|
தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச்சுவை அமுதின்,
கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின், பசை நறவின்,
விளை கட்டியின், மதுரித்து எழுகிளவிக் கிளி விழிபோல்,
களைகட்டவர் தலைவிட்டுஎறி குவளைத் தொகை கண்டாள்.(2026)
வெண்பா:
புல்லாங் குழலின் இசையை, நரம்புயாழ்
மெல்லிசையை, தேனின் இனிமையை, கற்கண்டின்
பாகினிமை, காட்டிலும் பச்சைக் கிளிபோல
பாகுமொழி சீதையின் கண்கள்ஒத்து கூட்டமாய்
ஆடும் கருங்குவளைக் கொத்தைக் களைஎன்றே
ஓடிப் பறித்தே உழவர்கள் அங்கெறிந்து
நாடிநின்ற காட்சியைப் பார்த்து ரசித்திருந்தாள்
ஈடற்ற சீதைதான் அங்கு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அருப்பேந்திய கலசத்துணை, அமுதுஏந்திய மதமா
மருப்பேந்திய எனலாம் முலை, மழைஏந்திய குழலாள்
கருப்பேந்திரம் முதலாயின கண்டாள்; இடர்காணாள்;
பொருப்பேந்திய தோளானொடு விளையாடினள், போனாள்.(2027)
வெண்பா:
அழகின் அமுதக் கலசமாய் சீதை
செழிக்கும் மருதவழி செல்கின்ற போது
பிழியும் கரும்பாலை கண்டுதான் சென்றாள்
வழித்துயர் எல்லாம் மறந்து.
மலைபோன்ற தோளுடைய மேகவண்ணன் ராமன்
சிலைஏந்தி சீதை யுடன்சென்றான்! அந்தச்
சிலைமேனி சித்திரத்தாள் இன்பம் கனிய
விளையாடிச் சென்றிருந்தாள் வென்று.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பல்நந்து உகுதரளம் தொடர் படர்பந்திகள் படுநீர்;
அன்னம்துயில் வதி தண்டலை; அயல்நந்து உறையும் புளினம்,
சின்னம் தருமலர் சிந்திய செறி நந்தனவனம், நன்
பொன் நந்திய நதி, கண்டு உளம் மகிழ்ந்தனர், போனார் (2028)
வெண்பா:
முத்து திரண்டிருக்கும் நீர்நிலைகள்; அன்னங்கள்
தத்தித் துயில்கின்ற சோலைகள், பூச்சிகள்
சுற்றும் மணற்குன்று, பூங்கா, நதிகளையும்
சுற்றுமுற்றும் பார்த்தார் ரசித்து.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து பருகுவோம்...
|