|
யாவரும் கேளிர் - பகுதி - 14 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
செல்லப்பா தற்போது படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்துக்கு ஸ்டீபன் வாத்தியாரை பார்க்க செல்கிறான். அவன் பள்ளிக்கூட வாசலை அடைந்தபோது, அவனுக்கு இதற்குமுன்பு இல்லாத உணர்வை உணர்கிறான். அவன் அந்த பள்ளியிலிருந்து வேறோர் பள்ளிக்குச்செல்கிறான் என்று ஏற்கனவே அறிந்த அவனுடன் படித்தவர்கள், அவனைத்தாண்டி செல்லும்போது அவனை மறந்து கடந்துகொண்டு இருக்கிறார்கள். அவனுக்கு ஏனோ தான் அறிந்தும் அறியாத ஒன்றை அறிகிறான். பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் வகுப்புகள் தொடங்க இன்னும் சிலநிமிடங்கள் இருப்பதால் அனைவரும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு தங்கள் வகுப்புகளை நோக்கி ஒடுகின்றனர். பள்ளி மைதானத்தில் திருவிழாபோல் பள்ளிமாணவர்கள் கூட்டம்.
செல்லப்பா அந்தக்கூட்டத்தின் நடுவில் திருவிழாவில் தன் தாய்,தந்தையை தொலைத்த குழந்தையைப்போல் நடந்துசெல்ல பெல் அடிக்கப்படுகிறது.உறுதிமொழி எடுக்க குழந்தைகள் வரிசையில் நிற்க, அதற்குமுன்பு அணுகுண்டு வெடித்தால்கூட வெளியே கேட்காத அளவுக்கு சத்தமிட்ட குழந்தைகள், ஒரு மணியோசை சத்தத்தால் தற்போது குண்டூசி தவறி தரையில் விழுந்தால்கூட கேட்டுவிடும் ஒரு நிசப்தம் அங்கே நிலவுகிறது. அப்பள்ளியின் மாணவத்தலைவன் “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்...எனக்கூவிக்கொண்டு இருக்கும்போது ஒருவன் அந்த அமைதியில் தனக்கு வந்த மூக்குசளியை கட்டுபடுத்த முடியாமல் சிந்தி கையில் எடுத்து தனக்குமுன்வரிசையில் கண்மூடிநின்றவனின் வெள்ளை சட்டையில் பின் புரம் தடவ” ஒழுக்க உறுதிமொழி முடிந்து அனைவரும் வரிசையாக தங்கள் வகுப்பறைகளுக்குச் செல்கின்றனர். செல்லப்பா ஸ்டீபன் வாத்தியார் அறைக்குச் சென்று, “வணக்கம் அய்யா (பிறகு “நன்றி அய்யா” என்று சொல்ல) “எனக்கு எதற்கு நன்றி சொல்ற? ” ஸ்டீபன் வாத்தியார் கேட்க, செல்லப்பா அவரிடம் “நீங்கதானே சொல்வீங்க செய்த உதவிய மறக்கிறதுக்குள்ள நன்றி சொல்லனும்னு... இல்லேன்னா செய்த உதவியையும் மறந்து நன்றியையும் மறந்துவிடுவோம் அதனால உதவி செஞ்சவங்களுக்கு உடனே நன்றி சொல்லனும்னு”சொல்வீங்கலே “ சரி...சரி இந்த நன்றிய ஒம்படிப்பிலகாட்டு “ என்று ஸ்டீபன் வாத்தியார் சொல்லும்போதே அவரின் கால்களைத்தொட்டு கும்பிடுகிறான் செல்லப்பா .
அவர் அவனை தூக்கி நிறுத்தும்போது “நான் எப்படி இருக்கனும்னு சொல்லுங்க சார் “ அதற்கு அவர் முதல்ல இந்த கால்ல கும்பிடும் பழக்கத்தவுடு“ . உலகத்தில ரொம்ப ரொம்ப ஈஸியான ஒன்னு அடுத்தவனுக்கு அறிவுரை சொல்றதுதான். அது ஒனக்கு வேணாம். நீ நீயா இரு... நீ யாராக இருக்கவும் ஆசைபடாதே. அப்படியே ஆசைப்பட்டாலும் இளங்கோ அடிகள், விவேகானந்தர், வள்ளுவன், பாரதியார்...வேண்டாம் வேண்டாம் பாரதியார் கடைசிவரை வாழ்க்கையோடு போராடி போராடி முடியாமல் தோற்றுப்போய் அவரையே இழந்தவர். இன்று அவர் பாடலால் மட்டுமே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். [போரும், காதலும் தன் தோல்விகளால்தான் வரலாறு ஆகிப்போகிறது]. நீ யாராகவும் ஆகவேண்டாம். நீ, நீயாகவே இரு. ஆனா இந்த பள்ளிப்படிப்பு எல்லாம் உன் வாழ்க்கையை எதிர்கொள்ள போற வழியைமட்டுமே சொல்லும். ஆனா நீ சந்திக்கும் ஒவ்வொன்றையும் அறிந்துகொள். அது எதுவாயினும் அதுதான் உன் வாழ்க்கைப்பாடம்.
அதுவே நீ உன்னைஅறிந்துகொண்டால் அதுவே உன் வாழ்க்கைப் பாதையின் வெற்றிப்படிகள். அதுவும் ஒரு தனிமனிதனின் செயலல்ல, அதில் நீ பயணிப்பதற்கு உன்னையே இழக்க வேண்டும். ஒருவன் தன்னை முழுமையாக அறிந்துகொண்டால் அதன்பின் வெற்றித்தோல்வி என்பதும் என்ன? இது எல்லாவற்றையும்விட நாம் பொறந்த அன்றைக்கே நாம் இறக்கும் நாட்களும் நம்மை துரத்துகின்றன. அதையும் மீறி நாம் வாழும் நாட்களை கடக்கிறோம். நாம் இழக்கும் ஒவ்வொரு நாளும் பயன் உள்ளதா என்று நீ உன்னை கேள்விகேட்க தயார் படுத்திக்கொள்” என்று சொல்லி ஒரு நல்ல மாணாக்கனை இப்பள்ளி இழந்ததே ஏன்,,?[என்று தன் நினைவுக்குள்]சரியான கல்விதகுதி பெற கிராமங்களில் மிகப்பெரும்போராட்டமா இருக்கிறதே! இதைபயன்படுத்திக்கொண்டுதான் இன்றுகல்விகூட பெரும் வியாபரம் ஆகிப்போனதோ? எனக்கேள்வியுடன் வகுப்பறை நோக்கி செல்கிறார், செல்லப்பா பள்ளியின் மைதானத்தில் நடக்கும்போது வாத்தியார் அவனுக்கு கூறிய ஆதங்களை எண்ணி, மாணவர்கள் நடந்தும் ஒடியும் பதிந்துக்கிடந்த அந்த காலடிச்சுவடுகளை அவன் தொடர்ந்து கடந்துவந்தபோது மைதானம் முடிந்தது. அப்போது அவன்மீது பலமான காற்று வீசுகிறது. அவனது கண்களில் காற்று அள்ளிவந்த மண் விழ, அவன் தன் கண்களைமூடி இரு கைகளாலும் கசக்கிவிட்டு கண்களைத் திறந்தபோது காற்றும் அவனைக் கடந்துவிட்டது. காற்றில் அவன் கடந்துவந்த காலடித் தடங்களும் அழிந்துக் கிடந்தன...
தொடரும்...
(இப்பகுதி ஒவ்வொரு திங்களன்றும் புதுப்பிக்கப்படும்)
ரவிவர்மன் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ravivarmannet@gmail.com
|