சஷாங்க் ரிடேம்சின்
A Film by Frank Darabont
Year --
Run time : --
‘Remember, Red, hope is a good thing, maybe the best of things. And no good thing ever dies’.
-AndyDufresne (in the film)
 |
|
நான் மாதமொருமுறை கோவை மத்திய சிறைக்கு செல்வதுண்டு. கைதிகளுக்கு ஓவிய வகுப்பு எடுப்பதில் ஆர்வம் காட்டுவதால் இந்த 'தண்டனை'. ஓங்கி உயர்ந்த மதில் சுவர்கள், பல்வேறு பிளாக்குகள் என்ற கொட்டடிகள், பல தரப்பட்ட கைதிகள், சுத்தமான பிரம்மாண்ட சமையலறை, அச்சடித்த சோறு, வேகவைத்த கடலை, சப்பாத்தி குருமா, பஞ்சாலை, சமுக்காளம் நெய்யும் தொழிற்கூடம், மெக்காலே எழுதிய புத்தகத்தை நான் முதன் முதலான பார்த்த குட்டி வாசகசாலை, ஆர்வமுடன் நமக்காக கச்சேரி யே நடத்த காத்திருக்கும் இசைக்குழுவினர் என்று அது ஒரு தனி உலகம். வ.உ.சி.யின் சிறைக்கொட்டடியை காணவேண்டும் என்று சொன்னவுடன் சிறை அதிகாரி அந்த அறையை காண்பித்தார். |
கழிவறை வசதியில்லாத அந்த அறை இன்னும் அந்த செம்மலின் நினைவாக பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் பூத்து நிற்கிறது. வெளியே குற்றம் செய்தவன் இருக்கிறான். உள்ளே குற்றம் செய்யாதவனும் இருக்கிறான்.
சிறை வாழ்க்கை குறித்த திரைப்படங்களை ஹாலிவுட் ரசிகர்கள் பெரும்பாலும் பார்த்து ரசிக்க வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. தமிழில் குமுதத்தில் வெளி வந்த பட்டாம்பூச்சி என்ற நாவல் ஆங்கிலத்தில் 'பாப்பியான்' (பாப்பிலோன்) என்ற பெயரி ல் ஸ்டீவ் மெக்வீன் நடித்து வெளிவந்தது. தனிமைச்சிறையின் கொடுமை சிறப்பாக சித்தரி க்கப்பட்ட படமிது. 'பிரி ட்ஜ் ஆன் தி ரி வர் க்வாய்' படத்தில் ஒரு சிறிய கூண்டுக்குள் தனிமைச்சிறையில் அலெக் கின்னஸ் அடைந்து கிடக்கும் காட்சி மறக்க முடியாதது. 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' என்ற படம் துருக்கி அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம். குறுந்தகடுகளில் பார்க்கலாம். சிறையின் கொடும் அனுபவங்களை எதார்த்தமாக சித்தரி த்த படம். இதிலிருந்து நிறைய காட்சிகள் தமிழில் 'மகாநதி'யாக பெருகி ஓடின. சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயலும் சாகசக்காட்சிகள் நிறைந்த படங்கள்தான் எத்தனை. ஸ்டீவ் மெக்வீன், ரி ச்சர்டு ஆட்டன்பரோ நடித்த 'தி கிரேட் எஸ்கேப்', கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த 'எஸ்கேப் ஃபிரம் ஆல்கட்ராஸ்' என்று சொல்லிக்கொண்டே போகலாம். நம் நாட்டில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'மதிலுகளிலும்', எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய 'சதயம்' படத்திலும், சிறை வாழ்க்கை சிறப்பாக சித்தரி க்கப்பட்டன.
 |
ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் (1994) இத்தகைய படங்களில் ஒன்று மட்டுமல்ல, சிறந்த படமும் கூட. அமானுஷ்ய மர்மக்கதை மன்னன் ஸ்டீபன் கிங் எழுதிய குறுநாவல்களில் ஒன்றுதான் இந்த அற்புத திரைப்படமாக உருவாகியிருக்கிறது. கலையும் மாயமும் நிறைந்த படம். மாயம் என்றால், இந்த திரைப்படம் பார்க்கும் இரண்டு மணி நேரமும் நாம் ஷஷாங்க் சிறைக்குள் இருந்த உணர்வு ஏற்படுகிறது என்றால் மிகையல்ல. |
அதுதான் மாயம். ஆண்டி தன் மனைவியையும் அவள் காதலனையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனைகளை பெற்று சிறைக்கு வரும் ஒரு பேங்கர். 1946ல் சம்பவம் நடக்கும்போது முழுபோதையில் இருந்திருக்கிறான். கையில் இருந்த துப்பாக்கியையும் ஆற்றில் வீசியெறிந்திருக்கிறான். கொலையை இவன் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சந்தேகத்தின் பலனை அனுபவித்து தண்டனை அடைகிறான். சிறை ஒரு புதிய அனுபவம் அவனுக்கு. ரெட் என்ற கைதி அறிமுகமாகிறான். இந்த படத்தின் கதை சொல்லி அவன்தான். எதையும் சாதித்து தரக்கூடியவன். எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு அவனிடம். ஆனால் பரோல் மட்டும் இவனுக்கு கிடைப்பதேயில்லை. இன்னொரு கைதி புக்கர் 50 வருடங்களாக சிறையில் கழிக்கும் முதிய கைதி. சிறை நூலகமும் அவர் வளர்க்கும் காக்கைக்குஞ்சுமே அவர் உலகம். கொடூரர்கள் புதியவர்களின் கற்பை சூறையாட காத்திருக்கிறார்கள். பல முறை கைகலப்புகள், கொடூர தாக்குதல்கள், தனிமைச்சிறைகள் என்று பல அனுபவங்கள்.
எதையும் சிறைக்குள் தருவிக்கக்கூடிய ரெட் மூலம், ஆண்டிக்கு ஒரு குட்டி பிக்ஆக்ஸ் போன்ற சுத்தியல் கிடைக்கிறது. கற்களை செதுக்கி சின்ன சிலைகள் செய்யக்கூடிய திறமை அவனுக்கு வாய்த்திருக்கிறது. பொழுது போக ஒரு கலை கை வந்திருக்கிறதே. சிறைச்சாலையில் திரைப்படங்களை பார்க்கும்போது, ரீடா ஹேவர்த்தை பார்த்து அனைவரும் ஜொள் விட, ஆண்டி ரெட்டிடம் ரீடா ஹேவர்த்தை சிறைக்குள் கொண்டு வரமுடியுமா என்று கோருகிறான். ஒரு முறை யோசிக்கும் ரெட், ஓக்கே சொல்கிறான். ரீடாவும் ஒரு நாள் சிறைக்குள் வருகிறாள், ஒரு பெரிய படமாக…..சுவற்றில் ஒட்டுவதற்கு! ஆண்டியின் பைனான்ஸ் மூளை ஒரு முறை துணை வார்டனுக்கு ஒரு பெரிய வரிவிதிப்பிலிருந்து தப்ப உதவுகிறது. பிரதிபலனாக, உச்சி வெயிலில் ஜெயில் கூரை மீது தார்ப்பூச்சு செய்யும் சக'தொழிலாளிகளுக்கு' ஜில்லென்று பீர் கிடைக்கிறது. சக சிறைவாசிகளுக்கும் சரி, காவலர்களுக்கும், ஏன் வார்டனுக்கும் இன்றியமையாத நிதி ஆலோசகராக ஆண்டி மாறுகிறான். புக்கருக்கு உதவியாக நூலகத்தில் வேலையும் லாண்டரி வேலையும் கிடைக்கின்றன.
 |
வார்டன் நார்ட்டன், ஒரு ஊழல் பேர்வழி மட்டுமல்ல, ஒரு கொடுங்கோலனும் கூட. பைபிள் வாசகங்களை உருப்போட்டவன், நீதிபோதனைகளை கைதிகளின் மீது திணிப்பவன். இவனை சந்திக்கும்போதெல்லாம் ஆண்டியின் கைகளில் பைபிள் இருக்கும். ஒரு வழியாக 50 வருடங்களை சிறையில் கழித்த புக்கருக்கு பரோல் கிடைத்து வெளியே வருகிறார். |
நீண்ட இடைவெளி, அவருக்கு எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது. எதுவும் புரிவதில்லை. குழப்பங்கள் தூக்குக்கயிற்றை நாடுகின்றன. புக்கர் தற்கொலை புரிந்து கொள்கிறான். இங்கே ஆண்டி நூலகத்தை விரிவுபடுத்த பல இடங்களுக்கு உதவி கோரி எழுதுகிறான். புத்தகங்களும் பொருட்களும் குவிகின்றன. அதில் ஒரு கிராமபோன் பெட்டி கூட இருக்கிறது. எதையும் யோசிக்காமல் ஒரு நாள் சிறையின் ஒலிபெருக்கி கருவியில் ஒரு பாடலை ஒலிபரப்பிவிடுகிறான். சிறையில் எங்கும் ஹாங்க் வில்லியம்சின் இத்தாலிய இசை ஒலிக்கிறது. கைதிகள் மூச்சடைத்து நிற்கிறார்கள். உத்தரவுகளை மட்டுமே முழங்கிக்கொண்டிருந்த கூம்புகளில் இருந்து கசிகிறது இசைப்பெருக்கு. தண்டனையாக தனிமைச்சிறைக்கு அடித்து இழுத்துச்செல்லப்படுகிறான் ஆண்டி.
10 வருடங்களாயிற்று இவன் சிறைக்கு வந்து; இப்போது ரீடா ஹேவர்த்துக்கு பதில் காற்றில் பறக்கும் ஸ்கர்ட்டுடன் மர்லின் மன்றோ ஆண்டியின் அறையை அலங்கரிக்கிறாள். நூலகத்தை விரிவாக்கியிருக்கிறான். ஹாங்க் வில்லியம்சின் இசைத்தட்டுகள் கூட இருக்கின்றன. லாண்டரி வேலையுடன் இன்னொரு பணியும் அவனுக்கு இப்போது. வார்டனின் புதிய பரபரப்பான திட்டமான 'கைதிகளை வெளியே வேலைக்கு அனுப்புவது', பெரும் வருமானத்தை கொட்டுகிறது. அவனது ஊழல் வருமானங்களை சரியான முறையில் முதலீடு செய்வது, நிதி ஆலோசகரான ஆண்டியின் புதிய பணி. ஸ்டாக், செக்யூரிடி என்று தினமும் முதலீடுகள். இதற்காக ராண்டல் ஸ்டீவன்ஸ் என்ற கற்பனை மனிதனை ஆண்டி உருவாக்குகிறான். டிரைவிங் லைசன்ஸ் முதல் பல்வேறு ஆவணங்கள் மூலம் இந்த மனிதனை உருவாக்கி அவனை வார்டனின் பங்குதாரராக்கி, கணக்குகள் முழுவதையும் அந்த பேரிலேயே நிர்வகித்து வருகிறான். தினமும் கணக்குகள் வார்டனின் கஜானாவில் பூட்டப்படுகின்றன. ஒரு முறை ரெட்டிடம், 'நான் வெளியே இருக்கும்போது யோக்கியனாக வாழ்ந்தேன், சிறையில் அயோக்கியனாக மாற வேண்டியிருக்கிறது' என்று சலித்துக்கொள்கிறான்.
 |
1965. இப்போது அவனது அறையில் தொங்கிக்கொண்டிருப்பது ராகேல் வெல்ச்சின் போஸ்டர். சிறைக்கு புதிய வரவாய் வருகிறான் இளைஞன் டாமி வில்லியம்ஸ். படிப்பறிவில்லாத ஜாலியான பையன். ஆண்டி அவனை சிஷ்யனாக்கி கல்வி கற்றுக்கொடுக்கிறான். பேச்சு வாக்கில் அவன் சொல்லும் ஒரு தகவல் இவனை குலைத்துப்போடுகிறது. |
டாமியின் முந்தைய சிறைத்தோழன் ஒருவன் தன் திருட்டுக்குற்றங்களின்போது செய்த கொலைகளைப்பற்றி கூறும்போது, எப்போதோ எந்த நோக்கமும் இல்லாமல், சும்மா மகிழ்ச்சிக்காக தான் செய்த கொலைகளை பட்டியலிட்டிருக்கிறான். அதில் ஒரு இரட்டைக்கொலை, ஒரு பாங்கரின் மனைவியையும் அவள் கள்ளக்காதலனையும் கொன்றதைப்பற்றியது. 20 வருடங்களுக்கு பிறகு கிடைத்த உண்மை!
வார்டனிடம் மீண்டும் வழக்கை நடத்த உதவும்படி முறையிடுகிறான் ஆண்டி. நம்ப மறுக்கும் வார்டனிடம் தான் ஊழலுக்கு உதவியாக இருந்ததை நினைவுபடுத்த, இவனுக்கு கிடைப்பதோ ஒரு மாத தனிமைச்சிறை. பின்னர் அந்தக்கொடுமை இரு மாதமாக நீட்டிக்கப்படுகிறது. ஒரே சாட்சி டாமியும் தந்திரமாக கொல்லப்படுகிறான். நடைப்பிணமாக தனிமைச்சிறைக்கு வெளியே வருகிறான் ஆண்டி, கலங்கிக்கிடக்கும் ரெட் அவனை சந்திக்கிறான். நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை அவன். தன் எதிர்கால கனவை சொல்லுகிறான். மெக்சிகோவில் பசிபிக் கடற்ககரையில் ஒரு விடுதியை தொடங்கப்போவதாகவும், பழைய படகுகளை பழுது பார்த்து வாடகைக்கு விடும் திட்டமும் இருப்பதாகவும், ரெட்டும் எப்போதாவது வெளியே வந்தால் பக்ஸ்டன் கிராமத்தில் பிரம்மாண்டமாய் விந்திருக்கும் ஓக் மரத்தடியில் கற்களுக்கிடையில் ஒரு பொருள் அவனுக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறான். தன் ஓட்டல் தொழிலுக்கு எதையும் சாதித்து தர முடிந்த ஒருவன் தேவைப்படுவதாகவும், ரெட்டிடம் கூறுகிறான். இவனுக்கு சித்தம் கலங்கிவிட்டதாக ரெட்டும் நண்பர்களும் நினைக்கின்றனர். போதாக்குறைக்கு நீளமான கயிறு ஒன்றை ஆண்டி அறைக்கு கடத்தி சென்றதாக ஒருவன் கூறுகிறான். அன்று இரவு ரெட்டுக்கு முடிவில்லாமல நீள்வது போல் இருக்கிறது. விடிகிறது. அனைவரும் அறைக்கு வெளியே வந்து ஆஜர் கொடுக்கும்போது ஆண்டியின் அறையில் சலனமில்லை. பூட்டிய அறைக்குள் அவனைக்காணோம்! யாருக்கும் ஒன்றும் புயவில்லை. வார்டன் அறைக்கு விரைகிறார். அவன் மறைந்ததற்கு எந்த தடயமும் இல்லை. கோபத்துடன் அவனுடைய கல்துணுக்குகளை தாறுமாறாக வீசியெறிகிறார். ஒரு கல் ராகேலின் படத்தை துளையிட்டு செல்கிறது. வார்டன் துளையை பெரிதாக்கி போஸ்டரை கிழிக்க சுவரில் ஒரு சுரங்கம். தப்பி விட்டான் சாந்த சொரூபியும் அறிவாளி பேங்கருமான ஆண்டி!
எப்படி தப்பினான்? ரெட் யூகத்திலிருந்து அந்த சிறிய சுத்தியல் அவ்வளவு பெரிய சுவற்றை குடைந்திருக்கிறது. இவ்வளவு நீண்ட சிறைவாசத்திலிருந்து தன் மனதை சுறுசுறுப்பாக வைக்க ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் செய்வான், அவன் பெரிய புவியியல் நிபுணனாயிருக்கவேண்டும்; சுவற்றின் தன்மையை இப்படி ஆராய்ந்திருக்கிறானே என்று வியக்கிறான் ரெட். இத்தனை வருடங்களும் மண் கழிவுகளை பேண்ட் மடிப்புகளில் சேகரித்து விளையாட்டு மைதானத்தில் சிறிது சிறிதாக வெளியேற்றியிருக்கிறான். வெட்டிய சுரங்கம் ஒரு கழிவு நீர் குழாயை அடைந்திருக்கிறது. மழை பெய்யும் இரவு, இடியின் தாளத்திற்கு ஏற்ப கற்கள் அந்த குழாயை உடைத்திருக்கின்றன.. மலநாற்றத்தினூடே தவழ்ந்து 500 முழங்களுக்கு, கிட்டத்தட்ட அரை மைலுக்கு ஒரு பயணம், சிறைக்கு வெளியே! மழை கொட்டும் இரவின் சுதந்திரச்சாரல்கள், ஆடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு விடுதலை கீதம் பாடும் இவனை நனைக்கின்றன. 'மலநதியை நீந்திக்கடந்து பரிசுத்தமாய் வெளிவந்தவன்'!
 |
மைன் நகரத்து வங்கிகளில் திரு.ஸ்டீவன்ஸ் என்ற நபர் தன் கணக்குகளிலிருந்து ஏராளமான வைப்புத்தொகைகளை வெளியே எடுக்கிறார். எல்லா ஆவணங்களும் அவடம் இருக்கின்றன. கையெழுத்தும் பொருந்துகிறது. அவன் ஆடமின் கற்பனையில் தோன்றிய மனிதனல்லவா! மொத்தம் 370,000 டாலர்கள். கூடவே பத்திகைகளுக்கு வார்டனின் ஊழல்கள் குறித்த விவான கடிதமும் ஆதாரங்களும் செல்கின்றன. |
இங்கே வார்டன் தன் கஜானாவை திறந்து பார்க்கிறான். உள்ளே இருப்பது ஒரு பழைய பைபிள். திறந்து பார்த்தால் பக்கங்களை குடைந்து சுத்தியலை வைத்திருந்த அடையாளங்கள். புலனாய்வு அதிகாகள் அவர் அறையை உடைத்து திறக்கு முன்பே வெடிச்சத்தம் கேட்கிறது. பிணமாய் கிடக்கிறான் வார்டன்.
40 வருடங்களுக்கு பிறகு பிறகு ஒரு வழியாக ரெட்டிற்கு பரோல் கிடைக்கிறது. புக்கர் செய்த அதே வேலை, அதே அறை, சிறைக்குள் பந்தாவாக இருந்தவனுக்கு வெளியே தடுமாறுகிறது. மேலதிகாரியிடம் அனுமதி பெறாமல் ஒரு சொட்டு சிறுநீரை கூட பிதுக்கி வெளியேற்ற முடிவதில்லை இவனால். ஆடமின் நினைவு வருகிறது. அந்த ஓக் மரத்தை தேடி போகிறான். ஒரு பெட்டி கிடைக்கிறது. அதில் இவனுக்கு ஒரு கடிதமும் பணமும் இருக்கின்றன, மெக்சிகோவிற்கு அழைப்பும். ஒரு புதிய பயணம் தொடர்கிறது. பசிபிக் கடற்கரையில் பெரும் சிரிப்புடன் நண்பர்கள் இணைகிறார்கள்.
இந்த திரைப்படம் நம்பிக்கைக்கும் தோழமைக்கும் ஒரு எடுத்துக்காட்டு. மர்மக்கதை மன்னனிடமிருந்து வந்த அற்புதக்கதை. பெரிய நடிகர்கள், சண்டைக்காட்சிகள் இல்லாத ஆரவாரமற்ற திரைப்படம். கதாபாத்திரங்களும் இயக்குனர் பிராங்க் டாராபாண்ட்டின் திரைக்கதையும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நம்பிக்கை தளராத முகபாவங்களுடன், காலம் செய்யும் அனுபவ வளர்ச்சிக் கீற்றுகளுடன் ஆண்டியாக நடித்திருப்பவர் டிம் ராபின்ஸ். மார்கன் ப்ரீமேன் என்ற புகழ் பெற்ற கறுப்பு நடிகர் ரெட் என்ற கதாபாத்திரத்தில் வெகு இயல்பாக, மாறாத புன்னகையுடன் வருகிறார். பெண் பாத்திரங்கள் எப்போதாவது தென்படுகிறார்கள். நம் நாட்டு சிறைவாசம் போலல்லாமல. 40-50 ஆண்டுகள் சிறையில் கழிப்பவர்கள் வாழும் வாழ்க்கையும் தனிமைச்சிறையும் மனதை பிறாண்டுகின்றன. இருண்ட அறைகளில் நம்பிக்கைச்சுடர் எரிந்துகொண்டேயிருந்திருக்கிறது என்பதை படத்தின் காட்சிகளை மீண்டும் அசை போடும்போது நமக்கு புலனாகிறது. மறக்க முடியாத படம் - 'ஷஷாங்க் ரிடம்ப்ஷன்'!
---------------------------------------------------------------------------------------------------------------------------- |