 |
ஆஸ்கர்… ஆங்கிலப் படங்களுக்கு வழங்கப்படும் விருது என்பதை அறிந்திருந்த போதிலும், நம்மவருக்குக் கிடைக்காதா என்று நம்மில் பலரும் ஏங்கியிருந்திருக்கிறோம்! அந்த ஏக்கத்தைத் தணித்து இரண்டு ஆஸ்கர்களை வென்று இரட்டிப்பு ஊக்கத்தை அளித்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஒவ்வொரு இந்தியரின் சொந்தக்காரருமான நமது ஏ.ஆர்.ரஹ்மான்! இசையில் உலகளாவிய சாதனைகளை படைத்துள்ள இந்த இளைஞருக்கு வயது 43 மட்டுமே!
ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்தில் அடியெடுத்து வைத்த அவரது பாதங்கள், கடந்து வந்த பாதை வலிகளெனும் முட்கள் நிரம்பியவை என்பது அவரது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கக் கூடும்.
|
இசையுலகின் முதல் வழிகாட்டியான தன்னுடைய தந்தையை தனது 11-வது வயதில் இழந்தார் ரஹ்மான். கணவரின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டே தனது குடும்பத்துக்கு அடுப்பில் உலை வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார், ரஹ்மானின் தாயார் கரீமா பேகம்.
அதன்பின் தனது அயராத முயற்சிகளால் ஆஸ்கரில் வெற்றிக் கொடி நாட்டும் வகையில் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் அணுகி வெற்றி கண்டிருக்கிறார், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்!
ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் தனது ஏற்புரையில், “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் உரைத்தார்.அப்போது, அரங்கில் இருந்த அனைத்துக் கலைஞர்களும், இந்நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் தங்களையும் மறந்து கரவொலியை எழுப்பினர்.
“இந்த விருதை இறைவனுக்கும், எனது அன்பு தாயார் கரீமா பேகத்துக்கும் சமர்ப்பிக்கிறேன்,” என்ற மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ், “எனது வாழ்வில் எப்போதும் வெறுப்பை விலக்கி, அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கிறேன். அன்பைத் தேர்ந்தெடுப்பதின் பலனாகத்தான் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்,” என்றார்!
தனது அன்பு மகன் ஆஸ்கர் விருது பெற்று, தாயகத்துக்கு பெருமை சேர்த்த அற்புத நிகழ்வை, பார்வையாளர் பகுதியில் அமர்ந்து கொண்டு ஆனந்தக் கண்ணீருடன் ரசித்துக் கொண்டிருந்தார், ரஹ்மானின் தாயார் கரீமா பேகம்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அனைத்துக் கலைஞர்களும், அவர்களது துணைவர், துணைவியர்களும் ஆடம்பரம் ஜொலிக்க அணிகலன்களையும் அதிக விலைமதிப்புள்ள ஆடைகளையும் அணிந்து வலம் வர, தமிழகத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் வழக்கம் போல் மிக எளிமையாக சிகப்பு கம்பளத்தில் வலம் வந்தது, இந்திய ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியது!
ஆம்…
ரஹ்மானின் சாதனையால் ஆனந்தத்தில் திளைக்கும் அதேவேளையில், அவரது அர்ப்பணிப்பு வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொள்வதே, நமது இளைய சமுதாயத்தின் முழுமுதற் கடமை!
விடா முயற்சி, தொழில் மீது தீராத காதல், வறுமையைக் கண்டு அஞ்சாத துணிவு, ஒழுக்கம், தாய்மொழிப்பற்று, தாய்நாட்டுப் பற்று, புகழ் பெருகும் போது அடக்கம்….
இப்படி ரஹ்மானிடம் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து ஒரு சில பாடங்களைக் கற்றுக்கொண்டாலே, உலகில் தத்தமது துறைகளில் சாதித்துவிடலாம் என்று சொன்னால், அதில் எள்ளவும் மிகையில்லை
நன்றி: நங்கூரம்
|