 |
அறிவியல் இந்த அகிலத்துக்கு அளித்த அற்புதமான பொழுது போக்கு சாதனம்தான் சினிமா. விஞ்ஞான யுகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் 1887 ஆம் ஆண்டு கண்டுபிடித்த சினிமா என்ற அற்புதம் முதலில் ஐரோப்பிய மக்களை மட்டுமே அதிசயத்தில் ஆழ்த்தியது. பின்பு அது கப்பலில் ஏறி ஆயிரக் கணக்கான மைல்களைக் கடந்து இந்தியாவுக்கு வர அனேக ஆண்டுகள் ஆனது. ஆரம்பத்தில் ஊமையாக இருந்த இந்த சினிமாக்கிளி, பிறகு பேசத் தொடங்கியதும் மேலும் மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. 1927 ஆம் அண்டு அக்டோபர் 9ந் தேதி வெளியான தி ஜாஸ் சிங்கர் என்ற படம்
|
|
|
தான் முதலில் பேசிய திரைப்படம் ஆகும். அதன் பிறகு வந்த மெலடி அப் லவ் பேசிய பிறகுதான் நம்நாட்டில் படங்கள் பேசத் துவங்கின.
இந்தியாவின் முதல் படமான அரிச்சந்திரா 1913ல் வெளிவந்தது. ஆனால் அது பேசவில்லை. ஊமை படமாகத்தான் ஓடியது. ஆனாலும் திரையில் பிம்பங்கள் ஆடுவதும், ஓடுவதும் அந்தக்கால மனிதனை அதிசயிக்க வைத்தது. அதற்கு முன்பு முதன் முதலாக இந்தியாவில் திரையிடப்பட்ட மேல்நாட்டு தயாரிப்பான ஏசுவின் வாழ்க்கை தொடர்ந்து வேறு படம் எதுவும் வெளிவராததால் நான்கு வருடங்கள் ஓடியது.
இந்நிலையில் தான் வெளிநாடுகளில் பேசும் படங்கள் வெளிவந்தன. 1931ல் இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம்ஆரா வெளியானது. பம்பாயைச் சேர்ந்த அர்ரேஷ் இரானி என்ற பட அதிபர் இந்தப் படத்தை இந்தியில் தயாரித்தார். மாஸ்டர் விட்டல்
கதாநாயக னாகவும், ஜுபிதா கதாநாயகியாகவும் நடித்தனர். இந்தப்படம் இந்தியாவெங்கும் மகத்தான வெற்றி பெற்றது.
ஆலம்ஆராவின் வெற்றி பலரையும் சினிமா தயாரிப்பில் இறங்க வைத்தது. பலரும் படத் தயாரிப்பில் இறங்கினார்கள்.
காளிதாஸ் (1931)
தமிழ் சினிமாவின் முதல் படம் காளிதாஸ். முன்பு மூவி என்று கூறப்பட்ட சினிமாப்படம் டாக்கி என வழங்கப்பட்டது. இதற்கு பின்னர்தான் சாகர் மூவிடோன் தயாரிப்பில் உருவான காளிதாஸை இயக்கியவர் பிற்காலத்தில் தமிழ் தெலுங்கு பேசும் படங்களின் தந்தை என்று போற்றிப் புகழப்பட்ட ஹனுமப்ப முனியப்ப ரெட்டி என்னும் ஹெச்.எம் ரெட்டியாவார்.
இந்தியில் ஆலம்ஆராவைத் தயாரித்த அதே அர்தேஷ் இரானிதான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர். தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று விளங்கிய டி.பி. ராஜலட்சுமியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்த ஹெசப். எம். ரெட்டி, படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தயாரானதால் தெலுங்கு நடிகர் ஒருவரை நாயகனாக்கினார்.
இதனால் நாயகன் தெலுங்கிலும், நாயகி டி.பி. ராஜலட்சுமி தமிழிலும், மற்ற கதாபாத்திரங்கள் தத்தம் தாய்மொழியிலும் பேசியது வேடிக்கையாக இருந்ததாம் அப்போது.
கதை:
தேஜோவதி நாட்டு மன்னன் விஜயவர்மனின் புதல்வி வித்யாதரி. மன்னனும், அந்நாட்டு மந்திரியும் வித்யாதரிக்கு மந்திரி மகனை மணாளனாக்க விரும்பினர். ஆனால் அதற்கு வித்யாதரி மறுக்கவே, கோபம் கொண்ட மந்திரி, அடிமடையனான ஒரு ஆடு மேய்ப்பவனை அதிபுத்திசாலியாகக் காட்டி வித்யாதரிக்கு மணமுடித்து வைக்கிறான்.
மறுநாள் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளவரசி வித்யாதரி, தனது கணவனை தான் வழிபடும் காளி கோயிலுக்கு அழைத்துச் சென்று துதிக்க, காளி பிரசன்னமாகி அவர்களை ஆசீர்வதித்து அவனுக்கு காளிதாஸ் என்ற பெயரைச் சூட்டினாள் காளியின் அருளால் ஞானம் பெற்ற அந்தக் காளிதாஸ் அதன் பின்பு கவிமழை பொழிந்து பெரும் புலவனாகிறான். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி சென்னை சினிமா சென்ட்ரலில் (இப்போதைய முருகன் டாக்கீஸ்) இப்படம் வெளியானது.
|