|
| |
|
|
 |
 |
| திரைக்களஞ்சியம் |
 |
| |
 |
திரை அகராதி |
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
 |
 |
|
|
| |
|
| |
|
| |
பறவைக் கோணம் (Bird Angle) |
 |
வானத்திலிருந்து பறவை பார்ப்பது போல விமானம், ஹெலிகாப்டர் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் காட்சிக்குப் பெயர் பரவைக்கோணம் என்று பெயர். |
|
| ஐ லெவல் கோணம் (Eye Level Angle) |
 |
சாதரணமாக ஒரு மனிதனின் கண்பார்வை மட்டம் உள்ள அமைப்பில், காமிராவின் பார்வையில் தெரிவது.
உயர் கோணம் (High Angle)
மாடி, கட்டிடம் போன்ற அரங்கின் உயரத்திலிருந்து படமாக்கப்படும் காட்சி.
எக்ஸ்ட்ரீம் ஹை ஆங்கில் (Extreme High Angle)
கிரேன் மூலமாக நடனக் காட்சிகள், நிலப்பகுதிகள், வீதிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது.
கீழ்கோணம் (Low Angle)
அரங்கின் கீழ் பகுதியிலிருந்து படமாக்குவது.
லோ லெவல் ஆங்கில் (Low Level Angle)
நிலமட்டத்திலிருந்து காட்சிப் படுத்துவது.
எக்ஸ்ட்ரீம் லோ ஆங்கில் (Extreme Low Angle)
இது பூமியின் கீழ்புறம் பள்ளம் தோண்டப்பட்டு காமிரா அங்கிருந்து காட்சிப்படுத்துவது.
|
|
| ருசியன் ஆங்கில் (Russian Angle) |
 |
பிரேமின் குறுக்காக சாய்வு நிலையில் படமாக்கும் காமிரா கோணத்தை ரஷ்ய மக்கள்தான் முதன் முதலில் பயன்படுத்தினர். எனவே இதனை ரசியன் ஆங்கில் அல்லது டச் ஆங்கில் என்று அழைக்கிறோம். |
| ஜம்ப் கட் (Jump Cut) |
 |
ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் காட்டிக் கொண்டிருக்கும்போது (அல்லது ஒரு தொடர்செயலின்) நடுவில் சில ஃப்ரேம்கள் மட்டும் காணாமல் போனால் என்ன ஆகும்? அந்த நபர் குதிப்பதுபோல் தோன்றுமல்லவா? இதுதான் ஜம்ப் கட். ஒரு நபரின் (/பொருளின்) தொடர்பேச்சுக்கு (/நிகழ்வுக்கு) நடுவில் இன்னொருவரின் ரியாக்சனைப் போட்டுக்கொள்ளலாம் என்று அந்த ரியாக்சனுக்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்களைத் தனித்தனியே எடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ரியாக்சனை எடுக்க மறந்துவிடும் அனுபவமற்ற இயக்குநரால் இது விளைகிறது. தவறுதானென்றாலும், கலைப்பூர்வமான முறையில் அழகாக இதைப் பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு, டாக்டராகப் படிக்க ஆசைப்பட்ட அதே மருத்துவக்கல்லூரியின் வாசலில் முறுக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அர்ஜுனின் நண்பன் பஸ்ஸின் முன் படுத்து தற்கொலை செய்துகொள்ளும்போது, அந்த பஸ் வருவதை ஸ்லோமோசனில் காட்டி, நடுநடுவே கொஞ்சம் கொஞ்சம் ஃப்ரேம்களை எடுத்திருப்பார்கள். இதனால் அந்த பஸ் குதித்து குதித்து வருவதுபோல் நமக்குத் தோன்றும்... இந்தக் கட்டிங்கைப் பொறுத்தவரையில் கேமரா, அல்லது கதாபாத்திரம் இரண்டில் ஏதாவது ஒன்று இயக்கத்திலும் மற்றது இயக்கமற்றும் இருந்தால்தான் இதன் முழு அழகையும் உணர முடியும். இன்னுமொரு உதாரணம்: காதல் மன்னன் திரைப்படத்தின் பாடல் ஒன்றில் கதாநாயகி படியொன்றில் அமர்ந்திருக்க, அவளை நோக்கி கேமரா வரும் ஷாட். ஸ்டாப் ப்ளாக் என்பதும் ஜம்ப் கட்டின் வகைகளில் ஒன்றுதான். |
|
| ஸ்டாப் ப்ளாக்: (Stop Block) |
| |
ஜம்ப் கட்டின் வகைகளில் நாம் அதிகமாக அறிந்திருப்பது இதைத்தான். நம் திரைப்படங்களில் கடவுள்கள் திடீரென (எங்கள் வழக்காற்றில் “டஸ்ஸென”) வருவது/ மறைவது, வாட்டாக்குடி இரண்யன் என்ற படத்தில் மீனாவை முதன்முதலாக முரளி யார் என்று கேட்டதும், அவர் ஆதங்கத்தில் விசனப்பட்டுப் பேசிக்கொண்டே மூக்கைச் சீந்தி ஒவ்வொருவர் மீதாகத் தடவ அவர்கள் ஒவ்வொருவரும் திடீர்திடீரென மறைவது.. போன்ற ஷாட்டுகள் ஸ்டாப் ப்ளாக்குகள் எனப்படுகின்றன. மறையவேண்டிய நபர் மறையவேண்டிய தருணம் வந்ததும் இயக்குநரோ, கேமராமேனோ ஃப்ரீ்ஸ் என்பார்கள். மறைய வேண்டிய நபர் தவிர்த்து மற்றவர்களெல்லாம் உறைந்துபோனதுபோல், ஃப்ரீஸ் சொல்லப்பட்டபோது கையைத் தூக்கியிருந்தார்களென்றால் கையைத் தூக்கிய மேனிக்கே உறைந்து நி்ன்று இயக்கமற்றுப் போவார்கள். மறையவேண்டியவர் எழுந்து வந்துவிடுவார். பிறகு இயக்குநர் ரிலாக்ஸ் என்றதும் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். டைரக்டர் சொன்ன ஃப்ரீசுக்கும்-ரிலாக்சுக்கும் இடைப்பட்ட பகுதியை வெட்டி எடுத்துவிட்டுப் பார்த்தால் சம்பந்தப்பட்ட நபர் திடீரெனக் காணாமல் போனதுபோல் தோன்றும். இதுதான் ஸ்டாப் ப்ளாக்.. |
|
| டைம்-ஸ்லைஸ் (Time-slice): |
 |
திரைப்படத்தில் காலம் என்பது மிகவும் முக்கியமானது (film time). ஆற்றில் படகுபோல், திரைப்படத்தில் கேமரா, காலத்தில் பின்னோக்கியும் (Flashback-தமிழில் எடுத்துக்காட்டு, நினைத்துப்பார்ப்பது), முன்னோக்கியும் (Flash Forward) பயணம் செய்கிறது. அப்படியானால் காலத்தை உறைய வைக்கவும் முடிய வேண்டுமே.. ஆமாம்.. கடந்த காலங்களில் முடிந்திருக்கிறது-ஃப்ரீஸ் எபெக்டின் மூலமாக. ஆனால், காலத்தோடு காலமாக கேமராவும் உறைந்துபோய்விடும்- ஐஸ்கட்டிக்குள் இணைந்தே உறைந்துவிட்ட ஐஸ்குச்சியைப்போல... உறைந்துவிட்ட காலத்திலிருந்து கேமராவை மட்டும் மீட்டு சுதந்திரமாக இயங்கவிட முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக வந்ததுதான் இந்த டைம்-ஸ்லைஸ்... முதலில் ஒரு டைம்ஸ்-லைஸ் ஷாட்டிற்கான உதாரணம், பிறகு அதை எடுப்பது பற்றிய விளக்கம். உதாரணம்: பாய்ஸ் படத்தின் “எகிறிக்குதித்தேன், வானம் இடித்தது...” பாடலின் வரிகளுக்கு அபிநயம் பிடிப்பதற்காக (?) சித்தார்த்தும்-ஜெனிலியாவும் எகிறிக்குதிக்கிறார்கள். குதித்தவர்கள் அப்படியே உறைந்து நின்றுவிட, கேமரா மட்டும் ஒரு கால்வட்டம் அடித்து வந்து நிற்க, உறைந்து நிற்கும் சித்தார்த்தும்-ஜெனிலியாவும் தரையில் இறங்குகிறார்கள். இதன்பெயர்தான் டைம்-ஸ்லைஸ் (தமிழில்: உறைகாலம், அல்லது காலவுறைவு எனலாமா?) செய்முறை: கேமராவின் பயணப்பாதை முதலில் முடிவு செய்துகொள்ளப்படுகிறது. அந்தப் பாதையைப் போன்று வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில் வரிசையாக ஸ்டில் கேமராக்கள் அடுக்கப்படுகின்றன. முதல் மற்றும் இறுதிக் கேமராக்கள் மட்டும் திரைப்படக் கேமராக்கள். திரைப்படக் கேமராக்கள் ஒரு நொடிக்கு இருபத்து நான்கு ஃப்ரேம்களை எடுக்கின்றன. ஆனால், ஸ்டில் கேமராக்கள் எடுப்பதோ ஒரே ஒரு ப்ரேமைத்தான். அந்த ப்ரேம்கள் அனைத்தும் கேமராக்கள் அடுக்கப்பட்ட வரிசைப்படியே தொகுக்கப்படுகின்றன. ஸ்டில் கேமராக்கள் அனைத்தும் வேறு வேறு கோணங்களில் இருந்தாலும், ஒரே தருணத்தில், படமாகுபொருளின் வேறு கோணங்களைத்தான் பதிவு செய்திருக்கும் என்பதால், இப்படி தொகுக்கப்படும்பொழுது, கேமராவே ஒவ்வொரு கோணத்திற்கும் தானாக நகர்ந்து போனதாகவும், அது நகர்ந்துபோய்ப் பார்த்தது ஒரே தருணத்தைதான் என்பதால் நடிகர் உறைந்துபோனதாகவும் நமக்கு தெரிகிறது. இத்தொழில்நுட்பத்தை முதலில் பயன்படுத்தியவர்கள் மேட்ரிக்ஸ் ரீ லோடட் படக்குழுவினர். தமிழில் பாய்ஸ், அந்நியன் (கராத்தே ஸ்கூலில் சதாவைக் கொல்ல அவரைத் தூக்கியபடியோ, அல்லது கழுத்தைப் பிடித்தபடியோ விக்ரம் உயரத்திலிருந்து குதிக்கும் ஷாட்), சண்டக்கோழி (முத்தாய்ப்பு (climax) சண்டைக்காட்சி) ஆகிய படங்களில் டைம்-ஸ்லைஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. |
|
| பேரலல் கட்டிங் (Parallel Cutting-இணைவெட்டு): |
| |
ஒரே சமயத்தில் நடந்துகொண்டிருக்கிற இரண்டு வேறு சம்பவங்களை இதற்குப் பின் இது என்ற முறையில் காட்ட முடியாது. உதாரணத்திற்கு, வில்லன் கதாநாயகனின் குடும்பத்தாரைக் கட்டிப்போட்டு அவன் எங்கே என்று விசாரிக்க அவர்கள் சொல்ல மறுப்பது. மறுபுறத்திலோ இவர்களைக் காப்பாற்றுவதற்காக பைக்கில் வேகமாக அவன் வந்து கொண்டிருப்பது. சொல்ல மறுக்கும் அவர்களை இவன் கொன்றுவிட முயல, அந்த நேரம் பார்த்து வந்துகொண்டே....யிருந்த கதாநாயகன் சுவரை இடித்துக்கொண்டு வந்து காப்பாற்றுவது. இந்த சம்பவத்தில் ஒன்று மாற்றி ஒன்று, திரும்பவும் ஒன்று மாற்றி ஒன்று என்று காட்டிக்கொண்டேயிருப்பார்கள். தமிழில் மிகச் சரியான உதாரணங்கள்: 1.உதிரிப்பூக்கள் திரைப்படத்தில், விஜயன் கொழுந்தியாளின் சேலையை உருவிக்கொண்டிருக்க, அவள் வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் காதலன் இடையிடையே காட்டப்படுவது... (அவள் சேலை உரியப்படுவதற்கிடையில் தன் கையிலிருக்கும் பூவை ஒவ்வொன்றாக அவர் பிய்த்தெறிந்து கொண்டிருப்பது சிம்பாலிக் (குறிப்பாலுணர்த்தல்) எனப்படுகிறது) 2.ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில், திருமணம் செய்துவிட்டு கனிகாவை விட்டுவிட்டு ஓடிவிட்ட கணவனைத் தேடிப்போகும் பிரசன்னா கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெருங்கிக் கொண்டிருக்க, அதற்கு இணையான விஜயனின் செயல்பாடுகள். அவர் அங்கு கண்டுபிடித்ததும் இவர் இங்கு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வது வரையில் பேரலல் கட்டிங்கில் சேர்த்தி. இறுதியில் வருகிற ‘கண்டுபிடித்ததும்-தற்கொலைசெய்துகொள்வது’, ‘கொல்லப்போகும் நேரத்தில் கதாநாயகன் வந்துவிடுவது’ ஆகிய ஊடாட்டங்களும் (interactions), சம்பவங்கள் இரண்டும் நேரடித்தொடர்பு கொண்டிருப்பது ஆகியனவும் இயக்குநரின் ரசனையைப் பொறுத்த விசயங்கள்தாமே தவிர, கட்டாயமான விதிகளல்ல.. |
|
| ஸ்விஸ்-பேன் (Swiss-pan): |
 |
ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்குப் போவதற்கு நாம் கையாளும் வழக்கமான முறைகளாவன: கட் டு கட், ஃபேட் அவுட்-இன், வைப் அவுட்-இன், ஐரிஸ் அவுட்-இன், டிஸ்ஸாஸ்வ், மார்பிங் இன்னும்பிற. இதே நோக்கத்திற்காகவும், இன்னும் கூடுதல் சுவைக்காகவும் ஸ்விஸ் பேனைப் பயன்படுத்தலாம். முடிவடையும் காட்சியின் கடைசி ஷாட்டில் கேமராவை மிக வேகமாக இடமாகவோ, வலமாகவோ சுற்றிவிட்டுவிடுவார்கள். துவங்கப்போகும் காட்சியின் முதல் ஷாட்டில் முந்தைய காட்சியின் கடைசி ஷாட்டில் இடமிருந்து வலமாகக் கேமரா சுற்றிவிடப்பட்டிருந்தால் வலமிருந்து வேகமாக வந்து ஷாட்டில் நிலைபெற்று படமாகுபொருளைத் தொடர்ந்து படமாக்கும் கேமரா. கேமரா சுற்றிவிடப்படுகிறபொழுதும், வந்து நிலைபெறும்போதும் அது ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஆகவே, பொருட்களெல்லாம் தீற்றலாகத்தான் தெரியும். நம்முடைய சரித்திரப் படங்களில் இந்த உத்தி அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. |
|
|
| << முன் பக்கம் | 1 2 3 4 அடுத்தப் பக்கம் >> |
|
|