வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பார்வைக்கு வந்தவை
1
 
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  உலகப்படங்கள்
   
 
  Inglorious Basterds

ஓவியர் ஜீவா
     
  உலகப்படங்கள் முகப்பு  
   
   
       

புனைந்த சரிதம்

A Film by
Year --
Run time : --


During a war, news should be given out for instruction rather than information.
-Joseph Paul Goebbels

கவெண்டின் டாரெண்டினோ ஹாலிவுட்டில் தற்போது நிலை கொண்டிருக்கும் புயல். இவரது படங்கள் எப்போதுமே புதுமை விரும்பிகளுக்கு விருந்து என்றுதான் சொல்லவேண்டும், தொண்ணூறுகளில் வெளிவந்த 'பல்ப் பிக்ஷன்' எடுக்கப்பட்ட விதத்தினால் பெரும் புகழ் பெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகர குற்ற அத்தியாயங்களும், இருள் நபர்களும் முக்கிய பங்கு வகித்த இந்த படம் நான் லீனியர் கதை சொல்லும் உத்தியினால் பேசப்பட்ட படம். வன்முறையும், அதிரடி வசனங்களும் பொங்கி வழிந்த இந்த படத்தில் ஜான் டிரவோல்டா, உமா தர்மன் போன்ற புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இவரது 'கில் பில் -1 மற்றும் 2 பாகங்களும் இதே தனித்தன்மைகளால் புகழ் பெற்றவை. சீன தற்காப்பு கலைகள், ஜப்பானிய பீரியட் சினிமாக்கள், ஸ்பாகிட்டி வெஸ்டர்ன்ஸ் என்று அழைக்கப்பட்ட துப்பாக்கி சண்டை படங்கள், இதத்தாலிய மர்ம கதைகள் என்ற கலவையில் 'மணப்பெண்' என்று அழைக்கப்படும் காமிக் கதாபாத்திரம், சாமுராய் வாள், அதிகப்படியான மஞ்சள் நிறங்கள் என்ற அதிரடி கூட்டணியில் , தொடர்பற்ற காட்சிகளில் தொகுப்பாய் வந்த அற்புதப்படங்கள் இவை. உமா தர்மன் முக்கிய கதாபாத்திரம் தாங்கி நின்றார்.

நீண்ட நாட்களாக டாரண்டினோவுக்கு உலகப்போரின் பின்னணியில் சரித்திர படங்கள் எடுக்க ஆசை. அதன் விளைவுதான் தற்போது வெளியாகியிருக்கும் ‘‘Inglourious Basterds’.’. ஹிட்லரையும் நாஜிகளையும் முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து சாப்ளின் முதல் ஸ்டீவன் ஸபீல்பர்க் வரை ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. நம்மிடையே வாழ்ந்த மனிதர்களை புனைவுச் செய்திகளின் பின்னணியில் திரைப்படமாக சித்தரித்தால் விளைவு எப்படி இருக்கும் என்று சிந்தித்ததின் விளைவே இத்திரைப்படம். ஹிட்லர் சயநைடு உண்டு மறைந்தார் என்பது நமக்கு தெரிந்த சரித்திர உண்மை. இல்லை, இப்படி இறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ? இதுவே இங்கு திரைக்கதை.

நாஜிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரெஞ்சு பகுதியில் பரந்த வெளிகளின் நடுவே ஒரு விவசாயியின் வீடு. அங்கு சில யூதர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் தெரிந்து சோதனையிட வருகிறான் நாஜி உயரதிகாரியும், யூத வேட்டையன் என்று பெயர் பெற்றவனுமான ஹான்ஸ் லண்டா. பன்மொழி வல்லுனன் லண்டா விசாரணையிலும் பலே கில்லாடி. தரைப்பபலகையின் கீழ் அவர்கள் ஒளிந்திருப்பதை அறிந்து அனைவரையும் சுட்டுக்கொல்கிறான்- ஒரே ஒரு இளம்பெண் தப்பி மறைகிறாள். அவள் பெயர் சோசன்னா.

அபாச்சி ஆல்டோ என்றழைக்கப்படும் ஆல்டோ ரெய்னே தலைமையில் பாஸ்டர்ட்ஸ் எனப்படும் அமெரிக்க யூதர்களின் ரகசிய குழு ஒன்று இயங்குகிறது. இவர்களது தலையாய நோக்கம் கூடிய மட்டும் அதிக அளவில் நாஜி வீரர்களை கொன்று குவித்து அவர்களுக்கிடையே பீதியை ஏற்படுத்துவது. யாரையும் கைது செய்வதில்லை. கொல்லப்படுபவர்களின் மண்டையோட்டுத்தோலை வெட்டி உறித்து சேமித்துக்கொள்வது, சிக்கியவர்களில் ஒரே ஒருவனை மட்டும் விட்டு விடுவார்கள்.

எப்படி? அவனது நெற்றியில் கத்தியினால் ஒரு பெரிய ஸ்வஸ்திக் சின்னத்தை கீறி மாறா தழும்பை ஏற்படுத்துவது. அவன் வாழ்கை முழுவதும் தன்னை ஒரு நாஜி என்று உலகுக்கு தெரியப்படுத்தவேண்டும், மற்றும் பிற நாஜி வீரர்களிடையே பயத்தை ஏற்படுத்த வேண்டும். ரெய்னேவுக்கு துணையாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் 'கரடித்தாடை' என்றழைக்கப்படும் டானியும், ஜெர்மானியனான ஹியூகோவும். டானி தன் பேஸ்பால் மட்டையை ஆயுதமாக உபயோகித்து கெஸ்டாப்போ அதிகாரிகளின் மண்டையை உடைப்பதில் ஆர்வமுள்ளவன். இவர்களது அறிமுகக்காட்சியே காட்டுவெளியில் சில நாஜி அதிகாரிகளை தாக்கி அழிப்பதில்தான் ஆரம்பமாகிறது. நெற்றியில் இரத்த முத்திரையிடப்பட்ட ஒரு நாஜி வீரன் ஹிட்லரிடம் தன் நெற்றியை காட்டும்போதுதான் தலைவருக்கும் உரைக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் லண்டாவிடமிருந்து தப்பிச்சென்ற சோசன்னா, இப்போது பாரீசிலுள்ள ஒரு சின்ன திரையரங்கின் உரிமையாளர். இது எப்படி நிகழ்ந்தது என்று சொல்லப்படுவதில்லை. ஒரு காட்சியில் தன் வாரிசில்லாத அத்தையிடமிருந்து கிடைத்தது என்று சொல்கிறாள். பிரடரிக் ஜோலர் என்ற நாஜி வீரனின் அறிமுகம் அவளுக்கு கிடைக்கிறது. அவனது வீர சாகசங்கள் 'ஒரு நாட்டின் பெருமை' என்ற பெயரில் ஒரு பிரச்சாரப்படமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை ஹிட்லர் முதலான அனைத்துத் தலைவர்களுக்கும் திரையிடும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கும்போது கிடைத்த இவளது அறிமுகம், ஒரு புதிய திட்டத்தை விதைக்கிறது. அவளை கவர்வதற்காக அவளது தியேட்டரிலேயே அதை திரையிட ஏற்பாடு செய்கிறான். தியேட்டர் வசதி குறித்த விசாரணைகள் தொடர்கின்றன. பிரச்சார பிரிவின் தலைவரான கோயபல்ஸ் தானே விசாரிக்க தொடங்குகிறார்.. மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை, பாக்ஸ்களின் எண்ணிக்கை, வசதிகள் போன்றவை கணக்கில் எடுக்கப்படுகின்றன. அவளை நேரில் அழைத்து விசாரிக்கின்றனர். தியேட்டருக்கும் குழு பார்வையிடச் செல்கின்றது. தியேட்டரில் திரையிட நாளும் குறிக்கப்படுகின்றது. இதற்காக தியேட்டரின் உள் அலங்காரங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. தியேட்டரின் ஒரே வேலையாளும் சோசன்னாவின் நம்பிக்கைக்கு உரியவனும் ஆன மார்சலின் இருப்பு மட்டும் அவர்களை உறுத்துகிறது. லண்டா திரையரங்கின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கிறான்.

திரைப்படம் பார்க்க ஹிட்லர் முதல் கோயபல்ஸ், கோயரிங், மார்ட்டின் போர்மென் போன்ற பெரிய தலைகளும், பிற உப தலைவர்களும் வரப்போவது சோசன்னாவின் உள்ளத்தில் ஒரு பெரும் பழி வாங்கும் திட்டத்தை ருவாக்குகிறது. இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கொல்லும் திட்டம். கிட்டத்தட்ட ஒரு தற்கொலை திட்டமும் கூட. இவர்கள் அனைவரும் தியேட்டருக்குள் வந்தவுடன், தியேட்டருடன் இவர்களை கொளுத்திவிடுவது;

அதற்காக தன் கைவசம் உள்ள, உடனே பற்றிக்கொள்ளும் நைட்ரேட் பிலிம் சுருள்களை உபயோகிப்பது, படத்தின் இடையிலேயே, இன்னும் ஒரு துண்டுப்படத்தை நுழைப்பது; அந்த துண்டுப்படத்தில் தானே தன் அடையாளத்தையும் பழி வாங்கும் நோக்கத்தையும் வெளிப்படுத்துவது என்று திட்டம் விரிவடைகிறது.

பிரிட்டிஷ் உளவுத்துறைக்கும் இந்த திரையிடல் செய்தி கிடைக்கிறது. ஹிட்லரை கொல்ல அவர்களும் இந்த சந்தர்ப்பத்தை உபயோகிக்க நினைக்கிறார்கள். இதற்காக ஜெர்மன் மொழி வல்லுனரும், ஜெர்மன் திரைப்பட ஆராய்ச்சியாளரும் ராணுவ வீரருமான லெப்டினென்ட் ஆர்ச்சீ, ஒரு திட்டம் தீட்டுகிறார். ஜெர்மன் டபுள் ஏஜெண்ட் நடிகை பிரிட்ஜெட், இவரையும் பாஸ்டர்ட்ஸ் குழுவினரையும் சந்திக்க வைக்கும் பணியில் ஈடுபடுகிறாள். ஒரு மதுபான பாரில் கூடுவதற்கு திட்டம். ஒரு ஜெர்மானியனின் நடை, உடை, பாவனையில் சரியான உச்சரிப்புடன் ஆர்ச்சீ செயல்படுகிறார். அதே நேரத்தில் வேறொரு மேஜையில் சில நாஜி வீரர்களும் கூடியிருக்கின்றனர். ஒருவன் தந்தையானதற்கான குட்டி பார்ட்டி. போதையில் கலாட்டா ஏற்படுகிறது. அந்த போதையிலும் அவன் ஆர்ச்சீயின் ஒரு சின்ன சைகையில் அவர் ஜெர்மானியன் அல்ல என்று சந்தேகப்படுகிறான். துப்பாக்கி சண்டையில் பெரும்பாலோர் காலியாகின்றனர். நடிகையின் கால்களில் பலத்த காயம் ஏற்படுகிறது. பாஸ்டர்ட்ஸ் குழுவின் தலைவன் ஆல்டோ அவளை ரகசிய இடத்திற்கு தூக்கிச்சென்று சிகிச்சையளிக்கிறான். சம்பவ இடத்திற்கு வரும் லாண்டாவிற்கு பெண்கள் அணியும் ஒற்றை செருப்பும், அவள் ஆட்டோகிராப் இட்ட கைக்குட்டையும் கிடைக்கின்றன.

சிகிச்சை என்பதை விட சித்திரவதை என்றே சொல்லலாம். தியேட்டரில் அனைவரும் கூடப்போகும் செய்தி கிடைக்கிறது. இவர்களுக்கும் ஒரு கொலைத்திட்டம் உருவாகிறது. மூன்று வீரர்களும் தியேட்டருக்கு நடிகையின் பாதுகாவலர்களாக உடன் ஆயுதங்களுடன் செல்ல திட்டமிடுகின்றனர்.

முழு ஒப்பனையுடன் சோசன்னா மார்சலின் காமிரா முன் நின்று தன் 'வசனங்களை' பேசுகிறாள். பிலிமை எப்படி கழுவி பிரதியெடுக்கப்போகிறார்கள் என்பதற்கும் இயக்குனர் ஒரு விளக்கம் வைத்திருக்கிறார்.

திரையிடும் நாள் . யாவருக்கும் பரபரப்பு தொற்றிவிடுகிறது. தியேட்டரில் எங்கு நோக்கினும் ஸ்வஸ்திக் பதாகைகள். லவுஞ்சில் ஒயின் உபசரிப்புக்கள். லண்டாவின் கழுகுக்கண்கள் காலில் கட்டுடன் வரும் நடிகையை பார்த்துவிடுகின்றன. அவளைத் தனியாக விசாரணைக்கு அழைத்துச்செல்கிறான். அதே நேரத்தில் ஆல்ட்டோவுடன் வந்த மூவரில் இருவரும் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்றுவிடுகின்றனர். பிரிட்ஜெட்டின் உடைந்த காலில் அந்த ஒற்றை செருப்பை பொருத்திப்பார்க்கிறான் லண்டா.. பொருந்துகிறது. அவளை சித்திரவதை செய்கிறான். மூச்சுத்திணறி அவள் இறந்து போகிறாள். ஆல்டோவை இழுத்து வர ஆணை பிறக்கிறது. ஆல்டோவும் யூடிவிச்சும் விலங்கிடப்பட்டு லாண்டாவின் அலுவலகத்திற்கு டிரக்கில் ஏற்றிச்செல்லப்படுகிறார்கள்.

படம் தொடங்குகிறது.

ஹிட்லரும், கோயபல்ஸ் முதலானோரும் இருக்கைக்கு வந்து விடுகின்றனர். ஒரு கட்டு வெடிகுண்டை ஒரு கரம் ஒரு சீட்டுக்கு அடியில் வைப்பதை மட்டும் நாம் காண்கிறோம். யார் எவர் என்று புரிவதில்லை. படம் ஓடத்துவங்கியவுடன் பாஸ்டர்டஸ் இருவரும் மெதுவாக வெளியேறி வெராண்டாவில் நோட்டமிடுகின்றனர். அவர்களது குறி ஹிட்லர் அமர்ந்திருக்கும் பாக்ஸ்.

அனைவரையும் வரவேற்றுவிட்டு சோசன்னா புரொஜக்டர் அறைக்கு விரைகிறாள். மார்சல் அவளை மௌனமாக வரவேற்று முத்தமிட்டு பிரிகின்றான். விரைந்து சென்று தியேட்டரின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டுகிறான். கூடுதல் உறுதிக்காக இரும்புக்கழிகளையும் தாள்ப்பாட்களில் செருகுகிறான். பின் மெதுவாக நடந்து சென்று திரைக்கு பின் உள்ள அறைக்கு செல்கிறான். திரைக்கு பின் படம் ஓடிக்கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அறை முழுவதும் குவிந்து கிடக்கும் நைட்ரேட் பிலிம் சுருள்கள். அருகில் நின்று சுருட்டை பற்ற வைத்து அமைதியாக புகை விடுகிறான் மார்சல்.

லண்டாவின் விசாரணையில் ஒரு உண்மை வெளியாகிறது. போரில் தோற்று விடுவோம் என்ற அந்தரங்க பயம் பாஸ்டர்டுகளுடன் ஒரு ஒப்பந்தம் புரிய வைக்கிறது. ஹிட்லரும் அவன் பரிவாரங்களும் செத்து தொலையட்டும். ஏன், தியேட்டரில் வெடிகுண்டை வைத்திருப்பதே லண்டாதான்…! சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

லண்டாவிற்கு போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலக்கு, அவனுக்கும் பாஸ்டர்டுகளுக்கும் வீர விருதுகள், முழு ராணுவ பென்ஷன், ஒரு அருமையான நிலம் பரிசாக… தான் அவர்களிடம் சரணடைவது போல் நடிப்பதாகவும், அவர்கள் நாடகத்தை தொடரலாம் என்றும் ஆலோசனையும் கூறுகிறான்.

ஹிட்லரும் பரிவாரங்களும் திரையில் அமெரிக்க வீரர்கள் தாக்கப்படும் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.. பிரடரிக் ஜோலர் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது பாக்சிலிருந்து மெதுவாக வெளியேறி, புரொஜக்ஷன் அறையை நோக்கிச் செல்கிறான். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பெருமிதம் அவனுக்கு. அவளும் மகிழ்வாள் என்ற எண்ணம். கதவை தட்டுகிறான். அப்போதுதான் உண்மையான ரீல்களுடன் தன் புதிய ரீலை இணைத்து விட்டு காத்திருக்கும் சோசன்னா பெரும் பீதியுடன் கதவை திறக்கிறாள். வெறுப்பும் கலக்கமும் மண்டிக்கிடக்கிறது அவள் முகத்தில். அவளுடைய கடுகடுத்த முகம் அவனுக்கும் ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. கதவை உட்பக்கம் தாளிடச்சொல்கிறாள். அவன் திரும்பியவுடன் துப்பாக்கியால் சுடுகிறாள். சுருண்டு விழுகிறான் அவன். திரையில் ஒலிக்கும் வேட்டுச்சத்தங்களில் கரைந்திருக்கிறது துப்பாக்கிச்சத்தம். பதற்றத்துடன் அவன் உடலை திருப்பிப்போட்டு பார்க்க அவள் விழையும்போது திருப்பிச்சுடுகிறான் அவன். இருவரும் இறந்து போகிறார்கள்.

புரொஜக்டரில் அவள் தோன்றும் காட்சி ஓடத்தொடங்குகிறது. பார்வையாளர்களை நோக்கி பேசத்தொடங்குகிறாள். ஹிட்லரும் பிறரும் திகைத்து நிற்க, அதே சமயத்தில் திரைக்குப்பின் மார்சல் தன் எரியும் சுருட்டுத் துணுக்கை பிலிம் சுருள்களை நோக்கி சுண்டி எறிகிறான். பற்றி எரிகிறது தீ. உணர்ச்சிகரமாக சோசன்னா பேசிக்கொண்டிருக்கும் கறுப்பு வெள்ளை பிம்பத்தின் கீழ்ப்பகுதி நெருப்பின் ஆரஞ்சு வண்ணங்களால் சிவக்கத்தொடங்கும் இந்த காட்சி ஒரு அற்புதம். எங்கும் களேபரம். பூட்டப்பட்ட கதவுகளின் வெளியே யாரும் பாயமுடியவில்லை. அதே நேரம், பாஸ்டர்ட்ஸ் இருவரம் ஹிட்லரின் பாக்ஸ் அறையில் புகுந்து சரமாரியாக சுடுகிறார்கள். சர்வாதிகாரியும் குழுவினரும் அங்கேயே அவுட். அங்கிருந்தே அரங்கத்தில் திணறிக்கொண்டிருப்பவர்களையும் நோக்கி சடசடவென்று குண்டு மழை பொழிகிறது.

நெருப்பும் மறைக்கப்பட்ட குண்டுகளும் தியேட்டரை ஆட்களுடன் முழுவதுமாக அழித்து விடுகின்றன.

இங்கே லண்டாவின் சரணாகதி நாடகம் அறங்கேறும் காட்சி. அமெரிக்க மீட்புப்பகுதிக்கு செல்கிறார்கள். ஆல்டோவிடம் ஆயுதங்களை ஒப்டைக்கிறான் லண்டா. தனக்கும் விலங்கிடச் செய்கிறான். அவனுடைய டிரைவர் அங்கேயே ஆல்டோவினால் சுட்டுக்கொல்லப்படுகிறான். திகைத்து நிற்கும் லண்டாவை அப்படியே விடுவதா? அவனுடைய நெற்றியில் ஸ்வஸ்திக்கை பொறிக்கிறான் ஆல்டோ. எப்போதும் அந்த வடிவம் சுத்தமாக வருவதில்லை என்ற மனக்குறை இன்று அகன்றதாக பெருமிதம் கொள்கிறான்- 'இது எனது மாஸ்டர்பீஸ்' என்று பெருமைப்படுவதோடு படமும் முடிகிறது.

இந்த படத்தின் தலைப்பில் உள்ள ஸ்பெல்லிங் தவறுகள் பல வினாக்களை எழுப்பக்கூடும். ஆனால் அதுதான் டாரண்டினோவின் ஸ்டைல். இதே பெயரில் ஒரு பழைய படமும் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 'டர்ட்டி டஜன்' சாயலில். சமீபத்தில் வாழ்ந்த சரித்திர நாயகர்களை பற்றி புனைவாய் ஒரு புதிய திரைக்கதை எழுத ஒரு தனித்திறன் வேண்டும். காந்தியை கொல்லச்சென்ற கோட்சேவுக்கு தெரியாது , ஹேராம் என்று ஒரு படத்தை கமலஹாசன் இயக்கி, அதில் காந்தியை கொல்லச்செல்லும் இன்னொரு பாத்திரத்தை படைப்பார் என்று. இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஹேராம் நினைவுக்கு வந்தது. ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் ஸ்டைலில் இந்த படத்தை இயக்கியிருப்பதாக டாரண்டினோ சொல்லியிருக்கிறார். ஒரே செயலைப்புரிய பல்வேறு மனிதர்கள் காத்திருக்கிறார்கள். படத்தின் கடைசி வரை ஒருவருக்கொருவர் இது தெரியாமலேயே இருக்கிறார்கள் என்பது திரைக்கதையின் தனிச்சிறப்பு. பாஸ்டர்ட்ஸின் திட்டங்கள் சோசன்னாவுக்கும் அவளது திட்டம் இவர்களுக்கும் தெரியாது என்ற நிலையிலேயே முழுப்படத்தின் திரைக்கதையும் கொண்டு சென்றிருப்பது வியக்கத்தக்க ஒன்று. ஒவ்வொரு காட்சியின் வேகமும் பொதுவான இரண்டாம் உலகப்போர் படங்களில் காண முடியாத ஒன்று.

நடிகர்கள் இந்த படத்தின் பெரும் சிறப்பு. ஆல்டோவாக ஹாலிவுட் உச்ச நட்சத்திரம் பிராட் பிட் தன் முகத்தையும் உடல் மொழியையும் மாற்றி அற்புதமாக நடித்திருக்கிறார். ஆனால் பொதுவாக வில்லன்கள்தானே பரபரப்பாக பேசப்படுவார்கள். இதிலும் லண்டாவாக தோன்றும் கிரிஸ்டோப் வால்ட்ஸ் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல சர்வதேச விழாக்களில் அவருக்கு அவார்டுகள் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. மெலானி லாரெண்ட் சோசன்னாவாக மிக மென்மையான ஆனாலும் உறுதியான கதாபாத்திரத்தை தன் நடிப்பின் மூலம் சித்திரித்திருக்கின்றார்..

ஒளிப்பதிவும், இசையும் மற்ற பக்க பலங்கள். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் பாணி இசைக்காக அதன் பிதாமகன் என்னியோ மரிக்கோனை ஒப்பந்தம் செய்ய விழைந்தார் இயக்குனர் . அவர் ஆசை நிறைவேறாமல் போகவே, அவருடைய பழைய டிராக்குகளை படத்தில் உபயோகப்படுத்தினார். அனேகமாக இந்த வருடத்திய ஆஸ்கார் போட்டியில் இந்த படத்திற்கு ஒரு தனியிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்…ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு குவிந்த ஆஸ்கார்களை பார்த்து, அந்த விருதின் மீது மரியாதை குறைந்திருந்தாலும் கூட…!

----------------------------------------------------------------------------------------------------------------------------

 

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.