 |
கோவா! 39 வது அகில இந்திய திரைப்படவிழா! கடவுள் பாதி மிருகம் பாதி ரீதியில் முழுமையான நெகிழ்வைத் தராமல் சூன்ய நிறைவையே தந்து முடிந்திருக்கிறது. 'நேற்று போல் இன்று இல்லை' எனச் சலிப்பது மனித குணம்தான் எனினும் இந்த முறை சலிப்பு கொஞ்சம் அதிகமாகவே உச்சம் தொட்டுவிட்டது! அந்த அளவு மிகச்சராசரி அல்லது சராசரிக்கும் கீழான திரைப்படங்களே பெரும்பான்மை அங்கம் வகித்தன. |
தெரிவின் அடிப்படையில் படங்கள் இடம் பிடித்தனவா? இல்லை வந்தவரைக்கும் லாபம் என இணைந்து கொண்டனவா? தெரியவில்லை. இந்த அங்கலாய்ப்பு எல்லாமே 'போட்டிக்கானப் படங்கள்' (14) 'உலக சினிமாக்கள்' (69) எனத்திரையிடப்பட்ட 83 படங்களுக்கு மட்டுமே சொந்தமானது. மற்றப்படி திரையிடப்பட்ட
- அயல்நாட்டு இந்தியர்ப்படங்கள் (5)
- இந்தியப் படங்கள் (25)
- இயக்குநர் புகழஞ்சலி படங்கள் (17)
- ரஷ்ய திரைப்படங்கள் (8)
-ஈரானிய திரைப்படங்கள் (6)
-சுவிஸ் திரைப்படங்கள் ( 6)
மற்றும் புராதானப்படங்கள் (8) வகையறாக்கள் குறித்து பெரிதாகக் குறை சொல்லமுடியா தேர்வுகளாகவே அமைந்திருந்தன.
துவக்கவிழாவுக்கு அன்னார் அன்னார் (கோவா முதல்வர், நடிகை ரேகா ...) வந்த விவரம்.. நிறைவு விழாவிற்கு இன்னார் இன்னார் (கமல்ஹாசன், ..) வந்த விவரங்கள் அறிய ஆர்வமுள்ளோர் நவம்பர் 23 மற்றும் டிசம்பர் 3 நாளிதழ்களைத் தேடிப் புரட்டி அறிந்துகொள்ளட்டும். நமக்கு விழா முக்கியமல்லவே.. நாம் படங்களைப் பற்றிப் பேசுவோமே!
கிட்டதட்ட ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள கோவா தலைநகர் பானஜியில் நடைபெற்ற விழாவில் காதுக்கெட்டியதூரம் நாம் கேட்டது தேமதுரச் செந்தமிழே என்பது ஆச்சர்யகரமான தகவலே! கூட்டிக்கழிக்காமல் பார்த்தமாத்திரத்திலேயே சொல்லிவிடமுடியும் திரைப்பட விழாவுக்கு வந்தவர்களில் அறுபது விழுக்காடு பச்சைத் தமிழர்களே! ("சினிமாவிலிருந்தே நாலு முதல்வர்களைக் கொண்டுவந்தது போதாது போலும்.. மறுபடியும் சினிமா சினிமா என தமிழர்கள் அலைகிறார்களே!" - என ஒரு பெருசு அலுத்துக்கொண்டது காதில் விழுந்தது.) விழாவுக்கு வந்த நேரடி சினிமாக்காரர்கள் இயக்குநர் ராஜா, ஒளிப்பதிவாளர் சக்திசரவணன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகைகள் ரேவதி, தாரா மட்டுமே என்றாலும் வந்திருந்த பெரும்பான்மை தமிழர்களும்கூட ஏதோ ஒருவகையில் சினிமாத்தொழிலோடு தொடர்பு உடையவர்களாகவே தெரிந்தது ஆச்சர்யமே! நானும் சரி அந்த அறுபதுவிழுக்காடு தமிழர்களும் சரி.. கோவாவுக்குப் போனது கதையோ காட்சியோ திருடுவதற்காக அல்ல .. மாறாக கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தான கலைப் படங்கள் காண்பதற்கே என 'உண்மை(?)' சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்!
சரி சரி பீடிகை போதும். கச்சேரியை ஆரம்பிப்போம். சினிமா ரசிகர்கள் பலர் பாராட்டியது அல்லது திட்டியதும்.. சினிமாக்காரர்கள் சிலர் சுடுவதற்கு வாய்ப்புள்ளதுமான ஒரு பத்து படங்களைப் பார்ப்போமா?
1- வார்லார்ட்ஸ் - பீட்டர் ஹோ சுன்சான் - ஹாங்காங்.
 |
19ம் நூற்றாண்டில் நடந்த சைனா உள்நாட்டு யுத்தத்தை மையமாகக் கொண்ட இப்படமே துவக்கவிழா படம்! க்ளாடியேட்டர்.. ப்ரேவ் ஹார்ட் வகையறா என்றாலும் பின்நவீனத்துவ க்ரே வர்ணம் மற்றும் க்ரெய்ன்ஸ் பாணி ஒளிப்பதிவு (ஆர்தர் வோங்) படத்தின் தரத்தை கணிசமான உயரத்திற்கு இட்டுச்சென்றது. கதைப் பின்னலும் இந்திப்பட ரேஞ்சுக்கு சம்பவ சுவாரஸ்யங்களால் செறிவாகவே அமைந்திருந்தது. |
நாட்டை மீட்கும் இலக்கோடு, குருதிப் பிரதிக்ஞை செய்து சகோதரர்களாகும் மூன்று தீரர்களின் போர்ப்பயணத்தில் ஒரு பெண்ணால் நிகழும் நெருக்கடிகளும்.. யுத்த செயல்பாடு வேறுபாடுகளுமே கதையின் அடிச்சரடு! மூவருள் படைத்தளபதியாக அடக்கி வாசித்தே முதலிடம் பெறுபவர் ஜேட்லியேதான்!
2 - ப்ளைண்ட்னஸ் -ஃபெர்னாண்டோ - பிரேசில்
 |
ஒரு இயக்குநரின் அறிமுகப்படம் ஒன்றைத் தழுவியே உலகெங்கும் நூற்றுக்கணக்கான படங்கள் உருவாயின என்றால்.. அந்த இயக்குநர் ஃபெர்னாண்டோ மெய்ரெலிஸ், அந்தப் படம் சிட்டி ஆஃப் காட்ஸ் எனச் சட்டெனச் சொல்லிவிடுவீர்கள். இந்த விழாவில் கூட பட்டியல், புதுப்பேட்டை வகையறா படங்கள் இடம் பெற்று மறைமுகமாக சிட்டி ஆஃப் காட்ஸ் புகழ் பாடின! அந்த இயக்குநரின் மூன்றாவது படமே ப்ளைண்ட்னஸ்! |
தேர்ந்தெடுத்த கதையிலாகட்டும்.. சொன்ன விதத்திலாகட்டும்.. தொழில்நுட்பம் புகுத்திய வகையிலாகட்டும் முன்னெத்தி ஏர் படமேதான்!
நகரில் காரில் பயணிக்கும் இளைஞனுக்கு திடும் என பார்வை போய்விடுகிறது. (காலம் காலமான 'கறுப்புக் காட்சியாக இன்றி எல்லாமே வெள்ளையாக'த் தெரிவதில் துவங்குகிறது இயக்குநரின் நகாசுத்தனம்! ) ஒரு பாதசாரி உதவியால் வீடுவந்து சேர்கிறான். மனைவி மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள். பரிசோதித்த மருத்துவர் 'எல்லாமே சரியாகத்தான் உள்ளது' எனக்கூறி சந்தேகத்தோடே மருந்து தந்து அனுப்புகிறார். சில மணிநேரத்தில் அவருக்கும் கண் பார்வை பறிபோகிறது. வீடுவரை கொண்டுவிட்ட வழிப்போக்கனுக்கும். ஆக பார்வை பறிப்போதல் தொற்றுநோயாகப் பரவுவது அறிந்து அரசு அலறுகிறது. அவர்களைத் தனி வளாகத்துள் அடைக்கிறது.. ஒரு சில நாட்களிலே அங்கு ஒரு குருடர் காலனியே உருவாகி.... என்ன சுவாரஸ்யமாக உள்ளதா .. மீதியைக் காத்திருந்து சத்யம் அல்லது டிவிடியில் கண்டு களியுங்கள்.
3. டெத் வித் அவுட் கன்ஸெண்ட் -வேரா சாவ்லா - அமெரிக்கா
இந்திய அமெரிக்கப் பெண்மணி இயக்கிய ஹாலிவுட் படம். (ஜெகன்னாதனின் 'ஈ' யை விரட்டிவிட்டு) 'பயோடெரரிஸம்' பற்றி எடுக்கப்பட்ட முதல் படம்' என முன்னுரை தந்து காட்டிய படம்! ஹீரோ தன் தந்தையும் சகோதரனும் பரம்பரையாகத் தாக்கப்பட்ட சிறுநீரக வியாதியால்தான் இறந்துபோயிருக்கிறார்கள் என நம்பிக்கொண்டிருந்த வேளையில் போன்.. "ரஷ்ய மருத்துவரால் கொடூரமான உயிர்க்கொல்லி வைரஸ் செலுத்தப்பட்டதாலே உன் தகப்பனாருக்கும்.. அவரது வாரிசுகளுக்கும் இந்த சிறுநீரக வியாதி! " . ஆம்.. மனிதர்களை வெள்ளை எலிகளாக்கும் கதைதான். தமிழ்ப்படம் ஈ வெளிப்படுத்திய பூடக நேர்த்தி இல்லாமல் மாடர்ன் தியேட்டர்ஸ் ஜெய்சங்கர் படம் போல நேரடியாக அடிதடி என்று செல்கிறது. போதாதற்கு.. 'இயக்கியவர் இந்தியராக்கும்' எனச் சொல்லாமல் சொல்வது போல நாயகிகளின் அபரிமித ஒப்பனையும்.. பின்னணி இசையின் அதீத ஆர்ப்பட்டமும் மண்டையைப் பிறாண்டின!
4. எ தவுஸண்ட் இயர்ஸ் ஆஃப் குட் ப்ரேயர்ஸ் - வாய்ன் வாங்க்- ஜப்பான்
 |
ஜப்பான் - அமெரிக்கத் தயாரிப்பு. மனைவியின் மறைவுக்குப் பிறகு தனிமையை மிகவும் உணரும் தகப்பன் அமெரிக்காவில்வாழும் மகளுடன் இருக்கப் புறப்பட்டு வருகிறார். கணவனைப் பிரிந்து வாழும் மகள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த மெள்ள மெள்ள காய்களை நகர்த்துகிறார்.. அவருக்கே உரிய அதி அமைதியான உரையாடல் போக்கு மூலம்! |
அப்பாவின் இளமைக்காலத்தில் அவர் குறித்து அம்மா கொண்டிருந்த சில சந்தேகங்களின் அடிப்படையில் இப்போது அப்பாவுடன் ஒட்டமுடியாமல் தவிக்கும் மகளுக்கு.. அப்பாவின் அன்பில் விடை கிடைக்க இருவருக்குள்ளும் தெளிவு தோன்றுகிறது.. புதுவாழ்க்கைக்கான நம்பிக்கைப் பிறக்கின்றன! டிபிகல் ஃபெஸ்டிவல் படம்! ஆமை வேகம்தான்.. ஆனால் தரம் உத்தரவாதம்!
5. தி கிரெய்ன் - பீட்ரஸ் கரீரி - பிரேஸில்.
பாட்டி - பேரன் உறவைச் சொல்லும் 'தி கெரெய்ன்' படமும் டிபிகல் ஃபெஸ்டிவல் வகையே என்ற போதும்.. அய்யோடா சாமி தாங்க முடியவில்லை ரகம். அப்படி ஒரு இழுவையான அரதப்பழசு மேக்கிங். இன்னொரு தனிப்பட்ட சோகம்.. அலுப்பில் நான் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம் பார்த்து இளம் கதாநாயகி படுநிதானமாக குளித்த காட்சியைத் தரிசிக்காமல் கோட்டை விட்டிருக்கிறேன்.
.
6 - கஃபே சிதாரா - சமான் முகதம் -ஈரான்
மூன்று பெண்களின் கதையைச் சொல்லும் யதார்த்தமான் ஈரானிய திரைப்படம். குடிகாரக்கணவனோடு போராடியவாறே தேநீர் விடுதி நடத்தும் ஃபரீபா! ஜன்னலில் விழி பதித்து வரனுக்காக காத்திருக்கும் முதிர்கன்னி முலூக்! தனது பிரமாண்ட கனவுகளுக்கு ஈடுகொடுக்காமல் நழுவும் காதலன் குறித்து குழப்பம் கொள்ளும் அழகி சலூமே! இவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மிக இலேசாக அகிரோகுரோசாவின் ரோஷ்மான் பாணிக் கதைபோல காட்சிப்படுத்தி இருப்பது.. குடும்ப கதைகளில் புதிய மைல்கல் உத்தி! ஆனாலும் கதையும் சம்பவங்களும் இயக்குநரை ரொம்பவும் தூக்கி நிறுத்தவில்லைதான்.
7 - தி மோஸ்ட் டிஸ்டண்ட் கோர்ஸ் - லீன் ஜிங்க் - தைவான்
 |
நாம் பலமுறை நனைத்து துவைத்துப் பிழிந்துக் காயப்போட்ட காணாமலே காதல் கதை! ஆனால் கதை சொல்லியிருக்கும் நிதானம் மிகுந்த நேர்த்தி மிகவும் ரசிக்க வைக்கிறது. தன் காதலை முறித்துக்கொண்டு சென்றுவிட்ட காதலி நினைவாகவே இருக்கும் இளைஞன்.. அவளோடு பழகிய இடங்கள் வழங்கிய ஒலிகளை மட்டும் கேஸட்டில் பதிவு செய்து தொடர்ந்து அவளுக்குத் தபாலில் அனுப்பி வைக்கிறான். |
ஆனால் அது இன்னொரு பெண் கையில் சிக்க.. காயம்பட்ட அவள் இதயத்திற்கு அந்த ஒலிகள் இதம் தருகின்றன. பிறகென்ன .. காதல்தானே! முகவரியற்று வரும் அந்த பார்சல்களின் பயணப்பாதையில் பின்னோக்கி பயணித்து அவனைத் தேடிப் புறப்படுகிறாள்.. முடிவில்..( ஹி ஹி.. நான் சொல்லமாட்டேன்)
8 - வெயிட்டிங் ஃபார் தி சன் - அகோ பனினி - இத்தாலி
'தசாவதார' கேயாஸ் தியரி பம்மாத்து ரேஞ்சில் ஆரம்பப் பீடிகை! எனவே மிகுந்த எதிர்ப்பார்ப்போடு நிமிர்ந்து உட்கார வைத்த இத்தாலியப் படம்! 'ஒரே ஓர் இரவானது.. பதினைந்து பேர் வாழ்வை எப்படி புரட்டிப்போடப்போகிறது பாருங்கள்?' என டமாரம் அடித்தவர்கள்.. கடைசியில் காட்டியதென்னவோ பதினைந்து பேர் தங்கி இருந்த ஓர் ஹோட்டல் காரணகாரியமின்றி இடிந்து விழுந்ததைத்தான். இந்த லட்சணத்தில் கிறுக்கத்தனமான சில காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை!
9 - காஃபின் - ஏகாச்சி யுக்ரோங்க்தாம் - தாய்லாந்து
 |
கதைச் சுருக்கம் படித்து ஏமாந்துபோன படம்! 'டிசம்பர் குரு பெயர்ச்சி வாழ்க்கையைப் புரட்டிப்போடும்' என நம்மூர் அரசியல்வாதிகள் நம்புவது போல தாய்லாந்திய நம்பிக்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் கதை! பெரும் பிரச்சினை உள்ளவர்கள் அதைத் துண்டுச்சீட்டில் எழுதி கைக்குள் வைத்துக்கொண்டு புத்தர் கோவில் சவப்பெட்டிக்குள் படுத்துக்கொள்ள.. |
இறுதிச் சடங்குகளை குருமார்கள் நடத்தி முடித்த பின், எழுந்துகொண்டால் நோயோ பிரச்சனையோ போயே போச்! இப்படி படுத்து எழுந்த ஒரு இளைஞனுக்கும் இளைஞிக்கும் கூட அவர்கள் பிரச்சனைகள் காணாமல் போய்..( ஆ! ) ஆனால் அதை விட பயங்கரமான புதுப்பிரச்சனைகள் முளைக்கின்றன! ஆஹா.. துவக்கம் நன்றாகத்தானே உள்ளது.. தமிழுக்குச் 'சுட' சரியாகத்தானே இருக்கும் என்கிறீர்களா? சொச்சமும் பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.. ராம்கோபால் வர்மா திருப்பித் திருப்பிச் சுடும் தீய்ந்த தோசைகளான பேய்க்கதை காட்சிகளின் தொகுப்பே மிச்ச படம்!
10 தி சீக்ரெட் - ஜாய் சொவ் - தைவான்-ஹாங்காங்
 |
படு மென்மையாகத் துவங்கும் காதல் கதையின் இறுதியில் மனோஜ் சியாமளன் ஸ்டைலில் படு அசத்தலான திகில் திருப்பம்! ஹீரோ இசைக்கல்லூரி மாணவன். முதல்நாளே நூலக அறையில் யாரோ இசைக்கும் பியானோ கீதம் சுண்டி இழுத்ததோடு அதை வாசித்தவளிடமே இணைக்கவும் செய்கிறது. காதல் அரும்புகிறது. அவன் ஆசைப்பட்டபடியே முதல்நாள் இசையின் நோட்ஸ்களை சொல்லித்தருகிறாள். |
ஆனால் 'நூலக அறையிலிருக்கும் அந்த புராதன பியானோவில் மட்டும் வாசிக்க வேண்டாம்.. விரல் வலிக்கும் (!)' எனத்தடுக்கிறாள். காதலை வெளிப்படுத்த வேண்டி ஒரு மாலையில் அவளை வரச்சொன்னவன் அவளுக்காக காத்திருந்தவேளையில் இன்னொரு பெண் குறுக்கே வர காதலி திரும்பிப்போய் விடுகிறாள்.. அன்றோடு காணாமலும் போய் விடுகிறாள்.
ஆஸ்த்மா நோயின் பாதிப்பினால்தான் வகுப்பு வரவில்லை என எண்ணி காத்திருந்தவன், இறுதியில் அவளை தேடப் புறப்பட்டபோது.. அதிர்ச்சி! அப்படி ஓர் பெண்ணே இல்லை! ஆனால் அவள் இருபது வருடங்களுக்கு முன் ஹீரோவின் தந்தையோடு (அவர் அதே கல்லூரி பேராசிரியர்) எடுத்துக்கொண்ட புகைப்படம் கிடைக்க.. அவரிடம் ஓடுகிறான். சரி .. மறுஜென்மம்.. ஆவியாக வந்து போனாள் என சந்திரமுகி கதையை எதிர்பார்த்த ரசிகர்களை செமத்தியாக ஏமாற்றுகிறார் இயக்குநர். புராதான பியானோவில் அந்த ஸ்பெஷல் நோட்ஸை வாசித்ததன் மூலம் எண்பதுகளில் வாழ்ந்த அந்த மாணவி 'எதிர்காலம் நோக்கி பயணித்து' 2000த்திற்கு வந்து ஹீரோவைக் காதலித்துத் திரும்பிப் போயிருக்கிறாள். என்ன தலை சுற்றுகிறதா? ஆனால் குறுக்கு கேள்வி கேட்காமல் அதே சமயம் கண்ணையும் காதையும் மூளையையும் விழிப்பாய் திறந்துவைத்து பார்க்கும் பட்சம் படு ரசனையான அனுபவம் வழங்கிய பக்கா கமர்ஷியல் படம்!
என்னடா திரைப்பட விழா விமர்சிக்க வந்தவன் இப்படி வியாபாரப்படங்களைப் பற்றியே எழுதுகிறானே எனப் பலர் நினைக்கலாம். மாற்றுத்திரைப்படங்கள் படு உன்னத ஆட்சி புரியும் களமாக விழங்கும் வழக்கமான திரைப்பட விழாவாக இம்முறை அமையவில்லை என்பதே உண்மை! ஈரானின் 'தி சாங்க் ஆஃப் ஸ்பாரோஸ்', கஜகஸ்தானின் 'துல்பன்', பிரேஸிலின் 'ப்ளைண்ட்னஸ்' மற்றும் ஜெர்மனியின் 'அப்ஸர்டிஸ்டான்' என விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சில படங்களே ஓரளவு உச்சம் தொட்டு நின்றன. அவையெல்லாம் எப்படியும் சென்னைத் திரைப்பட விழாவில் இடம் பெற்றுவிடும் என நம்புவோம்! மற்றப்படி இந்திய படங்களில் கூட பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மராட்டிய 'மகா சத்தா' (லக்ஷ்மன் மோரே).. தமிழ் 'காஞ்சிபுரம்' (பிரியதர்சன்).. மலையாள 'ஒரு பெண்ணும் ரெண்டு ஆணும்' (அடூர் கோபால கிருஷ்ணன்) கூட பெரிதான பாதிப்பை ஏற்படுத்தவே இல்லை.
பன்னாட்டுநிறுவன ஆக்கிரமிப்பு பாதிப்பைச் சொல்லவந்த லஷ்மண் மோரே.. ஆக்ரோஷ வசனங்களையே நம்பி காட்சி ஊடக ஆளுமையைப் பின்னுக்குத் தள்ளி இருந்தார். எப்போதுமே வசனங்களை அதிகம் நம்பாத அடூராரோ எந்த புது உத்தியுமே வெளிப்படா நேர்கோட்டுப் பாணியில் தகழியின் நான்கு சிறுகதைகளைச் சொல்லி ஒற்றைப்பட பிரமை தர முயன்று மறுபடியும் (முன்னது நாலு பெண்குட்டிகள்) தோற்றுப்போயிருந்தார். அடூரின் ஆரம்பகால 'சுயம்வரம்' பாணியில் தனது இன்னொரு பரிமாணமாக 'காஞ்சிபுரம்' காட்டவந்த பிரியதர்ஷனால் வியப்பு தந்த அளவு பிரமிப்பு தர இயலவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு நல்ல வாய்ப்பைத் தவற விட்டார்கள் என்றே சொல்லலாம்.
 |
'காலமெல்லாம் பட்டு நெசவுத்தொழில் செய்தாலும்.. தன் மகளுக்கு பட்டுச்சேலை தர வக்கற்ற ஒரு நெசவாளியின் கதை' என ஒற்றைவரி சொல்லி ஏற்படுத்திய சலசலப்பை ஒன்றரை மணிநேரப் படத்தில் ஏற்படுத்தமுடியவில்லை. காரணம் கிளிஷே காட்சிகளும் நுனிப்புல் மேய்ந்த கதைக்களமும்! போதாதற்கு காஞ்சிபுரம் எனச் சொல்லிக்கொண்டே திரும்ப திரும்ப காட்டிய மாமல்லபுர பின்புலம் வேறு உறுத்தலாய்த் தொடர்ந்தது! |
இருப்பினும் பாராட்டி வரவேற்போம்.. நல்லதொரு முயற்சிக்காக! கண்டனம் தெரிவிப்போம்.. நெசவாளர்கள் வரலாறு வாழ்க்கைமுறையை அச்சுஅசலாய் பதிவுசெய்யாமல் விட்டமைக்காக!
 |
எது எப்படியோ.. படங்கள் ஏமாற்றினாலும்.. விழா அமைப்பினர் ஏமாற்றவில்லை! அற்புதமான திரையரங்குகள்.. அசத்தலான அனுமதிச்சீட்டு முறைகள்.. உரிய நேரத்திலேயே வழங்கிய கதைவிவரப் புத்தகம் என நல்லதொரு முன்மாதிரியாகவே விழாவை நிகழ்த்தினார்கள். ஆனால் படங்கள் தேர்வு மட்டும் தமிழக அரசின் சினிமா விருதுகள் போல கண்துடைப்பாக..
|
திருஷ்டி பரிகாரமாகவே அமைந்துவிட்டது! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
தொகுப்பு: ஐஸ்வர்யன்
|