோட்டமான சில அடுக்குகளில் மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பது போல் இருக்கிறது. இன்னும் பேசப்படவேண்டிய பல விஷயங்கள் இங்கே பேசுபொருளாக மாறாதது ஏன்?
சேஃப்டி தான். எதுக்கு ரிஸ்க்னு எல்லாரும் ஒதுங்கிடறாங்க. அந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணிட்டா, நிறைய பிரச்சினைகள சந்திக்கனும். இங்க நார்மலா படம் எடுத்தாலே நிறைய பிரச்சினைகள சந்திக்க வேண்டியிருக்கு. இதுல இந்த மாதிரிலாம் படம் எடுத்தா, ஏன் தேவையில்லாத ரிஸ்க்னு ஒதுங்கிடறாங்க. இதுல நான் யாரையும் கோழைனோ, பயந்துட்டாங்கனோ சொல்லல. சில விஷயங்கள தொட்டா, நமக்கு எந்த சிக்கலும் இல்ல ஆனா நம்ம கோபத்த காமிக்க முடியும்னா, அந்த விஷயத்துக்கு கோபப்படுவாங்க. இப்ப நானே, படம் பண்றதுக்கு முன்னாடி, பேஸ்புக்ல நிறைய விஷயம் எழுதிட்டு இருந்தேன். இப்ப அப்படியே குறைச்சுட்டேன்.

இப்போதுள்ள சினிமா யார் கையில் இருக்கிறது. யார் கையில் இருக்க வேண்டும்?

சினிமா எப்பவும் ரசிகர்கள் கைலதான் இருக்கனும். இப்பவும் ரசிகர்கள் கைலதான் இருக்கு. ரசிகர்கள் நல்ல கதைகள் கொடுத்தா ஏத்துக்க மாட்டாங்கனுலாம் கிடையாது. நல்ல சுவாரசியமான கதைகள கொடுத்தா ஏத்துக்கதான் செய்வாங்க. நல்ல விஷயங்கள் சொன்னா கேக்கத்தான் செய்வாங்க. கொடுக்க வேண்டிய பொறுப்பு நம்மகிட்ட இருக்கு.

சினிமா என்ற கலையை நீங்கள் எப்படி அணுகிறீர்கள்? what is cinema to you?

சினிமா என்பது ரொம்ப பெர்சனல் ஃபீல். நான் எனக்குள்ள ஒரு விஷயத்த உணர்றேன். இததான் கதையா சொல்லனும்னு நினைக்கிறேன். இந்த வடிவத்துல சொல்லனும்னு நினைக்கிறேன். அத ரசிகர்களுக்கு சரியா சொல்லனும்னு நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும், சினிமான்றது படைப்பாளிக்கும் ரசிகனுக்கும் இருக்கற பெர்சனல் ஃபீல்.

சமூகத்தின் பொதுப்புத்தியை தீர்மானிப்பதில் சினிமாவின் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக இருக்கிறது. எப்படி சமூகத்தின் பாதிப்பு சினிமாவில் இருக்கிறதோ, அதே போல் சினிமாவின் பாதிப்பும் நிச்சயம் சமூகத்தில் இருக்கும். ஒரு படைப்பாளிக்கென்று ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது. கலை ரீதியான பொறுப்பும் இருக்கிறது, சமூக ரீதியான பொறுப்பும் இருக்கிறது. வியாபாரத்திற்காக எடுக்கிறோம் என்பதற்காக சில விஷயங்களை செய்தால் அதைப் போல் தவறு வேறெதுவும் இல்லை.

நீங்க எடிட்டரா இருந்து இயக்குனரா ஆகியிருக்கீங்க. ஒவ்வொரு கலைக்கும் ஒரு சுதந்திரம் வேண்டும். இப்போது உங்கள் படங்களில் படத்தொகுப்பாளருக்கான சுதந்திரம் எந்தளவிற்கு இருக்கும்? அதில் உங்கள் பங்கு என்ன? இயக்குனர் படத்தொகுப்பாளருக்கான உறவு எப்படியிருக்க வேண்டும்?

நான் எப்படி பண்ணேன்னு மட்டும் சொல்றேன். நான் மொத்த கதையும் எடிட்டர்ட்ட கொடுத்துட்டேன். ஒவ்வொரு சீன் எடிட் பண்ணும்போது, அந்த சீனை முழுதும் விளக்கிடுவேன். எந்த மூட்ல அந்த சீன் இருக்கனும்னு சொல்லிட்டு அந்த சீன் பேப்பரை அவர் கைல கொடுத்துருவேன். எல்லா ஷாட்களையும் பார்த்து தேர்ந்தெடுத்து வைப்போம். பின் நான் வெளியே சென்று விடுவேன். அவர் அதை வைத்து அந்த காட்சியை தொகுத்து வைப்பார். அதில் ஏதேனும் சிறுசிறு மாற்றங்கள் இருந்தால் மட்டும் நான் சொல்வேன். எனக்கு அதுதான் வேண்டும். அந்த காட்சியை நான் எப்படி நினைத்தேன் என்று எனக்குத் தெரியும். அந்த வெர்ஷன் தான் பேப்பரிலேயே இருக்கிறது. ஆனால் இன்னொரு கண்ணோட்டம் வேண்டும். அப்போதுதான் அந்த காட்சி மேம்படும்.

உங்கள் படத்தில் நீங்கள் சந்தித்த வியாபார சிக்கல்களை கூறுங்களேன்?

படம் முடிந்துவிட்டது. திரைத்துறையினருக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காண்பித்தோம். அனைவருக்கும் படம் பிடித்தது. சிலர் சமூக வலைத்தளங்களில் படத்தை பாராட்டி எழுதினார்கள். நிஜத்தில் அதனால்தான் படத்திற்கு ஒரு பாசிடிவ் வைப்ரேஷன் கிடைத்தது. ஆனால் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. படம் நல்லா இருக்கு, ஆனால் படத்தின் 40 நிமிடங்களை குறைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது ஒரு பெருந்துயரம். அனுபவித்தால்தான் புரியும். எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. 40 நிமிடங்கள் குறைத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலைமை. நாம் பார்த்து பார்த்து ரசித்து ரசித்து செய்த படத்தை, இந்த இடத்துல கட் பண்ணா நல்லாருக்கும்னு முடிவு பண்ணி வெச்ச காட்சிகள, யாரோ ஒருவர் வெட்ட சொல்கிறார் என்றால் அது தாங்க முடியாத வலி. நல்லவேளை அந்த வலியில் இருந்து கடைசி கட்டத்தில் நான் தப்பித்தேன். தயாரிப்பாளர் ராஜ்குமார் என்னை நம்பினார். ஜே.எஸ்.கே படத்தை வாங்கினார்.

எதுவும் குறைக்காமல் வெளியிட முன்வந்தார். யாராவது படத்தை ட்ரிம் செய்தீர்களா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டார். படத்தை அப்படியே வெளியிட்டோம். முரண் என்னவென்றால், படத்தை பார்த்து 40 நிமிடங்கள் குறைத்தால்தான் இந்த படம் ஓடும் என்று சொன்னவர்கள், படம் வெளியானவுடன் பார்த்துவிட்டு, ‘ட்ரிம் பண்ணிட்டீங்க போல. அருமையா இருக்கு இப்போ’ என்றார்கள். இங்கு எல்லாவற்றிற்கும் ஒரு வட்டம் வைத்திருக்கிறார்கள். அதற்குள்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதைத்தாண்டி போனால் பிடித்து இழுக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், கடைசிவரை புதிதாக எதுவுமே செய்ய முடியாதே. நல்லவேளை, அந்த வலியில் இருந்து தப்பித்தேன். இல்லையென்றால், எனக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே போயிருக்கும். சினிமாவில் இருந்திருப்பேனா என்பதும் சந்தேகம்தான்.

நீங்கள் சினிமாவிற்கு வந்ததற்கு உங்கள் குடும்பத்தின் எதிர்வினை என்ன? உங்களுக்கு கிடைத்த ஆதரவு என்ன?

நான் சினிமாவிற்கு வந்ததில் அவர்களுக்கு விருப்பமில்லை. பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை, பயந்தார்கள். பிறகு ஒவ்வொரு கட்டமாக நான் ஷார்ட் பிலிம் என்று செய்தபோது ஏதோ செய்கிறான் என்று பார்த்தார்கள். அப்பா என் படத்தை பார்த்துவிட்டு, ‘இன்னும் நல்லா எடுத்துருக்கலாம்’ என்று சொன்னார். படம் கமிட் ஆனபோது சந்தோஷப்பட்டார்கள். படம் முடிந்தபின் ஒரு சம்பவம் நடந்தது. ப்ரிவியூ ஷோ நடந்தபோது என் குடும்பத்தினர் பார்த்தார்கள். அப்பாவிற்கு படம் ரொம்ப பிடித்திருந்நது. ஆனால், 40 நிமிடங்கள் குறைத்தால்தான் வெளியிட முடியும் என்று அனைவரும் சொன்னதும், என் அப்பா என்னிடம் வந்து, ‘என்னாச்சு’ என்று கேட்டார். இந்த மாதிரி 40 நிமிடங்கள் குறைத்தால்தான் வெளியிட முடியும் என்கிறார்கள். நம்மளே ரிலீஸ் பண்ணாதான் படத்த காப்பாத்த முடியும் போல’ என்றேன். ‘அப்படிலாம் வெட்ட வேண்டாம். நாமளே ரிலீஸ் பண்றதுக்கு என்ன செலவாகும்னு பாரு. ஏற்பாடு பண்ணலாம்’ என்றார். அந்தளவிற்கு எனக்கு தோள்கொடுத்தார்கள் என் குடும்பத்தினர். அப்பா பட வெற்றிக்கு முன்னே, படம் நன்றாக வந்திருப்பதற்கு சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கும் சந்தோஷம்.

தற்காலங்களில் அதிகமாக பரவி வரும் plagarism குறித்த உங்கள் பார்வை என்ன?

கதைத்திருட்டு, அயல்நாட்டு படங்களில் இருந்து சீன்கள் எடுப்பது இதெல்லாம் ஆரம்பத்திலிருந்தே நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில சமயம் நிஜமாகவே அப்படிப்பட்ட திருட்டுக்கள் நடப்பதுண்டு. அது நிச்சயமாக மிகவும் தவறுதான். சில சமயம் நாம் யோசித்த காட்சிகள் வேறு படங்களை ஒத்திருப்பதுண்டு. அப்போதும், சிலர் காப்பி அடிச்சுட்டான் என்று சொன்னால், தாராளமாக சொல்லட்டும். நம் மனத்திற்கு தெரியும், அது உண்மையா இல்லையா என்று.

தமிழ் சினிமாக்களில் கம்யூனிசம் பேசப்படுகையில் எழாத எதிர்ப்பும் தடைகளும் சாதியைப் பற்றி படமெடுக்கையில் வந்துவிடுகின்றன? கம்யூனிசத்தை விட சாதி எதிர்ப்புக்கு இத்தனை தடைகள் ஏன்?

எந்த விஷயம் இங்கே அதிகமா பிரச்சினையா இருக்கோ, அத பத்தி பேசும்போது, எதிர்ப்பு வரத்தான் செய்யும். எதிர்கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் பார்த்தால், படமே எடுக்க முடியாது. சில சமயம் அந்த எதிர்ப்புகள் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.

இலக்கியங்கள் பெரும்பான்மை சினிமாக்கள் ஆகாததற்கு என்ன காரணம். இதில் உங்கள் ஆர்வம் என்ன? மற்ற இடங்களில் ஒரு நாவல் வெளியான உடனேயே அது படமாக்கப்படுவதும் இருக்கின்றதே?

‘காட்ஃபாதர்’ படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட்டது. ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு முழுமை கொடுக்கப்பட்டது. அந்த நாடுகளிலும் கூட, எல்லா நாவல்களையும் அவர்களால் படமாக்க முடியவில்லை. அட்வென்ச்சர், த்ரில்லர் போன்றவற்றை பெரும்பாலும் படமாக்குகிறார்கள். முதலில் அவர்கள் கதை சொல்லும் பேட்டர்ன் வேறு மாதிரியாக இருக்கிறது. கதையை மட்டும் சொல்லிவிட்டு போகிறார்கள். அதைத் தாண்டி வேறு எதுவும் திணிப்பதில்லை. ஆனால், இங்கே பாடல், சண்டை, காதல், காமெடி என்று பல விஷயங்கள் திணிக்கப்படுகிறது சூழல் இருக்கிறது. அப்படி செய்யும்போது, அந்த கதை படத்தில் வெளிப்படாமல், அதன் சாராம்சம் மட்டுமே வெளிப்படுகின்றது. அப்படி சரியாக சொல்லாமல் விடுவதற்கு, அந்த இலக்கியத்தை படமாக மாற்றாமலேயே விட்டுவிடலாம்.


எனக்குப் பிடித்த சில நாவல்களை, மெயின்ஸ்ட்ரீம் சினிமாவாக சொல்வது முடியாமல் இருக்கிறது. அதை தயாரிப்பாளரிடம் சொல்வதே கூட கஷ்டமாக இருக்கிறது. ‘அகம் புறம்’ என்ற சிவசங்கரன் பிள்ளையின் நாவல் படித்தேன். புதுமணத் தம்பதிகளின் உணர்வுகளைப் பற்றிய அத்தனை இயல்பான யதார்த்தமான நாவல். அவ்வளவு அழகாக, உணர்வுப்பூர்வமாக அற்புதமாக இருந்தது. அதை படமாக எடுக்க வேண்டும் என்றால், சொந்தப் படமாகத்தான் எடுக்க வேண்டும். ஆனால் ஒருசில நாவலை, அதில் காட்டப்பட்ட யதார்த்தமான வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்திற்குள் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. பிரச்சினை நாவல்களில் இல்லை. இங்கே சினிமாக்கள் கதை சொல்லும் ஃபார்மெட்டில் இருக்கிறது. அதனால்தான், ‘படம் எடுப்பதற்கு மிகச் சிறந்தது சிறுகதைதான்’ என்று சத்யஜித் ரே சொல்வார் என்று கூறுவார்கள். அந்த சாராம்சத்தை எடுத்துக் கொண்டு அதை படமாக மாற்றலாம். அற்புதமான சிறுகதையை ஒரு நல்ல சினிமாவாக எடுக்க முடியும். நாவலை அப்படி முழுமையாக எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை.

திரைக்கல்லூரி மாணவனாக கூறுங்கள், இப்போதுள்ள சினிமா ஃபார்மெட். பாடல், சண்டை, காமெடி ட்ராக் உள்ளிட்டவை, வரலாற்று ரீதியாக எப்படி வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்குத் தெரிந்து அது கூத்திலிருந்துதான் வந்திருக்கும். துக்கம், மகிழ்ச்சி எல்லாவற்றிற்கும் பாடல் பாடிவிடுவார்கள். சில காட்சிகள் முடிந்ததும் கட்டியங்காரன் வந்து சிரிக்கவைத்துவிட்டுச் செல்வான். திட்டமிட்டு இல்லாமல், தானாகவே கூத்திலிருந்து சினிமா மருவியிருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாமே வடிவங்கள்தானே. இப்படித்தான் ஒரு கலைவடிவம் இருக்கும் என்று சொல்ல முடியாது. சினிமாவிற்கும் இது செல்லுபடியாகும். ஒரு படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் நிச்சயம் சொல்ல முடியாது. வடிவங்கள் எப்போதும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.

‘ஒரு படைப்பாளியா சொல்ல நினைத்த கதையை, எந்தவித திணிப்புகளும் இன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்’ என்கிறீர்கள். இடைவேளை குறித்த உங்கள் பார்வை என்ன?

இடைவேளை இல்லையென்றால் சந்தோஷம்தான். இடைவேளை, சில படங்களுக்கு உதவியும் இருக்கிறது. என் படத்தில், மறதி வந்த நாயகனுக்கு அடுத்தநாள் திருமணம். ஆனால் அவனுக்கு நினைவு வரவில்லை. காதலி தொடர்ந்து ஃபோன் செய்தபடி இருக்கிறாள். நண்பர்கள் அதிர்ந்துபோய் நிற்கின்றனர். இப்போது இந்த கல்யாணம் எப்படி நடக்கும் என்ற கேள்வி வருகிறது. இங்கே இடைவேளையும் வருகிறது. இதுபோன்ற ஆர்வம் கிளப்பும் இடங்களில் இடைவேளை வந்தால் அது படத்திற்கு உதவும். ஆனால் சில படங்களில் அந்த மாதிரியான ஒரு புள்ளியில் கதை வந்து நிற்காது. எனவே, இடைவேளை விட்டாக வேண்டிய கட்டாயத்தில் ஏதோ ஒரு இடத்தில் படத்தை நிறுத்த வேண்டியுள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்து, ஒரு நல்ல கதைசொல்லி, எந்த இடத்தில் படத்தை நிறுத்தினாலும், பார்ப்பவர்கள், அடுத்து என்ன என்று கேட்க வேண்டும். அதுதான் கதைசொல்லியின் திறமை.

ட்ரெண்ட் என்ற ஒரு பொதுவான கருத்தில் கீழ் பல படங்கள் தொடர்ந்து ஒரே ஜானரில் வெளிவருகின்றது. இது குறித்த உங்கள் கருத்து என்ன? உண்மையில் ட்ரெண்ட் என்ற ஒன்று இருக்கின்றதா?

அது ஒரு மாயை தான். இப்ப ஒரு காமெடி படம் ஹிட் ஆய்டுச்சுன்னா, டப் டப்புனு 10 காமெடி படம் வரும். அதுல ஒரு படம் தோத்துரும். உடனே, காமெடி படம்னா யாரும் பாக்க மாட்டாங்கன்னு சொல்லிடுவாங்க. சமீபத்துல என்ன நடந்துச்சோ அதுதான் நம்ம நினைவுல இருக்கும். அந்த அடிப்படைல இந்த கணக்க போடறாங்கன்னு நினைக்குறேன். ஆனா உண்மை அது கிடையாது. காமெடி படம் ஓடுதுன்னு இன்னொரு காமெடி படம் எடுத்தாலாம் அந்த படம் ஓடிடாது. அந்த படம் சுவாரசியமா இருந்தாதான் ஓடும். அத பாத்து இவங்க ஒரு காமெடி படம் எடுக்க நினைச்சு, ஆபிஸ் போட்டு, ஷுட்டிங் முடிச்சு, ரிலீஸ் பண்றதுக்குள்ள அந்த ட்ரெண்ட் மாறிடுச்சுன்னு சொல்லி படத்த மூட்டை கட்டிருவாங்க. தொடர்ந்து நெல் போட்டுட்டே இருந்து அதுக்கு டிமாண்ட் கம்மியாடுச்சுன்னா, யாரு கரும்பு போட்ருக்கானா அவனுக்கு லாபம் வரும்ல. அந்த மாதிரி இந்த விளையாட்டு. முக்கியமா இங்க எல்லாத்துக்கும் ஒரு உதாரணங்கள் தேவைப்படுது. இந்த படம் கில்லி மாதிரிங்க, இது தில்வாலே மாதிரிங்க, இது லகான் மாதிரிங்கன்னு இங்க எல்லாருக்கும் ஒரு மாதிரி தேவைப்படுது. அப்படி உதாரணம் இல்லாத படத்தை நீங்க எடுத்து வெளியே கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம். ஆனா அப்படி கொண்டு வந்துட்டீங்கன்னா, உங்க படம் உதாரணம் ஆய்டும்.

தற்கால நாயகனுக்கும் நாயகிக்கும் ஆயுள் ஏன் குறைந்திருக்கிறது?

எல்லோருடைய ஆயுளும் இனி குறைந்துவிடும். நீங்கள் உபயோகிக்கும் ஃபோனில் இருந்து அத்தனையின் ஆயுளும் குறைந்தே இருக்கிறது. முன்னெல்லாம், ஒரு இயக்குனர் வந்தால், நல்ல படங்கள் எடுத்தால், நிறைய காலம் அவர் நிலைத்து நிற்பார். ஆனால் இப்போது நிறைய இயக்குனர்கள் வருகிறார்கள். நிறைய படங்கள் வருகிறது. ஆனால் அனைவருக்குமான வெளி இங்கே இருக்கிறது. யாருடைய வருகையும் யாருடைய இருப்பையும் பாதிக்காது. நல்ல படங்கள் கொடுக்கற எல்லாருமே இங்க நிலைச்சு நிப்பாங்க. தொடர்ந்து யாரு நல்ல படங்கள் பண்றாங்களோ, அவங்க ரொம்ப நாள் நிலைச்சு நிப்பாங்க.

காட்சி ரீதியான ஊடகமாக இல்லாமல், பெரும்பாலும் தமிழ் சினிமாக்கள் வசனங்களை சார்ந்திருப்பது ஏன்?

நாம் என்ன மாதிரியான கதைகள் சொல்லி, கேட்டு பழகியிருக்கிறோம் என்பதை பொறுத்து அது அமையும். இரண்டாவது, நாம் என்ன ஜானர் எடுக்கிறோம் என்பதை பொறுத்து அது மாறும். என் படத்தில் நான் தொட்டிருக்கும் ஜானர், டிராமா. இயல்பான பாத்திரங்களுக்குள் நடக்கும் விஷயங்கள்தான் படம். அதைப் பொறுத்துதான் வசனங்களின் தேவை அமையும். அடுத்ததாக சினிமா மொழி. அதை சரியாக புரிந்துகொண்டால், அதன் மூலம் கதை சொல்லலாம்.

ப்ரெஷர் க்ரூப்ஸ் இப்போது தமிழகத்தில் பெருகி வருவது போல் உள்ளது. சமூகத்தின் பல அடக்குகளின் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகள். திரைப்படங்களை சுற்றிய அரசியலில் அது பிரதிபலிக்கிறது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

அது இருந்துகொண்டேதான் இருக்கிறது. சில சமயங்களில், சில நியாயமான காரணங்களுக்காக அது நடக்கிறது. சில சமயங்களில் விளம்பரங்களுக்காக நடக்கிறது. சிலர் இதுக்காகவே ஒரு அமைப்பு ஆரம்பித்து விட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வேண்டுமில்லையா?. ஆனால், அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் தொட மாட்டார்கள். எந்த பிரச்சினையை தொட்டா அவங்களுக்கு லைம்லைட் கிடைக்குமோ, அந்த பிரச்சினைகளில் மட்டும்தான் தலையிடுவார்கள். எங்கே அதிக புகழ் இருக்கிறதோ, அங்கே அதிக பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். ‘சண்டியர்’ என்று கமல் படம் எடுத்தால்தான் பிரச்சினை. பெயர் தெரியாத ஒருவர் எடுத்தால் பிரச்சினை இல்லை.

இன்னும் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சினிமாக்கள் பெருமளவில் வராமல், புனைவான திரைப்படங்கள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. இது பற்றி...

வாழ்க்கையைப் பற்றி பேசும் படங்கள் வெளிவந்து, அவை வணிகரீதியாகவும் வெற்றி பெரும்பட்சத்தில், நிச்சயம் வாழ்க்கையை சொல்லும் படங்கள் வரும்.

உங்கள் படத்தில் எது நிஜம், எது புனைவு?

என் படத்தில் நான் என்ன மாற்றம் செய்தேன் என்பதை சொல்லிவிடுகிறேன். நிஜத்தில், இந்த மறதி சம்பவம் நடந்து அவனுக்கு ஒரு வாரம் கழித்துதான் திருமணம். இதில் அடுத்தநாள் என்று வைத்தேன். அவன் நான்கு வருடங்களாக தனலட்சுமியை காதலித்தான். ஆனால் ஒரு வருட சம்பவங்கள்தான் அவனுக்கு மறந்தது. அதனால் அந்த காதலை ஒரு வருடத்திற்குள் அமைத்தேன். அடுத்து, அடுத்தநாள் காலை அவனுக்கு நினைவு வந்துவிட்டது. அப்படி வரவில்லையென்றால், அடுத்தநாள் காலையே திருமணம் என்றால், காதலியையே அவன் மறந்துவிட்டால், ஒரு சராசரி, விளையாட்டில் ஏமாற்றி சண்டைபோடும் இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விகளையே படமாக மாற்றினேன். மற்றபடி படத்தில் பார்த்த விஷயங்கள் முதல், நாயகன் பேசும், என்னாச்சு…மெடுலோ ஓப்லங்கேட்டா வசனம் வரை அனைத்தும் நிஜத்தில் நடந்ததுதான். நிஜத்தில் தனலட்சுமி கல்யாணத்தில் ஓவராக மேக்கப் போட்டது உண்மை. அந்த கிண்டலை நான் சேர்த்துக்கொண்டேன். மற்றபடி, நிஜத்தில் என்ன நடந்ததோ, அனைத்தையும் கேட்டு அதையே காட்சிகளாய் வைத்தேன். ப்ரேமிற்கும் சரஸிற்கும் இருக்கும் நட்பு கூட நிஜம்தான். அந்த ரெக்கார்ட் நோட் ப்ளாஷ்பேக் கூட நிஜம்தான். ஆனால் அது என் வாழ்வில் நடந்தது. அடுத்து விஜய் சேதுபதியிடமும் அவர் சிறுவயதில் நெகிழ்ந்த ஒரு விஷயத்தை கேட்டேன். அவருக்கு சின்ன வயதில் ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் வருவதுபோல் இருந்திருக்கிறது. தண்ணீர் கேட்டிருக்கிறார். உடனே அவர் நண்பன் ஓடிச்சென்று பக்கத்துக் கடையில் கூல்ட்ரிங்ஸ் வாங்கி வந்திருக்கிறார். உடனே விஜய் நெகிழ்ந்து விட்டாராம். பின்னாளில் நல்ல நண்பர்களானவுடன், இதை அவரிடம் சொல்கையில்,அவர் சொல்லியிருக்கிறார், ‘அடப்பாவி…இதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ணியாடா…என் வீடு நாலு மாடி ஏறிப்போகணும். அந்த கடைல எங்கப்பாக்கு அக்கவுண்ட் இருக்கு. அதான் வாங்கிக் கொடுத்தேன்’ என்றிருக்கிறார். இந்த மாதிரி பல நட்பிற்கான காரணங்கள் மிக சாதாரணமாகத்தான் இருக்கும்.

இப்போது வெளியான சில திரைப்படங்களை வைத்து, தமிழில் நியூ வேவ் சினிமா ஆரம்பித்து விட்டதாக ஒரு பேச்சு இருக்கிறது. உண்மையில் இதுதான் நியு வேவ்வா? அரசியல் சமூக ரீதியாக ‘நியு வேவ் சினிமாக்களின்’ தோற்றம், அர்த்தம் புரியாமல் இந்த டேக் அளிக்கப்படுகிறதா?

இல்லை, நியூ வேவ் என்பது, இப்போதைய தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலை வருகிறது. ஷார்ட் ப்லிம் எடுத்த இளைஞர்கள் திரைப்படம் எடுக்கிறார்கள். அது வெற்றியும் பெற்று வருகிறது. இது தொடர்ச்சியாக நடக்கிறது என்பதால் இதை வேவ் என்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி இதுதான் தமிழ் சினிமா எதிர்பார்த்த வேவ் என்றெல்லாம் கிடையாது. மற்றபடி நல்ல, சிறந்த படங்கள் எப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ரேஷியோ தான் முக்கியம்.

தமிழ் சினிமாக்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றன என்று பலமொழிகளின் திரைப்பிரபலங்கள் பேட்டிகளில் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். ஒரு தமிழ்த் திரைப்பட ரசிகனாக நீங்கள் சொல்லுங்கள், தமிழ் சினிமாக்கள் நிஜமாக அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கின்றனவா?

ஒரு ஆழமான கதையை முன்னெல்லாம் தயாரிப்பாளர்களிடம் சொன்னால், அதன் வெற்றி குறித்த பயம் அவர்களிடம் இருக்கும். அம்முயற்சி படமாகாது. ஆனால் இப்போது அந்நிலை மாறி, அதுபோன்ற படங்களும் வருகின்றன இல்லையா. அந்த வகையில் அடுத்த கட்டத்திற்கு தமிழ் சினிமா நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னும் செல்லவேண்டும்.

இப்போதுள்ள வணிக சூழலில், சமரசமற்ற படைப்பு என்பது சாத்தியமா?

சமரசமே அற்ற படைப்பு என்பது சாத்தியம் கிடையாது. ஆனால் நல்ல கதையை முடிந்தவரை போராடி மக்கள்ட்ட போய் சேர்த்து விடவேண்டும். எல்லாவற்றையும் முடிவு செய்யப்போவது மக்கள்தான். இடையில் தடைபோடும் யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. மக்கள் நல்ல படங்களை, உணர்வுரீதியான படங்களை எப்போதும் வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்கள்.

இப்போது சமூக வலைத்தளங்களில், அதிகளவில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. அதை எப்படி பார்க்கிறீர்கள். அது திரைப்படங்களின் வெற்றியை பாதிக்குமா?

திரைப்படத்தின் வெற்றியை பாதிக்காது என்றுதான் நினைக்கிறேன். பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று நம்முடைய கருத்துக்களை சொல்லலாம். ஆனால், அதிகப்படியாக ஒருவரை, ஒரு படத்தை பகடி செய்து அதை அவமானப்படுத்துவது நிச்சயம் வருத்தமான விஷயம்தான்.

பெரும்பான்மையான தமிழ் சினிமா கதாப்பாத்திரங்கள் ஆணாகவும், இந்துக்களாகவுமே இருப்பதற்கு என்ன காரணம்? இதுவும் பொதுப்புத்தியின் வெளிப்பாடுதானா?

பொதுப்புத்தி என்பதை விட, அவரவர்க்கு தெரிந்ததை செய்கிறார்கள். நான் ஒரு கதையை யோசிக்கும்போது, நான் வாழ்க்கையில் பார்த்த மனிதர்கள், நான் பார்த்த வாழ்க்கை, கதைகள் இவற்றைத்தான் முதலில் எழுதுவேன். அதைத்தாண்டி வர எனக்கு கொஞ்சம் காலம் ஆகும். இல்லையென்றால், வேறு வாழ்க்கை சார்ந்த கதைகள் பாதித்திருந்தால் அதை படமாக்கலாம். மற்றபடி, இந்துக்கள் நாயகர்களாகவும், ஆண் சார்ந்தும் இருப்பதற்கு காரணம், பெரும்பான்மை சதவிகிதமும், எழுதுபவர்கள் ஆணாக இருப்பதுமே காரணமாக இருக்கலாம்.

உங்கள் அடுத்த திரைப்படம் பற்றி..

நான் பெரிய பட்ஜெட்டில் எதுவும் யோசிக்கவில்லை. ஒரு சிறிய சுவாரசியமான கதை. ஒருவனது வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டால் என்னென்ன ஆகும் என்பதுதான் கதை. இதை குறைந்த பட்ஜெட்டில், தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஆகாத வரையில் எடுக்க முயன்றுகொண்டிருக்கிறேன். முழுக்க புதுமுகங்களை வைத்துதான் செய்கிறேன். இந்த கதைக்கு புதுமுகங்கள்தான் சரியான தேர்வாக இருக்கும். நடிகர்களுக்கான பயிற்சி சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு வெற்றிபெற்ற இயக்குனராக, வளரும் படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒரே விஷயம்தான். நாங்கள் வெற்றிக்காக படத்தை ஆரம்பிக்கவில்லை. இந்த கதையை மிகவும் ரசித்து, அனுபவித்து எடுத்தோம். அசோசியேட் கேமராமேனுக்கும் கூட அன்றைக்கு எடுக்கப்போகிற காட்சிகள் தெரியும். அதுபோல் மிகவும் அனுபவித்து செய்தோம். மற்றபடி, படம் வெற்றியடைந்தது மகிழ்ச்சிதான். ஆனால், அதை விட நான் மகிழ்ந்தது, அந்த படத்தை எடுத்த அனுபவத்தை தான்.

படமாக்கத்தின் போது மற்றவர்கள் கூறும் யோசனைகளை ஏற்றுக்கொள்வீர்களா?

நிச்சயமாக. நாங்கள் நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு சென்றதால் அனைத்தும் சீராக நடந்தது. படப்பிடிப்பில் வேலை மிகவும் இலகுவாக நடந்தது. அனைவரும் அந்த மூடிலேயே இருந்தார்கள். விரைவில் வேலை முடிந்தது. அங்கே மற்றவர்கள் சொல்லும் யோசனையை நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். உதாரணத்திற்கு, ‘என்னது சிவாஜி செத்துட்டாரா?’ என்று கேட்பதற்கு முன், கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு, அந்த வசனம் பேசும்போது அதை அவிழ்க்கலாம் என்பது விஜய் சேதுபதியின் யோசனைதான். அது நன்றாக இருந்தது. அதையே செய்தோம்.

ஒரு படத்திற்கு பேப்பர் வொர்க் என்பது எந்தளவிற்கு முக்கியம்?

மிகமிக முக்கியம். பேப்பர் வொர்க் எல்லாம் முடித்து, அதை ஒருமுறை சரிபார்த்து தயாராகாமல் என்னால் படப்பிடிப்பிற்கு செல்லவே முடியாது.

நீங்கள் எடுக்க நினைக்கும் சினிமா எது?

முன்னரே நான் சொன்னதுபோல்தான். ஒரு படத்தை பார்த்துவிட்டு வரும்போது, ஒருவன் தனக்குள் இருக்கும் மனிதத்தை உணரவேண்டும். இந்த வாழ்க்கையை பற்றி, மனிதர்களை பற்றி இயல்பான படமெடுக்க வேண்டும். சும்மா வெளியே நாம் என்ன வேண்டுமானால் பேசலாம். ஆனால் பசி வந்தால், சாப்பிடலாமா என்று கேட்கும் சாதாரண மனிதர்கள்தான் நாம். இது ஒரு சிறிய உலகம், நம்மை சுற்றி இருக்கும் சக மனிதர்கள், ஒரு இயல்பான வாழ்க்கை இதுகுறித்த ஒரு படம் எடுக்க வேண்டும். அந்த மாதிரியான வாழ்க்கையை பிரச்சாரமாக இல்லாமல் உண்மையாக காட்ட வேண்டும் என்று ஆசை. முள்ளும் மலரும், தலைமுறைகள், ஆரண்ய காண்டம், 7 ஜி ரெயின்போ காலனி, ட்ராக்கர், ஃபாரஸ்ட் கம்ப் போன்ற படங்கள் எனக்குப் பிடித்த படங்கள். தலைமுறைகள் படத்தில், தாத்தா பேரனிடம் ‘என்னை மறந்துடாத’ என்று சொல்லும் இடத்தில் கலங்கிவிட்டேன். அன்புக்காக ‘, அங்கீகாரத்திற்காக ஏங்கும் சராசரி மனிதர்கள்தானே நாமெல்லாம். அதுபோல் ஒரு மனிதர் அப்படி கூறுகையில் அது என்னவோ செய்தது. முள்ளும் மலரில் வரும் காளிதான் மனிதன். அவன் அப்படித்தான். அவனுக்கு ஈகோ இருக்கிறது. அந்த மேனேஜரை பிடிக்கவில்லை. அவன் பார்வையில், அந்த மேனேஜர் ஒரு பக்கா முதலாளியாகவே தெரிகிறான். இறுதிவரை, அவனுக்கு அந்த மனிதனை பிடிக்கவில்லை. ஆனால், அவன் தங்கச்சிக்கு பிடித்ததனால், அவளுக்காக அவனுக்கு தங்கையை தருகிறான். அப்போதும் அவனுக்கு அந்த மனிதனை பிடிக்கவில்லை. அருமையான படம் அது. ஒரு படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்தால், சில நேரத்திற்கு அடுத்த மனிதன் மேல் கோபமே வரக்கூடாது. அந்த மாதிரியான சினிமாக்கள் எடுக்க வேண்டும். அடுத்தடுத்து அதுபோன்ற வாழ்க்கையை காட்டி, நம்மை ஒருபடியாவது மனதளவில் உயர்த்தும் படங்களை எடுக்க வேண்டும். சில படங்களை பார்க்கையில், நமக்குள் இருக்கும் அன்பு பெருகும். அப்படிப்பட்ட படங்களை எடுக்க வேண்டும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </