ஜோர்பா என்ற கிரேக்கன்'
A Film by Mihalis Kakogiannis
Year --
Run time : --
'To be alive is to undo your belt and look for trouble’
- from a dialogue by Zorba
 |
|
ஹாலிவுட் திரைப்பட ரசிகர்கள் மறக்க முடியாத பெயர் அந்தோணி க்வின். அறுபது முதல் ஆங்கிலப்படங்கள் பார்த்து வருபவர்கள் யாரும் இந்தப்பெயரை மறந்திருக்க மாட்டார்கள்.. 'விவா ஜபாடா', 'கன்ஸ் ஆஃப் நவ்ரோன்', 'லஸ்ட் ஃபார் லைஃப்', 'லாரன்ஸ் ஆஃப் அரேபியா' போன்ற படங்களில் பிரமிக்க வைக்கும் நடிப்புத்திறனை வெளியிட்ட இவரது பெரும் வெற்றிப்படமாக இந்தியாவில் திகழ்ந்தது 'ஓமர் முக்தார்' என்ற பெயரில் இங்கு வெளியான 'லயன் அஃப் தி டெசர்ட்' என்ற திரைப்படம். ஒரு சுதந்திர போராட்ட வீரனாக அவர் தோன்றிய இந்த படம் வசூலிலும் ஒரு வரலாற்றை உருவாக்கிய படம். ஆனால் அந்தோணி க்வின் என்றாலே 'ஜோர்பா தி க்ரீக்' என்றுதான் தீவிர ரசிகர்கள் சொல்வார்கள். அந்த அளவிற்கு அவர் முத்திரை படைத்த படம் இதுதான். |
'ஜோர்பா….' ஒரு புகழ் பெற்ற நாவல். நிகோஸ் கஸன்ட்சாகி எழுதியது. மைக்கேல் கேகோயானிக்ஸ் இயக்கத்தில் 1964ல் கறுப்பு வெள்ளைப் படமாக வெளிவந்தது.
க்ரீட் தீவிற்கு படகில் பயணம் செய்யும் எண்ணத்துடன் காத்திருக்கிறான் பேசில் (ஆலன் பேட்ஸ்). அவன் ஒரு எழுத்தாளன். க்ரேக்க-ஆங்கிலேய தம்பதிகளுக்கு பிறந்தவன். தந்தை வழி சொத்தை பேணுவதற்காகவும் கொஞ்ச காலமாக மறந்து போயிருந்த எழுத்துப்பணியை புதுப்பிக்கவும் க்ரீட் செல்வது அவன் நோக்கம். கூடவே மூடிக்கிடக்கும் லிக்னைட் சுரங்கத்தை புதுப்பித்து நடத்தும் எண்ணமும் இருக்கிறது. மோசமான வானிலையில் படகுக்காக காத்திருக்கும்போது அவனை சந்தித்து வேலை கேட்கும் நபர்தான் நமது கதாநாயகன் அலக்சிஸ் ஜோர்பா. ஆர்ப்பாட்டமான பேச்சு, வெடித்துப் பீறிடும் சிரி ப்பு, பொங்கி வரும் உற்சாகம், வயது 65 ஆயிருந்தும் கலகலவென்று சுறுசுறுப்பு, பையில் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாசிப்பதெற்கென்று பண்டிட் சிவகுமார் சர்மா மூலம் நமக்கெல்லாம் அறிமுகமாகியுள்ள சாரங்கி, நெடு நெடுவென்று வளர்ந்திருப்பதால் செல்லப்பெயரான ஸ்பாகிட்டி (சேமியா) - இத்தனை அம்சங்களுடன் கூடிய ஒரு மனிதன் வேலை கேட்கும்போது எப்படி மறுப்பது! பேசிலுடன் புறப்படுகிறான் ஜோர்பா. இவர்கள் போய்ச்சேருமிடம் ஒரு சின்னஞ்சிறிய தீவு. தங்குவதற்கு இருப்பதோ ஒரே ஒரு விடுதி. ஊரே இவர்கள் வருகையை கொண்டாடுகிறது. விடுதி உரி மையாளர், ஒரு விதவை. அந்த ஊர்க்காரன் ஒருவன் சொல்வது போல் அவன் தலையில் எத்தனை மயிரிருக்கிறதோ, அத்தனை பேருக்கு விதவையானவள்-வெளிநாட்டுக்காரி.
 |
மேடம் ஹார்டென்சா (லீலா கெட்ரோவா) அதீத முகப்பூச்சுகளோடு இவர்களை வரவேற்று உபசரி க்கிறாள். கிழடு தட்டிப்போன பழைய வேசி, ஆனாலும் ஜோர்பா அவளிடம் கிறங்கிப்போகிறான். அவளுடைய பழைய கதைகளெல்லாம் கேட்டு மகிழ்கிறார்கள். |
நான்கு அட்மிரல்கள் அவளை காதலித்ததையும், அவர்கள் தாடியில் பூசப்பட்ட வாசனைத் திரவியங்களும், அவற்றினால் இருட்டில் கூட அவளால் அவர்களை அடையாளப்படுத்த முடிந்த சாகசங்களும், சாம்பெயின் நிரம்பிய குளியல் தொட்டியில் அவளை அமிழ்த்தி சாம்பெயின் முழுவதும் குடித்து தீர்த்த அவர்களின் தீரச்செயல்களும், அனைவரும் போரில் இறந்து போய் அவளை நான்கு பேருக்கும் விதவையான சோகக்கதையும் இரவு முழுவதும் சாராய வாசனையுடன் வலம் வந்து…கிறங்கிப்போய் அவளை கொஞ்சோ கொஞ்சென்று சீராட்டுகிறான் ஜார்போ. அவளை ஆதரவுடன் அணைத்து சென்று படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறான்.
ஊரைச்சுற்றி வருகின்றனர். மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஒரு குட்டிச்சுவற்றை தாண்டி குதித்து ஓடி வருகிறது ஒரு ஆடு. ஊர் இளவட்டங்கள் அதை அப்படியே கடத்திப்போய் சாராயக்கடைக்குள் ஒளித்து வைக்கின்றனர். ஆட்டை தேடி வருகிறாள் நங்கை ஒருத்தி (ஐரீன் பாப்பாஸ்). அற்புதமான அழகி. தனித்து வாழும் விதவை. உள்ளூர் ஆண்களின் குறி தவறியதால் வெறுப்புக்கு உள்ளானவள். வெறுப்பையும் காமத்தையும் கண்களாலும் செய்கைகளாலும் உமிழும் மனிதர்களிடமிருந்து ஆட்டை மீட்டு வெளியே வருகிறாள்.. இந்த காட்சியை கண்டு உறைந்து போய் நிற்கிறார்கள் பேசிலும் ஜோர்பாவும். மழையில் நனைந்து கிளம்பும் அவளுக்கு தன் குடையை தருகிறான் பேசில். நன்றியுடன் ஆட்டையும் இழுத்துக்கொண்டு செல்கிறாள் அவள். ஜோர்பாவுக்கு வழக்கமான யோசனை வருகிறது. எஜமான் ஏன் இவளை வசப்படுத்தக்கூடாது, தூபம் போடுகிறான். பேசில் மசிவதாக இல்லை.
சுரங்க மராமத்து வேலைகள் தொடங்குகின்றன. தொழிலாளர்கள் ஒரு வித பயத்துடன் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உள்ளே உள்ள மரச்சட்டங்கள் அனைத்தும் உளுத்துப்போனதால் அடிக்கடி சுரங்கம் உடைகிறது. ஜோர்பா ஒருவன் மட்டுமே தைரியமாக அல்லது காட்டுத்தனமாக எந்த இடரையும் எதிர்கொண்டு தைரியமாக பணி புகிறான். இந்த பிரச்சினை அவனை மிகவும் வாட்டுகிறது. இரவும் பகலும் யோசித்து ஒரு திட்டத்தை வகுக்கிறான். மரங்கள் நிறைந்துள்ள மலையுச்சியிலிருந்து சுலபமாக மரங்களை வெட்டி அடிவாரத்திற்கு கொண்டு வருவதுதான் அது. மராமத்து பணிகளுக்காக நிறைய மரங்கள் தேவைப்படுகிறது, ஒரு சிறிய மாதிரி உருவாகிறது. மலையுச்சியிலிருந்து மரச்சட்டங்களை வரிசையாக அமைத்து, ஒரு கனமான இரும்பி கம்பியால் பிணைத்து, வின்ச் போல மரங்களை இணைத்து மலை உச்சியிலிருந்து அடிவாரம் நோக்கி செலுத்துவது என்பது திட்டம். மாதிரி பிரமாதமாக வேலை செய்கிறது. படு உற்சாகமாகிறான் ஜோர்பா. மலையும் மரங்களும் உச்சியிலிருக்கும் மடாலயத்திற்கு சொந்தம். முதலில் அவர்களை சரிக்கட்டவேண்டும்.
ஒயின் பேரலுடன், முகமெல்லாம் கரி படிந்து, அங்கு செல்கிறான். கரிய நிறத்துடன் இவனை பார்த்த துறவி ஒருவன் பேய், பேய் என அலறிக்கொண்டு ஓடி, எல்லோரையும் திரட்டிக்கொண்டு வருகிறான். வந்தவர்களுக்கு அங்கு காட்சியளிப்பது, பீப்பாயும் அதற்குள்ளிலிருந்து நீண்டு கொண்டிருக்கும் சிலுவைக்குறியும். பிறகென்ன, ஒரே கும்மாளமும் கோலாகலமும்; இப்போது ஜோர்பா மடாலயத்தின் உற்ற தோழன். எந்த பிரச்சனையும் இல்லை. கிறிஸ்துமஸ் நெருங்குவதால் எங்கும் பண்டிகை கோலாகலங்கள். நான்கு அட்மிரல்களை தாடியோடு வரைந்து கூடவே ஒரு அழகான பெண்ணையும் வரைந்து ஹார்டென்சாவுக்கு கிருஸ்துமஸ் பரிசாக அளிக்கிறான். அவளுக்கு ஒரே உற்சாகம். இவ்வளவு அன்பாக ஜோர்பாவைத்தவிர யாரும் அவளை தாங்கியதேயில்லை. வான்கோழியும் மதுவும் உண்டு திளைத்து போதையின் உளறல்களில் அவளுடைய காபரே கால பழைய கஸ்டமர்களில் சுலைமானும் இன்னொருவனும் வந்து கனவில் அவளை காம சுகத்திற்கு அழைக்கிறார்கள். கனவுப்போதையில் அவளை மிதக்கவிட்டு விடை பெறுகிறார்கள் எஜமானனும் ஊழியனும்.
 |
கம்பி வடம் போன்ற பொருட்களை வாங்க நகரத்திற்கு கிளம்புகிறான் ஜோர்பா. பிரியாவிடை கொடுக்க ஓடி வருகிறாள் லீலா. நகரம் பல கேளிக்கைகளை அளிக்கிறது. இரவு விடுதி ஒன்றில் பணத்தை வாரியிறைத்து விலை மாதர்களுக்கு செலவிடுகிறான். அறையில் ஒருத்தியுடன் களியாட்டம் போட்டுக்கொண்டே கூலிக்கு வரவழைக்கப்பட்ட குமாஸ்தா ஒருவனுக்கு டிக்டேஷன் கொடுக்கிறான். |
கடிதம் போவது எஜமானனுக்கு. அதிலும் விதவைப்பெண்ணை ஏன் இன்னும் அவர் அணுகவில்லை போன்ற வினாக்கள்தான். கடிதம் வந்த செய்தி கேட்டு ஓடி வருகிறாள் லீலா. கண்களில் ஏக்கமும் நிச்சயதார்த்த மோதிரமுமாக ஜோர்பாவின் கடிதத்தில் தன்னைப்பற்றி என்ன வந்திருக்கிறது என்று வினவ வந்திருக்கிறாள். அவளை சமாதானப்படுத்த கற்பனையாக அவளுக்கும் ஜோர்பாவுக்கும் நடக்க இருக்கும் திருமண வைபோகம், மற்றும் அவள் அணிய இருக்கும் திருமண ஆடைகள் குறித்தும் இவன் அளந்து விடுகிறான் . அவளும் வெகு மகிழ்ச்சியாக விடை பெறுகிறாள்.
 |
ஓரிரு முறை விதவையை சாலையில் சந்திக்க நேடுகிறது. எந்த சமயத்திலும் அவள் மீது கவனம் காட்டாமல் இருந்த வந்த பேசில் ஒரு இரவு விரகம் தாங்காமல் அவள் வீட்டுக்கதவை தட்டுகிறான். அவளும் கதவை திறக்கிறாள். எந்நேரமும் அவள் நடமாட்டத்தை கவனித்து வரும் உள்ளூர் பேர்வழிகள் இதைப் பார்த்து விடுகிறார்கள். அவளை உயிருக்குயிராய் மோகிக்கும் இளைஞன் ஒருவன் மிகவும் உடைந்து விடுகிறான். |
வீட்டின் படுக்கையறையில் ஒரு உணர்ச்சிமயமான காதல் நாடகம் அரங்கேறும்போது, வெளியே இளைஞர்களிடையே கொந்தளிப்பு. விடிகிறது. கடற்கரையில் அந்த இளைஞன் தற்கொலை புரிந்து பிணமாக கிடக்கிறான். சவத்தை தூக்கிக்கொண்டு மௌனமாக ஊர்வலம் இவள் வீட்டை தாண்டி வருகிறது. ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்ப்பவளை ஆவேசத்துடன் சபிக்கின்றனர்.
வீட்டிற்கு திரும்பினால் ஜோர்பா ஊரிலிருந்து திரும்பியிருக்கிறான். இரவில் பேசில் எங்கே போனான் என்று இவனுக்கு மகிழ்ச்சி கலந்த சந்தேகம். ஜோர்பாவின் உடலிலிருந்து இன்னும் வாசனைத்திரவியங்களின் மணம் வீசுகிறது. சாயமேற்றப்பட்ட தலைமயிர், இளமையை மீட்டு வந்திருப்பதாக பெருமையுடன் சொல்கிறான். ஹார்டென்ஸ் திருமணத்திற்கு காத்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டவுடன் மட்டும் கடுப்பாகிறான். அன்று காலை, கிராமமே பரபரப்பாய் இருக்கிறது. விதவை செல்லும் இடங்களிலெல்லாம் பின் தொடரும் கண்கள். அவளை ஒரு மைதானத்தில் சூழ்ந்து விடுகின்றனர். இறந்தவனுக்காக பழி வாங்கலா, சோரம் போனதற்கான தண்டனையா என்று பேசில் தயங்கி நிற்கையில் முதல் கல் பறக்கிறது. கத்தியுடன் பாய்கிறான் ஒருவன். அதற்குள் தகவலறிந்து வந்து தடுக்கிறான் ஜோர்போ. கைகலப்பில் அவள் கழுத்து அறுபடுகிறது. செத்து வீழ்கிறாள்.
இன்னொரு பக்கம் சாதாரண சளி வந்து படுக்கையில் கிடக்கிறாள் ஹார்டென்ஸ். அவளுக்கு அன்போடு சிகிச்சைகள் செய்கிறான் ஜோர்போ. ஆனால் உடல்நிலை மோசமாகி, உயிருக்கே ஆபத்து வரும் நிலை ஏற்படுகிறது. அதற்குள் ஊருக்குள் செய்தி பரவி அனைவரும் அங்கு கூட ஆரம்பிக்கின்றனர். வாரிசில்லா சொத்து அரசுக்கே உடமையாகிவிடும் என்பதால் கொள்ளையடிக்க ஆண்பெண் பேதமில்லாமல் கூடிவிட, விரட்டினாலும் யாரும் அசைவதாயில்லை. ஹார்டென்ஸ் இறந்து போக, அவள் படுத்திருக்கும் கட்டிலும், வளர்த்த கிளியும் மட்டும் மிச்சமிருக்கின்றன. கிளியை மட்டும் ஜோர்பா எடுத்துப்போகிறான்.
மலை மீதிலிருந்து வின்ச் தயாராகிவிட்டது. எல்லோரும் அங்கு மகிழ்ச்சியாக கூடியிருக்கின்றனர். சாம்பெய்ன் உடைத்து துவக்க பூசை செய்ய மடாலயத்திலிருந்து சாமியார்கள் வந்திருக்கின்றனர். மலை மீதிருந்து கம்பி வடம் வழியாக வெட்டப்பட்ட மரங்கள் கீழ் நோக்கி வருகின்றன. எல்லாம் சில நிமிடங்கள்தான். மரச்சட்டங்கள் உடைய, எல்லாமே தாறுமாறாய் மாற, எல்லோரும் ஓடுகிறார்கள். இத்தனை நாள் உழைப்பும் பணமும் ஒரே நொடியில் வீணாய் போகின்றன. எல்லோரும் கலைய இவர்கள் இருவரும் மட்டும் கடற்கரையில் மிச்சம்.
பேசில் ஜோர்பாவிடம் வருகிறான். 'உன் நடனத்தை எனக்கு கற்றுத்தருவாயா' என்று வினவுகிறான். ஒரு நிமிடம் திகைத்தாலும் ஜோர்பா இயல்புக்கு வந்து , இருவரும் நடனமாடத் துவங்குகிறார்கள். கொண்டாட்டத்திற்காக வைத்திருந்த மதுவும் இறைச்சியும் உண்டு மகிழ்கிறார்கள். இந்த நடனக்காட்சி பின்னர் பெரும்புகழ் பெற்ற காட்சியாக மாறியது. துயர்கள் வந்தாலும் அதை மகிழ்ச்சியாக கொண்டாட பேசிலை தூண்டியது ஜோர்பா என்ற கிரேக்கனின் குணாதிசயம் என்பதே இந்த திரைப்படம் சொல்லிய செய்தி.
'ஜோர்பா தி க்ரீக்' ஒரு அற்புதமான அனுபவத்தை தரும் திரைப்படம். ஒரு இலக்கியப்படைப்பை எவ்வளவு சுவாரசியமாக வேறொரு ஊடகத்தில் சொல்ல முடியும் என்பதற்கு இது ஒரு அரிய உதாரணம். பேசில் கதாபாத்திரத்தின் வேறு பல குணாதிசயங்கள் திரைப்படத்திற்காக மாற்றப்பட்டின்றன. குதூகலமும் உயிர்ப்பும் நிறைந்த ஜோர்பாவாக அந்தோணி க்வின்னின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. ஆஸ்காரை மயிரிழையில் தப்ப விட்டாராம் அவர். சிவாஜி கணேசனின் நடிப்பை மிகை என்று சொல்பவர்கள் இந்த திரைப்படத்தை அவசியம் பார்க்கவேண்டும். ஒரு மிகை நடிப்பு எந்த அளவிற்கு யதார்த்தமாக இருக்கிறது என்று க்வின்னின் திறமையை அனுபவித்தவர்களுக்குத்தான் தெயும். ஓய்வு பெற்ற காபரே நடனக்காரி ஹார்டென்சாக தோன்றும் லீலா கெட்ரோவா, இந்த திரைப்படத்தின் இன்னொரு அற்புதம்; வயதின் தளர்ச்சியும், அதை மறைக்கும் ஒப்பனையும் , மிடுக்கும், சிருங்காரமும் இந்த கதாபாத்திரத்தின் குணநலன்கள். அதை சிறப்பாக சித்தரித்திருந்தார் இந்த நடிகை. விதவையாக நடித்த ஐரீன் பாப்பாஸ், சரித்திர மற்றும் போர் காட்சிகள் நிறைந்த பல படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகை. ஐரோப்பிய நீண்ட முகமும் சாதாரண அழகும் கொண்ட இந்த நடிகையின் நுண்ணிய பாவனைகள் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அனுபவிப்பது என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. ஒரு சிலர் மட்டுமே அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஜோர்பா அதில் ஒருவன். பல நாட்கள் ஆய்வு செய்த மாபெரும் திட்டம் ஒரே நொடியில் சிதைந்த போதும் மறுவினாடியே அவனால் உற்சாகமாக நடனம் ஆட முடிகிறது. அவனுடைய உற்சாகம் உம்மென்று இருக்கும் அடுத்தவரையும் தொற்றிக்கொள்கிறது. இத்தகைய மனிதர்கள் அரிதாகிப்போனார்கள் என்பது மட்டுமே இந்த படத்தை பார்த்தால் நம்மைப்பற்றிக்கொள்ளும் ஒரே சோகமான விஷயம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
|