இதழ்: 29    மாசி (February 01 - 15), 2015
   
 
  உள்ளடக்கம்
 
கோஸ்டா காவ்ரஸ் : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
கலை ரூபத்திற்காக அரூபமாய் - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
இயக்குனர் & நடிகர் நாசருடன் ஒரு நேர்காணல் - தினேஷ்
--------------------------------
திரைமொழி - 15 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம் - சொர்ணவேல்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘வெண் சங்கு’ - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள் - பரசுராம்
--------------------------------
 
   

   

 

 

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை

9. ‘வெண் சங்கு’

- தம்பிஐயா தேவதாஸ்

1970ஆம் ஆண்டு. அதுவரை ஏழு இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வந்துவிட்டன. ஆனால், அவை அதிக நாட்கள் ஓடவில்லை. அடுத்த படத்தை ஆர்வத்துடன் தயாரிக்கும் மனவளத்தையோ பணவளத்தையோ அவை மீண்டும் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கவில்லை. ‘பணம் தரும் படமொன்றை என்னால் தயாரிக்க முடியாதா?' என்ற கேள்வி புகழ்பெற்ற சிங்களப் படத் தயாரிப்பாளரான ஒரு தமிழரின் மனதில் எழுந்தது.

சினிமாவில் ஆர்வம் மிக்க யாழ்ப்பாண இளைஞன் ஒருவன் சென்னை சென்றான். அங்கு தங்கியிருந்து திரை உலகின் நெளிவு சுளிவுகளையெல்லாம் அவதானித்தான். 1944ஆம் ஆண்டு சினிமா அபிமானி ஒருவருடன் சேர்ந்து ‘பிரபாவதி’ என்னும் தமிழ்ப் படத்தைத் தயாரித்தான். பின்பு தனித்தும் சில படங்களை உருவாக்கினான்.

‘தெய்வநீதி’ (1950), ‘கலாவதி’ (1951), நம்ம குழந்தை’ (1955), ‘வைரமாலை’ (1956) போன்ற படங்களே அவை. இவற்றை இந்த இளைஞனே நெறியாண்டான். நீண்ட நாட்களின்பின் இலங்கை திரும்பினான். பல சிங்களப் படங்களைத் தயாரித்து நெறியாண்டான். ‘மீனா மூவீஸ்’ என்ற சினிமா நிறுவனத்தை உருவாக்கினான். வெல்லம்பிட்டியில் ஆர்.ரீ. ஸ்ரூடியோவைக் கட்டினான். இந்தத் தமிழ் இளைஞனின் மனதில்தான் இலங்கையிலும் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தால் என்ன? என்ற கேள்வி உருவானது. அந்த இளைஞனின் பெயர்தான் டபிள்யூ.எம்.எஸ். தம்பு. அவர் தயாரிக்கத் தொடங்கிய தமிழ்ப் படத்தின் பெயர்தான் ‘வெண்சங்கு’. தம்புவே மூலக் கதையை எழுதினார். அவரது கதைக்கு வானொலி எழுத்தாளரான சிறில் ஜே. பெர்னாண்டோ திரைக்கதை வசனம் எழுதினார். வசனம் எழுதுவதில் இவருக்கு சந்திரா கணேசானந்தனும், பரமானந்தனும் உதவி புரிந்தனர்.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் அராலியில் ஓர் இளைஞன் பல்வேறு நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றிருந்தான். ‘புவனேந்திரன்’ என்ற அந்த இளைஞனையே இப்படத்துக்குக் கதாநாயகனாகத் தெரிவு செய்தார்கள்.

சிறுவயது முதலே நாடக ஆர்வம் மிக்க ஓர் இளம்பெண் கொழும்பில் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துவந்தார். ‘தினகரன்’ நாடக விழாவில் சிறந்த நடிகை என்ற விருதும் இவருக்குக் கிடைத்தது. அந்த நடிகையின் பெயர் தான் ‘குமாரி ராஜம்’. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் இவருக்கே கிடைத்தது.

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் அவர். நடிகர், நாடகாசிரியர், பாடலாசிரியர், பாடகர், வில்லிசை வேந்தர் இத்தனை சிறப்புமிக்க இவர், இப்படத்தில் வில்லனாக நடிக்கத் தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் ‘நடிகவேள்’ லடிஸ் வீரமணி.

இவர்களுடன் ஏ.எஸ். ராஜா, ரொசாரியோ பீரிஸ், நவசிவாயம், எம்.ஏ. ஜபார், ஜீ. பீட்டர் தேவன், ஓ.நாகூர், ரி.எஸ். பிச்சையப்பா, சுந்தர்ராஜ், அல்பிரட் தம்பிராஜ், சாமுவேல், தங்கராஜா, தியாக ராஜா, கிஸ்மத், பாயிஸ் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

திருகோணமலையில் பல நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர் பி.இந்திராணி. இவருக்கும் இப்படத்தில் சிறந்த பாத்திரம் வழங்கப்பட்டது. பல வானொலி நாடகங்களில் நடித்துவந்தவர் சுப்புலட்சுமி. இவர்களுடன் நூர்ஜஹான், ருத்ராணி, வனஜா, மேரி கமலா, சந்திரா, மஞ்சுளா, பேபிராணி, தேவி கணேசானந்தன் போன்றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ‘அடங்காப் பிடாரி’ என்ற நகைச்சுவை நாடகம் புகழ்பெற்று விளங்கியது. அப்பொழுதே அந் நாடகம் வடபகுதியிலும் 1000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு விட்டது.

இந் நாடகத்தின் சில நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தின் இடையிலே புகுத்தப்பட்டன. இதனால், சுண்டிக்குளி நாடக மன்றத்தின் ‘அடங்காப் பிடாரி’ நாடகத்தின் பிரதான நடிகர்களான வி. பரமானந்தாராஜா, எஸ். கே. நடராஜன், கனகையா, சிவனேசன், கீத பொன்கலன் போன்றோரும் சினிமா நடிகர்களானார்கள்.

இந்தப் படத்தின் இசையமைப்பில் விசேட கவனம் செலுத்தினார் தம்பு. இசையமைப்பாளர் முத்துசாமியை அழைத்துக்கொண்டு இந்தியா சென்றார். ரி.ஆர். பாப்பாவின் உதவியுடன் சில பாடல்களை இசை அமைத்தார். ராஜு என்ற பாடகரும் கௌசல்யா என்ற பாடகியும் ரி.ஆர். பாப்பாவின் இசைக்குழுவில் அறிமுகமாகியிருந்தார்கள். அவர்களே ‘வெண்சங்கு’ படத்தின் பாடல்களைப் பாடினார்கள்.

இலங்கையில் பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்தான் எஸ். தெய்வேந்திரா. இவரே இப்படத்துக்கான ஒளிப்பதிவைக் கவனித்தார். ஏ.எஸ். பத்மநாதன் இவருக்கு உதவியாக இருந்தார். ஒலிப்பதிவு றிச்சட் டி சில்வாவுக்கு வழங்கப்பட்டது.

சிங்களத் திரை உலகின் சிறந்த ‘ஸ்ரண்ட்’ நடிகர்களான றொபின் பெர்னாண்டோ, அலெக்சாண்டர் பெர்னாண்டோ ஆகியோர் சண்டைக் காட்சிகளை அமைத்தார்கள். நடனக் காட்சிகளுக்குப் பொறுப்பாக விளங்கியவர் ருத்ராணியாவார்.

கதிர்காமம், கீரிமலை, நல்லூர் போன்ற புனித இடங்களிலும் படப்பிடிப்புகள் நடைபெற்றன. இப்போது அழிந்து போய்விட்ட யாழ்நகர் பொதுசன நூல் நிலையம், சுப்பிரமணியம் பூங்கா, காரைநகர் கசோரினாபீச் போன்ற இடங்களில் எடுத்த காட்சிகளும் இப் படத்தில் இருக்கின்றன. திரைப்படத்தின் விளம்பரத்துக்குப் பொறுப்பாக கிங்ஸ்லி செல்லையா விளங்கினார்.

‘வெண்சங்கு’ 31.07.1970இல் திரைக்கு வந்தது. தலைநகரில் செல்லமஹால், ஈரோஸ் உட்பட இலங்கை எங்கும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இக்காலத்தில் இலங்கையில் கே. பாலசந்தரின் ‘இரு கோடுகள்’, சின்னப்பா தேவரின் ‘துணைவன்’, எம்.ஜி.ஆரின் ‘நம்நாடு’ போன்ற படங்கள் திரையிடப்பட்டிருந்தன. ‘வெண்சங்கு’ சுமாராக ஓடியது.

நமசிவாய முதலியாருக்கு (ஏ.எஸ். ராஜா) ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தார்கள். மகள் ராஜி (குமாரி ராஜம்) பட்டதாரியாவாள். தம்பலகாமம் தம்பிமுத்து (லடிஸ் வீரமணி) முதலியாரின் மகனைக் கடத்திச்சென்றுவிட்டு 25000 ரூபா பணம் கேட்கிறான்.

இன்ஸ்பெக்டர் ராஜன் (புவனேந்திரன்) சிறுவனைக் கண்டுபிடித்து முதலியாருக்குத் தெரிவிக்கிறான். ராஜனுக்கும் ராஜிக்கும் காதல் ஏற்படுகிறது. முதலியார் இந்தக் காதலுக்குத் தடைவிதிக்கிறார். முதலியார் கொலை செய்யப்படுகிறார். பழி இன்ஸ்பெக்டர் ராஜன் மீது விழ, கைதுசெய்யப்படுகிறான். அநாதையாகிவிட்ட ராஜி, தம்பலகாமத்தில் ஆசிரியை வேலை செய்கிறாள். தம்பிமுத்து ராஜியைக் கெடுக்க முயலுகிறான். தந்தை முதலியாரைக் கொன்றவன் தான் என்றும், தன் ஆசைக்குச் சம்மதிக்காவிட்டால் அவளையும் கொலை செய்துவிடப்போவதாகப் பயமுறுத்துகிறான்.

விடுதலையான ராஜன், அப்போதுதான் தனது தந்தை, தம்பிமுத்துவைத் தேடி வருகிறான். இந்தச் சம்பவத்தை ராஜன் மறைந்திருந்து பார்க்கிறான். தந்தை என்றும் பாராமல் பொலிசுக்குத் தெரிவிக்கிறான். தம்பிமுத்து நஞ்சருந்துகிறான். அவன் இறக்கும் தறுவாயில் மகன் ராஜனையும் ராஜியையும் ஒன்று சேர்த்து வைக்கிறான்.

இதுதான் ‘வெண்சங்கு’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். இத்திரைப்படத்தைப் பற்றிப் பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் எழுதினார்கள். அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த வாரப்பத்திரிகை ‘சுதந்திரன்’ ஆகும். அதன் ஆசிரியர் கோவை மகேசன் விமர்சனம் எழுதினார்.

‘இலங்கையில் தமிழ்ப் படங்கள் தயாரிக்க முடியுமா? என்ற நிலை இருந்துவந்தது. இதற்கான பதிலைத் தமது சாதனையின் மூலம் காண்பித்திருக்கிறார்கள் நம் நாட்டுக் கலைஞர்கள். 8வது தமிழ்ப்படமாக ‘வெண்சங்கு’ வெளிவந்திருக்கிறது. தயாரிப்பாளர், நெறியாளர் டபிள்யூ. எம். எஸ். தம்பு, சினிமாத் துறையில் அனுபவம் மிக்கவர்.

‘வெண்சங்கு’ படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படத்தின் ஓட்டம் விறுவிறுப்பாக இல்லை. பாத்திரங்கள் உரையாடும்பொழுது ஏனோ இத்தனை மந்தகதி என்று தெரியவில்லை. லடிஸ் வீரமணியின் நடிப்பு நன்றெனினும் சில இடங்களில் நாடக பாணியைக் கைக்கொள்ளுகிறார். புவனேந்திரனின் முகத்தில் உணர்ச்சியையே காணவில்லை. ராஜத்தின் நடிப்பு பரவாயில்லை. கௌசல்யா பாடும் ‘நீயும் யாரோ நானும் யாரோ’ என்னும் பாடல் இனிமையானது. தம்பு தயாரிக்கும் அடுத்த தமிழ்ப் படம் தலை சிறந்த தமிழ்ப் படமாக அமையும் என்பதை ‘வெண்சங்கு’ எமக்குச் சொல்லாமல் சொல்கிறது' என்று எழுதியிருந்தார்.

‘வீரகேசரி’யில் ‘அருள்ராஜ்’ என்பவரும் விமர்சனம் எழுதினார். தம்புவின் ‘வெண்சங்கு’ அனைவரும் பார்த்து மகிழக்கூடிய படமாகும். தம்பு நீண்ட காலம் தமிழகத்திரையுலகுடன் தொடர்பு கொண்டிருந்தவர். ‘வெண்சங்கு’ இவரின் கன்னி முயற்சியாகும். இனிமையான பாடல்கள், சிறந்த நடிப்பு, கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகள், காதல், ஹாசியம், சண்டை, நல்ல ஒலி, ஒளி அமைப்பு, சிறந்த டைரக்ஷன் அத்தனையும் கொண்ட படம் ‘வெண்சங்கு’ என்று பூசி மெழுகி எழுதினார்.

டபிள்யூ. எம்.எஸ்.தம்பு அவர்கள் 1992 இல் காலமானார். இவரது வீடு, கொழும்பு -7, ஹோட்டன் பிளேஸில் இருக்கிறது. அங்கு இவரது மகன் றொபின் தம்பு வாழ்கிறார். இவரது வீட்டிலேயே எடிட்டிங் அறை இருக்கிறது. அதற்கு எஸ். நாதன் பொறுப்பாக இருக்கிறார். ‘வெண்சங்கு’ படத்தைப்பற்றிய தகவல்களை இவரே தந்துதவினார்.

கதாநாயகி குமாரி ராஜத்தை ரூபவாஹினியில் ‘காதல் பரிசு'க்காக நான் பேட்டி கண்டேன். ‘வெண்சங்கு’ படத்தில் கதாநாயகனுக்குப் பதிலாக வேறு இருவர் வில்லனை எதிர்த்துச் சண்டை செய்கிறார்கள். வில்லன் காதல் கீதம் பாடுகிறான். இவ்வாறான காட்சிகள் இடம்பெற்றதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன்.

ராஜம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார். ‘அந்தக் காட்சிகளுக்கு மறக்க முடியாத சில வரலாறுகள் உண்டு' என்று சொல்லத் தொடங்கினார். ‘வெண்சங்கு’ திரைப்படத்தில் கதாநாயகன் சம்பந்தமான 75 வீதக் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன. தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் இடையில் சிறுசிறு பிரச்சினைகள் எழுந்தன. மிகுதிப் பகுதியை நடித்துத் தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் கதாநாயகன். நெறியாளர் அனுபவப்பட்ட மனுஷரல்லவா? இப்படியான பிரச்சினைகள் வரக்கூடும் என்ற காரணத்தினால் முக்கியமான ஆரம்பக் காட்சிகளையும் இறுதிக் காட்சிகளையும் முன்கூட்டியே எடுத்து வைத்துவிடுவார். இப்படியான நிலை ‘வெண்சங்கு’க்கும் வரவே கதாநாயகனை விட்டுவிட்டே மிகுதிப் பகுதியை எடுத்து முடித்தார். கதாநாயகன் பாடவேண்டிய பாடலை வில்லன் பாடுவதாக அமைத்தார். கதாநாயகனுக்குப் பதிலாக வேறு ஒருவரை வில்லனுடன் மோதவிட்டுப் படத்தை எடுத்து முடித்துவிட்டார்.' என்று பதில் சொன்னார் ராஜம். இப்படிப் பதில் சொன்ன நடிகை ராஜம், இப்பொழுது நம்மிடையே இல்லை. அவர் 02.11.1992 இல் காலமானார்.

இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ‘வெண்சங்கு’ படத்தைத் தயாரித்து நெறியாண்ட டபிள்யூ.எம்.எஸ். தம்பு அவர்களின் பெயரும் குறிப்பிடத்தக்க பெயராகும்.
----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </