இதழ்: 25     ஐப்பசி (November 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
   
சினிமா - நிழலா? நிஜமா? - அருண் மோ.
--------------------------------
தமிழகக் காளியும் மகாராஷ்டிர ஜபயாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
எஸ்.எஸ்.ஆர் - அரிதாரமற்ற கலைஞர் - டிராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல் - தினேஷ்
--------------------------------
இயக்குனர் பாலாஜி தரணிதரன் - நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
இயக்குனர் ப. ரஞ்சித் நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேர்காணல் - சரவணன்
--------------------------------
இயக்குனர் கமலக்கண்ணன் நேர்காணல் - காளிமுத்து
--------------------------------
இயக்குனர் நவீன் நேர்காணல் - ஜெயகாந்தன்
--------------------------------
இயக்குனர் ரமேஷ் நேர்காணல் - அருண் தேவா
--------------------------------
இயக்குனர் வினோத் நேர்காணல் - ஐயப்பன்
--------------------------------
தயாரிப்பாளர் சி.வி. குமார் நேர்காணல் - யுகேந்தர்
--------------------------------
தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமார் நேர்காணல் - தமிழரசன்
--------------------------------
   

   

 

 

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் நேர்காணல்

”மதயானைக்கூட்டம்” ஒரு வஞ்சப்புகழ்ச்சி

- தினேஷ்

என்னுடைய சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி. முதலில் எல்லோரையும் போலவே நடிகனாக வேண்டுமென்பதே எனது ஆசையாக இருந்தது. சினிமாவில் நடிக்கவேண்டுமென்பதற்காகவேதான் நான் பெட்டியைத்தூக்கிக்கொண்டு சென்னைக்கு வந்திருந்தேன். சில வேலைகளும் செய்து வந்தேன். செவன்த் சேனலில் காமிரா உதவியாளராக வேலைபார்த்து வந்தேன். பின்பாகத்தான் நான் பாலுமகேந்திராவின் படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்க்கின்ற வாய்ப்புகள் கிடைத்தது. இதற்குப்பின்பாகத்தான் சினிமாவைக்கற்றுக்கொள்ளவே ஆரம்பித்தேன். நான் அவரிடம் வேலை செய்துகொண்டிருக்கும்போது வெற்றிமாறன் எனக்கு சீனியர். அவர் ”பொல்லாதவன்”, படம் இயக்கிக்கொண்டிருந்த பொழுது அதில் இணை இயக்குனராக வேலை செய்தேன். ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதினேன். இதற்குப் பின்பாக மதயானைக்கூட்டம் வாய்ப்பு அமைந்தது.

இந்தப் படத்திற்கான உடனடி உந்துதல் என்ன என்று சொல்ல முடியுமா?

நாம் வாழ்ந்த பூமியை வைத்து படம் எடுக்கவேண்டும் என்ற ஆசைதான். முதலில் நான் என்னுடைய நேட்டிவிட்டி, கலாச்சாரத்தை பதிவுசெய்ய வேண்டும். இராதமாதபுரம் மாவட்டம் என்றாலும், நான் படித்துவளர்ந்தது எல்லாமே மதுரைதான். தேனியில் தான் ஒருவர் இறந்தபின்பு செய்கின்ற சடங்குகளை பார்த்தேன். எனக்கே அது புதிதாக தெரிந்தது. அதனால் அதைப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மதுரை என்பது வேறு, தேனி, கம்பம் பகுதிகளுக்கான வட்டார வழக்குகள் வேறு. கலாச்சாரம் எல்லாமே வேறாகயிருக்கும். இங்கும் என்னென்ன பழக்கங்கள் எல்லாம் இருக்கின்றன என்று தேடிப்போகின்ற பொழுதுதான் பல ஆச்சரியமான விஷயங்களெல்லாம் தெரிய வந்தன. பின்னர், அதற்கு மேல் பாலுமகேந்திராவிடம் வேலை பார்த்திருக்கிறோம். அவரிடம் வேலை பார்த்தவர்களெல்லோரும் தங்களை ஒவ்வொரு விதத்திலும் நிரூபித்துவிட்டனர். நானும் பாலுமகேந்திராவின் உதவியாளர் தான் என்ற பெயர் நிலைக்கவேண்டும் என்று நினைத்து, செய்யப்பட்ட படம் தான் “மதயானைக்கூட்டம்”.

தமிழ்ப்படங்களில் சமகால விழிப்புணர்வுடன் ஒரு இனவரைவியல் படத்தை எடுக்க முயன்றிருக்கிறீர்கள். இதனை நீங்கள் உணர்ந்து செய்தீர்களா?

இனவரைவியல் மட்டும் கிடையாது. இங்கு பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற கலாச்சாரப் பதிவுகள் எல்லாமே கதையைத்தாண்டி வெளியே போகவில்லை., இனவரைவியலை மட்டும் பதிவுசெய்யவேண்டுமென்றால் இதனை ஆவணப்படமாக எடுக்க முயன்றிருக்கலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவர்களின் வாழ்க்கை முறையே இதுவாகத்தான் இருக்கிறது. அதை கொஞ்சம் விரிவாக இந்தப்படத்தில் பேசியிருக்கிறேன். அவ்வளவுதான்.

இந்தப்படம் குறித்து வந்த எதிர்வினைகள்?

தேவர் சமூகம் அல்லாதவர்கள்” தேவர் சாதியை தூக்கிப்பிடித்திருக்கிறார், இயக்குனர்” என்று சொன்னார்கள்., தேவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்களை படத்தில் திட்டியிருப்பதாக நினைத்து என்னைத் திட்டினார்கள்., ஒரு கட்டத்தில் படம் ஓடி முடிந்து, தியேட்டரை விட்டு வெளியேறிய பின்னர் இரு பிரிவினருமே என்னைப் பாராட்டினார்கள். , இதுதான் நடந்தது.

அண்ணன் தங்கை உறவில் உறைந்திருக்கிற ஆண் பெருமித உணர்வுக்கு ஆண் அதிகாரம் எனவும் பொருள் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா?

அந்தச்சமூகத்தில் ஆணுக்கான மதிப்பு என்ன இருக்கவேண்டுமோ அதுதான் ”மதயானைக்கூட்ட”த்திலும் இருந்தது. செயற்கையாக ஆண் அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் அது பொய்யாகத்தான் இருந்திருக்கும். இன்னும் வெளிப்படையாகச்சொல்ல வேண்டுமானால், அந்த இனத்தில்,, பெண்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துபவர்களாகயிருப்பார்கள்.

இலக்கியப் படைப்பிற்குரிய உள்ளார்ந்த படைப்பு மொழி மதயானைக்கூட்டத்தில் வாய்த்திருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது?

இது இலக்கியப்படைப்பாக இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. இது ஒரு கதை. ஒரு கலாச்சாரம். ஒரு படத்திற்கான நேர்மை, ஒரு சம்பவத்திற்கான நேர்மை, இதைத்தான் என் படத்தில் பதிவுசெய்திருக்கிறேன். அது இலயக்கியப்பாதிப்பாக உங்களுக்கு தெரிகிறது. இன்னமும் சொல்லப்போனால் இரண்டு பாடல்களும் இந்தப்படத்தில் உள்ளது. இது ஒரு சினிமா. ஆனால், பார்க்கின்ற விதம் தான் வேறாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்தப்படத்திற்கான மரியாதை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தை ஒரு கமர்ஷியல் நோக்குடன் தான் அணுகியிருக்கிறேன்.

இப்படத்தினை எடுப்பதற்கு திரைப்பட அழகியல் எனும் அளவில் உங்களுக்கு ஆதர்ஷம் என எதுவும் அல்லது யாரேனும் உண்டா?

அழகியல் என்பதைக்காட்டிலும் ஒரு படமாக எப்படி எடுக்கப்படவேண்டும் என்பதற்கு உதாரணம் பாலுமகேந்திரா தான். இன்னமும் சொல்லப்போனால் நான் நினைத்த விஷயங்களை அப்படியே அந்த மண்ணிற்கே உரிய வறட்சியுடன் தான் சொல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால், ஒளிப்பதிவாளர் மற்றும் இன்னும் சில நண்பர்களுடன் பேசுகின்ற பொழுது சில உபயோகமான தகவல்கள் சொன்னார்கள். ஆரம்பத்திலேயே மரணத்தைக் காட்டுகிறோம். தொடர்ந்து மரணங்கள் சார்ந்த கதையாகத்தான் இருக்கிறது. எனவே முதல் சாவை ஜாலியாக பாட்டும் கூத்துமாக எடுத்துவிடுங்கள், அப்பொழுதுதான் படம் நன்றாகயிருக்கும் என்றார்கள். கதை நிகழும் இடத்தை வறட்சியாக இல்லாதவாறு ஒளியமைப்புகளை அமைத்துக்கொண்டோம்.

அதுபோலவே முதல் சாவினை காட்சியாக்குகின்ற பொழுது அந்த மனிதரைச்சுற்றி ஆடிப்பாடிக்கொண்டிருப்பார்கள். அந்த மனிதர் யார் என்று முதலில் சொல்லப்படாது. ப்ளாஸ்பேக்கில் அந்த மனிதருக்கான கதையைச் சொல்லி அவர் இப்படித்தான் இறந்தார் என்பது தெரிந்தவுடன் அதே மனிதருக்காக நாம் அழுவோம். இப்படி கதை செல்கிறது. இந்த மாதிரியாக அழுத்தமான கதையைப் பதிவுபண்ணுகிற பொழுது, ஃபேண்டஸியான ஒளிப்பதிவும் செய்துகொண்டோம்.

தமிழ்சினிமாக்கள் சாதிய படிமங்களைத் தூக்கிப்பிடிக்கிறதா?

தூக்கிப்பிடிக்கிற படங்கள்தான் ஓடியிருக்கிறது, ஆனால், குறைகளைச் சொன்ன படங்கள் ஏதும் ஓடவில்லை. நான் சாதியை தூக்கிப்பிடிக்கவேயில்லை. இந்த தேவர் சமூகம் மட்டுமல்ல, பிற எல்லா சமூகங்கள் சார்ந்தும் படங்கள் வந்திருக்கின்றன. ”பாரதி கண்ணம்மா”, கூட அடித்தட்டு மக்களைப் பற்றி பேசுகின்ற படம் தான். அதற்கும் போதிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் படம் சாதியை மட்டுமே சொல்லவில்லை. சாதியை ஒரு பின்புலமாக வைத்துக்கொண்டு அந்தக்குடும்பத்தில் நிகழ்கின்ற காதலையும், இன்ன பிற பங்காளித்தகராறுகளையுமே படம் பேசுகிறது.

சென்னையில் நாம் வாழ்கின்ற வாழ்க்கை முறை வேறு, கிராமத்தில் நிலவுகின்ற வாழ்க்கை முறை வேறு, சூழ்நிலைகள் வேறு. அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் சமாதானம் என்று சொல்லலாமேயொழிய சாதாரண மக்களால் சமாதானம் ஆகவே முடியாது. ”இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி என் சொந்த ஊர்”, என்று பெருமையாகச் சொல்வோம், ஆனால் அதே சமயம் நான் வருத்தப்படக்கூடிய இன்னொரு சம்பவம், ”ஜாதிக்கலவரங்கள் அதிகமாக நடக்கின்றதே அந்த ஊரா”, என்று நான் ஊர்பேரைச் சொன்னவுடன் என்னிடம் கேட்பார்கள். நான் சின்னப்பையனாக இருந்த பொழுது அரிவாளால் வெட்டிக்கொண்டு திரிந்தவர்கள், இன்றைக்கை வெடிகுண்டை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். இதுதான் வித்தியாசம். இதுதான் அங்கு வளர்ச்சி.

படத்தின் இறுதியில் வீர தேவர் (வேலராமமூர்த்தி), கதாநாயகனை கொன்று விட்டு, கூரையின் மேலிருந்து கம்பீரமாக நிற்பது போலக் காட்டியிருப்பீர்கள்? அடுத்த காட்சியில் விஜியின் அலறல் சப்தமும் உடன் இணைந்து வருகின்றது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பியது.?

அந்தச்சம்பவம் நடந்த பிறகு அந்தப்பெண்ணின் அலறல் அவளுடையதல்ல, என்னுடைய அலறல். இந்தப்படத்திற்கு ஏன் நான் ”யானைக்கூட்டம்”, என்று பெயர் வைத்திருக்க கூடாது. ஆனால் நான் ”மதயானைக்கூட்டம்”, என்று பெயர் வைத்திருக்கிறேன். “ஏன் இப்படி பெயர் வைத்திருக்கிறீர்கள், நாங்கள் என்ன மதம் பிடித்தா அலைகிறோம்?” என்ற கேள்வியை அவர்கள் கேட்பார்கள் என்று பார்த்தால், அதையும் பெருமையாகத்தான் நினைக்கிறார்கள். இதில் என்ன உங்களுக்கு பெருமை என்றுதான் படம் நெடுக நான் கேட்டிருக்கிறேன்.

“குத்தி கொன்னுட்டு, கமுக்கமாக ஒக்காந்து கரிக்கஞ்சி குடிக்கிறவன் தான் கள்ளன்” என்ற வசனம் வருகின்ற பொழுது தியேட்டரில் கைதட்டல் கேட்கிறது. ஆனால், நான் அவர்களை திட்டுவதற்காக அந்த வசனத்தை வைத்திருக்கிறேன். ”இதில் என்ன உனக்கு பெருமை? ”என்று அந்தச்சாதியை கேள்விக்குட்படுத்துகிறேன். கடைசியாக வருகின்ற அழுகைக்கும் தாண்டி, அடுத்து வருகின்ற பாடல் வரிகளை நீங்கள் கவனிக்கவேண்டும்.

“ஒருத்தருமே இல்லையின்னா ஒத்தையில ஊர் இருக்குமா?” என்ற வரியுடன் தான் படம் முடிகின்றது.

வீச்சறுவா வாய் செவக்க.,

வெத்தலய போடுதடா.,

சேன தொட்டு வச்ச மண்ணில்

செங்குருதி ஓடுதடா,

ஆகாயம் என்னவோ,

வெள்ளையாத்தான் இருக்குதப்பா,

மண்ணத்தோண்டி பார்த்தாக்கா,

மனுச ரத்தம் ஓடுதப்பா!

புத்திகெட்டு, புத்திகெட்டு

பொத குளிய தேடிக்கிட்ட,

சொந்தக் கைய வெட்டி இப்போ

சோத்துக்குள்ள மூடிப்புட்ட,

தென்மேற்கா வீசும் காத்து

இங்க தேம்பி அழுறத கேட்கலயா?

கட்டாந்தரையும் மாறடிச்சு

இங்கு கதறி அழுறத பார்க்கலியா?

ஒருத்தருமே இல்லையின்னா

ஒத்தையில ஊர் இருக்குமா?” என்று முடித்திருக்கிறேன்.

பாடலைக் காண: http://www.youtube.com/watch?v=7WWPF-KXUx0

இந்தப்பாடல் வரிகளை வைத்துள்ளேன். பின்னர் எப்படி நான் சாதியைத் தூக்கிப்பிடித்ததாக சொல்ல முடியும்.

குறிப்பாக நீங்கள் சொன்ன அந்த ஷாட்டில் . இவ்வளவு கொடுமை பண்ணிவிட்டு உனக்கு ஏன் இவ்வளவு கம்பீரம் என்று அவர்களைப்பார்த்து வஞ்சப்புகழ்ச்சி பண்ணியிருக்கிறேன். யாரையும் புண்படுத்தாமல், யாருக்கும் வலிக்காமல் இந்தச் சமூகத்தில் இப்படித்தான் நடந்திருக்கிறது என்று பார்வையாளர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

தென்மாவட்டங்கள் என்றால் வன்முறையும், அரிவாளும், சாதியும் என்று பலருக்கும் பலவாறாகத்தான் தோன்றும். ஆனால், தென்மாவட்டங்கள் என்றதும் உங்கள் நினைவிற்கு வருவது?

தென் மாவட்டங்களில் இருக்க கூடிய பாசம் இன்று வரை இங்கு எனக்கு கிடைக்கவேயில்லை. தென்னார்க்காடு பகுதிகளோடு பழக்கமில்லை, திருச்சியைத் தாண்டி எங்கேயும் கிடைக்காது. சென்னையில் நான் ஒரு அனாதையாகத்தான் வாழ்ந்து வருகிறேன். சென்னையில் இருப்பது ஒரு இயந்திரத்தனமான சூழல். அதற்காக சென்னையை நான் குற்றம் சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், இங்கு யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. தென் மாவட்டங்களிலும் அவரவர் பிழைப்பை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆயினும், அந்த பாசமும், அன்பும் இங்கு கிடையாது. ”தண்ணீர் இருக்கா?”, என்று ஆச்சியிடம் கேட்டால் ”காபி குடிக்கிறியா? ”என்று கேட்பார்கள். இன்றைக்கும் இந்தப்பழக்கம் அவர்களிடம் அப்படியே இருக்கிறது. அந்தப்பாசத்திற்காக இன்றுவரை நான் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஒரு மண்ணில் நிகழ்ந்த வாழ்க்கையைப் பதிவுசெய்ய வேண்டுமானால் நீங்கள் எதைப்பதிவு பண்ணுவீர்கள். ? மக்களும் அதைத்தான் கேட்கிறார்கள். வன்முறையை விரும்புகிறார்கள். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் பரவாயில்லை, நல்ல படமாக எடுத்துத்தாருங்கள் என்று எந்த தயாரிப்பாளரும் சொல்வதில்லை. இதில் நீங்கள் படைப்பாளிகளை மட்டும் குற்றம் சொல்வதில் நியாயமில்லை. அவர்கள் தருகிற குறுகிய எல்லைக்குள் படம் எடுக்க வேண்டியது அந்தப் படைப்பாளிகளின் திறமை என்று மாறியுள்ளது.

சினிமாக்களால் சமூக மாற்றங்கள் ஏதேனும் நடந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

இந்தப்படம் எடுத்து முடித்தபின்பு, முக நூலில், “எங்கள் சாதியைப்பற்றி படம் எடுப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ளவும்” என்று சிலர் சொல்லியிருந்தார்கள். ”அங்கு நடப்பவற்றை, இருப்பவற்றைத்தானே சொல்லியிருக்கிறார்” என்றும் சிலர் சாதகமாக சொன்னார்கள். இந்த மாதிரியான பதில்கள் கிடைக்கின்ற பொழுது என் படம் சரியாக அவர்களைச் சென்று சேர்ந்துள்ளது என்றுதான் தோன்றுகிறது.

படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறையாக, நல்ல படம் எடுத்தாலே போதும் என்றுதான் நினைக்கிறேன். எது நல்ல படம் என்பது அவரவர்களின் மனதைப்பொறுத்துதான் இருக்கிறது. என்னையே எடுத்துக்கொள்ளலாம், இந்தப்படம் வெளியானபொழுது நான் நல்லபடம் தான் எடுத்திருக்கிறேன் என்று நினைத்தேன். அதே போல பல மாற்றுக்கருத்துகளும் வந்தன. படம் நன்றாகயிருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால், படம் எடுக்கின்றபொழுதும், படம் எடுத்தபின்பும் இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற சமூகம் என் மீது கோபம் கொள்ளும் என்று நினைத்துதான் செய்தேன். அதற்காக அவர்களின் குறைகளை மட்டுமே இதில் பதிவுசெய்யவில்லை, பல நிறைகளைப் பதிவுசெய்திருக்கிறேன். ஒரு படமாக வாழ்க்கையைப் பதிவுசெய்கையில் அவர்களின் நிறை குறைகளை அலசியிருக்கிறேன் அவ்வளவுதான்.

ஆனால், படைப்பாளிகளுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி எழுதியவர்களைக்காட்டிலும் இதைப்பற்றி நிறையபேர் என்னிடம் பேசினார்கள். அவர்கள் சொன்னது ”இது சமூகத்தில் என்னவிதமான மாற்றத்தைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை?”, என்றார்கள். இவர்கள் சொன்னதை நான் எவ்விதமாக எடுத்துக்கொள்வது.

உங்கள் படங்களில் புதுமுகங்களை அதிகமாக பயன்படுத்தியுள்ளீர்கள்? முதல் படம் என்ற காரணமா?

இது பாலுமகேந்திராவிடம் நான் கற்றுக்கொண்டது.

கதைக்குப் பொருத்தமானவரா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர, இவர் புதுமுகமா என்றெல்லாம் பார்க்கமாட்டார். பாலு மகேந்திர சினிமாப்பட்டறையிலிருந்து வெளிவருபவர்கள் சினிமாவை அணுகுகிற விதமே தனித்துவமானதாகத்தான் இருக்கும்.

புதுமுகங்கள் என்பதால் சில நேரங்களில் அவர்கள் எவ்வாறு நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பேன், அவர்கள் என்னை மட்டுமே பிரதிபலிக்க கூடாது என்பதற்காக அவர்களை நடிக்கச்சொல்லியும் கதைக்குத்தேவையான நடிப்பை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

நீங்கள் பத்து வருடங்கள் உதவி இயக்குனராக இருந்துள்ளீர்கள், இப்போது வருகின்ற இயக்குனர்கள் குறுகிய காலத்திலேயே படம் எடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இரண்டிற்குமேயான வித்தியாசமாக நீங்கள் பார்ப்பது?

பாலுமகேந்திரா நிறைய படிக்க வேண்டும் என்று சொன்னவர். அவர் தனது சொத்தாக நினைப்பது, அவர் வாங்கி வைத்திருக்கின்ற புத்தகங்களும், உலகசினிமா குறுந்தகடுகளும் தான். இன்றைக்கு புதிதாக வருபவர்களுக்கு வாசிப்பு பழக்கம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். டி.வி.டிக்கள் அதிகமாகயிருப்பதால் அதிகமாக படங்கள் பார்க்கத்தொடங்கிவிடுகிறார்கள்.

நானும் சில கல்லூரிகளுக்கு பேசச் செல்கையில்,., அவர்களிடம் நான் சொல்வது, ’படிக்க படிக்க நீங்கள் பார்க்கின்ற படங்களின் விதமே மாறும்’.

இப்பொழுது குறும்படங்கள் எடுத்துவிட்டாலே படம் எடுக்கலாம் என்ற நிலையும் இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பும் அவர்கள் சினிமாவைக் கற்றுக்கொண்டுதானிருக்கிறார்கள். என்னை எடுத்துக்கொண்டால் பத்துவருடங்கள் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கின்றேன். எனக்கும் சீனியர்கள் 25 வருடங்கள் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது வருகின்றவர்கள் 2 அல்லது 3 படங்கள் தான் வேலை பார்க்கிறார்கள். ஆனால் நான் அதை அப்படிப்பார்க்கவில்லை.

நீங்கள் என்றிலிருந்து சினிமாவைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறீர்களோ அதுதான் முக்கியம். வெறுமனே ஒருவர் குறும்படங்கள் எடுத்து மட்டும் இயக்குனராக ஆகிவிடுவதில்லை. அதற்குப்பின்பாக அவர்களின் படிப்புகள், சின்னச்சின்ன முயற்சிகள், உழைப்புகள், பரிட்சார்ந்த சோதனைகள், பார்த்த படங்கள், படித்த புத்தகங்கள், என எல்லாமேதான் அவர்கள் படத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன. குறும்பட இயக்குனர்கள், எடுக்கின்ற படத்திற்குப்பின்பாகவும் பல உழைப்புகள் இருக்கிறது . பயிற்சி அவசியம். அப்படிப்பார்க்கையில் இப்போது புதிய அலை என்று சொல்லப்படுகிறது. அதனை வரவேற்கிறேன்.

கதையம்சத்தோடு பாடல் காட்சிகள் வருகின்றது. ஆரம்பத்தில் வருகின்ற சாவுப்பாடலும் கதையோட்டத்திற்கு உதவுகிறது. பின்னர் க்ளைமேக்ஸ் பாடல் காட்சி. ஆனால், “கோன கொண்டக்காரி” போன்ற பாடல் காட்சிகள் குறித்து?

ஒரு பாட்டு கூட இல்லையென்றால் யாரும் தியேட்டருக்கு வருவதில்லை. நாங்கள் மட்டும் இதுமாதிரியான பாடல்களுக்கு ஆசைப்பட்டா வைக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பாடல்களுக்கான கோரிக்கைகள் வருகின்றது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இவர்கள் இதுமாதிரியான பாடல்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்தப்பாடல் செயற்கைத்தனமாகத்தான் இருக்கிறது.

என்னைப்பொறுத்தவரை பாலுமகேந்திராவின் சிறந்த படைப்புகள் அவர் இயக்கிய குறும்படங்கள், டெலி ஃபிலிம்ஸ்தான். 150லிருந்து 200 கதைகள் படித்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து ஒரு குறும்படம் எடுப்பார். ஒரு படம் எடுப்பது அவ்வளவு கஷ்டமான விஷயம். அவர் நினைத்திருந்தால் காலையிலிருந்து மாலைக்குள் ஒரு குறும்படம் எடுத்துவிடலாம், ஆனால், பாலுமகேந்திரா ஏழு நாட்களும் இரவும், பகலும் அந்த குறும்படத்திற்கான வேலையில் இருப்பார். நாங்கள் அவர் மாதிரியாக இருப்பதற்கு ஆசைப்படுகிறோம்.

தமிழ்சினிமா பார்க்க வருபவர்களுக்கு பாடல்களும், இடைவேளையும் கண்டிப்பான தேவையாக உள்ளது. திரையரங்கில் வியாபாரம் ஆகவேண்டும் என்பதும் ஒரு காரணம். அவர்களுக்கு நொறுக்குத் தீனிகள் விற்க வேண்டும். பின்னர் மக்களும் இடைவேளைக்கெல்லாம் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டனர். இதனைவைத்தே படத்தை முதல் பாதி, இரண்டாம் பாதி என்றும் பிரித்துக்கொள்கின்றனர். தமிழ்சினிமாவிற்கென்று தனியாக கட்டமைப்புகளை ரசிகர்கள் உருவாக்கிவைத்திருக்கிறார்கள். பாடல்கள் தேவையில்லை தான் ஆனால், ரசிகர்கள் பாடல் போடுகின்ற பொழுது தியேட்டரைவிட்டு வெளியே போனாலும் கூட அந்த பாடலின் சப்தமாவது கேட்க வேண்டும் என்று நினைக்கிறான். இதையெல்லாம் தாண்டி சினிமா ஒரு பிஸினஸ்.

உங்கள் படங்களில் கதாநாயக பிம்பம் எந்த அளவில் இருக்கும்?

கதையோடு, கதைக்கு தேவைப்படும் வகையில் இருக்கும்.

தமிழில் ஹீரோயிசத்தை மக்கள் தான் உருவாக்குகிறார்கள். கேரளாவில் ”ஸட்டர்”, என்ற படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ”வானப்பிரஸ்தம்”, என்ற படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இதுமாதிரியான படங்கள் தமிழில் வெளிவருமா? அல்லது வெளிவந்தால் மக்கள் பார்ப்பார்களா? என்ற கேள்வியும் இருக்கிறது. கேராளாவில் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்த்தார்கள், ஆனால் நாம் தான் அதனை சினிமாவாக மட்டுமே பார்க்க விரும்புவதில்லை. சினிமாவில் வருகின்ற ஹீரோவை உண்மையான ஹீரோவாக நினைத்துக்கொள்வது நம்முடைய தவறுதான்.

இங்கு ஓடுகிற குதிரை மேல்தான் பணம் கட்டுகிறார்கள். இரண்டு முறை தோற்றுவிட்டால் மூன்றாவது முறைக்கு அந்தக்குதிரை மேல் யாரும் பணம் கட்டப்போவதில்லை.

மேலும் சினிமாவை ஒரு கலையாகப் பார்ப்பவர்களுக்கும், இதனை வெறுமே ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக பார்ப்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பாலுமகேந்திராவிற்கு சினிமா ஒரு கலை. அவரிடம் சென்று இந்தப்படத்தில் ”நீங்கள் ஒரு நல்ல கருத்து சொல்லியிருக்கிறீர்கள்”, என்று சொன்னால், அவர் கோபமடைவார். ”நான் கருத்து என்று எதுவும் சொல்லவில்லை, இருப்பதை அப்படியே சினிமாவாக பதிவுசெய்திருக்கிறேன்” என்று சொல்வார்.

தமிழ்சினிமாவில் இது மாறியிருக்கிறது என்று எதைக் குறிப்பிடலாம்?

ரசனை கொஞ்சம் மாறியிருக்கிறது. இந்த ரசனை மாற்றம் தான் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும். தொழில்நுட்பம் பேசப்படுகின்ற வகையில் அதிகமாக உள்ளது. படங்களில் சொல்லவேண்டிய கருத்துகள் இன்னும் மாறவேண்டும். கதையமைப்புகள் மாறவேண்டும். இங்கு மீண்டும் மீண்டும் காமெடிக்கும், காதலுக்குமே வரவேற்புகள் இருக்கிறது. வேறொரு கதைகளை அமைத்துக்கொண்டாலும், இந்த இரண்டைச்சுற்றியுமே கதை நகர்கிறது.

ஒரு கதைக்கான ஃப்ரேம் உங்கள் கற்பனையின் அடிப்படையில் கதைக்கு தேவையாக தகுந்த புரிதலோடு திரைப்படத்தில் வைக்கப்படுகிறது., அதற்குப் பின்பாக நிறைய உழைப்பும் இருக்கிறது. ஆனால் திரையில் அந்த ஃப்ரேம் காண்பிக்கப்படுகின்றபொழுது, அந்தக்காட்சியில் சிகரெட் குடிப்பது போன்று காட்சிகள் வந்தால் உடனே கீழே ”புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு”, என்று போடுகிறார்கள். இதை திரையரங்கில் உட்கார்ந்து பார்க்கின்ற பொழுது உங்கள் மனதில் என்ன தோன்றும்?

ஒரு ப்ரேம் செட் செய்ய ஒளிப்பதிவாளர் அரைமணிநேரம் எடுத்துக்கொள்வார், லைட்டிங்க் செட் செய்ய அரைமணிநேரம் ஆகும், இதைத்தாண்டியும் கதைக்குத் தேவையாகத்தான் அந்த இடத்தில் சிகரெட் குடிப்பது போன்று காட்சிகள் வரும். அந்த இடத்தில் ”புகைபிடிப்பது தவறு”, என்று கீழே போடுகையில் வருத்தமாகவே இருக்கும். அந்த வார்த்தைகள் நான் சொல்கின்ற கதையைத்தாண்டி பார்வையாளர்களை வெளியே அழைத்துச்செல்கிறது.

படத்தில் மொத்தமே 5 தடவைக்கு மேல் குடிப்பது போலவோ, சிகரெட் பிடிப்பது போலவோ காட்சியே வைக்க கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு. சினிமாவில் மட்டும் சிகரெட் பிடிக்க கூடாது, மது அருந்தக் கூடாது என்று சொன்னால் இதில் என்ன நியாயம் என்று புரியவில்லை. நிஜ வாழ்க்கையை பதிவு செய்ய வருபவர்களுக்கு இது முரணான விஷயம். எல்லோரும் சினிமாவை மட்டுமே சீண்டிப்பார்க்கிறார்கள். அவர்கள் சொல்வது, ’சினிமாதானே எடுக்கிறீர்கள்’,

சென்சார் தேவைதான். ஆனால் சில விஷயங்களில் அவர்கள் புரியாமல் செயல்படுகின்ற பொழுது படைப்பாளியாக பல வேதனைகளைத் தருகிறது. ஒரு காட்சியில், ஒருவனை கேவலமான வார்த்தையால் திட்டிவிடுகிறான், அதனால் தான் கதையில் சண்டையே வருகின்றது. அப்பொழுது அந்த வார்த்தையை எப்படி சினிமாவில் பதிவுபண்ணுவீர்கள். இது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்க கூடிய பிரச்சனைகள் தானே. ரோட்டில் எவனை, எவனோ கெட்டவார்த்தையால் திட்டியபடி சண்டை போடுகிறார்கள். எங்கும் பார்க்கலாம். ஆனால், அதனையே சினிமாவில் பயன்படுத்த முடியாது.

என் படத்தில் ஆட்டோவிலிருந்து ”வீர தேவர்”, கதாபாத்திரம் இறங்கி வருகிறது. அப்பொழுது பின்புலத்தில் ஒரு நாய், காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு போகும். அது அந்த இடத்தில் தெருவில் திரிகிற நாய். அது என் படத்தில் வந்திருக்கின்ற காரணத்தினால், அந்த நாய்க்காகவும் ஒரு சான்றிதழ் வாங்கித்தந்திருக்கிறேன்.

ஒரு வரை கத்தியில் அறுப்பது போன்று காட்சியிருக்கும். அவரை நான்குபேர் சேர்ந்து பிடித்துக்கொள்வார்கள். ஒருவர் தான் அவரை வெட்டுவார். ”அதனைக் குறைங்க, குறைங்க”, என்று சென்சாரில் சொல்கிறார்கள். எதைக்குறைக்க முடியும். அவர்களுக்கு நான்கு பேரும் சேர்ந்து அந்த மனிதரை வெட்டிக்கொல்வதாக தோன்றுகிறது.

”ஒருவனை சந்து சந்தா வெட்டிக்கொண்டு வா”, என்று சொல்வார்கள். இதை நீங்கள் சினிமாவில் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? வேறெங்கும் கேட்டதில்லையா?

ஒரு பெண், விஷத்தைக்குடித்து விக்கி விக்கி சாகிறாள் என்பதைக் காட்சியாக்க வேண்டும். கதைக்கு தேவைப்பட்டதால் அப்படித்தான் காட்சியாக்கியிருந்தேன், ஆனால், சென்சாரில் அதை அந்தக் காட்சியை Blur பண்ணச்சொல்கிறார்கள். காட்சியில் அந்தபெண் சாகிறாளா? அல்லது தண்ணீர் குடித்து வாய் கொப்பளிக்கிறாளா? என்பது கூட தெரிய வேண்டாமா?

எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சென்சாரில் இருக்கிறார்கள். இராமேஸ்வரத்தில் கடைக்கோடியில் இருக்கின்ற ஒருவரும் சென்சாரில் இருந்தால் ”மதயானைக்கூட்டம்” பேசியிருக்கின்ற விஷயம் அந்த நிலப்பரப்பில் இருப்பவருக்கு புரிந்திருக்கும். அந்த வாழ்க்கை முறை தெரிந்தவர்கள் சென்சாரில் இருக்க வேண்டும் என்பது கோரிக்கை.

எங்கள் ஊரில் இயல்பாக மாமனும், மச்சானும் பேசுகின்ற பொழுது சாதாரணமாக கெட்டவார்த்தைகள் பேசுவார்கள். அவர்களை சாப்பிட அழைப்பதாகயிருந்தாலும் கூட ஒரு கெட்டவார்த்தை வரும். அது அத்தனை பாசத்தோடும், உரிமையோடும் வெளிப்படும். இதை எப்படி என் படத்தில் போலியாய் பதிவுபண்ண முடியும். இதனை நான் இங்கு பதிவுசெய்தால் சினிமாவில் கெட்டவார்த்தைகள் இருக்கிறது என்று சொல்வதில் என்ன நியாயம்.

கிராமத்தில் இயல்பாகவே சாதிப்பெருமை வரும். அந்த மனிதர்களை எப்படி நான் சினிமாவில் காட்டமுடியும்.

சென்சார் உறுப்பினர்கள் நீக்கச்சொல்கிற காட்சிகளெல்லாம் படத்தின் கதையோட்டத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையெல்லாம் அதற்கான நேரம் ஒதுக்கி அந்தப்படத்திற்கான புரிதலோடு அதனைப்பார்க்க வேண்டும். அரிவாளைத்தூக்கி விட்டாலே (யு/ஏ), ரத்தம் வந்துவிட்டாலே (ஏ) என்று சான்றிதழ் தருகிறார்கள். இது கவலை அளிக்கிறது. இந்த மாநிலத்தில் சென்சாரில் பிரச்சனை என்றால் வேறொரு மாநிலத்தில் சென்சார் சான்றிதழ் வாங்குகின்ற சூழலும் இருக்கிறது. ஆனால், 2 ½ கோடியில் படம் எடுத்துவிட்டு இதற்காகவெல்லாம் தயாரிப்பாளர் அலைந்துகொண்டிருப்பாரா?. ”அந்தக்காட்சியை எடுத்துவிடு”, என்றுதான் சொல்வார். காலம் தள்ளிப்போகும், குறிப்பிட்ட காலத்தை தவறவிட்டால் சின்னப்படத்திற்கான தியேட்டர்கள் கிடைக்காது.

சென்சார் உறுப்பினர்கள் ஒருமுறைக்கு, இரண்டு முறையாவது படம் பார்க்கலாம், அதற்குப்பின்பாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளலாம். அதைவிடுத்து விடாப்பிடியாக அவர்கள் காட்சியை நீக்கச்சொல்வது வருத்தமாகவே உள்ளது. என்ன படம் எடுத்தாலும் அதன் விதியை சென்சாரில் இருக்கின்ற நான்கு பேர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பின்னர் படம் பார்த்துவிட்டு மண் சார்ந்த காட்சிகள் இல்லை, மனிதர்கள் இயல்பாக இல்லை என்று வாதம் வைத்தால் இந்தக்காட்சிகளை சென்சாரில் தூக்கிவிட்டார்கள் என்று சொல்லவா முடியும். சப்டைட்டில் போட முடியுமா. ?

முழுப்படத்தின் கருத்தும் என்ன என்றுதான் அவர்கள் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் அந்த வார்த்தைகள் தவறான அர்த்தங்களைக் கொடுக்கிறதா? அல்லது வலியைக்கொடுக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஆனாலும், சென்சார் நிச்சயம் வேண்டும் என்றுதான் சொல்வேன்.

இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய உரிமை எனக்கும் இருக்கிறது. இருப்பினும் அந்த நிலைமையில் நான் இல்லை.

Stonning of soraya என்றொரு படம் மாதிரி இங்கு ஒரு படம் கூட எடுத்துவிட முடியாது. அந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு பெண்ணை கல்லால் அடித்தே கொல்வார்கள். அது நம் ஊரில் சாத்தியமே இல்லை. அந்தக்காட்சி இல்லையானால் அந்தப்படமே இல்லை.

உங்கள் படத்திற்கு வந்த மிகச்சிறந்த விமர்சனம்?

ஒரு பத்திரிக்கையிலிருந்து விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. ”எனக்குட்பட்ட சூழலில் இந்தப் படத்தைக்குறித்து இவ்வளவுதான் இங்கு எழுத முடியும். யாருமே பேசாத பொருளை காட்சியாக்கியிருக்கிறீர்கள்”. என்றார் அவர் . முதலில் படம் பார்த்துவிட்டு பிடிக்காதவர்களாகயிருந்தவர்கள் பின்பாக படம் பற்றிய புரிதலை அடைந்தவுடன் நன்றாகயிருக்கிறது என்று சொல்வதில் தனியான சந்தோஷம் இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய விமர்சனம்.

இது அன்றே நிகழ்ந்திருந்தால் இன்னும் கொஞ்ச நாட்கள் ”மதயானைக்கூட்டம்”, திரையரங்குகளில் ஓடியிருக்கும்.

வித்தியாசமாக படமெடுக்க வருபவர்களை முதலில் நீங்கள் வாழவைக்க வேண்டும். பின்பு அந்தப்படத்தின் குறைகளை சொல்லலாம். அதை படைப்பாளிகளும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள். இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் முகநூலிலிருந்து எங்கும் அதிகமான விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. இவர்கள் அந்தப் படத்தில் இருக்கின்ற குறைகளை மட்டுமே முன்வைத்தால் மக்களுக்கு அந்தப்படத்தின் மீதான குறைகள் தான் போய்ச்சேரும். முதலில் புதுமுயற்சிகளுக்கு வரவேற்புகள் கொடுக்கப்படவேண்டும். மக்கள் புரிந்துகொண்டு இது நல்ல படம் என்று நினைக்கையில் தியேட்டரில் படமில்லை, நான் இன்று இந்த அறையில் தனியாக உட்கார்ந்திருக்கிறேன்.

உங்கள் அடுத்த படம்?

அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: htt://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </