 |
பவளக்கொடி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த தியாகராஜ பாகவதர் 1937ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படமான சிந்தாமணி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, அதுவரை வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றது. (இன்று 52 நாள் ஓட திக்கு முக்காடும் படங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்).
மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் அஸ்வத்தம்மா. கன்னடத்தில் பிரபல பாடகியாகத் திகழ்ந்த அஸ்வத்தம்மா, பாகவதருடன் போட்டி போட்டு, தமிழில் பாடி நடித்தார். |
|
படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ். (நடிகை லட்சுமியின் தந்தை). வசனங்களை அய்யாலு சோமயாஜுலு எழுதினார். பாடல்களை எழுதியவர் பாபனாசம் சிவன். ஒய்.பி. வாஷிகர் என்பவர் கேமராவைக் கையாண்டார்.
செருகளத்தூர் சாமா, அரங்கநாயகி, நாராயணராவ், எஸ்.எஸ். ராஜாமணி போன்ற தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கிய அருமையான தயாரிப்பு இது.
படக்கதை: பில்வமங்கள் என்ற ஆணழகன் ஒரு தாசியின் வலையில் சிக்கி, கடைசியில் திருந்தி பக்திமானாக மாறி முக்தி பெறுவதே கதை. பெரும் செல்வந்தரின் மகனான பில்வமங்கள் தாசி சிந்தாமணியின் அழகிலும், நாட்டியத்திலும் மயங்கி அவளே சரணாகதி என கிடக்கிறான். மகனின் இந்தச் செயல் கண்டு, பில்வமங்களின் தந்தை வாசுதேவ மூர்த்தி சுகவீனமடைந்து படுத்த படுக்கையாகிறார்.
பில்வமங்களின் மனைவி சுசீலா தன் விதியை நொந்தவாறு மாமனாருக்குப் பணிவிடை செய்கிறாள். மனவேதனையால் உயிர்துறக்கும் தறுவாயில் வாசுதேவமூர்த்தி தனது சொத்துக்களை மருமகள் சுசீலா பேருக்கு எழுதி வைத்து விடுகிறார். அதை கணவனின் கால்களில் அர்ப்பணித்து அவனது அன்பை யாசிக்கிறாள் அவள்.
சிந்தாமணி மீதான மோகம் அவனது நெஞ்சைக் கல்லாக்கிவிடுகிறது. கொட்டும் மழையில் இறந்த தந்தையின் உடலையும், மனைவியையும் புறக்கணித்து விட்டு சிந்தாமணியைத் தேடிப் போகிறான் பில்வமங்கள்.
கணவனைத் தேடி இருட்டில் ஓடிய சுசீலா, கங்கையில் விழுந்து உயிர் விடுகிறாள். படகு இல்லாத காரணத்தால், மிதந்து வரும் மனைவியின் சடலத்தின் மீது ஏறிக் கரையைக் கடந்து சிந்தாமணி வீட்டை அடைகிறான்.
ரத்தக்கறை படிந்த மேனியுடன் வந்து நின்ற பில்வமங்களைப் பார்த்து திகைத்த சிந்தாமணி காரணத்தை வினவ, நடந்ததைச் சொல்கிறான். சிந்தாமணி ஓடி வந்து கரையோரம் பார்க்க, அது சுசீலாவின் சடலம் என்பது தெரிகிறது. இருவரும் கதறியழுகிறார்கள். அதிலிருந்து பில்வமங்கள் மனம் மாறுகிறான். சிறந்த பக்திமானாகி, கிருஷ்ண பரமாத்மாவை அனுதினமும் தியானிக்கிறான். கடைசியில் பில்வமங்களும், சிந்தாமணியும் கடவுள் அருளுடன் மோட்ச கதி அடைகிறார்கள்.
"ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே'
"ராதே உனக்குக் கோபம் ஆகாதடி'
போன்ற 25 பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருந்தன.
மதுரையில் நியூ சினிமா உள்பட பல இடங்களில் இப்படம் ஓராண்டாக ஓடியது. இலங்கையிலும் பெரும் வெற்றி பெற்றது. தியேட்டர்காரர்களாக பார்த்து, படத்தை எடுக்காத வரை கூட்டம் குறைவதற்கான வழியே ஏற்படாமல் திரையரங்குகளில் திருவிழாக் கூட்டம்தான்.
இந்தப் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் ராயல் டாக்கீசார் ஒரு திரையரங்கையே கட்டி, அதற்கு சிந்தாமணி என்று பெயரிட்டனர். சிந்தாமணி பெண்ணுக்கு பெருமை தரும் பெயராக இருந்ததால், காதல் நாயகனாக பிரகாசித்த பாகவதரின் பொருட்டு படத்திற்கு சிந்தாமணி அல்லது பில்வமங்கள் என்று பெயர் வைத்தனர்.
சிந்தாமணி படம் பெரும் வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் பாடல்களை இசைத் தட்டாக வெளியிட தயாரிப்பாளர்கள் கருதினார்கள். ஆனால் பாடலை இசைத் தட்டாக வெளியிட்டால், படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என பாகவதர் கருதி, அதற்கு மறுத்துவிட்டார்.
 |
எனினும் அஸ்வத்தம்மா பாடிய கிருஷ்ணா, கிருஷ்ணா, ஈனஜென்மம் எடுத்தேன் ஆகிய பாடல்களை இசைத் தட்டுக்களாக வெளி யிட்டனர். படத்தில் அஸ்வத்தம்மா, பாகவதருடன் பாடிய டூயட் பாட்டான "மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம்'என்பதை துறையூர் ராஜகோபால் சர்மா என்பவரைக் கொண்டு பாட வைத்து இசைத்தட்டாக வெளியிட்டனர். பாகவதரின் குரலை அவரது குரல் ஒத்திருந்த போதிலும், மக்களுக்கு அது பாகவதர் பாடாத பாட்டு என்பது தெரிந்துவிட்டது. இடையில் சமரசம் பேசியதையடுத்தும், படத்தின் வசூல் இசைத்தட்டு வெளியீட்டால் பாதிக்கப் படாததாலும், பாகவதர் தான் தனியாகப் |
பாடிய பாடல்களை இசைத்தட்டுக் களுக்காக மீண்டும் பாடினார். அவை வெளிவந்து இசைத்தட்டு விற்பனையில் வரலாறு படைத்தன.
|
|