முத்துக்கம்மல் அணிந்த பெண்
A Film by Aurthur Wheelock
Year --
Run time : --
As this girl stares out at the viewer with liquid eyes and parted mouth, she radiates purity, captivating all the gaze upon her. Her soft, smooth skin is as unblemished as the surface of her large tear-drop shaped earring - like a vision emanating from the darkness, she belongs to not specific time or place.
--Aurthur Wheelock
 |
|
ஓவியர்களின் உலகம் தனித்துவமானது. நல்ல ஓவியர்கள், சுமாரான ஓவியர்கள், மோசமான ஓவியர்கள் என்று எல்லா கலைஞர்களையும் தரம் பிரித்து பார்ப்பதுண்டு. இதில் போலி ஓவியர்களும் அடக்கம். வேரொருவர் வரைந்த ஓவியத்தை தன் ஓவியம் என்று கையொப்பமிட்டு காட்சிக்கு வைத்து விற்கும் பல நியோ ரியலிச ஓவியர்களை நாம் உள்ளூரிலேயே பார்க்கலாம். தான் வரைந்த ஓவியத்தையே வேரொருவர் வரைந்ததாக விற்றுப் பணம் பண்ணும் போர்ஜரி
பேர்வழிகளும் உண்டு. |
ஹூசைன், ஆதிமூலம் போன்றவர்களின் ஓவியங்களை அப்படியே பிரதியெடுத்து விற்பவர்களை நாம் ஓவிய உலகில் பரவலாக காணலாம். சென்ற நூற்றாண்டின் முதல் பகுதியில் பரபரப்பான ஒரு குற்றவியல் வழக்கு இத்தகைய நிகழ்ச்சி ஒன்றின் மீது ஒளியை பாய்ச்சியது. ஹான் வான் மீகெரென் நல்ல ஓவியர்தான். ஐரோப்பிய ஓவியமேதைகளின் ஓவியங்களை அப்படியே பிரதியெடுக்கும் அற்புத ஆற்றல் படைத்தவர். தரமான ஓவியப்பிரதிகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. அதையே அந்த குறிப்பிட்ட ஓவியரே வரைந்ததாக விற்றால் பல மடங்கு விலை கிடைக்குமே. மீகெரென் பல ஐரோப்பிய ஓவியர்களின் ஓவியங்களை பிரதியெடுத்து விற்க ஆரம்பித்தார். 17ம் நூற்றாண்டை சேர்ந்த டச்சு ஓவியர் வெர்மீயரின் ஓவியங்களும் இதில் அடக்கம். இதற்காக மீகெரென் பல ஆராய்ச்சிகள் செய்தார். அசலாய் தோன்றுவதற்காக முன்னூறு ஆண்டுகள் பழையதான, வண்ணம் தீட்டப்பட்ட கான்வாஸ் துணிகளை சேகரம் செய்தார். காலம் செய்யக்கூடிய ஓவியப் பரப்பின் வெடிப்புக்களை கூட கவனமாக கையாண்டார். மிகப்பெரும் விலைக்கும் விற்றார். இரண்டாம் உலகப்போர் முடிந்த இரண்டொரு நாளில் சிக்கிக்கொள்ளவும் நேர்ந்தது. இவருடைய ஓவியங்களை வாங்கியவர்களில் நாஜி தளபதி கோயரிங்கும் ஒருவர். டச்சுக் கலைப் பொக்கிஷமான வெர்மீயரின் ''ஓவியத்த'' எதிரிகளுக்கு விற்ற தேசத்துரோக குற்றத்தின் கீழ் மீகெரென் கைது செய்யப்பட்டார். தேசத்துரோக குற்றத்தை விட போர்ஜரி சாதாரண குற்றமாகையால் அதன் கீழ் தன்னை விசாரிக்குமாறு மனு செய்தார். அது பிரதியெடுக்கப்பட்ட ஓவியம் என்று நீதிபதி உட்பட யாரும் நம்பவில்லை. அதை நிரூபிப்பதற்காக மீகெரென் சிறைச்சாலையிலும், நீதிமன்றத்திலும் நீதிபதி முன்னிலையிலேயே தன் போலிக் கலை நுட்பத்தை அரங்கேற்றிக்காட்டினார். வெர்மீயரின் ஓவியம் ஒன்று தங்கள் முன்னிலையிலேயே உருவாவதைக் கண்ட நீதிபதிகள் வியந்து போயினர்.
இந்தக் கட்டுரை மீகெரெனின் ஓவியத்திறமை குறித்ததல்ல. அவர் காப்பியடித்த வெர்மீயரின் அற்புத ஓவியங்களில் ஒன்றை சுற்றிப் பின்னப்பட்ட புதினம் திரைப்படமானது குறித்தது. ஐரோப்பிய ஓவியர்களில் வெர்மீயரின் வாழ்க்கை குறித்த தகவல்கள் மிகவும் அரிதானவை. அவர் மிகக் குறைவான எண்ணிக்கைகளிலேயே ஓவியம் தீட்டினார்; அதாவது அவரது வாழ்நாள் முழுவதும் வெறும் 35 ஓவியங்கள். ஆனால் ஓவ்வொன்றும் மிக நுணுக்கமான முறையில் வரையப்பட்டவை. இன்னும் உலகத்தின் பெரும் கலைச்செல்வங்களில் முக்கியமான இடத்தை வகிப்பவையாகவும் இருக்கின்றன. பொருளாதார ரீதியில் வாழ்க்கை கடினமாக இருந்திருக்கிறது. போஷகர்களும் குறைவு. ஆனால் பெரும் கலைஞர்கள் மறைவுக்கு பின்தானே போற்றப்படுகிறார்கள்!
 |
புகழ் பெற்ற ஓவியக்கலைஞர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட திரைப்படங்கள் வெகு குறைவான எண்ணிக்கையில்தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லாட்டன் ''ரெம்ப்ராண்ட்'' என்ற திரைப்படத்தில் ஓவியர் ரெம்ப்ராண்டாகவே நடித்தார். மைக்கேல் ஆஞ்சலோவின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி ''அகனி அண்ட் த எக்ஸ்டசி'' என்ற பெயரில் வெளி வந்தது. |
'டென் கமாண்ட்மெண்ட்சில்'' மோசஸாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டன் இதில் ஆஞ்சலோவாகத் தோன்றினார். வான் கோவின் வாழ்க்கை ''லஸ்ட் ஃபார் லைஃப்'' என்ற பெயரில் கிர்க் டக்ளஸ் நடித்து வெளி வந்தது. இதில் அவருடைய சம காலத்திய ஓவிய மேதை பால் ககனாக ஆண்டனி க்வின் நடித்தது இன்னொரு சிறப்புச்செய்தி. இவை இர்விங் ஸ்டோனின் புதினங்களை ஆதாரமாகக் கொண்டவை. ''வின்சென்ட் & தியோ'' என்று வான்காகை குறித்து இன்னொரு திரைப்படமும் வந்திருக்கிறது. ஆண்டனி ஹாப்கின்ஸ் பிக்காசோவாகத் தோன்றிய ''சர்வைவிங் பிக்காசோ'' பத்து வருடங்களுக்கு முன் வெளியானது. ''மோடிகிளியானி''யாக அந்தப்பெயரிலேயே வந்த படத்தில் ஆண்டி கார்சியா நடித்திருக்கிறார். ''மௌலின் ரௌஜ்'' திரைப்படத்தில், அந்த பெயருடைய பிரபல ஓவியத்தை வரைந்த ஓவியர் தௌலோஸ் லாத்ரே ஒரு கதாபாத்திரமாக வருகிறார். லியானார்டோ டாவின்சியை ஒரு கதாபாத்திரமாக வைத்து புனையப்பட்ட டான் பிரவுனின் ''டாவின்சி கோட்'' பரபரப்பை ஏற்படுத்திய சமீபத்திய திரைப்படம். அகிரா குரசோவாவின் காவியமான ''தி ட்ரீம்ஸ்'' படத்தில் வான் கோவாக பிரபல இயக்குனர் மார்ட்டீன் ச்கார்சீஸ் ஒரு காட்சியில் தோன்றினார்.
இன்னும் கோயா, ரவிவர்மா போன்ற ஓவியர்களை பாத்திரங்களாகக்கொண்ட திரைப்படங்களும் வெளி வந்திருக்கின்றன. இவையெல்லாமே ஓவியக்கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாய் இருந்திருக்கின்றன.
''கர்ள் வித் எ பியர்ள் இயர்ரிங்'' என்ற பெயரில் வெளிவந்திருக்கும் ஒரு ஆங்கிலப்படத்தை காணும் வாய்ப்பு கிடைத்து மகிழ்ந்து போனேன், ஏனென்றால் என் அபிமான ஓவியர்களில் ஒருவரான வெர்மீயரின் ஒரு புகழ் பெற்ற ஓவியத்தின் தலைப்பு அது. ஒரு கலை இன்னொரு கலைக்கு கிரியா ஊக்கியாக விளங்கலாம் என்று நிரூபித்த படைப்பு. ''முத்துக்காதணியணிந்த பெண்'' என்ற ஓவியத்தை கலைக்கூடத்தில் காண நேர்ந்த ட்ரேசி செவாலியர் என்ற எழுத்தாளருக்கு புதிய கற்பனைகள் ஊற்றெடுக்க ஆரம்பித்தன. வெர்னீயர் தன் பணிப்பெண்ணை மாடலாகக் கொண்டு இந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம் என்ற ஒரு ஊகம் நிலவி வந்தது. அந்த அடிப்படையில் அதே பெயரில் ஒரு புதினம் பிறந்தது. தைல வண்ண ஓவியத்திலிருந்து கறுப்பு வெள்ளை அச்சு ஊடகத்திற்கும் பின் பீட்டர் பெப்பரின் இயக்கத்தில் சலனத்திரைப்படமாகவும் இந்தப் பயணம் தொடர்ந்து வந்திருக்கிறது. 1665ல் ஹாலந்து நாட்டின் டெல்ப்டி நகரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக வருகிறாள் இளம்பெண் கிரீட். இப்போது கண்பார்வையிழந்து இருக்கும் பீங்கான் டைல்ஸ் ஓவியர் ஒருவரின் மகள் அவள். பணி புரிய அவள் நுழைந்திருக்கும் வீடு ஓவியர் ஜோன்ஸ் வெர்மீயருடையது. அது பெரிய குடும்பம். ஏராளமான குழந்தைகள். அதிகாரம் முழுவதும் வெர்மீயரின் மாமியாரின் கையில் இருக்கிறது. ஓவியரின் படைப்புக்களை காசாக்குவது முதல் குடும்ப நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்துவது வரை அவளுடைய சாமர்த்தியம். துணிகளை சலவை செய்வதும் கடைவீதி சென்று மாமிசம் முதலிய பொருட்களை வாங்கிவருவதெல்லாம் கிரீட்டின் பணிகள். திறம்பட செய்கிறாள். மாமிசக்கடைக்காரரின் மகனின் நட்பும் மலர்கிறது. வெர்மீயரின் மனைவி கூட காலடி வைக்கத் தயங்கும் ஓவிய அறையை சுத்தம் செய்வதும் இவளுடைய வேலைதான். ஒரு ஓவியரின் மகளாகையால் இயல்பாகவே அவளுடைய செய்கைகளில் உள்ள கலையறிவு மிக்க ஒழுங்கு ஓவியரை கவர்கிறது. கண்ணாடி ஜன்னலை துடைத்தால் ஓவியத்தின் ஒளி அமைப்பு மாறக்கூடும் என்று இயங்கும் அளவுக்கு நுட்பமாக இருக்கிறாள் கிரீட். வெர்மீயரின் மிகப்பெரும் ஆதரவாளர் செல்வந்தர் வான் ரைவன். இவருடைய பெரும்பாலான ஓவியங்களை விலைக்கு வாங்குவதும், வரைவதற்கான ஆர்டர்களை கொடுப்பதும், அவ்வப்போது குடும்பச்செலவுக்கு பணம் கொடுப்பதும் இவர்தான்.
 |
இவளுடைய செயல்களை ஓவியர் கவனித்து வருகிறார். வண்ணங்கள் குறித்த சந்தேகங்களை அவள் கேட்பதும், இவர் விளக்குவதுமாக ஒரு பரஸ்பர ஈடுபாடு தென்படுகிறது. மேகத்தின் வண்ணம் என்ன என்று அவர் வினவ, இவள் வெண்மை என்கிறாள். மீண்டும் உற்றுப்பார்த்து சொல்லு என்கிறார். வெண்மை, சாம்பல், நீலம், செம்மை அனைத்தும் கலந்திருப்பதை பிறகு உணர்கிறாள் அவள். |
வண்ணப்பொடிகளையும் தாதுக்களையும் கலப்பது எப்படி என்றும் கற்றுக்கொடுக்கிறார். லின்சீட் ஆயிலையும், ஜிங்க் வெள்ளையையும் குறிப்பறிந்து எடுத்துக்கொடுக்கிறாள். ஒரு ஓவியத்தின் வடிவமைப்பு இவளை உறுத்த, அதில் இடம் பெற்றிருக்கும் மாதிரிப் பொருளை அகற்றி வைக்கும் அளவுக்கு அவளுக்கு அவரிடம் சுதந்திரம் கிடைக்கிறது. அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ''காமிரா அப்ஸ்க்யூரா'' என்ற கருவியை வெர்மீயர் அவளுக்காக இயக்கிக்காட்டுகிறார். எப்போதும் எஜமானி மற்றும் மற்றவர்கள் முன்பு உம்மென்று இருக்கும் அவள் ஓவிய அறையில்தான் சுதந்திரமாக இருக்கிறாள். அடிக்கடி அவள் ஓவிய அறைக்கு போவதும் வருவதும் பிறர் கண்களை உறுத்துகிறது. ஓவியன் மனைவிக்கு சந்தேகப்பேய் பிடிக்கிறது. அவருடைய மகள்களில் ஒருத்தியோ இவளை காரணமின்றி வெறுக்கிறாள். இவளுடைய பிரியத்துக்குரிய பொருள் மர்மமாக உடைபட்டுக்கிடக்கிறது. வீட்டிலுள்ள மற்றொரு விலையுயர்ந்த பொருள் ஒன்று காணாமல் போக பழி இவள் மேல் விழுகிறது. எப்போதுமே அமைதி காத்து வரும் வெர்மீயர் பொங்கி எழுகிறார். மகளுடைய பெட்டிகளை குடைந்தால் திருட்டுப்பொருள் கிடைக்கிறது. இதற்கிடையில் போஷகர் ரைவனுக்கு இவள் மீது ஒரு கண். தனிமையில் அவளை மானபங்கப்படுத்த விழைகிறான்.
ஒரு ஓவியம் முடிந்தவுடன் அடுத்த ஓவியத்திற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ''உணவருந்தும் மேஜையில் ரைவன்'' என்ற தலைப்பில் புதிய ஓவியம் தீட்டலாம் என்று மாமியார் யோசனை கூறுகிறாள். அப்படியானால் என்னுடன் கிரீட் போஸ் கொடுக்கவேண்டும் என்கிறான் ரைவன். எல்லோருக்கும் எல்லாம் நுட்பமாக தெரிகிறது. ஆனாலும் சிரித்துக்கொண்டு இருக்கவேண்டிய நிலை. ஒரு நாள் வெர்மீயரே தன் அடுத்த ஓவியத்தை அறிவிக்கிறார். கிரீட்டின் உருவப்படம்தான் அது. தன் படுக்கை அறைக்கு அந்த ஓவியம் வேண்டும் என்கிறான் ரைவன். ஓவியத்திற்கான ஏற்பாடுகள் துவங்க, இல்லத்தில் புயல் வீசுகிறது. அவளை சித்திரம் தீட்டுவதற்காக, இத்தனை நாளும் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் அவளுடைய தலைமயிரை பார்க்கவேண்டும் என்கிறார் வெர்மீயர். அதை பார்த்தவுடனேயே அவருக்கு கிளர்ச்சி ஏற்படுகிறது- காமத்தினால் அல்ல, அழகுணர்ச்சியினால். அவளை வரைய ஆரம்பித்த பிறகும் ஏதோ ஒரு குறை தென்படுகிறது. அவளுக்கு தன் மனைவியின் முத்துக் கம்மலைத் தந்து அணியச்சொல்கிறார். பதறி மறுக்கிறாள் , இதுவரை காதுகளில் துளையிடாத கிரீட். இந்த நாடகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் மாமியார்க்கிழவி யதார்த்தம் அறிந்தவள்; ஓவியம் வரைந்து முடித்தால்தான் காசாக்கலாம். மகள் இல்லாத நேரத்தில் முத்துக் கம்மல்களை அவளிடம் கொடுத்து அணிந்து போஸ் கொடுக்கச் சொல்கிறாள். கண்ணீர் விம்மிப் பெருகும் கிரீட்டின் காதுகளை நெருப்பில் சுட்ட கம்பியினால் துளையிடுகிறார் வெர்மீயர். சுண்டி வரும் ரத்தத் துளிகளை துடைத்துவிட்டு துளைகளில் கம்மலைப் பொருத்துகிறார். அற்புத ஓவியம் பிறக்கிறது.
 |
முத்துக்கம்மல் விவகாரம் வெர்மீயரின் மனைவியை பொங்கியெழச்செய்கிறது. தன் உடமை ஒன்றை வேலைக்காரிக்கு அணிவித்து அவளை ஓவியமாய்த் தீட்டியது, தாங்க முடியாத அவமானத்தையும் வேதனையையும் அளிக்கிறது. என்னை ஏன் நீங்கள் வரையக்கூடாது? |
என்னிடம் இல்லாத அழகு அவளிடம் என்ன இருக்கிறது என்று கோபாவேசத்தோடு ஓவியத்தை கிழித்தெரிய முயற்சிக்கிறாள். பணிப்பெண் வீட்டை விட்டு விரட்டப்படுகிறாள். இறுதிக்காட்சியில் அவளிடம் ஒரு பொட்டலம் மற்றொரு பணிப்பெண் மூலமாக சேர்க்கப்படுகிறது. பிரித்துப் பார்க்கிறாள். ஒரு ஜோடி முத்துக் கம்மல்கள் பிரகாசிக்கின்றன.
இந்தத் திரைப்படம் பெரும் புகழ் அடையாத சாதாரண ஒன்றுதான். ஆனால் ஒரு ஓவியனின் வாழ்க்கையிலிருந்து ஒரு கற்பனை அத்தியாயத்தை பெயர்த்தெடுத்து நம் கண்முன்னே வைக்கிறார் இயக்குனர். வெர்மீயராகத் தோன்றும் காலின் ஃபிர்த் எந்த வித மிகையுணர்ச்சியும் இல்லாமல் ஒரு மகா கலைஞனை சித்தரித்திருக்கிறார். ஒரு ஓவியத்தை வரைய வெர்மீயர் எடுத்துக்கொண்ட பிரயாசைகள், நீண்ட நேரங்கள், கிரீட் மீது அவருக்கு ஏற்பட்ட காமம் அதிகமற்ற கவர்ச்சி, தனிமையில் முடங்கிக்கிடப்பது போன்ற குணாதிசயங்களின் மூலம் நம் முன்னே இந்த நடிகர், அந்தக் கலைஞனை உலவ விடுகிறார். ஸ்கார்லட் ஜோஹன்சன் தான் கிரீட். எந்தவிதமான ஒப்பனைகளும் அலங்காரங்களும் இல்லாத அழகி; பிறர் முன் பணிவும் மிரட்சியும் கலந்த பாவனைகள், ஓவிய அறையில் சுதந்திரமாக உலவும்போது மாறி விடும் அற்புதத்தை மிக அழகாக காட்டுகிறார். இந்தத்திரைப்படத்தின் ஒட்டு மொத்த பிம்பம் ஒரு நகரும் ஓவியமாக தென்படும் அளவுக்கு சிறந்த ஒளிப்பதிவு. ஒவ்வொரு பிரேமும் வெர்மீயரின் ஓவியங்களில் அவர் பயன்படுத்திய அதே அளவு ஒளி அமைப்புகளை பயன்படுத்தியிருப்பதால், பழைய ஐரோப்பிய பாணி ஓவியங்களை நகரும் நிலையில் பார்ப்பது போல் இருக்கிறது என்றால் மிகையில்லை. அப்போது உபயோகத்திலிருந்த ஓவிய வண்ணங்கள், தூரிகைகள், மாதிரி பொம்மைகள், காமிரா அப்ஸ்க்யூரா போன்ற கருவிகள், கிட்டத்தட்ட வெர்மீயரின் காலத்திற்கே இட்டுச்செல்லுகின்றன. ஒளிப்பதிவு, கலை, மற்றும் படத்தொகுப்புக்கான ஆஸ்கார் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தத் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது இன்னொரு சிறப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------------------- |