தமிழ் ஸ்டுடியோ எனும் இந்த அமைப்பு தமிழ் மாற்று ஊடகங்களுக்காக 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தமிழில் குறும்பட / ஆவணப்படங்களுக்கான அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகள், படங்களை திரையிடல், திரைப்படம் சார்ந்த ரசனையை வளர்த்தல், குறும்பட / ஆவணப்படங்களுக்கான சந்தை உருவாக்குதல், படங்களை ஆன்லைனில் சந்தைப்படுத்துவது, குறுகிய கால பயிற்சியின் மூலம் நல்ல திறமையான கலைஞர்களை உருவாக்குதல் (களப்பணியை அடிப்படையாகக் கொண்டு) போன்றவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.
திரைப்பட தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பை முடித்த பின்னர் ஒரு குறும்படம் (சிறு படம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது எனக்கு குறும்படம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அந்த சொல் பதமே நான் அறிந்ததல்ல) எடுக்கலாம் என்று விழைந்தபோது, நாங்கள் எதிர்கொண்ட ஏமாற்றங்களும், பிரச்சனைகளும் மிக அதிகம். கேமரா, படத்தொகுப்பு, நடிகர்கள் என எங்களை பயமுறுத்திய விடயங்கள் ஏராளம். எப்படி எங்களிடமிருந்து பணம் கறப்பது, என்று ஒரு கூட்டமே சுற்றியலைந்துக் கொண்டிருந்தது. திரைப்படம் சார்ந்து படித்தவனுக்கு இந்த நிலைமை என்றால் கிராமத்தில் இருந்து வரும் திரைப்பட ஆர்வலர்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது. ஆனால் இவர்களே நமது நண்பர்களாக இருந்தால் இதுப் போன்று ஏமாற்றும் வேலையை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தபோது உதித்ததுதான் குறும்பட வட்டம் என்கிற நிகழ்வு. தமிழகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குள் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி, குறும்படங்களை உருவாக்கலாம் என்பதே குறும்பட வட்டத்தின் நோக்கம். மேலும் குறும்படங்கள் தரமற்று, எல்லோரும் ஆசையில் எடுத்துவிட்டு பின்னர் திரைப்பட துறைக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக, குறும்பட திறனாய்வு, அவற்றுக்கான சந்தை என குறும்பட வட்டம் தன்னை செழுமைப்படுத்திக் கொண்டது.
இவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்தவும், கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நண்பர்கள் ஆன்லைனில் தொழில்நுட்பம் படிக்கவும், திரைப்படங்கள் சார்ந்தும், குறும்படங்கள் / ஆவணப்படங்கள் சார்ந்தும் நிறைய கட்டுரைகள் வெளிவரவும், குறும்பட நிகழ்வுகள், போட்டிகளை சக ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தவும், குறும்படங்களுக்கான திறனாய்வு கட்டுரைகள் எழுதவும், குறும்பட சேமிப்பகம் ஏற்படுத்தவும், குறும்படங்களை இணையத்தில் பார்க்கவும், தமிழ் ஸ்டுடியோ. காம் என்கிற இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் இலக்கியத்தின் மீதிருந்த ஈடுபாட்டால் இலக்கியம், குறும்படம் இரண்டையும் இணைக்கும் விதமாக கூடு என்கிற தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய பிரிவு உருவாக்கப்பட்டது. இதன்படி, தமிழின் மிக சிறந்த சிறுகதைகளை குறும்படமாக்கவும், கதைசொல்லி என்கிற ஒலி வடிவத்தின் மூலம் இளைஞர்களின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களை இணையத்தில் படிக்க கொடுக்கவும், தமிழின் எல்லா எழுத்தாளர்கள் பற்றியும் ஒரு ஆவணக்காப்பகம் உருவாக்கவும் தமிழ் ஸ்டுடியோவின் இலக்கியப் பிரிவான கூடு உருவாக்கப்பட்டது.
மேலும், தமிழில் இதுவரை வெளிவந்த, வெளிவந்துக் கொண்டிருக்கும் திரைப்படம் சார்ந்த இதழ்களை இணையத்தில் சேகரிக்கும் பொருட்டு திரைப்பட இதழ்கள் பிரிவும் உருவாக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி தமிழில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நாடக உலகை அதிகம் இணையம் மூலம் கொண்டு செல்ல நாடகப் பிரிவும் செயல்படுகிறது.
களப் போராளிகள் (விவசாயம், கல்வி, திரைப்படம், அரசியல் சார்ந்து இயங்கும் அனைவரையும்) அவர்களது வாழ்க்கையின் மறுபக்கத்தை வெளிப்படுத்த களம் என்கிற பிரிவும் தொடங்கப்பட்டது.
இது மட்டுமின்றி, உலகத் திரைப்படங்களை பார்ப்பதற்கு, குறும்பட / ஆவணப்படங்களை பார்ப்பதற்கு, உலக இலக்கிய நூல்களை அறிமுகம் செய்ய, நூல் வெளியீடுகள், திரைப்பட கருத்தரங்குகள் என தமிழ் ஸ்டுடியோ மாதத்தில் எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது.
இணையதள உருவாக்கம், பராமரிப்பு, தட்டச்சு செய்பவர், அலுவலக நிர்வாகம், திரைப்படம் சார்ந்த பயிற்சி, திரைப்பட / இலக்கிய கூட்டங்கள் என தமிழ் ஸ்டுடியோவை நடத்துவதற்கு ஆகும் எல்லா செலவையும் நானும் நண்பர் குணாவும் மட்டுமே செய்து வந்தோம். சில மாதங்களுக்கு முன்னர் எங்களைப் போன்ற ஒத்த சிந்தனையுள்ள நண்பர் தயாளன் மாதந்தோறும் ஒரு தொகையை தமிழ் ஸ்டுடியோவிற்கு அளித்து வருகிறார். இது தவிர கூகிள் விளம்பரமோ, பிற தனியார் விளம்பரங்களோ, வெளிநாட்டு நண்பர்களின் உதவிகளின் மூலமோ இதுவரை தமிழ் ஸ்டுடியோ ஒரு ரூபாய் பணம் கூட பெற்றது கிடையாது.
தமிழ் ஸ்டுடியோ ஒரு தனித்த அமைப்பு. அறக்கட்டளையோ, என். ஜி ஒ. போன்ற அரசு சாராத தொண்டு நிறுவனமோ அல்ல. திரைப்படம் சார்ந்த பத்திரிகையாகவும், திரைப்படங்களை திரையிடவும், அரசாங்க பதிவு பெற்ற அமைப்பு.
எங்களின் செயல்பாடுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் எங்களுக்கு நன்கொடை அளித்து தமிழ் ஸ்டுடியோ மேலும் வளர உதவி புரியலாம்.
நன்கொடை அளிக்க.
வங்கியின் பெயர்: ICICI வங்கி
வங்கி கணக்கு எண்: 000101564346
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: அருண். மோ (Arun M.)
கிளை: செனோடப் சாலை, சென்னை (Cenotaph Road, Chennai)
நன்றி.
அருண் மோ.
நிறுவனர். |