இது காறும் நான் எழுதிவந்தவற்றுக்கு அவ்வப்போது வரும் எதிர்வினைகளைப் பார்க்கும் போது தெரிவது என்ன?, இதை நான் ஆரம்பத்திலிருந்தே அனேகமாக ஒரு வருட காலமாக தொடர்ந்து வரும் கருத்துக்களில், தொனிகளில் கவனித்து வருகிறேன் பல அபத்தமான கருத்துக்களை அவை அப்போதைக்கு கிளுகிளுப்பூட்டுவதால் சற்றும் யோசிக்காமல் சந்தோஷமாக உள்வாங்கிக்கொண்டு பின் அந்த கிளுகிளுப்பை உதற மனதில்லாமல் ஏதோ மதம் போல, அந்த அபத்தத்தை ஏதேதோ சால்ஜாப்புக்கள் சொல்லி இறுகப் பற்றிக்கொண்டிருக்கத் தான் தோன்றுகிறது. ”சினிமா என்னத்துக்கு இருக்கு?. நாள் பூராவும் உழைத்து ஓய்ந்து வரும்போது மனதுக்கு சந்தோஷம் தரும் பொழுது போக்கு தானே? என்று. இந்த பாமர, பைத்தியக்காரத்தனத்துக்கு சினிமா தயாரிப்பாளர்களிலிருந்து தொடங்கி சினிமா பெஞ்ச் ரசிகன் வரை எல்லோரும் நியாயம் கற்பிக்கிறார்கள். இந்த அபத்தத்திற்கு கலை என்று ஒரு லேபிளும் ஒட்டி அறிவு ஜீவிகளும், அதிகாரமும் பத்திரிகையாளரும் அதற்கு சப்போட்டு கொடுக்க மிக சௌகரியமான சாக்காகக் காண்கிறான் ரசிகன். இதை பெஞ்ச் ரசிகன் மாத்திரம் சொல்லவில்லை. ரூபாய் 200-ஓ 500-ஓ கொடுத்து காரில் குடும்பத்தோடு வரும் அதிமேதை பணக்காரன் கூடத் தான். இந்தப் பைத்தியகார கூத்தாட்டத்திற்கு கலை என்று வேறு லேபில் கொடுத்தால் வேண்டாம் என்கிறதா என்ன சம்பந்தப்பட்ட யாருக்கும்?.
கலை என்பது சர்க்கஸாகியிருக்கிறது.. மாயாஜால காட்சியாகி யிருக்கிறது. ரிகார்ட் டான்ஸாகியிருக்கிறது. ஒவ்வொருத்தனும் தன்னைக் கலைஞர் என்றும் என்னென்னமோ சிகரம், மேதை, திலகம், ஞானி, என்று ஒரு ஒளி வட்டத்தை கற்பனை செய்து கொள்கிறான்.
இந்தக் கூத்தாட்டத்தையெல்லாம் செய்து கொண்டே, இதன் அபத்தத்தையும் அவ்வப்போது போட்டு உடைக்கும் ஒரே ஜீவன் தனுஷைத்தான் பார்க்க.முடிகிறது. அப்படிச் சொன்னாலும் தனுஷ் குத்தாட்டம் போடுவதையோ, பத்து குண்டன்களை சும்மா காலை உதறி, கையை வீசி திரும்பத் திரும்ப விழுத்தாட்டும் காரியங்களை செய்ய மறுப்பதில்லை. மாமனார் செய்யும் விரலை அசைத்து ரம்பம் அறுக்கும் ஒலிப் பதிவோடு தன் வீராப்பைக் காட்டத் தொடங்கவில்லை (தமிழ் சினிமா டெக்னீக்கில் உலகத்தரத்துக்கு உயர்ந்துள்ளதற்கான சாட்சியம் இந்த விரலைசைப்பும் ஒரு காலை எடுத்து ஒரு ராஜ கம்பீரத்தின் பாவனையுடன் இன்னொரு காலின் மேல் ஒரு வீரப் புன்னகை பூத்து, போடுவதும், அதெல்லாம் ரம்பம் அறுக்கும் ஒலி பின்னணியில் இருக்க வேண்டும். உலகத்தில் எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இந்த மாதிரி டெக்னீக்கைக் காணமுடியாது,. இது தமிழ் சினிமா மூளையின் கண்டுபிடிப்பு. அவர்கள் காப்பிரைட். சிம்புவும் அதேபோல செய்ய ஆரம்பித்தாயிற்று.
 |
இன்னும். ”இதையெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்கிறேன்” என்று சொல்லி உதறும் நிதானம், புத்தி விவேகம் தனுஷிடமிருந்து போய்விட வில்லை. உலக நாயகனிடமோ அல்லது வேறு யாரிடமோ இந்த பேத்தல் காரியங்களை பேத்தல் என்று ஒப்புக்கொள்ளும் விவேகமும் வேளையும் இன்னும் வரவில்லை. சமீபத்தில் தான் பாலுமகேந்திராவின் படம் ஒன்று பார்த்தேன். அது ஒரு கனாக் காலம் என்று நினைக்கிறேன். அதில் தனுஷ் பாலு மகேந்திரா சொன்னதைச் செய்யும் நேர்மையைப் பார்த்தேன். அதை நம் தமிழ் நடிகர்கள் வேறு யாரும் செய்திருக்கமாட்டார்கள். தன் இமேஜ் என்று ஒன்று இருப்பதாகவும், தன் ரசிகர்கள் இதை ஏற்கமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். தனுஷுக்கு அந்தக் கவலையெல்லாம் ஏதும் கிடையாது. “என் முகத்தைப் பாத்து எவளாவது……..” என்று தொலைக் காட்சியில் வெளிப்படையாகப் பேசும் ஒரு தமிழ் சினிமா நடிகனை, “அம்மா நீங்கள்ளாம் பெரிய பெரிய இடததைச் சேந்தவங்க., நான் ஏதோ சாதாரண……”என்று ஐஸ்வர்யாவைப் பார்த்து மேடையிலேயே சொல்லும் கணவனையும் நடிகனையும் முதல் தடவையாக தமிழ் சினிமாவில், தொலைக்காட்சியில் பார்க்கிறோம். நினைத்துப் பார்க்கலாம். இந்த வார்த்தைகளை, தனுஷ் நடிக்கும் ரோல்களை, வேறு எந்ததமிழ் நடிகரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. கார்த்திக் எப்போதும் தரித்திருக்கும் அந்த சிரிப்பு, சிம்பு பேசும், முகத்தை வைத்துக்கொள்ளும் பாவனைகள், தன்னைப் பற்றி வளர்த்துக்கொண்டிருக்கும் பிம்பங்கள் ஜெயம் ரவியின் அங்க சேஷ்டைகள் எதுவும் சகித்துக்கொள்ள் முடிவதில்லை. இவர்களை இந்தத் தலைமுறையினர் என்பதால் சொல்கிறேன். இவர்கள் தனித்து நிற்பவர்கள் இல்லை. எல்லோருக்கும் அவரவரது அலட்டல்கள், ஒளிவட்டம் ஒன்று தலைக்கு மேலும் பின்னும் சுழல்வதான பிரமைகள், சிவாஜி கணேசனிலிருந்து தொடங்கி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது.
சோகம் என்னவென்றால், இவர்கள் எல்லாம் வேறு வித சூழலில், சமுதாயத்தில், சினிமா கலாசாரத்தில், இப்படியான பிரமைகளில மூழ்கிக் கிடந்திருக்க மாட்டார்கள். பாரதி படத்தில். செல்லம்மாளாக நடித்த தேவயானியிடம், glamour girl- ஆகவே தமிழ் சினிமாவில் அது வரை வாழ்ந்துவிட்டவரிடம் இந்த செல்லம்மாள் ஒளிந்து கொண்டிருப்பதை யார் எதிர்பார்த்திருக்க முடியும்?. பாரதி படம் முடிந்ததும் அவர் மறுபடியும் ஆடிப்பாடி வசனம் பேசப் போயாயிற்று. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்களோ தமிழ் சினிமாவில். கமலஹாசனைச் சொல்லலாம். ஆனால் கமலஹாஸனுக்கு என்ன சொன்னாலும் பொழுது போக்கு தானே சினிமா என்ற வாய்ப்பாட்டையே அலுக்காமல் சலிக்காமல் சொல்லும் தமிழ் சினிமா ரசிகனைப் போல, என்னதான் உலகப்படங்களையெல்லாம் பார்த்து பார்த்து வியப்பதாகச் சொன்னாலும் ஆணோ பெண்ணோ கிழவியோ, குள்ளனோ, கோவணதாரியோ, தசாவதாரம், சதாவதாரம் என்ற அவதார மேக்கப் பிரமைகளில் ஆழ்ந்திருக்கும், மேடையில் கலைஞர், முதல்வர், கருணாநிதி நடுநாயகமாக அமர்ந்து பாராட்டுக்களை முகமலர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில், ”கலைஞரிடம் தான் நான் தமிழ் கற்றேன், பராசக்தி படத்தைப் பார்க்கும் போது கலைஞருக்கு 1952 லேயே இருந்த சினிமா உத்திகள் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது! என்று இப்போதும் நான் மலைத்து பிரமித்துப் போகிறேன்” என்று தன் உலகளாவிய சினிமா ரசனையை வெளிக்காட்டும் போதும் தமிழனுக்கு எது தெரியுமோ தெரியாதோ, அதிகார பீடங்களுக்கு பாலாபிஷேகமும் செய்து சாஷ்டாங்க நமஸ்காரமும் உலகறியச் செய்து தன் வாழ்க்கையை எவ்வித உத்பாதங்களும் நேராது இன்ஷ்யூர் செய்வதற்குரிய அத்தனை உபாயங்களும் தெரிந்தவன் என்பது சாட்சியம் பெற்றது
வெகு அபூர்வமாக ஒரு தமிழ் விளம்பரப் படம் அதிகம் அசட்டு பாவனைகள் நமக்கேயான வசனங்கள், நடிப்புகள் இல்லாத அமைதியும் அழகுமான விளம்பரம் சூர்யா பக்கத்திலிருக்கும் ஜோதிகாவுக்கு சூர்யனைக் காட்டி, நீ கேட்டால் அந்த சூர்யனை
எப்போதும் அங்கேயே இருக்கச் செய்துடட்டுமா? என்று சொல்ல, அப்போது ஜோதிகா சில வினாடிகளுக்கு சூர்யாவைப் பார்க்கும் கூர்ந்த பார்வையும் (இப்படியும் உளறுவியா நீ, பெண்டாட்டிகிட்ட பெருமை அடிச்சுக்க) பின் சின்ன, முகச்சுளிப்பும்) எத்தனை சுலபமாகச் சொல்லிவிடுகிறது. இந்த மாதிரி திறன் ஜோதிகாவிடமிருப்பதை எந்தத் தமிழ் இயக்குனர், தன் படம் மூலம் வெளிக்கொணர முடிந்திருக்கிறது? வித்தியாசமாகப் படம் எடுப்பதற்கு முயன்றவர் பிரகாஷ் ராஜ் தன் மொழி படத்தில் ஜோதிகாவை ஊமைப் பெண்ணாக்கி என்னேன்ன கோணங்கித்தன மெல்லாம் செய்ய வைத்திருக்கிறார்? எந்த ஊமைப் பெண் இவ்வளவு கோணங்கித் தனம் செய்யப் பார்த்திருக்கிறோம்? அதில்லையென்றால் டான்ஸ், க்ளாமர் கேர்லுக்கு தமிழ்ப் படங்களுக்கென்று தயாரித்து வைத்திருக்கும் பாவனைகள், ஆட்டங்கள், வசனங்கள். பாட்டுக்கள். தமிழ் ரசிகர்களிடம் என்ன, எந்த விதமான ரசனை வளர்க்கப்பட்டிருக்கிறது அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், வசூலை அள்ளிக்கொண்டு வர என்னென்னெ செய்யவேண்டும் என்று கையிலிருக்கும் ரெடிமேட் கையடக்கப் புத்தகம் பார்த்துப் பார்த்து செய்யும் போது தேவயானிக்கும் ஜோதிகாவுக்கும் எங்கேயாவது ஒன்றிரண்டு காட்சிகள் அபூர்வமாக ஒரு படத்தில் கிடைத்தால் பெரிது. அதை நம் தமிழ் ரசிகர்களும் மறந்து விடுவார்கள்.
அந்த வெற்றி ஃபார்முலாவும் வெற்றி தருவதில்லை. ரசிகர்கள் என்ன வேண்டுகிறார்கள், என்று தெரிந்து வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் பாபா என்ன ஆயிற்று? குசேலன் என்ன ஆயிற்று< உலக நாயகனின் தசாவதாரம் என்ன ஆயிற்று? ஆளவந்தான் என்ன ஆயிற்று? காப்பியே அடித்தாலும், உன்னைப் போல் ஒருவன் தன் கையடக்கப் புத்தகத்தின் பட்டியலில் இருக்கும் வெற்றிப்பட மசாலாக்களை எல்லாம் சேர்க்காமல் எடுத்த உன்னைப் போல் ஒருவனால் என்ன பெரிய படுபாதாள வீழ்ச்சி ஏற்பட்டது? என்ன செலவாயிற்று? என்ன வசூல்? என்ன நஷ்டம்?
ஏன் கோடி கோடியா அள்ளனும் என்ற பேராசை எல்லாரையும் பிடித்துப் பேயாக ஆட்டுகிறது? தன் வெற்றிப்பட பார்முலாக்களை தன் ரசிகர்கள் ஆசைகளைப் பற்றி தவறிப் போய் A Wednesday யை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காப்பியடித்ததால் என்ன மோசம் போயிற்று? காப்பியடித்ததிலோ புதுசா ஒன்றும் நடந்து விடவில்லை. வழக்கமாகச் செய்து வந்தது தானே. கொஞ்சம் பொதுப்புத்தியை உபயோகித்து அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்ததால் தன் ப்ராண்டு கோணங்கித்தனம் எதுவும் செய்யாமல் ஒழுங்காகக் காப்பியாவது அடிக்க முடிந்திருக்கிறதே.
பாலு மகேந்திராவும் பார்த்தார். தமிழ் நாட்டில் இதெல்லாம் சரிப்படாது. அவங்க கேக்கற மசாலாவும் கொஞ்சம் அங்கே இங்கே தூவலாம் என்று தூவப் போய், அவர் ஒன்றும் தன் படங்களை வெற்றிப் படங்களாக்கி விட முடியவில்லை. படத்தின் பெயர் நினைவில் இல்லை. ஏதோ ஒரு படத்தில் சரிதாவை கன்றாவியாக ஆடவைத்து, இன்னொரு க்ளாமர் நடிகையை ஜலக்ரீடை செய்து பாடவும் வைத்து, ஒன்றும் பயனில்லாது போய்விட்டது. மலையாளத்தில் படம் எடுக்கும்போது இதையெல்லாம் அவர் செய்வதில்லை. டெக்னீக்கில் என்னமோ உலகத்தரத்துக்கு தமிழ் நாட்டில் சினிமா எடுக்கிறார்களாமே, அந்த தமிழ் நாட்டில் தமிழ் ரசிகர்களுக்கு அவர் படம் எடுக்கும் போது தான் அவர் இதையெல்லாம் செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார். உலகத் தர டெக்னீக்கை வேண்டும் தமிழ் ரசிகன் இந்த அரை குறை சமாசாரங்களால் எல்லாம் ஏமாறுவதில்லை. அவன் மிகப் பிடிவாதமான ரசிகன், கொள்கை தீவிரம் கொண்டவன். சூப்பர் ஸ்டார் ஆனாலும் அவரை மச்சுப் பிச்சுக்குப் போய் ஐஸ்வர்யாவுடன் நாப்பது எக்ஸ்ட்ராவோடு டான்ஸ் பண்ணி கிதாரும் வாசித்தால் தான் அவனைத் திருப்திப் படுத்த முடியும். சங்கரும் புதுசு புதுசா ஏதும் பிரம்மாண்டமான கோமாளித் தனங்களை யோசித்துத் தான் ஆகணும். இல்லையெனில் எல்லாத்தையுமே பாபாவாக்கிவிடுவான்.
அவ்வப்போது என்ன காரணத்தாலோ கொஞ்சம் யதார்த்தமும் தமிழ் வாழ்க்கையையும் மற்ற மசாலாக்கள் போல சேர்த்துக் கொள்ளலாமே என்று சிலர் யோசிக்கிறார்கள். அதில் தான் இந்த மதுரைப் பேச்சு, விருது நகர் தெருக்கள், தன் காக்கி அண்டர் வேர் தெரிய கைலியை மடித்துக் கட்டுதல் எல்லாம் வந்து சேரும்.
(இதெல்லாம் யதார்த்தமுங்க, தமிழ் ரசிகன் படிப்படியா மாறீட்டு வராங்க, அதுக்குத் தக்காப்போல நாம்பளும் மாறாட்டி எப்படீங்க, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க)
இதில் அதிக அளவு முன்னேறியது வெற்றி மாறன் ஆடு களத்தில். அதுக்கு தனுஷ் தான் சரி. உலக நாயகனையா, இல்லை சூப்பர் ஸ்டாரையா கூப்பிட முடியும்? சூப்பர் ஸ்டார் ”இந்தத் தடவை மெக்ஸிகோ போலாங்க அங்கேயும் தமிழ் நாட்டுக்கரங்க மாதிரியே வான்கோழி, இல்லை வல்லூறு சண்டை இருக்கான்னு சங்கர் ஒரு சர்வே பன்ணீட்டு வந்துருவாரு இல்லாட்டி அந்த ஊர எருமைச் சண்டையா வச்சிக்கிடலாங்களா?,” என்று சொல்லலாம். உலக நாயகனுக்கும் இப்படி ஏதாவது மேக்கப் ஐடியா வரலாம். நம்ம தமிழ் சினிமா மரபை எப்படி மாத்தறது?. ரிக்ஷாக்காரன் தான்னாலும் பட்டு வேஷ்டி, தலைப்பாகை, சில்க் ஜிப்பா போட்டு ரிக்ஷா மேலே நின்னுக்கிட்டே பாடினாத்தான் எம்ஜிஆர் ரசிகர்கள் ஒத்துக்குவாங்க. அதே போல ரிக்ஷாக்காரன்னாலும் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதி அதை சிவாஜி சார் பேசணும் என்று சொல்லக்கூடும்.
இதெல்லாம் ஒரு படத்தோடு சரி. இனி ஆடுகளம் மாதிரியே எடுத்திட்டிருப்பாங்களா, வளர்ற கலைஞர்கள் என்று வெற்றி மாறனும் வெற்றிப்படம் ஃபார்முலாவுக்கு போயாற்று என்று தோன்றுகிறது.
இப்படித்தான் சாண் ஏறி முழம் சறுக்கும் விவகாரமாகத் தான் தமிழ் சினிமா வரலாறு இருக்கிறது. முந்தியெல்லாம் சறுக்கு மரத்துக்கு எண்ணை தடவினார்கள் என்றால் நம் ஹீரோக்கள் சொல்லக் கூடும், “நல்ல ஊத்துக்குளி வெண்ணையாத் தடவனுங்க. காலம் மாறுது நாமும் வளரணும்க” என்ற ரகத்தில் தான் நம் சினிமா சிந்தனைகள் இருக்கின்றன”
இப்போ சங்கருக்கு போட்டியா வெற்றிப்பட இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ் ஏழாம் அறிவு என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அவருக்கு எப்படி எங்கேயும் எப்போதும் படம் கொண்டிருந்தது போன்ற கதையை கற்பித்துக்கொள்ள முடிந்தது? பின் அதை படமாக்கவும் மனதில் ஒரு எண்ணத்தைத் தைரியமாகக் கொள்ள முடிந்தது? என்பது புதிராக இருக்கிறது. புதுமை புதுமை என்று கோஷமிடுவதில் தமிழனுக்கு ஒரு அலாதி பரவசம் உண்டு. புதுமை இருக்கோ இல்லையோ அதுபற்றிக் கவலை இல்லை. ஸ்ரீதர் தமிழ் சினிமாவுக்கு தன் ஒரு கையை மடக்கி தாடையைத் தாங்கி உட்கார்ந்து ஒரு சிந்தனையாளராகப் போஸ் கொடுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து “இந்தப் படத்திலே என்ன புதுமை புகுத்தியிருக்கீங்க? என்று ஒரு வழக்கமான கேள்வி அவரிடம் கேட்கப்படும். அவரும் புளகாங்கிதமடைந்து எதாவது சொல்லி வைப்பார். அதன் பின் இந்தப் புதுமை என்ற கேள்வி எல்லாரிடமும் கேட்கப்பட்டது. காப்பி அடிப்பவர்களெல்லாம் ஏதாவது புதுமை செய்ய ஆங்கிலப் படம் பார்த்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தார்கள். அந்த மாதிரி முருக தாஸும் ஏழாம் அறிவு எடுத்ததாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் புதுமை என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம் சந்தோஷம் தான். நான் இன்னும் பார்க்கவில்லை. சண்டை, மாயா ஜாலங்கள், தமிழன் பெருமை என்று இந்த மாதிரி ஆகிவந்த வெற்றிச் சமாசாரங்கள் அதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
போகட்டும். ஆனால் முரண் பற்றி சொல்வதாகச் சொல்லி பாதை மாறிக்கொண்டே இருக்கிறேன். பார்த்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சேரன், பிரசன்னா இருவர் தான் எனக்கு நினைவில் இருக்கிறார்கள். மற்ற யாரும் எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் இருவரும் நினைவில் இருக்க வேண்டியவர்கள் தான்.
படத்தின் ஆரம்பத்திலேயே பிரசன்னா குடி போதையில் எதிரிலிருப்பவர்கள் முன் திடீரெனெ தோன்றி வம்புக்கு இழுத்து சவால் விட்டு, தற்கொலை செய்துகொள்வது போல பயமுறுத்தியதும், பின் காரில் வந்து கொண்டிருந்த சேரன் காரோடு ஒரு பணக்கார போக்கிரிக் கும்பல் கலாட்டா செய்துகொண்டே மோதிச் செல்ல பழுதடைந்த காரை ரோட்டிலேயே விட்டு விட்டு ஏதும் கார் கிடைக்குமா என்று ரோட்டில் நின்று கொண்டிருக்க பிரசன்னா காரை நிறுத்தி சேரனை தன் காரில் ஏற்றிக்கொண்டு, சேரனோடு பேச்சுக் கொடுக்க நீண்ட தூர பிரயாணத்தில், அவரைச் சினேகிதம் செய்து கொண்டு தன் தந்தையைக் கொலை செய்தால், தான் சேரனின் மனைவியை, சேரனிடம் அன்பு செலுத்தாத, சேரனை அவமானப் படுத்தும் மனைவியைக் கொல்ல உதவுவதாகச் சொல்கிறான். சேரனைச் சினேகிதம் செய்துகொள்ள பிரசன்னா கையாண்ட உபாயம் காரை அந்தப் போக்கிரிக் கும்பல் இருக்குமிடம் சென்று அவர்களை வதைத்ததும், பின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்காமல் எப்படி இருக்கமுடியும் என்று சொல்லி ரோட் நடுவில் நின்று கொண்டு எதிர் எதிர் திசையில் விரைந்து வரும் இரண்டு கார்களுக்கு இடையில் நின்று உயிரைப் பணையம் வைத்துப் பிழைத்து வருவதை அதிலும் ஒரு சிறிய மனச் சலனம் உடல் பதற்றம் கூட இல்லாது வருவதைப் பார்த்து சேரனுக்குத் தான் பதற்றமும் பயமும்.
 |
இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படிப் பட்ட உயிர் போகும் சவால்களா? படத்தின் கடைசி வரை பிரசன்னாவுக்கும் சேரனுக்கும் இடையேயான பேரங்களும் பேச்சுக்களும் சவால்களும் சேரனின் தயக்கங்களும் பிரசன்னாவிடம் காட்டும் வெறுப்பும் திரும்பத் திரும்ப பிரசன்னா சேரனைத் தூண்டுவதும்…… எல்லாம் எனக்கு தமிழ் சினிமாவுக்கு புதியவை. அந்த அமைதியான, சாதாரணமாக நாம் இருவருக்குள் பேசிக்கொள்ளும் குரலிலேயே அந்த படம் முழுவதும் விரவியிருக்கும் பரிமாறல் எனக்கு மிக ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்த ஒன்று. எனக்கு இந்த புரட்சிகர மாற்றம், வசனத்தில், பேசும் தொனியில், பெறும்பாலும் காரில் விரைந்து செல்லும்போதே நிகழ்வதான படப்பிடிப்பும் எனக்குப் பிடித்தவை. இது தொடர வேண்டும். தமிழ் சினிமாவில் கத்துவார்கள். வீர வசனம் பேசுவார்கள். காதல் வசனம் என்று பிதற்றுவார்கள். ஆட்டம், பாட்டம் எல்லாம் இருக்கும். அதை விட்டு சாதாரணமாக நாம் வாழ்க்கையில் பேசும் குரலில், பேசும் மொழியில் இருவர் இடையில் பேச்சு அமைந்திருப்பது, அது படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பதும் புதிய பாதையில் நிகழும் புதிய பயணம்.
ஆனால் இந்த மாதிரியான ரோட்டில் திடீர் சினேகிதமும், அந்த சினேகிதனிடம் நான் உனக்கு உதவுகிறேன், நீ என் அப்பாவைக் கொலை செய்யவேண்டும் நான் உனக்கு வேண்டாத உன் மனைவியைக் கொல்கிறேன் என்று பேரம் பேசுவதும், இதே படம் முழுவதும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதும், வாழ்க்கையில் காணாத குரூர கற்பனை. இதற்கும் தமிழ் வாழ்க்கைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது ஒரு குரூரமான கற்பனை. என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, என் மருமகள் சொன்னாள், இது ஹிட்ச்காக்கின் Strangers in a Train என்னும் படத்தின் காப்பி என்றாள். பொத்தென என் சந்தோஷம் தமிழ் சினிமா கனவுகளெல்லாம் உடைந்து சிதறின. இருப்பினும் மீசை முறுக்காத, கோரமாக தலையை விரித்துப் போட்டுக்கொள்ளாத, பயங்கரமாகச் சிரிக்காத, பயங்கரமாக விழிகளைப் பிதுக்காத பயமுறுத்தும் கொடிய வசனம் பேசாத சாதாரணமாக நம்மைப் போல் தோற்றமும் பேச்சும் கொண்ட ஒரு வில்லத்தனத்தை ஏதோ வீடு வாங்குவது போன்று ஒரு கொலைத்திட்டத்தைப் பேசும் வில்லனை, காப்பி அடித்தாவது தமிழ் சினிமாவில் உலவ விட்டிருக்கிறார்களே, அதுவரைக்கும் சந்தோஷப்படலாம். கொலை, வில்லன் என்றால் பி. எஸ் வீரப்பாதான் மாடல் என்று நினைக்காத தமிழ் சினிமா எட்டிப் பார்த்து விட்டதே.
தொடரும்.... |
அப்பட்டமான உண்மை.. தனுஷ்தான் இப்போது இங்கே எனக்கு தெரிந்தும் நல்ல நடிகர். அவர் மட்டுமே கதைக்கு தேவையானால் அம்மணமாக கூட ஓடக் கூடியவர். உங்கள் கருத்தும் அபாரம். முரண் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதில் எனக்கு முரண் உண்டு.
அனுப்பியவர் சீனிவாசன் on Friday, 20.01.12 @ 22:19pm
எங்கேயும் எப்போதும் படம் எதில் குறைந்துவிட்டது. காதல் என்கிற ஒன்றை சொன்னால் உங்களுக்குப் பிடிக்காதா? அருமையான படம் சார் அது. நீங்கள் சொல்லி இருக்கும் முரண் கூட சேரன் இன்னொரு பெண்ணை காதலிக்கதனே செய்கிறார்.
அனுப்பியவர் பிரகாஷ் on Friday, 20.01.12 @ 22:31pm
முரண் படம் மாதிரிதான், எங்கேயும் எப்போதும். அதுவும் அருமையான படம். தனுஷ் அவர்களை இப்படி புகழ்ந்துல்லீர்களே.. எனக்கே ஆச்சாரமாக இருக்கிறது.
அனுப்பியவர் குமரன் on Friday, 20.01.12 @ 23:07pm
மிக சிறப்பான கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் பற்றி உங்கள் முற்றிலும் சரியே. சமீபத்தில் அவர் நடித்த மயக்கன் என்ன படத்தை பாருங்கள் அருமையான படம். நன்றி ஐயா.
அனுப்பியவர் உலகநாதன் on Friday, 20.01.12 @ 23:32pm
சில விசயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. தனியாக பின்னுட்டமாக. கடந்த இரண்டு முறைகளாக, நான் மிகவும் தாமதம் செய்து வருகிறேன். இடைவெளி மிக நீண்டுவிட்டது.
ஒன்று: கடந்த மாதம் சிக்கமகளூருக்கு போய்க்கொண்டிருந்த போது நாங்கள் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாயிறு. முன் சீட்டில் இருந்த எனக்கு ஏற்பட்ட மோதலில் வலது கை காயம் ஏதும் ஏற்படவில்லை எனினும் கையைத் தூக்க முடியாது போய்விட்டது. எலும்பு முறிவோ வெளிக்காயமோ இல்லையெனினும் தோளிலிருந்து முழங்கை முட்டு வரை உள்ள தசை நார்கள் உட்காயம் ப்ட்டு நசுங்கி.அல்லது கிழிந்திருக்கலாம். மெதுவாகத்தான் குணமாகிவருகிறது. நான்கு நாட்களாகத்தான் நீண்ட நேரம் கணிணியில் வேலை செய்ய முடிகிறது. இன்னமும் கையைமுழுக்க உயரத் தூக்க முடியவில்லை.மெதுவாகத் தான் குணமாகும் போல. மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பார்ட் டாமேஜ் ஆவது வழ்க்கமாகி விட்டது.
(இந்த ஆள் மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது விபத்தத் தேடிட்டு போறான்யா, வெளீலே போனாலே உருப்படியாத் திரும்ப மாட்டான் போலே என்று நீங்கள் நினைத்தால் அதில் அதிகம் தவறு இல்லை. இதோ ஜனவரி முடியப் போகுது. பிப்ரவரி மாத ரீப்போர்ட் ஏதாச்சும் வந்திருக்குங்களா என்று நீங்கள் யாரும் அருணைக் கேட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.)
இது எல்லாருக்கும் பொதுவாக.
இனி. தனியாக க துரைப் பாண்டியன் அவர்களுக்கு.
நீங்கள் 18.12. அன்று எழுதியதற்கு இன்று வரை என்னிடமிருந்து பதில் இல்லை. இந்த ஆளுக்கு தலைக்கிறுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் போல, என்று நீங்கள் முடிவு கட்டியிருந்தால் அதில் உங்கள் பேரிலேதும் தவறு இல்லை.
எந்தக் கட்டுரையும் பிரசுரமானதற்குப் பிறகு மூன்று நான்கு நாட்கள் தான் பின்னூட்டங்கள் என்ன என்று பார்ப்பேன். அதற்குள் இரண்டு கொத்து பின்னூட்டங்கள் வந்திருக்கும். அதற்குப் பின் அதுவே கதி என்று தினம் தினம் மாதக்கணக்கில் பார்க்கும் வழக்கம் எனக்கில்லை. அடுத்த ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அடுத்த கட்டுரை எழுதப்பட்டு விடும்.
கட்டுரை 29 –க்கு கடைசியாக வந்த பின்னூட்டம் 6.12. அன்று. உங்களது 18.12. அன்று வந்திருக்கிறது. 7.12. க்குப்பிறகு நான் அந்தப்பக்கம் போகவில்லை. அது போல கட்டுரை (30)க்கு வந்த கடைசி பின்னூட்டம் 29.12. அன்று. என் பதில் ஏதும் (29)—கு கிடைகாதது கண்டு நீங்கள் பழசை நினைவுறுத்தி நீங்கள் எழுதியது 11.1.2011 அன்று. அதுவும் என் கவனத்திலிருந்து தப்பியது. ஒன்று 12 நாட்களுக்குப் பிறகு. மற்றது 13 நாட்களுக்குப் பிறகு.
இப்போது (31)வது கட்டுரை எழுதும்போது தான் எழுதி ரொம்ப நாட்கள் ஆயிற்றே என்னதான் கடைசியாக எழுதியிருக்கிறேன் என்று பார்க்கப் போனபோது தான் உங்களது நீண்ட கடிதமும் பின் அதற்கான நினைவுறுத்தலும் கண்களில் பட்டது.
இவ்வளவு இடைவெளிக்குப் பின் நான் பின் வரும் வாரங்களில் மாதங்கலில் என்ன வந்திருக்கிறது என்று பார்ப்பதில்லை. முதல் நான்கு அல்லது அதிகம் ஐந்து நாட்களுக்குப் பிறகு பழசை நான் எட்டிப் பார்ப்ப தில்லை.
உங்கள் கேள்விகளுக்கு பதில் நீங்களே தொடர்ந்து படங்களைப் பார்த்து தெளிவதன் மூலம் தான் பார்வை மாற்றம் கருத்து மாற்றம் ஏறுபடும் யாருக்கும் தான். நான் சொல்லி நீங்கள் இளைய தளபதியிலிருந்து செழியன் வரைக்கும் வந்த பாதையை நீங்க்ளே தான் தேர்ந்துகொண்டீர்கள். என் எழுத்து எதுவும் உங்களைக் கைபிடித்து அழைத்து வரவில்லை. இப்படியே தொடருங்கள்.
அடுத்து எந்த கலையும் இலக்கியமும் உபதேசம் செய்து மனிதனை, சமூகத்தைத் திருத்துவதில்லை. அது மிக மோசமான பிரசாரம். கம்யூனிஸ்டுகளும் திராவிட கட்சித் தலைவர்களும் செய்யும் காரியம்.
கலையும் இலக்கியமும் ஒவ்வொரு மனிதனையும் தானாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. பிரசாரமும் உபதேசமும் செய்கிறவர்களுக்கே அந்த உபதேசங்கள் பயன்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கையும் சிந்தையும் அந்த உபதேசங்களுக்கு நேர்மாறாக இருப்பதை நீங்களே கண்டிருப்பீர்கள்.
அனுப்பியவர் வெங்கட் சாமிநாதன் on Saturday, 21.01.12 @ 04:42am
சில விசயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. தனியாக பின்னுட்டமாக. கடந்த இருண்டு முறைகளாக, நான் மிகவும் தாமதம் செய்து வருகிறேன். இம்முறை இடைவெளி மிக நீண்டுவிட்டது.
ஒன்று: கடந்த மாதம் சிக்கமகளூருக்கு போய்க்கொண்டிருந்த போது நாங்கள் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாயிறு. முன் சீட்டில் இருந்த எனக்கு ஏற்பட்ட மோதலில் வலது கை காயம் ஏதும் ஏற்படவில்லை எனினும் கையைத் தூக்க முடியாது போய்விட்டது. எலும்பு முறிவோ வெளிக்காயமோ இல்லையெனினும் தோளிலிருந்து முழங்கை முட்டு வரை உள்ள தசை நார்கள் உட்காயம் பட்டு நசுங்கி. அல்லது கிழிந்திருக்கலாம். மெதுவாகத்தான் குணமாகி வருகிறது. நான்கு நாட்களாகத்தான் நீண்ட நேரம் கணிணியில் வேலை செய்ய முடிகிறது.
(இந்த ஆள் மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது விபத்தைத் தேடிட்டு போறான்யா, வெளீலே போனாலே உருப்படியாத் திரும்ப மாட்டான் போலே என்று நீங்கள் நினைத்தால் அதில் அதிகம் தவறு இல்லை இதோ ஜனவரி முடியப் போகுது. இந்த மாசத்துக்கு ஏதாச்சும் ரெபோர்ட் வந்திருக்கா என்று அருணை நீங்க்ள் கேட்டால் உங்களை நான் குற்றம் சொல்ல முடியாது))
இது எல்லாருக்கும் பொதுவாக
.இனி தனியாக க துரைப் பாண்டியன் அவர்களுக்கு.
நீங்கள் 18.12. அன்று எழுதியதற்கு இன்று வரை என்னிடமிருந்து பதில் இல்லை. இந்த ஆளுக்கு தலைக்கிறுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் போல, என்று நீங்கள் நினைத்திருந்தால் அதில் உங்கள் பேரிலேதும் தவறு இல்லை.
எந்தக் கட்டுரையும் பிரசுரமானதற்குப் பிறகு மூன்று நான்கு நாட்கள் தான் பின்னூட்டங்கள் என்ன என்று பார்ப்பேன். அதற்குள் இரண்டு கொத்து பின்னூட்டங்கள் வந்திருக்கும். அதற்குப் பின் அதுவே கதி என்று தினம் தினம் மாதக்கணக்கில் பார்க்கும் வழக்கம் எனக்கில்லை. அடுத்த ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அடுத்த கட்டுரை எழுதப்பட்டு விடும்.
கட்டுரை 29 –க்கு கடைசியாக வந்த பின்னூட்டம் 6.12. அன்று. உங்களது 18.12. அன்று தான் வந்தது. 12 நாட்களுக்குப் பிறகு.. 7.12. க்குப்பிறகு நான் அந்தப் பக்கம் போகவில்லை. அது போல கட்டுரை (30)க்கு வந்த கடைசி பின்னூட்டம் 29.12. அன்று. என் பதில் ஏதும் (29)—கு கிடைக்காதது கண்டு நீங்கள் பழசை நினைவுறுத்தி நீங்கள் எழுதியது 11.1.2011 அன்று. அதுவும் என் கவனத்திலிருந்து தப்பியது. காரணம் அது வந்தது 13 நாட்களுக்குப் பிறகு.
இப்போது (31)வது கட்டுரை எழுதும்போது தான் எழுதி ரொம்ப நாட்கள் ஆயிற்றே என்னதான் கடைசியாக எழுதியிருக்கிறேன் என்று பார்க்கப் போனபோது தான் உங்களது நீண்ட கடிதமும் பின் அதற்கான நினைவுறுத்தலும் கண்களில் பட்டது.
இவ்வளவு இடைவெளிக்குப் பின் நான் பின் வரும் வாரங்களில் மாதங்களில் என்ன வந்திருக்கிறது என்று பார்ப்பதில்லை.
முதல் நான்கு அல்லது அதிகம் ஐந்து நாட்களுக்குப் பிறகு பழசை நான் எட்டிப் பார்ப்பதில்லை.
உங்கள் கேளவிகளுக்கு பதில் நீங்களே தொடர்ந்து படங்களைப் பார்த்து தெளிவதன் மூலம் தான் பார்வை மாற்றம் கருத்து மாற்றம் ஏற்படும். யாருக்கும். நான் சொல்லி அது நிகழ்வதில்லை. நீங்கள் இளைய தளபதியிலிருந்து ஒதுங்கி செழியன் வரைக்கும் வந்த பாதையை நீங்களே தான் தேர்ந்துகொண்டீர்கள். என் எழுத்து எதுவும் உங்களைக் கைபிடித்து அழைத்து வரவில்லை. இப்படியே தொடருங்கள்.
அடுத்து எந்த கலையும் இலக்கியமும் உபதேசம் செய்து மனிதனை சமூகத்தைத் திருத்துவதில்லை. அது மிக மோசமான பிரசாரம். கம்யூனிஸ்டுகளும் திராவிட கட்சித் தலைவர்களும் செய்யும் காரியம்.
கலையும் இலக்கியமும் ஒவ்வொரு மனிதனையும் தானாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. பிரசாரமும் உபதேசமும் செய்கிறவர்களுக்கே அந்த உபதேசங்கள் பயன்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கையும் சிந்தையும் அந்த உபதேசங்களுக்கு நேர்மாறாக இருப்பதை நீங்களே க்ண்டிருப்பீர்கள். .
அனுப்பியவர் வெங்கட் சாமிநாதன் on Saturday, 21.01.12 @ 04:55am
மிக திறமையான ஒரு விமர்சகர் ஐயா நீங்கள். உங்கள் கட்டுரைகளை நிகழ்காலத்தில் படிக்க கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள். இன்னும் நீங்கள் நிறையப் படங்களுக்கு இதுப் போல் எழுத வேண்டும். நன்றி.
அனுப்பியவர் ஜானகி ராமன் on Saturday, 21.01.12 @ 07:07am
ஐயா,
கீழ் உள்ள கருத்தினை நான் சென்ற 29 ஆம் கட்டுரையில் பதிவு செய்திருந்தேன். அதற்காக உங்கள் பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கும்
க.துரை பாண்டியன்.
ஐயா,
கீழ் உள்ள கருத்தினை நான் சென்ற 29 ஆம் கட்டுரையில் பதிவு செய்திருந்தேன். அதற்காக உங்கள் பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கும்
க.துரை பாண்டியன்.
ஐயா,
தங்கள் 29 கட்டுரைகளையும் இன்று நான் படித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழ் படங்களுக்கான விழிப்புணர்வை உங்கள் கட்டுரை எடுதுறைப்பதால்.
அடிபடையில் அதாவது என் பள்ளி பருவத்தில் நான் இளைய தளபதியின் ரசிகன்.பின் நண்பர்களின் அறிவுரையால் பல்வேறு நல்ல படங்களை பார்த்து கமலின் ரசிகனாக மனம் மாற்றம் பெற்றது என் கல்லூரி காலங்களில்.
நான் இப்போது 24 வயது யுவன் இணையதளத்தின் மூலமாகவும் செழியன் அவர்கள் ஆனந்த விகடனில் உலக சினிமாவை பற்றி எழுதியதின் மூலமாகவும் உலக சினிமாக்களை பார்த்து வருகிறேன்.
நான் எனது ரசனை மாற்றங்களை இங்கே கூறுவதின் நோக்கம் என் மனம் விசாலமானது அது உங்கள் கருத்துகளையும் ஏற்றுகொள்கிறது.ஆனால் சிறிய நெருடல்களுடன்.இது என் தாழ்மையான கருத்து.நீங்கள் அதை தெளிவு செய்யும் பட்ச்சத்தில் பெறு மகிழ்ச்சி அடைவேன்.
என் தாழ்மையான கருத்து:
என்னை பொருத்தவரையில் படம் அல்லது எந்த கலையாக இருப்பின் அது ஒரு மனிதனில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் போது அது நல்ல படைப்பே.அந்த வகையில் என் பள்ளி பருவத்தில் நான் ஒரு பொறாமைக்காரன், பழிக்கு பழி வாங்குபவன், சுயநலவாதி. ஆனால் நான் பின் வரும் படங்களை பார்த்த பின்பு நான் நேர் எதிராய் மாறியிருந்தேன், அவை,
1. நாயகன்: என்னுள் பொதுநலவாதி படிப்பினை ஏற்ப்படுத்தியது.
2. தேவர் மகன்: சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்னும் பாடம். {ரேவதியினை கமல் மணம் முடிக்கும் நிர்பந்தம்.}
3. விருமாண்டி: பகைவரையும் மன்னிக்க உதவும் எண்ணம் { கமல் பேசும் வசனம் "மன்னிக்கிறவன் மனிதன், மன்னிப்பு கேட்க்கிறவன் பெரிய மனுஷன்"}
4. அன்பே சிவம்: அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் பண்பு = இன்று என் வாழ்வின் கொள்கையே இந்த அன்பே சிவம் தான்.
5. பாலச்சந்தரின் பல படங்கள் எனக்கு பெண்கள் மீதான மரியாதை ஏற்ப்படுத்தியது.
6. மகேந்திரனின் " 6 லிருந்து 60 வரை " : என் தந்தையின் வாழ்க்கயை கண்முன்னே நிறுத்திய படம்.
{கற்ற பாடம் :சொந்தங்கள் தீமை செய்தாலும் நன்மையை செய்தல்}
7. புதுபேட்டை: ஆடியவன் அடங்கித்தான் ஆக வேண்டும் என்ற பாடம்.
8. வறுமையின் நிறம் சிவப்பு: நான் இன்று சேகுவேராவை தேடி பிடித்து படிப்பதும், என் பொதுவுடைமை எண்ணம் வளர்வதற்க்கு காரணமாய் இருந்தது.
9.உன்னால் முடியும் தம்பி: நான் என்பது என் சமுதாயத்தையும் குறிக்கும், எனவே உங்களுடன் உங்கள் சமூதாயத்திற்காகவும் ஏதேனும் செய்ய வேண்டும்.
10. கற்றது தமிழ் : இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் உள்ள இடைவெளியினை உரக்க சொல்லி அதன் விளைவாக நான் இன்று இந்த புத்தகத்தினை படித்துகொண்டுஇருக்கிறேன்.{INFOSYS RAMAMOORTHY’S A BETTER COUNTRY A BETTER WORLD”}
இவ்வாறு ஒரு மனிதனுள் நல்ல மாற்றங்களை நான் சொன்ன படங்கள் ஏற்ப்படுத்தியவகயில் இது நல்ல படங்களே.
ஆனால் நான் இந்த மன்மதன் அம்புகளையும் ஏற்க்க தாயாரில்லை.
எனவே என் தாழ்மையான கருத்துகளை நீங்கள் தெளிவு செய்யும் பட்ச்சத்தில் நான் தெளிபெறுவேன்.
நான் அறிவேன் மேற்க்குரிய சில படங்கள் உலக சினிமாவின் தழுவல்.ஏன்னெனில் நான் இப்பொழுது பார்த்துகொண்டிருப்பது “STEVEN SPIELBERG’S – SAVE THE PRIVATE RYAN”
அனுப்பியவர் க.துரை பாண்டியன் on Saturday, 31.12.11 @ 07:06am
ஐயா,
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
அனுப்பியவர் துரை பாண்டியன் on Wednesday, 11.01.12 @ 08:21am
அனுப்பியவர் துரை பாண்டியன் on Saturday, 21.01.12 @ 07:27am
ஐயா உங்கள் கூற்றுப் படி தனுஷ் சிறந்த நடிகர் என்றால், சிம்புவும் சிறந்த நடிகரே.. ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறீர்கள். தனுஷால் எப்போதும் ஒரே விதமான நடிப்பை மட்டுமே காண முடியும். அவருக்கு அது மட்டுமே வரும். நீங்கள் அவரது எல்லாப் படங்களையும் பாருங்கள் .பிறகு சொல்லுங்கள். அதை விடுத்து இப்படி ஒரே ஒரு படத்தை வைத்து அவரை சிறந்த நடிகர் என்று சொன்னால், நீங்கள் சிறந்த நடிகர்களை என்னவென்று சொல்வீர்கள்?
அனுப்பியவர் வேல்ராஜ் on Saturday, 21.01.12 @ 07:34am
இந்த ஆண்டின் சிறந்த நடிகர் தனுஷ். சிறந்த நடிகை நமீதா.. இப்படியே விருது கொடுப்பீர்கள் போல இருக்கு சார்.. நீங்கள் தமிழ் சினிமாவை பார்ப்பது இல்லை என்று நினைக்கிறன். தயவு செய்து தமிழ் சினிமாவை தொடர்ந்து பாருங்கள். நன்றி.
அனுப்பியவர் செல்வராஜ் on Saturday, 21.01.12 @ 07:41am
கட்டுரை சிறப்பாக இருக்கிறது. முரண் திரைப்படம் உண்மையாக சிறந்த ஒன்றுதான். ஆனால் தமிழ் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இவர்கள் மாற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. அதற்கு இதுப் போன்ற படங்கள் நிச்சயம் உதவும்.
அனுப்பியவர் சுதாகரன் on Saturday, 21.01.12 @ 07:52am
ஐயா உங்கள் கட்டுரை சிறப்பாக உள்ளது. ஆனால் தனுஷ் எங்கிருந்து உங்கள் பட்டியலில் வருகிறார். நீங்க ஆடுகளம் படம் மட்டுமே பார்த்தீர்கள் போலிருக்கிறது.
அனுப்பியவர் பாண்டியன் on Sunday, 22.01.12 @ 20:19pm
எங்கேயும் எப்போதுமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள படம். நீங்கள் தனுசை போய் சிறந்த நடிகர் என்று சொல்கிறீர்கள்? என்ன அநியாயம் இது. தனுஷ் எப்போதும் ஒரே நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ஐயா.
அனுப்பியவர் சந்துரு on Sunday, 22.01.12 @ 20:32pm
தனுஷ் போன்ற நடிகர்கள் நிச்சயம் சிறந்த நடிகர்கள்தான். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
அனுப்பியவர் சிவா on Sunday, 22.01.12 @ 23:08pm
தொடர்ச்சியாக இந்தக் கட்டுரைகளை வாசித்து வருகிறேன். தமிழ் சினிமா தரத்தில் உங்கள் பங்கு நிச்சயம் சார். விரைவில் தமிழ் சினிமா உலகத் தரத்தை அடையும்.
அனுப்பியவர் முனிராஜ் on Sunday, 22.01.12 @ 23:32pm
எல்லோரும் சொல்ல தயங்கும் விடயங்களை மிக அருமையாக சொல்கிறீர்கள் சார்.
அனுப்பியவர் சுப்பு on Monday, 23.01.12 @ 02:56am
ஐயா,
என்னையும் மனிதனாக மதித்து பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றி.
"
உங்கள் பின்னூட்டத்தில் எனக்கான பதில்,
கலையும் இலக்கியமும் ஒவ்வொரு மனிதனையும் தானாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. பிரசாரமும் உபதேசமும் செய்கிறவர்களுக்கே அந்த உபதேசங்கள் பயன்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கையும் சிந்தையும் அந்த உபதேசங்களுக்கு நேர்மாறாக இருப்பதை நீங்களே க்ண்டிருப்பீர்கள். .
" பிரசாரமும் உபதேசமும் செய்கிறவர்களுக்கே பயன்படுவதில்லை = அவர்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ பார்த்த எனக்கு பயனளித்துள்ளது."
அதனால் தவறில்லையே ஐயா.
"கலையும் இலக்கியமும் ஒவ்வொரு மனிதனையும் தானாகச் சிந்திக்கத் தூண்டுகிறது " = அதாவது ஒவ்வொருவருடைய சிந்தனையும் படம் பார்த்த பிறகு படத்தின் தாக்கம் வேறு மாதிரி இருக்கும் எனில்
the thoughts came to your mind may be negative thoughts [pessimistic thoughts], thoughts came to me is of optimistic ones.
என நான் அர்த்தம் கொள்ளலாமா ?
தவறிருந்தால் தெளிவு செய்யவும்.
அனுப்பியவர் க.துரை பாண்டியன் on Monday, 23.01.12 @ 10:46am
என்னையும் மனிதனாக மதித்து பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றி.
அன்புள்ள துரை,
மேற்கண்டவாறு யாருக்கும் தயவு செய்து எழுதாதீர்கள். ஒன்று. உங்கலாஈத் தாழ்த்தீக்கோலலள்கீறீர்கள். அல்லது எழுதியவரை நாகரீகமற்றவன் என்று சொல்கிறீர்கள். இரண்டும் தவறு.
மற்றபடி நீங்கள் எழுதும் கருத்துக்க்ளுக்கு மாறு சொல்ல என்னிடிடம் ஏதும் இல்லை.
அனுப்பியவர் வெங்கட் சாமிநாதன் on Monday, 23.01.12 @ 22:30pm
நண்பர் துரைபாண்டியன் உடனான விவாதம் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள். சாமிநாதன் அவர்களின் கட்டுரையின் வெற்றி இதுதான். நிச்சயம் இதனை புத்தகமாகக் கொண்டு வந்து விடுங்கள். அருமையான கட்டுரைகள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்.
அனுப்பியவர் சந்திரசேகர் on Monday, 23.01.12 @ 23:53pm
ஐயா உங்கள் கட்டுரை சிறப்பாக இருந்தது. இந்த கட்டுரையில் தனஷ் பெயரை சொல்லி கெடுத்துக் கொண்டீர்களே?
அனுப்பியவர் பரத் on Wednesday, 25.01.12 @ 00:25am
ஐயா,
என்னையும் மனிதனாக மதித்து பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றி.
என்ற வாக்கியம் உங்களை காய படுத்தியதெனில் என்னை மன்னிக்கவும்.
அனுப்பியவர் துரை பாண்டியன் on Friday, 27.01.12 @ 08:52am