கதைச் சுருக்கம்
பாடசாலை கற்றலுடன் மட்டுப்படுத்தப்பட்டு, சிறுவயதிற்கே உரிய விளையாட்டு மறுக்கப்படும் ஒரு சிறுவனின் கதையினை தத்ரூபமாக காட்டுகின்றது இந்தக்குறும்படம்.
பாடசாலை நேரம் தவிர ஏனையநேரங்களில் தந்தையால் அவரது மக்கானிக்கல் சாப்பிற்கு அழைத்து வரப்பட்டு அவருக்கு உதவியாக வேலை செய்யவைக்கப்படுகின்றான் அந்தச்சிறுவன்.
அவன் வேலை செய்யும் வேளைகளிலும் அயலில் விளையாடும் சிறுவர்களின் கூச்சலோசை அவன் காதுகளில் விழும் சந்தர்ப்பம் ஒவ்வொன்றிலும் அவன் முகத்தில் அந்த வயதிற்கே உரிய ஏக்கம் ஏற்படுகின்றது.
“குழந்தைகளின் விருப்பங்களுக்கு பெற்றவர்கள் தடை நிற்கக்கூடாது, தன் மகனின் விருப்பத்திற்கு எதிராக தான் நிற்கப்போவதில்லை” என, தன்னிடம் உரையாடும் நபர் ஒருவருக்கு அவனின் தந்தை கூறியதை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்க்கின்றான் அவன்.
வேலைகளை முடித்துவிட்டு அந்திசாயும் நேரம் விளையாட்டு மைதானத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நடந்துவருகின்றான். அவனது காதுகளில் “விளையாடப்போனா கைகால்களை உடைத்துவிவேன்” என்ற தந்தையின் அதட்டலும், அதேவேளை ஒரு தகப்பன் எப்பவுமே தன்னுடைய ஆசைகளையும், கனவுகளையும் தன் மகன்மீது திணிக்கக்கூடாது” என்று மற்றவருக்கு சொன்ன வார்த்தைகளும் கேட்டவண்ணமே இருக்க படம் நிறைவுபெறுவது சிறப்பு. |