வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 10

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

10. "இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
- மாவீரன் நெப்போலியன் போனபார்ட்


வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.

இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்

"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -

சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.

பாடல் மேலும் வளர்கிறது :

"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."

எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.

தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.

"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது.
- என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.

மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடலைக் கேட்டும் காட்சியைக் கண்டும் இன்புற இணைப்பு: (http://www.youtube.com/watch?v=UzN8Fs2AYc4)

தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது. அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.

பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.

எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.

"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.

"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு.

அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.

படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.

மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம். அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது

"திருடாதே" படம் வெளிவந்த அதே வருடம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் இன்னொரு படமும் வெளிவந்தது.

தமிழில் முதல் "டெக்னிக்" வண்ண திரைப்படம் என்ற பெருமைக்குரிய படம் அது.

நடனக் கலைக்கும் இசைக் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட
இந்தப் படத்துக்காக ஒரு பாடல் பதிவாக்கம் செய்யப்பட்டது.

அந்தப் பாடல் பதிவானதே ஒரு சுவாரஸ்யமான கதை. கதைப்படி நாயகன் நாதஸ்வரம் வாசிக்க நாயகி பாடவேண்டும். ஆபேரி ராகத்தில் முதலில் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம் அவர்களில் நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டது.
அந்தப் பத்து நிமிட நாதஸ்வர இசைக்கும் அதன் ஸ்ருதிக்கும் இணைந்து பாடவேண்டிய பாடகியாக யாரைத் தேர்வு செய்வது?
.
அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்த பாடகி பி. லீலா அவர்கள்தான். ஆனால் லீலாவோ நாதஸ்வரத்தின் ஸ்ருதியோடு இணைந்து பாட தன்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு யாரை எல்லாமோ கேட்டுப்பார்த்துவிட்டார்கள்.

எல்லாருமே மறுத்து விட்டனர். கடைசியாக ஒருமுறை பி. லீலாவையே மீண்டும் அணுகி கேட்டுப் பார்ப்பது அவர் மறுத்துவிட்டால் காட்சியையே கைவிட்டுவிடுவது என்று தீமானித்து மறுபடி லீலாவிடம் கேட்டனர்.

லீலாவோ "என்னால் பாடமுடிந்தால் நான் மறுப்பேனா?. என்றாலும் எனக்கு தெரிந்து நாதஸ்வரத்தின் இசையோடு இணைந்து பாடக்கூடிய பாடகி ஒருவர் இருக்கிறார். குழலிசையும் அவர் குரலிசையும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாமல் ஒன்றிப் போய்விடும். இந்தப் பாடலைப் பாடக்கூடிய திறமைசாலி அவர் ஒருவர் தான். அவர் ஒருவரால் தான் இந்தப் பாட்டை பாட முடியும் " என்று அப்போதுதான் வளர்ந்து வந்துகொண்டிருந்த புதிய பாடகி ஒருவரை அடையாளம் காட்டி தன்னைத் தேடிவந்த அந்த வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்து இன்றளவும் அவரது பெயர் பாடலுடன் நிலைத்திருக்க வைத்தார்.

பி. லீலாவால் பலமாக பரிந்துரைக்கப் பட்ட அந்தப் பாடகி - திருமதி எஸ். ஜானகி.

பாடல் : "சிங்கார வேலனே தேவா."

எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் அற்புதமான இசையில் பாடல் இடம் பெற்ற
படம் : "கொஞ்சும் சலங்கை."

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</