தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்
A Film by
Year -- s
Run time : --
“துடிக்கிற ஆட்டத்தை திரையிலே பார்த்திருக்கேன்,
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையிலே ஆடிருக்கேன்”
- இளையராஜா “ நாயகனில்
 |
|
திரைப்படங்களை திரையரங்குகளில் தான் மக்கள் காலகாலமாய் கண்டு களித்து வந்திருக்கின்றனர். இப்போது அந்த அனுபவமே ஒரு பழங்கதையாய் மாறிவிட்டது போலிருக்கிறது. வீட்டுக்கு வீடு வந்துவிட்ட சின்னத்திரை, திரைப்படம் பார்க்கும் அனுபவத்திற்கே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது. திரைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், திரையில் பாய்ந்து வந்த புகைவண்டியை கண்டு பயந்து ரசிகர்கள் வெளியே ஓடினார்களாம். மௌனப்பட காலத்தில் ஒவ்வொரு ரீல் மாற்றும்போதும், நாட்டிய நிகழ்ச்சிகளும் மாஜிக் நிகழ்ச்சிகளும், திரைக்கதையை விளக்கிக் கூறும் கலைஞர்களின் உரை நிகழ்ச்சிகளும் நடைபெற்றனவாம். |
பின்னர் பேசும் படங்கள் வந்தபோது பெற்ற அனுபவங்கள் வேறு வகையானவை. சினிமாஸ்கோப், 70 எம் எம், 3டி, சினிரமா, ஸ்டீரியோபோனிக் ஒலி என்று புதுப்புது கண்டுபிடிப்புகள், ரசிகர்களை எப்போதும் வியப்பிலாழ்த்தி வந்திருக்கின்றன. தந்திரக்காட்சிகளும், இரட்டை வேடக்காட்சிகளும் இப்போது காணக்கிடைக்கும் டிஜிடல் சாகசங்களும் எப்போதும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துக்கொண்டேதான் இருக்கும்.
சின்னத்திரையின் ஆதிக்கத்திற்கு முன்னிருந்த அந்தக்காலத்தை நினைத்துப் பார்ப்போம். இப்போதைய கறுப்பு மார்க்கெட்டில் டிக்கட் விற்று காசு பார்க்கும் ரசிகர் மன்றங்கள் அப்போது இல்லை. முழு ஈடுபாட்டோடு கைக்காசை செலவழித்து தோரணம் கட்டி விழா எடுத்து அப்போதைய கதாநாயகர்களின் நிலையை உயர வைத்த அப்பாவிகள்தான் அப்போது இருந்தனர். பின்னர் அரசியல் உள்ளே புகுந்து ரசிகர் மன்றங்களை அதிகார பீட ஏணிகளாக மாற்றியது அனைவரும் அறிந்த கதைதான். இப்போது கூட, அரசியலில் நுழைய இருக்கும் ஒரு நடிகருக்கு, தினமும் ஒரு “நற்பணி மன்றம்” ஏற்படுத்திக் கொண்டுருக்கும், அரசியல் கனவில் திளைக்கும் புத்திசாலி இளைஞர்களை உங்களைச் சுற்றிலும் பார்க்கலாம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்ற அரசியல் காஸ்ட்டியூமில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர்களை, மாலை முரசிலோ, மலரிலோ கட்டாயம் பார்த்திருக்கலாம். அப்போது புதுத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கிற்கு வெளியே முதல் நாளிரவே நூற்றுக்கணக்கில் சைக்கிள்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கும். கோவைப் பகுதியில் சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவே இருந்தது. பாட்டுப் புத்தகங்கள் விற்பனை கொடி கட்டி பறக்கும். கைகளால் வரையப்பட்ட பேனர்களையும், கட் அவுட்களையும் ஓவியக்கூடத்திற்கே சென்று பார்த்து மகிழ்ந்தினர் ரசிகர்கள். நிரம்பி வழியும் தியேட்டரில் படம் பார்ப்பதே உற்சாக அனுபவம். அதுவும் தரை டிக்கெட் என்று அழைக்கப்பட்ட கீழ் வகுப்பில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கொடி கட்டிப் பறக்கும். முதலாளிகளே பிளாக்கில் டிக்ககெட் விற்கும் ஈனப்பிழைப்பும், டெலிபோன் புக்கிங் என்ற பெயரில் டிக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் கூட்டி விற்கும் கொள்ளையும் இருந்ததில்லை. சுத்தம் செய்யப்படாத கழிவறைகளும், காண்டீன் கொள்ளைகளும் உடைந்த நாற்காலிகளும், பழைய கார்பனில் மங்கலாக படம் காட்டும் தொழில் நுட்பமும் இருந்ததேயில்லை.
 |
|
நல்ல, மற்றும் பிறமொழிப்படங்களை காட்டுவதற்காக சனி, ஞாயிறுகளில் காலைக்காட்சிகளும் இருந்தன. சில சமயம் குறைந்த கட்டண காட்சிகளும் இருந்தன. அப்போது தினசரி மூன்று காட்சிகள் தானே. சாந்தாராம், ராஜ்கபூர் படங்களையெல்லாம் இந்த காலைக்காட்சிகளில் தான் நிறைய ரசிகர்கள் பார்த்தனர். எழுபதுகளில் மாணவப் பருவத்தில் சத்யஜித்ராய் படங்களை காலைக்காட்சிகளில் சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரிலும், கலைவாணர் அரங்கிலும் நிறைய பார்த்திருக்கிறேன். |
கோவை ஸ்ரீபதி தியேட்டரிலும் சில மாதங்கள் தினமும் இன்டர் ஷோ
என்ற பெயரில் இரவு 8 மணிக்கு ஐரோப்பிய திரைப்படங்களை திரையிட்டு த்ரூபோ, ஃபாஸ்பைண்டர், ஜானுஸ்ஸி, போன்ற மேதைகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
ஃபிலிம் சொசைட்டிகள் என்று அழைக்கப்பட்ட திரைப்படக் கழகங்களை நிறைய நகரங்களில் அறிவு ஜீவிகள் உருவாக்கி நல்ல திரைப்படங்களை சிறய குழுக்களுக்கு திரையிட்டு விவாதங்களையும் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாயினர். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் பரவலாக சினிமா ரசனையை உயர்த்திய இந்தக் குழுக்கள் பின்னர் தமிழகத்திலும் பரவினர். திரையரங்குகளில் திரையிட வசதியற்ற 16 எம் எம் படச்சுருளைக் கொண்டு தான் திரையிடல்கள் நடைபெறும். பெரும் பாலும் ஒரு சிறிய அறையிலோ, அரங்கிலோதான் இந்நிகழ்ச்சி நடைபெறும். காற்றோட்டமில்லாத அறைகள், அமர வசதியற்ற நாற்காலிகள், சப் டைட்டிலை மறைக்கும் முன்னால் அமர்த்திருக்கும் சக ஜீவிகளின் தலைகள், என்று இப்படியும் அரங்குகளை, தேடித் தேடி திரைப்படங்களை திரையிட்டனர். ஆனால் பொருளாதார ஆதரவற்றதனால் நிறைய கழகங்கள் காணமல் போயின. ஆனாலும் மறக்க இயலா அனுபவத்தையும் திரைப்பட அறிவையும் திரைப்பட கழகங்கள் வாயிலாகத்தான் என்னைப் போன்றவர்கள் பெற்றனர். நல்ல படங்கள் மட்டுமல்ல, படு போரான திரைப்படங்களையும் காணும் வாய்ப்பு இங்கே கிட்டலாம். ஒருமுறை குமார் சஹானியின் “மாயா தர்ப்பன்” என்ற திரைப்படம் பார்த்தோம். படம் முழுவதும் கதாநாயகி மொட்டை மாடியில் உலவிக்கொண்டிருப்பாள். ஆபரேட்டர் தெரியாமல் ரீல்களை மாற்றிப் போட்டு விட்டார். எந்த வித்யாசமும் தெரியமல் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். படம் முடிந்ததும் அவர் மன்னிப்பு கேட்கிறார். மன்னித்தோம் என்று கதறிக்கொண்டு வெளியேறினோம்.
பல நாட்டுத் திரைப்படங்களை கழகங்கள் வாயிலாகப் பார்த்திருந்தாலும், இன்று பரவலாகப் பேசப்படும் ஈரானிய திரைப்படங்கள் எதையும் பார்த்ததில்லை என்ற மனக்குறை இருந்தது “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்” என்ற ஈரானிய திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்த போது அகன்றது.
பொதுவாக இஸ்லாமிய நாடுகளில் ஓவியம், திரைப்படம் போன்ற கலைகளுக்கு பெரிய மரியாதை கிடையாது என்றொரு பேச்சு உலவினாலும், ஈரானிய திரைப்படங்களுக்கு உலக அரங்கில் ஒரு தனியிடம் இருக்கிறது. அரசாங்கத்தின் கைகளில் தான் கச்சா பிலிமும், திரைப்பட கருவிகள் மற்றும் லேபரட்டரிகளும் இருக்கின்றன. பலத்த தணிக்கையும் உண்டு. ஆகவே ஆபாசக்காட்சிகளுக்கோ, அரசு மற்றும் மதத்திற்கெதிரான எந்தக் கருத்திற்கோ இடமில்லை. அப்படியிப்படி பார்த்தால் இந்த விதிகளெல்லாம் நம் திரைப்படங்களுக்கும் பொருந்தலாம். இங்குதான் ஆளுக்கேற்றபடி மாறிக்கொள்ளுமே. இலங்கைப் போராளியை மையமாய் கொண்டு புகழேந்தி “ காற்றுக்கென்ன வேலி” எடுத்தால் தணிக்கைக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பார்கள்; சந்தோஷ் சிவன் “டெரரிஸ்ட்” எடுத்தால் எந்த விவகாரமின்றி படம் வெளிவரும். அவசர நிலை காலத்தை நினைவுபடுத்தும் புது சட்டம் வேறு சமீபத்தில் வந்திருக்கிறது. சிகரெட், பீடி போன்ற அபாயமான பொருட்களை திரையில் காட்டக்கூடாதாம். “சகலகலாவல்லவன்”, “முந்தானை முடிச்சு” போன்ற திரைப்படங்களை தயாரித்து, முன்னேறிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய புகழ்பெற்ற நிறுவனத்தின் அதிபர், இந்த அற்புத சட்டத்தை ஆதரித்து அறிக்கை விடுகிறார். ஒரு வேளை மீண்டும் “அதே கண்கள்” தயாரித்தால், வில்லன் சுருட்டிற்கு பதில், லாலிபாப்பை வாயில் வைத்துக்கொண்டு வருவான் போலிருக்கிறது. ஈரானிய இயக்குனர்கள் விதிகளை மீறாமல் நல்ல திரைப்படங்களை தரும் அற்புதத்தை கண்டெடுத்துவிட்டனர். மஜீத் மஜீதி என்னும் இயக்குனர் இயக்கிய 1997ல் வெளிவந்தது இந்தப்படம். வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கும் தேர்வு பெற்றது.
பெரிதாக கதையொன்றுமில்லைதான். தன் தங்கையின் காலணியை பழுது பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் தொலைத்து விடுகிறான் சிறுவன் அலி. உருளைக்கிழங்கு வாங்குவதற்காக போனவன், கடை வாசலில் காதிதத்தில் பொதிந்து செருப்பை வைத்திருக்கின்றான். குப்பை பொறுக்குபவன், தவறுதலாக அதை எடுத்து போய் விட்டான். இவர்கள் குடும்பம் ஏழ்மையானது. தாயோ படுக்கையில் கிடக்கிறாள். இன்னொரு காலணி வாங்கும் அளவிற்கு வசதியில்லை. பள்ளிவாசலில் தேநீரும் கற்கண்டும் விளம்பும் சேவையில் ஈடுப்பட்டிருந்தாலும், வீட்டில் இனிப்பில்லாத தேநீர் அருந்தகிறார்கள். அப்போது கூட பொதுச் சொத்தான கற்கண்டில் கை வைக்கமாட்டார்கள். அவ்வளவு நேர்மை. கதை கேட்கும்போது போரடிக்கிறதா? படம் அப்படி இல்லவேயில்லை. மனித உணர்வுகளை சுண்டியிழுக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார் மஜீதி. வசதியில்லை என்றாலும் யாரும் புலம்புவதில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தே சிந்திக்கிறார்கள்.
தங்கை ஜாஹிராவிற்கு காலையில் பள்ளி. அண்ணனுக்கு மதியம்தான். ஒரே காலணியை பகிர்ந்து கொள்கிறார்கள். பள்ளிக்கு வெளியிலேயே அவள் அவனுக்கு கழற்றிக் கொடுக்க, அவன் காலணியை அணிந்து கொள்கிறான். இதானல் பல நாட்கள் தாமதமாக பள்ளிக்கு செல்ல நேர்கிறது. பள்ளி விடுமுறை நாட்களில் தந்தையும் மகனும் தோட்ட வேலை தேடி அலைகிறார்கள். ஒன்றும் பெயர்வதில்லை. ஒருநாள் பள்ளியில் சகமாணவியொருத்தியின் கால்களில் தன் பழைய செருப்பை பார்க்கிறாள் ஜாஹிரா. அவளை கண்காணிக்கிறாள், பின் தொடர்கிறாள். தன் குருட்டுத் தந்தையை, சாலையில் வழிநடத்திச் செல்லும் அவளை என்னவென்று விசாரிப்பது, என்று விட்டும் விடுகிறாள்.
 |
|
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப் பந்தயம் அறிவிக்கப்படுகிறது. விலை மதிப்புள்ள முதலிரண்டு பரிசுகளை விட மூன்றாம் பரிசு அலியைக் கவர்கிறது. ஒரு ஜோடி விளையாட்டு காலணிகள்! போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டு, கடும் பயிற்சியில் ஈடுபடுகிறான். போட்டி ஆரம்பமாகிறது. இவனுடைய ஒரே நோக்கம் பல நூறு பேரை பின்னுக்கு தள்ளிவிட்டு, இருவரை மட்டும் முன்னுக்கு விட்டு தங்கைக்காக மூன்றாவது பரிசை பெறுவதுதான். |
பல நிமிடங்களுக்கு திரையில் காட்டப்படும் இந்தப் பந்தயத்தின் முடிவை நாம் ஊகித்தாலும், காட்சியுடன் ஒன்றிவிடுகிறோம். அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, முதலிடத்தை பெற்று விடுகிறான்.
வீட்டில் தங்கை காத்திருக்கிறாள். முதலிடத்தை பெற்றவன் சோர்ந்து போய் வருகிறான். உண்மையறிந்து அவள் வீட்டிற்குள் சென்றுவிட, இவன் மெதுவாக காலணியை கழட்டுகிறான். அதுவும் பிய்ந்து போய் விட்டது. ஓடிய ஓட்டத்தில் கால்களில் கொப்பளங்கள் உருக்கொண்டிருக்கின்றன. வாசலில் இருக்கும் குட்டி நீர்நிலையில் கால்களை மூழ்கவிட்டு அமர்கிறான். நீருக்குள்ளிலிருந்து நீற்தி வரும் தங்கமீன்கள், அவன் பாதங்களை சுற்றி சுற்றி வந்து வருடுகின்றன. கவிதைத்தனமான முடிவுடன் படமும் நிறைவடைகிறது.
நிறைய திரைப்படங்களில் ஒரு விளையாட்டையோ, பந்தயத்தையோ க்ளைமாக்ஸ் காட்சியாக அமைத்து. அதை நோக்கியோ ஒட்டியோ திரைக்கதையை செலுத்துவதுண்டு. நாஜிகளுக்கும், பிற போர்க் கைதிகளுக்கும் நடைபெரும் கால்பந்துப் போட்டியும், தப்பித்தல் முயற்சியும் கலந்து வரும் “எஸ்கேப் டு விக்டரி”. சில்வர்ஸ்டோன் ஸ்டாலோன் போன்ற பெரிய நடிகர்களுடன் கால்பந்து வீரர் பீலேயும் இதில் நடித்திருந்தார். தென் ஆப்பிரிக்க நிறவெறியர்களுக்கு எதிராக, பழங்குடிகளை கொண்ட ஒரு டீமை அமைத்து, கூடை பந்துப்போட்டியில் மோதவிட்டு ஜெயிக்கும் படம் “தி ஏர் அப் தேர்”. எங்கேயோ கேட்ட கதையாக இருக்கிறதே என்று சிந்திப்பவர்களுக்காக ஒரு சிறிய தகவல்- இதைத் தழுவித்தான் இங்கு “லகான்” தயாரிக்கப்பட்டது, மற்றும் “ராக்கி” படங்கள், இங்கு தயாரிக்கப்பட்ட “ஜோ ஜீதா வஹீ சிகந்தர்” (எவர் வெல்கிறாரோ அவரே அரசர்), மற்றும் “என்டர் தி டிராகன்” போன்ற படங்களைச் சொல்லலாம். இதே போல் குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாக கொண்ட திரைப்படங்களும் ஏராளம்.
விட்டோரியா டி சிகாவின் “ பைசைக்கிள் தீவ்ஸ்”, “சினிமா பாரடிசோ”, “ லைப் இஸ் ப்யூட்டிபுல்”, சாப்ளினின் “தி கிட்” என்று ஆயிரக்கணக்கான படங்களைச் சொல்லாம். இங்கும் குழந்தைகளை மையமாக வைத்து ராஜ்கபூரின் “பூட் பாலீஷ்” மெஹ்பூப் கானின் “சன் ஆப் இந்தியா”, “அப் தில்லி தூர் நஹீ” என்ற நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. இத்தனை படங்களில் இருந்து “சொர்க்கத்தின் குழந்தைகள்” எப்படி வேறுபடுகிறது? இதில் உள்ள எளிமையும், உண்மையும், குழந்தைகளின் கள்ளமில்லா நடிப்பும்- நிறைய காட்சிகளில் இயக்குனர் குழந்தைகளுக்கு தெரியாமலேயே காமிராவை ஒளித்து வைத்து இயக்கியிருக்கிறார்- இத்தகைய உத்திகளே திரைபடத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------- |