வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பார்வைக்கு வந்தவை
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  உலகப்படங்கள்
   
 
  Kwaidan

ஓவியர் ஜீவா
<---  
ஓவியர் ஜீவா     Brian Aldiss --->
     
  உலகப்படங்கள் முகப்பு  
   
   
       

க்வைடன்

A Film by Brian Aldiss
Year --
Run time : --

“Science fiction is no more written for scientists that ghost stories are written for ghosts.”
                                                                                                                             --
 Brian Aldiss

 
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ''நாலு பெண்குட்டிகள்'' என்ற மலையாள திரைப்படம் இப்போது கேரளாவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தகழி எழுதிய நான்கு சிறுகதைகளை தனித்தனியாக எடுத்து ஒரே படமாக இணைத்து இந்தப்படம் வெளியாகியிருக்கிறது. ஆக நான்கு கதைகள், நான்கு பகுதிகள். இப்படி ஒரே படத்தில் பல கதைகள் வந்திருக்கின்றனவா என்று ஆராய்ந்தால் அண்மை உதாரணமாக கே.பாலசந்தரின் ஒரு வீடு, இரு வாசல் என்ற திரைப்படம் நம் கண் முன்னால் வரும்.வயலின் சகோதரர்கள் கணேஷ் குமரேஷ் நடித்த இந்த படம் இரண்டு கதைகளின் தொகுப்பு. இடைவேளைக்கு முன் ஒரு கதை, இடைவேளைக்கு பின் ஒரு கதை.

நம் தமிழ் மொழியில் இது மிகப்பழைய உத்தி என்று சொல்லலாம். கச்சா பிலிம் பஞ்சம் மற்றும் உலகப்போர் காலங்களில் நிறைய படங்கள், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கதைகளின் கதம்பங்களாக வெளிவந்திருக்கின்றன. 1930-40களில் மட்டும் வெளியான சில படங்களின் பெயர்களைப் பாருங்கள்-

பக்த ராமதாஸ் & மிளகாய் பொடி,
உஷா கல்யாணம் & கிழட்டு மாப்பிள்ளை,
பார்வதி கல்யாணம் & மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி
மகாத்மா கபீர்தாஸ் & மடையர்கள் சந்திப்பு
ஸ்ரீமதி பரிணயம் & மன்னார்சாமி
கௌசல்யா பரிணயம் & மிஸ்டர் அம்மாஞ்சி
பஸ்மாசுர மோகினி & மிஸ்டர் டைட் &லூஸ்
பாலாமணி & பக்கா திருடன்
என் காதலி & முட்டாள் மாப்பிள்ளை
பக்த மீரா & ஷோக் சுந்தரம் கிராம விஜயம்
ஆஷாடபூதி, மினோரின் காதல், அப்பூதி அடிகள் & நவீன மார்க்கண்டேயா என்று
நான்கு கதைகளின் ''மணிமாலை''.


ராஜ்கபூரின் இந்திப்படங்களில் பணி புரிந்த இந்தி இலக்கியவாதி கே.ஏ.அப்பாஸ் பல படங்களையும் இயக்கி இருக்கிறார். ஒரே இழையில் வருவதைப் போன்ற நான்கு கதைகளை 'சார் தில், சார் ராஹேன்' என்ற பெயரில் அற்புதமான ஒரு திரைப்படத்தை இயக்கினார். திரைப்பட மேதை சத்யஜித் ராய் ரவீந்திரநாத் தாகூரின் மூன்று சிறுகதைகளான 'போஸ்ட்மாஸ்டர்', 'மோனிஹரா' மற்றும் 'சமாப்தி'யை 'தீன் கன்யா' என்ற பெயரில் ஒரு படத்தொகுப்பாக அளித்தார். இவரே பின்னர் இரண்டு கதைகளை 'மாபுருஷ் ஓ காபுருஷ்' என்ற படமாக இயக்கினார். ரிஷிகேஷ் முகர்ஜியின் ஆரம்ப காலப் படமான 'முசாபிரில்' ஒரே வீட்டை சுற்றி பல்வேறு காலகட்டங்களில் நிகழும் நான்கு கதைகள். இயக்குனர் மீது கொண்ட அன்பினால், இந்த பரிசோதனை முயற்சியில் அந்தக்கால உச்ச நட்சத்திரங்களான திலீப் குமார், கிஷோர்குமார், மீனாகுமாரி, நிருபா ராய் போன்றவர்கள் பங்கு கொண்டனர். கன்னடப் புதிய அலை இயக்கம் உச்சத்திலிருந்த போது, இயக்குனர் புட்டண்ணா கனகல் பல கதைகளை கதம்பமாக 'கதா சங்கமா' என்ற பெயரில் இயக்கினார். ஒரு கதையில் அப்போதைய புதுமுக நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்தார். இந்த சிறுகதையைத்தான் பின்னர் அதே ரஜினியை கதாநாயகனாக்கி 'கை கொடுக்கும் கை' என்ற பெயரில் மகேந்திரன் இயக்கினார்.

ஹாலிவுட்டில் இத்தகைய முயற்சிகள் ஏராளமாக நடந்து வருகின்றன. பெரும்பாலும் ஹாரர் வகை பேய்க்கதைகள்தாம். நான்கு கதைகளை நான்கு இயக்குனர்களை வைத்து படமெடுத்த புதுமைகளெல்லாம் அங்கு நடந்துள்ளன. பிரபல தொலைக்காட்சித் தொடரான 'ட்வைலைட் ஜோன்' திரைப்படமாக எடுக்கப்பட்டபோது, தனித்தனி பகுதிகளை ஹாலிவுட் உச்ச இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜோ டாண்டே, ஜார்ஜ் மில்லர், ஜான் லேண்டிஸ் இயக்கினர். அகிரா குரசோவா இயக்கிய 'ட்ரீம்ஸ்' திரைப்படம் பல கனவுகளையும் அவற்றின் கதைகளையும் தொகுத்து உருவாக்கப்பட்ட அற்புத திரை ஓவியம் அது. இத்தகைய அயல்நாட்டு திரைப்படங்களில் பேய்க்கதைகளை திறம்பட தருவதில் அவர்களுக்கு நிகரேயில்லை என்று சொல்லலாம். நாம் அனைவரும் கண்டு களித்த 'ஓமன்', 'எக்சார்சிஸ்ட்', 'போல்டர்கீஸ்ட்', 'டிராகுலா' படங்களின் நேர்த்தியை யாரால் மறக்கமுடியும்? பேயை ஒரு இயல்பான கதாபாத்திரமாக சித்தரித்த 'தி கோஸ்ட்', மனோஜ் நைட் சியாமளனின் 'தி சிக்ஸ்த் சென்ஸ்', நகைச்சுவையாக சித்தரித்த 'பிளாக் பேர்ட்ஸ் கோஸ்ட்' போன்றவை திரைப்பட வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவை. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மதுமதி', 'மஹல்', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'பார்கவி நிலையம்', 'யக்ஷி', 'வயநாடன் தம்பான்', 'கிருஷ்ண பருந்து' போன்ற பேய்க்கதை படங்கள் புகழ் பெற்றவை. வெள்ளை புடவை, இரவு நேரங்கள், பாழடைந்த பங்களாக்கள், காட்டு கோவில்கள், துர்தேவதைகளின் கொடூர சிலைகள், காற்றில் படபடக்கும் திரைச்சீலைகள், லாந்தர் விளக்குகள், சலசலக்கும் எரியாத சாண்டிலியர்கள், சிலந்தி வலைகள், கொலுசின் ஒலி, ஆந்தையின் கண்கள், குறுக்கும் நெடுக்கும் பறக்கும் வவ்வால்கள், கறுப்பு பூனை, தாறுமாறாய் சுவர்களில் தொங்கும் பழைய ஓவியங்கள், வளைந்து செல்லும் படிக்கட்டுகள், எங்கோ தூரத்தே ஒலிக்கும் பெண்ணின் சோக கீதம்….இவையெல்லாம் இந்தியப் படங்களின் பேய்ப்பட பிம்பங்கள். இவற்றைப் பார்த்துதான் நாமெல்லாம் வளர்ந்தோம்.

1965ல் ஜப்பானில் வெளியான திரைப்படம் 'க்வைதான்'; பேய்க்கதை என்று மொழி பெயர்க்கலாம். வண்ணப்படம்தான். நான்கு வெவ்வேறு கதைகளை தொகுத்து தயாரிக்கப்பட்ட படம். இன்றும் உலக சினிமா ரசிகர்களால் போற்றி புகழப்படும் திரைப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது. அந்த கால கட்டத்தில் தயாக்கப்பட்ட ஜப்பானிய படங்களில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம், இயக்குனர் மசாகி கோபயாஷி.

 
'ஹராகிரி' போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனரான இவர், ஜப்பானின் அகிரா குரசோவாவிற்கு ஈடான புகழை பெற்றவர். கிரீக்-ஐரிஷ் வம்சாவளியில் பிறந்து, அமெக்காவில் குடியேறி பின்னர் ஜப்பானிய குடியுரிமை பெற்ற எழுத்தாளரான லப்சாடியோ ஹேர்ன்ஸ் எழுதிய நாடோடி கதைகளில் இருந்து திரைக்கதை அமைக்கப்பட்டது.

படம் முழுவதும் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து, பிரத்யேக ஒளியமைப்பு செய்து இயக்கினார் டைரக்டர். வானம் சார்ந்த காட்சிகள் முழுவதும் விசித்திர வண்ணங்களும் பேக்லைட் உத்திகளும் கலந்து ஒரு மாய உலகை சிருஷ்டித்து பார்வையாளனை வியப்பிலாழ்த்தினார். இன்று கணிப்பொறி உதவியுடன் செய்யப்படும் வண்ண மாறுதல் மாயங்களை 60களிலேயே செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்தால்தான் நம்ப முடியும்.

கருங்கூந்தல்

முதல் மனைவியை துறந்து இரண்டாவது மனைவியை திருமணம் செய்கிறான் சாமுராய் வீரன் ஒருவன். சில வருடங்களுக்கு பிறகு, முதல் மனைவியின் நினைவு அவனை வாட்டுகிறது. அவளை தேடிப் போகிறான். அவள் தோற்றத்தில் சிறிதும் மாறவில்லை. அதே அழகும், இளமையும் நீண்ட அழகிய கூந்தலும் அப்படியே இருக்கின்றன. வற்றாத அன்பை பொழிகிறாள். முயங்கிக்கிடக்கிறான் அவன். முடிவற்ற காலம் வரை அவளுடனேயே வாழ விழைகிறான். அந்த முடிவற்ற காலம்தான் என்ன? ஒரு நாள் உண்மை புரிகிறது. புதிரான காட்சிகள், மர்மப் புன்னகைகள், தேர்நதெடுத்த பின்னணி ஒசைகள் எல்லாம் சேர்ந்து திரைப்படத்தின் இந்த பகுதிக்கு ஒரு அரூபமான அழகை தருகின்றன.

பனிப்பாவை

தன் வயதான தோழனுடன் விறகு வெட்டப்போகிறான் ஒரு இளம் விறகுவெட்டி. கடும் பனிப்புயலில் சிக்கிக்கொள்கின்றனர் இருவரும். ஒரு குடிசையில் தஞ்சம் புகுகின்றனர். வயதானவன் குளிர் தாங்காமல் திணறுகிறான். அப்போது தோன்றுகிறாள் ஒரு இளம் பெண். ஆளைக்கொல்லும் அற்புத அழகு. தன் குளிர்ந்த சுவாசத்தை கிழவனின் மீது செலுத்தி அவனை விறைத்துப் போகச்செய்கிறாள். பிணமாகிப்போகிறான் அவன். பார்வை இளைஞன் மீது திரும்புகிறது. ஏனோ அவனை விட்டு விடுகிறாள், ஒரு நிபந்தனையுடன். யாரிடமும் எக்காரணம் கொண்டும் இந்த உண்மையை சொல்லக்கூடாது. மீறினால் அவனது உயிரும் காவு வாங்கப்படும்.

பத்து வருடங்கள் செல்கின்றன. இவனுக்கு ஒரு அழகிய மனைவியும் மூன்று குழந்தைகளும். அவளது நற்பண்புகளை கண்டு ஊரே வியக்கின்றது. அத்தனை அடக்கம். அத்தனை அழகு.

ஆனால் முந்தைய பகுதியை போலவே இவளது அழகு வருடங்கள் போனாலும் கொஞ்சம் கூட குறையவில்லை. ஒரு பலவீனமான தருணத்தில் மனைவியிடம் பனிப்பாவை தன் தோழனை கொன்ற பழைய கதையை சொல்லிவிடுகிறான். விதியை மீறியவனை பனிப்பாவை தண்டித்தாளா அல்லது மனைவியே பனிப்பாவைதானா என்பதை வெகு சுவாரசியமாகவும் திகிலூட்டும் வகையிலும் கொண்டு செல்கிறார் இயக்குனர்.

காதிழந்த ஹோச்சி

ஹைக்கி, ஜென்ஜி என்ற இரு சாமுராய் குழுக்களிடையே ஒரு பெரும் கடற்போர் நிகழ்கிறது. சிவந்த வானத்தின் பின்னணியில் உதிரத்தால் நிறம் மாறிய கடற்பரப்பில் ஒரு உக்கிரமான போர். படகுகளை தாண்டி தாண்டி நிகழும் படுகொலைகள். பறந்து வீழ்த்தும் ஆயுதங்கள்! கபூக்கி நாடகபாணியில் இந்த காட்சி சித்தரிக்கப்படுகிறது. கடலில் வீழ்ந்து தற்கொலை புரியும் பெண்டிர், மௌனமாக படுகொலைகளை பார்த்து விழித்து நிற்கும் குழந்தைகள், இந்த காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்கள் என்று இந்த போர், ஒரு ஒட்டுச்சித்திர தன்மையுடன் ஒரு காவிய அந்தஸ்தை எட்டுகிறது.

இந்த வீரர்களெல்லாம் புதைக்கப்பட்ட இடுகாட்டிற்கு அருகே ஒரு மடாலயம். அங்கு வசிக்கும் கண்பார்வையற்ற ஹோச்சி இந்த போர் குறித்து மெய் மறந்து அற்புதமாக பாடுகிறான். அவனுடைய இசைக்கருவி நாண்களிலிருந்து தெறிக்கும் இசையும் அவனுடைய அற்புதக்குரலும் எந்த மனதையும் உருக்கும் அளவிற்கு சோகரசம் ததும்பி வழிகிறது. பக்கத்து இடுகாட்டில் புதைந்து வாழும் ஆவிகள் என்ன விதிவிலக்கா? ஆளனுப்பி, இல்லை ஒரு ஆவியை அனுப்பி அவனை அழைத்து வருகிறார்கள். அமானுஷ்யமான வழிப்பாதையில் கண்ணிழந்தவன் பேய்களின் துணையோடு நடந்து போகிறான் அவர்கள் யாரென்று அறியாமலே.

ஆவிகளின் தர்பாரில் அந்த சோக கீதங்களை இசைக்க இவனுக்கு ஆணைகள் பறக்கின்றன. உருகி உருகி பாடுகிறான். பழைய போரை நினைத்து வெளுத்துப்போன மாய சரீரங்களுடன் கடற்போரில் ஜலசமாதி அடைந்த ஆவிகள் நெக்குருகி பாடல்களை கேட்கின்றன. தினமும் இவனுக்கு அழைப்புகள் வருகின்றன. சலிக்காமல் பாடுவதாலோ என்னமோ, உடல் நலம் சீர்கெடுகிறது, பகலில் சோர்ந்து கிடக்கிறான். மடாலயத்தில் இவனது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குள்ளாகின்றன. இவனை கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள். இரவுகளில் இவன் நடந்த பாதைகளை பின் தொடர்கின்றனர். பனியும் மழையும் மாறி மாறி பொழியும் அமானுஷ்ய இரவுகளில் இவன் நடமாட்டங்கள் துப்பு துலக்கப்படுகின்றன. மடாலயத்தலைவர் ஒரு முடிவுக்கு வருகிறார். இப்படியே விட்டால் ஆவிகள் இவனது உடலை துண்டு துண்டாக பிய்த்தெறிந்துவிடும் என்று கருதி அவன் உடல் முழுவதும் பேய்களுக்கெதிரான மந்திர வாசகங்கள் தீட்டப்படுகின்றன. ஹோச்சி அமைதியாக தியானத்தில் ஆழ்ந்துவிடுகிறான்.

 
வழக்கம் போல ஆவிகள் இவனை அழைத்துப் போக வருகின்றன. இருளில் இவன் உருவம் மந்திர வாசகங்களோடு மறைந்து கிடக்க பளிச்சிடுகின்றன இரண்டு காதுகளும். ஆம், குருநாதர் காதுகளில் மந்திர வகளை தீட்ட மறந்து விட்டார். காதுகளை பிடித்து ஆவேசத்துடன் இழுக்கின்றன ஆவிகள். விளைவு ஹோச்சி காதிழந்த ஹோச்சி ஆகிறான்.

விசித்திர வடிவங்களும், அரங்க அமைப்புகளும், ஒளியமைப்புகளும் , படத்தொகுப்பும், கதை சொல்லும் நேர்த்தியும் இசையும் இந்த பகுதியின் தரத்தை மிக உயரத்தில் கொண்டு செல்கின்றன.

தேநீர்க்கோப்பை

ஒரு சாமுராய் வீரன் எதிர்கொள்ளும் பிரச்சினை விசித்திரமானது. அவன் தேநீர் அருந்தும்போதெல்லாம் கோப்பைக்குள் மேல்பரப்பில் தெரியும் பிம்பம் அவனுடையதல்ல என்பதுதான் கொடுமை. வேறு யாரோ ஒருவனின் பிம்பம்தான் தெகிறது. அந்த பிம்பம் மனிதனாக உருவெடுத்து இவனை சீண்டவும் செய்கிறது. அந்த மாய உருவத்துடன் சளைக்காமல் போர் புரிகிறான். அந்த உருவத்திற்கு துணையாக வேறு மூன்று உருவங்களும் சேர்ந்து கொள்கின்றன. எப்போதுமே அவர்களுடன் சண்டை போடுவதே வேலையாகிறது.

மன நிம்மதியிழக்கிறான் . சித்தம் குலைகிறது. கடைசியில் தேநீர்க்கோப்பையிலேயே சுருங்கி பதுங்கி சரணடைகிறான்.

ஒவ்வொரு பகுதியின் முடிவும் ஒரு குரூர நகைச்சுவையையும் அதிர்ச்சியையும் அடக்கியதாக இருக்கிறது. கதை சொல்லும் விதம் நம்மை யதார்த்தத்திலிருந்து தூர விலகி ஒரு கற்பனை மாய உலகிற்கு அருகில் அழைத்துச் செல்கிறது. நான்கு கதைகளும் வேறு வேறாக இருந்தாலும் அவை சித்தரிக்கும் பிம்பங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் இடையே கண்ணுக்கு தெரியாத ஒரு இழை ஓடிக்கொண்டேயிருக்கிறது.

இன்றைய சினிமாவின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை அன்றே முயற்சித்து வெற்றி கண்ட இயக்குனரின் திறன் வியக்க வைக்கிறது.நாற்பது வருடப் பழையதாயிருந்தாலும், 'க்வைதான்' தரும் அனுபவம் புதுமையாகவே இருக்கிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.