 |
எதையும் பிரம்மாண்டமாகச் செய்ய வேண்டும் என்பதில் செலவைப்பற்றிச் சிந்திக்காமல் துணிந்து செய்வது ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனின் வாடிக்கை. அந்த துணிச்சலோடு பெரும் செலவில், தயாரிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான படம் தான் "சந்திரலேகா'.
அந்தக் காலத்தில் இப்படத்தைப் பார்த்து வாய் பிளக்காத வர்கள் யாருமில்லை. அந்த அளவுக்கு பணத்தை வாரிவிட்டுத் தயாரிக்கப்பட்ட படம். முதல் தமிழ்ப்படமான "காளிதாஸ்' எட்டே நாளில் படமானதாகக் கூறுவார்கள். சந்திரலேகா தயாராக மூன்றாண்டுகள் ஆனது.
|
ஒரு ராஜாவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் வீரசிம்மன். இளையவன் சசாங்கன். கெட்டவழியிலேயே செல்லும் சசாங்கன், அப்பாவைச் சிறையிலும், அண்ணனைக் குகையி லும் அடைத்தான். குகையிலிருந்து தப்பிக்கும் வீரசிம்மன், சர்க்கஸ் கம்பெனி யில் வேலைபார்க்கும் கதாநாயகியை சந்தித்து காதல் வசப் படுகிறான். பல போராட்டங்களுக்குப் பிறகு, படைதிரட்டி தம்பியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுகிறான் அண்ணன். உச்சக்கட்டக் காட்சியில் இடம் பெறும் முரசு நடனம் பிரமிக்க வைத்தது. நாயகி டி.ஆர்.ராஜகுமாரியின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட முரசுகள் மீது பாட்டில்லாமல் நடக்கும் அந்த நடனம் படத்தின் ஹைலைட்.
அந்த நடனக் காட்சியில் ராட்சத முரசுகளுக்குள் தாய்நாட்டு வீரர்கள். மேலே அழகிய ஆட்டக்கன்னிகள். உச்சக்கட்டத்தில் வீரர்கள் வெளிப்பட, தம்பியின் வீரர்களுடன் சண்டை நடந்து, இறுதியில் தர்மம் வெல்ல, படம் சுபமாக முடிகிறது. அண்ணனாக எம்.கே.ராதாவும், தம்பியாக ரஞ்சனும் நடித்தனர். அக்காலக் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரிதான் நாயகி. கலைவாணர் என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம், சுந்தரிபாய் உள்ளிட்டோர் நடித்தனர்.
பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரது பாடல்களுக்கு ராஜேஸ்வரராவ், பார்த்தசாரதி, வைத்திய நாதன், தாஸ் குப்தா ஆகியோர் கூட்டாக இசையமைத்தனர். சர்க்கஸ் காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரியின் உடைகள் இளைஞர்களை மட்டுமல்லாமல், அக்கால முதியவர்களையும் ஈர்த்ததாம். ரூ. 30 லட்சம் செலவில் பிரம் மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ் "சந்திரலேகா' வெளியாகி வெற்றி கரமாக ஓடியது. எனினும் செலவு அதிகமானதால் லாபம் கிட் டுவது கேள்விக் குறியாக இருந்தது.
அப்போது, ஜெமினி வாசனின் படங் களை வடநாட்டில் விநியோகித்து வந்த தாராசந்த் என்பவர், தமிழ் சந்திரலேகாவைப் பார்த்து, அதுவரை இந்தியிலேயே இது போன்ற பிரம் மாண்டமான படம் வந்ததில்லை என்று கூறி, படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட் டால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார். அதற்கு வாசனும் இணங்கினார். பொதுவாக சந்திரலேகாவில் வசனம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது. எனவே வடநாட்டுக்கு ஏற்ற வகையில் சில மாறுதல்களைச் செய்து, படத்தை இந்தியில் வெளியிட்டார் வாசன்.
 |
வேறெந்த சினிமாவுக்கும் இல்லாத அளவுக்கு 609 பிரதிகள் எடுக்கப்பட்டது. விளம்பரத்துக்காக மடடும் அக்காலத்தில் 20 முதல் 25 லட்சம் ரூபாயைக் கொட்டினார் அவர். வடநாட்டுப் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்கள், பெரிய, பெரிய போஸ்டர்கள், பேனர்கள் என பல படங்களைத் தயாரிக்கக் கூடிய பணம் விளம்பரத்துக்கே செலவானது.
இந்தியில் வெளியான சந்திரலேகாவும் சக்கைப்போடு போட்டது. "மிஸ் சந்திரா' என்ற பெயரில் ஆங்கில சப்டைட்டிலுடன் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது. வசூலை வாரி வாசனுக்குக் கொடுத்தது. |
வாசனின் விளம்பரச் செலவைப்பார்த்து வியந்த, பிரபல மும்பை இயக்குநர் சாந்தாராம், இது குறைந்த செலவில் படம் எடுப்பவர்களைப் பாதிக்கும். படத்தொழிலைச் சாகடிக்கும் என்று கருத்து கூறினாராம். ஆனால் யார் என்ன கூறுகிறார்கள் என்பதைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், செயலாற்றி வெற்றிக் கனியை பறித்தார் வாசன்.
இவ்வாறு தென்னாட்டிலிருந்து வடநாட்டுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டிய முதல் பட அதிபர் எஸ்.எஸ்.வாசன் தான். படம் எடுப்பதில் தமிழர்கள் திறமைசாலிகள் என்று வடக்கத்திக்காரர்களுக்கு உணர்த்தினார் அவர்.
உலகப் புகழ் பெற்ற சந்திரலேகாவுக்குப் பிறகுதான் தமிழ்ப்படங்களுக்கு ஓரளவுக்கு மவுசு ஏற்பட்டது. ஜெமினியின் குழலூதும் இரட்டையர்கள் முத்திரையைத் திரையில் கண்டதும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரிக்கும் வரவேற்பு கிட்டியது. சந்திரலேகாவில் வில்லனாக நடித்த ரஞ்சனின் துடிப்பான நடிப்பு, வாள்வீச்சு ஆகியவை இந்தி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அவருக்கு இந்திப்பட வாய்ப்புகள் குவிந்தன.
பி.ஏ. ஹானர்ஸ் படித்த ரஞ்சன், வாள்வீச்சு, நடனம், குதிரையேற்றம் ஆகியவற்றை முறைப்படி கற்றவர். அவருக்கு விமானம் ஓட்டவும் தெரியும். இந்தியும் ரஞ்சனுக்கு நன்றாகத் தெரியுமாதலால், இந்திப் படங்களில் நடிப்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை. வீரதீர சாகசங்கள் கொண்ட சில படங் களில் அவர் நடிக்க "சந்திரலேகா' மூல காரணமாக அமைந்தது.
|