வீடு நோக்கிய பயணம் (Road Home)
A Film by Zhang Yimou. I
Year --
Run time : --
“Love is the history of a woman's life;
it is an episode in man's.
-- Germaine De Stael
 |
|
தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் ஈரானிய படங்கள், நம் நாட்டைத் தவிர பிற நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. யதார்த்த பாணி, எளிமையான கதையமைப்பு போன்றவை இவற்றின் சிறப்பம்சங்கள். சீன, கொரிய நாடுகளிலும் இத்தகைய முயற்சிகள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன. 'தி ரோடு ஹோம்' இத்தகைய படங்களில் ஒன்று. திரைப்பட விழாக்களில் இப்போதெல்லாம் இதன் திரையிடல் இன்றியமையாததாகியிருக்கிறது.கதை மிகச்சிறியது. கறுப்பு வெள்ளையில் ஆரம்பிக்கிறது. எங்கோ தூர நகரத்தில் வசிக்கும் மகனுக்கு தந்தை இறந்து விட்டார் என்ற செய்தி வருகிறது. கிராமத்திற்கு வருகிறான். |
தந்தையின் சவம் நகரத்திலிருக்கும் மருத்துவ மனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிகிறான். வயதான தாய் தனியாக இருக்கிறாள். தந்தை உண்மையில் அந்த கிராமத்தை சேர்ந்தவரில்லை. இந்த ஊர் பள்ளிக்கு ஆசிரியராக வந்தவர். அந்த கிராம மக்களின் வழக்கப்படி, சவத்தை நகரத்திலிருந்து சுமந்து வந்து
கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தாயின் விருப்பம். வரும் வழியெல்லாம் இது நீ வந்த பாதை என்று அவருக்கு உரக்கக் கூவி உணர்த்த வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கைகளில் ஒன்று. கிராமத்து பெயவர்கள், அந்த கிராமத்து பள்ளியை புதுப்பித்து நடத்த வேண்டும் என்பது தந்தையின் விருப்பம் என்றும் கூறுகிறார்கள். இப்போது புழக்கத்தில் இல்லாத தறி ஒன்று தாயிடம் இருக்கிறது. அதை பழுது பார்த்து மீண்டும் இயக்குகிறாள். வெண்பனி சூழ்ந்து கிடக்கும் கறுப்பு வெள்ளை பரப்பு, காலத்தை பின்னோக்கி எடுத்துச் சென்று வண்ணத்தில் மாற்றுகிறது.
அது 1958. தோழர் மாவோவின் கலாச்சாரப் புரட்சி சீனத்தை புரட்டிப்போட்டபின் உள்ள காலம். மலைக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டும் முயற்சி நடக்கிறது. ஜாவோ டி, அப்போது 18 வயதுப்பெண். கிராமத்திலேயே அழகி என்று பெயர் பெற்றவள். புதிய கட்டிடங்களில் ஒரு செங்கொடியை உத்திரத்தில் கட்டுவது அவர்கள் மரபு. கிராமத்திலேயே அழகிய கன்னிப்பெண்ணுக்குதான் இந்த வாய்ப்பு. டி அதை அழகுற நெய்துகொண்டிருக்கிறாள். அப்போது புதிய ஆசியரின் வருகை நிகழ்கிறது. லூ சாங்குவிற்கு 20 வயதுதான் ஆகிறது. இந்த மலைக்கிராமத்தில்தான் அவனது முதல் வேலை நியமனம். கிராமமே அவனை திரண்டு வரவேற்கிறது. லூவும் டியும் பார்வையால் பிணைகிறார்கள். ஏதோ ஒன்று இருவரையும் ஈர்க்கிறது. குதூகலம் அவளை பற்றிக்கொள்கிறது. பள்ளி கட்டிடம் கட்டுபவர்களுக்கு எல்லா வீடுகளிலிருந்தும் உணவு தயாரிக்கப்பட்டு செல்லும். தன் தயாரிப்பை ஆசிரியர் உண்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் டி தனி கவனம் எடுத்து வெங்காய கேக், காளான் பொறியல் போன்ற உணவுகளை சமைக்கிறாள். எல்லா வீட்டு உணவும் கலக்கும்போது இதுதான் இவளுடையது என்பதை அவரும்தான் எப்படி கண்டுபிடிப்பார்.
இவளுடைய அன்றாட செயல்களில் பெரும் மாற்றம். வீட்டுக்கு பக்கத்தில் இருந்த கிணற்றுக்கு நீர் எடுக்கச்செல்லாமல், பள்ளிக்கு அப்பால் இருக்கும் கிணற்றுக்கு போகிறாள். ஆசிரியரை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா. ஒரு நாள் இவளை பார்க்கும் லூ அவனும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு விரைகிறான். ஆனால் பாவம், நடுவில் வரும் ஒரு கிராமவாசி, ஆசிரியருக்கு இந்த சிரமம் ஏற்படவே கூடாது என்று தடுத்து அவனே தண்ணீர் பிடிக்க வருகிறான். தினமும் மாலையில் லூ தன் மாணவர்களுடன் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அப்போது அவனை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவள் கையில் ஒரு கூடையுடன் அந்த பிராந்தியங்களில் அலைய தொடங்கிவிட்டாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் ஆசியரிருக்கு சாப்பாடு ஏற்பாடாகிறது. இவளுடைய வாய்ப்பும் ஒரு நாள் வருகிறது.
 |
|
தடபுடலான விருந்து தயாராகிறது. அவனும் வந்து உற்சாகமாக உணவருந்துகிறான். இவர்களுடைய அணுகுமுறை அவளுடைய பாட்டிக்கு புரிகிறது. கண் பார்வை இல்லாவிட்டாலும் அவளும் பெண்தானே. திருமணம் ஆகிவிட்டதா என்று வினவுகிறாள். இல்லை என்று பதில் வருகிறது. டி ஓடி வந்து தன் பீங்கான் குவளையை காண்பிக்கிறாள். |
இதில்தான் கட்டிடம் கட்டும்போது நான் உணவு கொண்டு வருவேன். நினைவிருக்கிறதா என்று கேட்கும்போது, அவன் அசட்டு சிப்பு சிரிக்கிறான். அவனுடைய உணவு விருப்பங்களை வினவுகிறாள். அதற்குள் அடுத்த விருந்தா என்று மலைக்கிறாள் பாட்டி. அன்புப் பரிசாக டியிற்கு ஒரு தலைமுடி கிளிப்பை அளிக்கிறான் லூ.
திடீரென்று ஒரு நாள், ஆசிரியர் நகரத்திற்கு சென்றுவிட்டார் என்ற சேதி கிடைக்கிறது. அவர் ஒரு வலதுசாரி என்றும் அவரை விசாரிப்பதற்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. டி அவனை பார்ப்பதற்காக பிரத்தியேகமாக தயாக்கப்பட்ட உணவுப்பண்டத்துடன் ஓடுகிறாள். மலை மேடுகள், குறுக்குப்பாதையெங்கும் ஓடினாலும் அவனை அழைத்துச்சென்ற வண்டியை பிடிக்க முடியவில்லை. உணவுப்பாத்திரம் கீழே விழுந்து எல்லாம் சிதறிப்போகிறது. பீங்கான் குவளை துண்டு துண்டாகி கிடக்கிறது. தலையில் இருந்த கிளிப்பை காணோம். பீங்கான் துண்டங்களையெல்லாம் பொறுக்கிக்கொண்டு, வழியெங்கும் கிளிப்பையும் தேடிக்கொண்டு தடுமாறி நடந்து வீட்டையடைகிறாள்.
ஆசிரியர் சென்ற பிறகு பள்ளிக்கூடம் ஆளரவமற்று கிடக்கிறது. குலைந்து போகிறாள் டி. தினமும் அவன் வருகைக்கு வெட்டவெளிகளில் காத்து நிற்கிறாள். எதேச்சையாக மீண்டும் கண்டெடுத்த கிளிப்பை ஏக்கத்துடன் தடவிக்கொண்டிருக்கிறாள். ஆளில்லாத பள்ளிக்கூடத்தில் பல மணி நேரங்களை கழிக்கிறாள். உடைந்து போன பீங்கான் துண்டுகளை, அதன் அசல் விலையை விட அதிகம் கொடுத்து பழுது பார்க்கிறாள். திடீரென்று பள்ளிக்கூடத்திலிருந்து வகுப்பறை ஓசைகளை கேட்பது போல் உணர்ந்து, அங்கு ஓடிச்சென்று வாடி நிற்கிறாள். கடும் குளிரிலும் பனியிலும் நீண்ட நேரம் அவன் மனதுக்கு பிடித்த சிகப்பு ஸ்வெட்டரை அணிந்து கொண்டு நிற்கிறாள். காலடியில் வளைந்து செல்லும் பனிக்காற்றின் சுழல் வடிவங்கள் அவளை உடல் நலமற்றவளாக மாற்றி விடுகின்றன.. படுக்கையில் உடல் நலமற்று வீழ்கிறாள். காதல் திருமணங்கள் அரிதான அந்த நாட்களில் இவளது பிடிவாதமும் உறுதியும் பிறரை திகைக்க வைக்கின்றன. தடைகளை தகர்த்து லூ இவளை காண வருவதாக தகவல்கள் வருகின்றன.
வண்ணக்காட்சிகள் முடிந்து திரைப்படம் கறுப்பு வெள்ளைக்கு மீண்டும் மாறுகிறது. இறந்து போனவரின் பெருமைகளை அனைவரும் பேசுகிறார்கள். மீண்டும் கிராமத்துக்கு வந்த லூ, எப்படி பள்ளிக்காக உழைத்தார், நெஞ்சு வலியை பரிசாகப் பெற்றார் என்றெல்லாம் நெகிழ்வுடன் நினைவு கூறுகிறார்கள். தந்தையின் சவத்தை கிராமத்திற்கு எப்படி கொண்டு வருவது என்று மகன் ஊர்த்தலைவருடன் விவாதிக்கிறான். கால்நடையாக கொண்டு வரவேண்டியிருப்பதால் குறைந்தது 36 பேராவது வேண்டும், அவர்களுக்கு கூலி, சிகரெட், மது போன்ற செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு தொகை தேவைப்படும் என்றவுடன் அதற்கு அதிகமாகவே பணத்தை கொடுக்கிறான் மகன். சவப்பெட்டியுடன் நகருக்கு டிராக்டர்களில் புறப்படுகிறார்கள் அனைவரும். நகரத்தில் உடலை பெற்றுக்கொண்டு பயணம் புறப்படுகிறது. 'லூ, இது நீ வந்த பாதை' என்று குரல்கள் ஒலிக்கின்றன. பின்னால் கார்கள் காலியாக வர, அறிமுகமில்லாத பலர் உடன் நடந்து வருகின்றனர். கடும் பனிப்புயலில் நடந்து வரும் அவர்கள் லூவிடம் மாணவர்களாக இருந்தவர்களாம். கூலிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் பணத்தை பெற மறுத்துவிடுகிறார்கள்.
 |
|
சவ அடக்கம் முடிந்தவுடன், தாய் பள்ளியை சீர்படுத்த தன் சேமிப்பை அன்பளிப்பாக அளிக்கிறாள். தன் மகன் ஒரு நாளாவது அந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரிய வேண்டும் என்றும் கோருகிறாள். அமைதியாக இருக்கிறான் மகன். அடுத்த நாள் பள்ளியிலிருந்து பாடம் நடத்தும் ஓசைகள் கேட்கின்றன. 18 வயதில் எப்படி பள்ளியை நோக்கி ஓடினாளோ அதே போல் விரைகிறாள் டி. |
ஊரே கூடி வேடிக்கை பார்த்திருக்க, தன் தந்தை தானே எழுதி பாடம் நடத்திய பழைய புத்தகத்தை கையில் வைத்து பாடம் நடத்திக்கொண்டிருக்கிறான் அந்த ஒரு நாள் ஆசிரியர்.
ஜாங் இமோ இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறார். ஒரு பரிசுத்தமான தூய்மையான காதல் கதை என்று இதை சொல்லலாம். நாம் இந்திய திரைப்படங்களில் காதலை சொல்லும் திரைப்படங்களை மட்டுமே பார்த்து வந்திருக்கிறோம். காதல் என்ற விஷயம் இல்லாத படங்கள் இங்கு அபூர்வம். சமீபத்தில் ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். தமிழ் கற்பது, தமிழ் படித்தவன் வேலையில்லாமல் அலைவது, மென்பொருள் ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுவதால் நாடு எப்படி சீரழியப்போகிறது, தமிழ் படித்த ஒருவன் 32 கொலைகள் செய்வது என்றெல்லாம் தீவிரமாக விவாதித்த இயக்குனர் நடுவில் வழக்கம் போல ஒரு காதல் முடிச்சையும் போட்டுவிட்டார். அயல்நாட்டு படங்களில் காதல் என்பது அபூர்வமான விஷயம். இந்த படத்தில் இயக்குனர் சில குறிப்பிடத்தகுந்த விஷயங்களை கையாண்டிருக்கிறார். லூ நமக்கு இளைஞனாகத்தான் காட்டப்படுகிறான். வயதான அவன் முகம் நம் பார்வைக்கு வைக்கப்படவில்லை. அவன் ஒரு அரசியல் சார்புடையவன் என்றோ , ஒரு மேதை என்றோ பெரிதாக மெனக்கெட்டு காட்டப்படாமல் அவனுடைய இருபது வயது இளமையும், எளிமையும் மட்டுமே காட்டப்படுகிறது. ஜாங் சியி டியாக வருகிறார். இளமையும் அழகும் அருமையான நடிப்பும் கொண்ட அற்புதக் கலவையான இவரை 'க்ரௌச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்' படத்தில் நம்மில் பலர் பார்த்திருக்கலாம். காதலர்கள் இருவரும் சிரிப்பும் நாணமும் மட்டுமே கலந்த பார்வைகளை பரிமாறிக் கொள்கின்றனர், முத்தமோ உடல் தீண்டலோ இல்லவே இல்லை. இதே கிராம வாத்தியார், கிராம அழகி காதல் படங்களை எவ்வளவு பார்த்திருப்போம் தமிழில்; நினைவுக்கு உடனே வருவது பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புக்கள். 'பூ' படத்தில் இதன் காட்சியமைப்புக்களும் பின்னணி இசையும் கவர்ந்தெடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன.
இதன் ஒளிப்பதிவும் திரையாக்கமும் மிக உயர்தரம். மலையோர கிராமத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பரிச்சயமாகும் அளவிற்கு ஒவ்வொரு காலநிலையிலும் படம் பிடித்திருக்கின்றனர். அந்த வளைந்து செல்லும் மண் பாதையும் புழுதியும் பனிக்காற்றும் பளீரென்று அடிக்கும் சூரிய வெளிச்சமும் படத்தின் பாத்திரங்களைப்போல்தான் வருகின்றன. படத்தின் பின்னணியில் லேசாக அப்போதைய அரசியல் சூழலையும் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். 'தி ரோடு ஹோம்' ஒவ்வொரு திரைப்பட ரசிகனும் பார்த்து செரிக்க வேண்டிய படம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------- |