|
யாவரும் கேளிர் - பகுதி - 18 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
தனுக்கொடி என் பங்காளி, ஆரான் ஒன்னுவிட்ட பங்காளி. என்மேலேயும் ஏ... சம்சாரத்துமேலேயும் அவ்வளவு பாசமா இருப்பானுக. அவெங்களே என் நிலத்துல விவசாயம் பண்ணி ஒருபடி நெல்லுகூட எடுக்காம வீட்டுல கொண்டாந்து கொடுப்பாங்கெ, எனக்கு புள்ள இல்லாதது தெரிஞ்சு அவெங்கதான் கோயிலுக்கு எல்லாம் போயிவர ஏற்பாடு பண்ணினாங்க, தனுக்கொடி ஒருபடி மேலே போயி எனக்காக பழனி முருகனுக்கு மொட்டை போட்டுட்டு வந்தான், இதெல்லாம் பார்த்து எனக்கு அவெங்க மேலே அளவுகடந்த பிரியம் வந்துச்சு. கடைசியில எனக்கு கொழந்தை பொறக்காதுன்னு தெரிஞ்சு நானும் கோயில் கொளத்துக்கு போரத நிறுத்திட்டேன்.
ஒருநா தனுக்கொடி வந்து அமாவாசை நடு சாமத்துல திருநல்லாற்றிலுள்ள சனீஷ்வரன கும்பிட்டா கொழந்த பொறக்கும்ன்னா, “அதான் டாக்டர் கொழந்த இருக்காதுன்னு சொன்னாரேப்பா” டாக்டரா நம்மள படைச்சாரு? கடவுள்தானே நம்பள படைச்சது என்று சொல்லி, நான் வேண்டாம்ன்னு சொன்னதையும் கேட்காம ஒரு வாரிசு வேணும் இந்த ஒருவாட்டி மட்டும் போயிட்டுவாங்கன்னு அவனே எல்லா ஏற்பாடும் பண்ணி அனுப்பிச்சு வச்சான். நானும் என் சம்சாரமும் திருநல்லாறு போயி சனீஷ்வரன கும்பிட்டுவிட்டு கோயில விட்டு வெளியேவரும் போது, அமாவாச இருட்டுவேர.. அந்த நேரத்துல ஒரு கொழந்த அழுகை சத்தம் ரொம்ப நேரமா கேட்டுச்சு, அந்த கும்மிருட்டுல எங்க இருந்து அழுகை சத்தம் வருதுன்னு கண்டு பிடிக்கவே ரொம்ப நேரம் ஆச்சு.
பெறகு நானும் ஏ...சம்சாரமும் கொழந்த கத்தர இடத்துக்கு போயிட்டோம் (இருள் என்பது குறைந்த ஒளி என்று பாரதி சொன்னாரே) அந்த அமாவாச இருட்டு வெளிச்சத்துல இந்த குருட்டு பய கண்ணுவேற சரியா தெரியல.. வயசு அம்பது ஆச்சுல்ல... நான் ஒன்னும்புரியாம நின்னப்ப மழைக் காத்து வேர. மழைய அறிஞ்ச பூமியோட மணம் மூக்க தொளைச்சுது... கொழந்த அழுகை சத்தம், கழுத்து அறுபட்ட ஆடு கதறுவது போல இருந்தது.. அந்த நேரத்துல பளிச்சுன்னு ஒரு மின்னல், அந்த வெளிச்சத்துல எந்த பாவி பெத்த புள்ளயோ, பச்சபுள்ள தொப்புள் கொடி அப்பதான் அறுந்து இருக்கும் போல.. அந்த கொழந்த சப்பாத்தி கள்ளிச்செடி மேலே ரத்தம் சொட்ட கத்திக்கிட்டு இருந்துச்சு, மின்னல் வேற நிக்கல.. நான் என்ன பண்றதுன்னு புரியாம இருந்தப்போ ஏ...சம்சாரம் அந்த கொழந்தைய தூக்கினா... மழைவேற ச்சோன்னு கொட்ட ஆரம்பிச்சுச்சு நாங்க கோயில் மண்டபத்துக்குள்ள மழையோட கொழந்தைய தூக்கிட்டு போயி அந்த சாமிக்கு வெச்ச வெளக்கு வெளிச்சத்துல கொழந்தைய பார்த்தா வெள்ள வெளேர்ன்னு ஆம்புள புள்ளனு தெரிஞ்சது. அப்பவும் குழந்தை அழுவறத நிறுத்தல.. ஒரு வேல குழந்தைக்கு பசிக்குதோனு , நா... கோயில்ல இருந்த ஐய்யருகிட்ட போயி சாமிக்கு வச்சு இருந்த பால கொஞ்சம் கேட்டப்ப ஐயறு தயங்கினாரு. கொழந்தைக்கு கொடுத்துட்டு அந்த எச்சில் பால எப்படி சாமிக்கு ஊத்துறதுன்னாரு... குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு எல்லாரும் சொல்றாங்களே ஐயரே... பரவாயில்ல கொடுங்கன்னேன் ... ஐயறு மனசு வந்து கொடுத்தாரு அந்த பால கொழந்தைக்கு கொடுத்தப்ப அதுவும் மொடக்மொடக்குன்னு குடிச்சுச்சு. பால குடிச்சு முடிக்கிறதுக்குள்ள கொழந்த ஏ...சம்சாரம் மடியில தூங்கிடுச்சு.
அசதியில சம்சாரமும் உக்கார்ந்த படியே தூங்க நானும் அவ பக்கத்துலயே தூங்கிட்டேன், பொழுது பளபளன்னு விடிஞ்சுடுச்சு. நாங்க முழிக்கிறதுக்கு முன்னாடியே மழைத்தண்ணிய கண்ட தவளைகளோட கொண்டாட்ட சத்தத்தில குழந்தை முழுச்சு... “ ங்கா ” -ன்னு சொல்லிகிட்டு இருந்தான், நானும் ஏ...சம்சாரமும் அதை பாத்து சந்தோஷப்பட்டோம், அந்த சமயத்துல எங்க பக்கத்துல ஒரு சாமியார் வந்து வயசாகியும் இளமை இருக்குன்னு தெரியுது என்றார், இல்ல சாமியாரே இது என் கொழந்தை இல்லன்னு நடந்தத சொன்னேன். சாமியார் வாய்விட்டு சிரித்துவிட்டு “யாரோ ஒரு வேசியின் காமத்தின் சந்தோஷத்தால் உபரிய பாவி இவன், நீங்கள் எடுத்துச்செல்லுங்கள் -ன்னாரு,
“எப்படி சாமின்னேன்”
“குழந்தை வரம் வேண்டிதானே இங்கு வந்தீர்கள்”
“ஆமாம்”
“அப்ப சாமி கொடுத்த குழந்தைய எடுத்துட்டுபோங்க”
நான் தயங்கிகொண்டே.... இந்த கொழந்தையோட உறவுக்காரங்க யாராவது வந்தா? “தொப்புள் கொடி அறுந்தவுடன் தாயும் சேயும் வேறுவேறே... அதன்பின் உறவு என்பது ஏதப்பா.... என்பதைத்தான் இவனைப் பெற்றவள் ஊர்சிதப்படுத்தியிருக்கிறாள்... என்றார். பிறகு கொழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு போன நாங்க அந்த கொழந்தைய எடுத்துக்கிட்டு வந்தோம். அப்படித்தான் என் ராஜா எங்ககூட வளர்ந்தான். அங்கதான் ஆரம்பிச்சு இருக்கு என் பங்காளிகளுக்கு என்னபெத்த ராஜா மேல பகை.......
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|