15-06-09 தேதியிட்ட உயிர்மையின் "உயிரோசை" இணைய வார இதழில் வெளிவந்த கலை இயக்குனர் திரு. பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல்.
நேர்காணல் என்பது ஒரு பண்டிகைக்கால கூத்தாகிப் போன இந்தக் கால சூழலில் விஷய ஞானம் உள்ளவர்களின் நேர்காணல்களை காண்பதோ, கேட்பதோ, படிப்பதோ அரிதாகி விட்டது. இந்தக் காலக்கட்டத்தில் மிக நுணுக்கமாக பல செய்திகளையும், கவனிக்கப்பட வேண்டிய பல தகவல்களையும் நமக்கு கொடுப்பதாக உள்ளது கலை இயக்குனர். திரு. பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உயிர்மை நேர்காணல். "வீட்டைக்கூட சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லையென்றால் கலை சார்ந்த ரசனை எப்படி வளரும்." என்று தனது கோபத்தை வெளிப்படுத்தும் திரு. பி. கிருஷ்ணமூர்த்தி "தமிழ்நாட்டின் 400 ஆண்டுக்கால காலகட்டத்தை இருண்ட காலம் என்பேன். பல பிராந்தியங்களிலிருந்து வந்து தமிழகத்தை ஆட்சி செய்தார்கள். இஸ்லாமியர்கள், தெலுங்கர், கன்னடக்காரர்கள், மராட்டியர்கள், ராஜஸ்தானியர்கள், ஆங்கிலேயர்கள் எல்லாம் மாறி மாறி ஆட்சி செய்ததால் நம்முடை கலாச்சாரத்தை, பண்பாட்டை இழந்துவிட்டோம்" என்பது போன்ற தகவல்களால் நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். இனி நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஒரு சந்திப்பு -- சந்திப்பு: த. ஜெயகுமார், சிவன்
"வீட்டைக்கூட சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரியவில்லையென்றால் கலை சார்ந்த ரசனை எப்படி வளரும்."
 |
தமிழ்த் திரைப்படங்களில் கலை இயக்கம் எனும்போது பிரமாண்டமான ராஜா காலத்து அரண்மனைகளும், கோட்டை மதில்களும் கண்முன் நிற்கும். புராண கால கதைகளை படங்களாக எடுக்கும் போது, இதுபோன்று கலை இயக்கம் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டன. பிறகு சிவாஜி, எம்ஜிஆர் காலத்துப் படங்களிலும் பெரிய பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவையெல்லாம் யதார்த்தத்தைப் பிரதிபலித்தனவா என்றால் இல்லையென்றே துணிந்து கூற முடியும். தமிழ்ப் படங்களில் யதார்த்த சூழ்நிலையைக் காண வேண்டுமென்றால் அது எழுபதுகளின் பின்பகுதியில் வந்த ‘பதினாறு வயதினிலே’க்குப் பிறகுதான். அதற்குப் பிறகு யதார்த்தம் சார்ந்த சூழல் சீரியஸ் படங்களாகக் கருதப்பட்ட விருதுப் படங்களில் வரத் தொடங்கியது. |
தமிழில் சினிமா தொடங்கி 45 வருடங்களுக்குப் பிறகே நம்மால் அசல் கிராமங்களைப் பார்க்க நேர்ந்தது என்பது தமிழ் சினிமாவின் அவலம். இதற்கு இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பலரை குறை சொல்லலாம். சினிமாவில் கலை இயக்கம் தனித்து இயங்க முடியாது. அதனால் இந்த விஷயத்தில் கலை இயக்குனர்களை குறை சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும் பிரமாண்ட அரங்குகளை மட்டுமே செட் என நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு, யதார்த்த சூழ்நிலையும் செட் போட்டுதான் எடுக்கப்படுகிறது என்பதை நம்ப மறுக்கிறது மனம். யதார்த்தமாக இருக்கிற சூழ்நிலையை அப்படியே கொண்டுவருவதுதான் ஒரு கதைக்கு முக்கியமானது. அதைத் தமிழில் கொண்டு வந்த கலை இயக்குனர்கள் மிகக் குறைவு. சமீபத்தில் வெளியான இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தின் கலை இயக்கம் மிரட்டியது என்று சொல்லலாம். காசியை கண்முன் கொண்டுவந்தது, பிச்சைக்காரர்களின் கொடூர முகாம், மலைக்கோயில் என மரபு சார்ந்த கலையை கதாபாத்திரங்களுக்குப் பின்னே நிறுத்தியவர் பி. கிருஷ்ணமூர்த்தி. தென்னிந்தியாவில் கலை இயக்கத்துக்காக முதன்முதலில் ‘மத்துவாச்சாரியார்’ என்ற கன்னடப் படத்துக்காக தேசிய விருதைப் பெற்றவர் பி. கிருஷ்ணமூர்த்தி. பாரதி, அழகி, பாண்டவர் பூமி, இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற படங்களுக்கு இவர் செய்த கலை இயக்கம் பெரியளவில் பேசப்பட்டது. வியாபாரப் படங்களுக்கு விலைபோகாமல் அவருக்கே உரிய பாணியில் சினிமாவில் தன் இருப்பை உறுதி செய்து வருகிறார். உயிரோசைக்கு அவர் அளித்த பேட்டி.
உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்களேன்?
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள பூம்புகார். என் அப்பா காசி வெங்கடாசலம் ஒரு எழுத்தாளர். எனக்குக் குழந்தைகள் கிடையாது. ஒரு சகோதரி, ஒரு சகோதரன் அவ்வளவுதான். நான் மட்டுமே கலைத்துறைப் பக்கம் திரும்பிவிட்டேன். அவர்கள் வேறுவேலைக்குச் சென்றுவிட்டார்கள்.
அப்புறம் எப்படி ஓவியத்துறைக்கு வந்தீங்க?
1948-ல் பிறந்த நான் 60-களில் தான் சென்னைக்கு வந்தேன். ஆரம்ப காலங்களில் ஓவியம் வரைந்து வந்தேன். அறுபதுகளின் இறுதியில் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் முதலில் வரையத் தொடங்கினேன். பின் பிரக்ஞை, கணையாழி, ஆனந்த விகடன், குங்குமம் எனத் தொடர்ந்தது.
சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?
70-களில் தான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது. முதலில் கன்னடத்தில் வெளிவந்த ஜி. வி. அய்யரின் ‘ஹம்ச கீதை’ என்னும் படம் தான் என் முதல்ப் படம். தொடர்ந்து மலையாளப் படங்களில் பணியாற்றினேன். மலையாளத்தில் ‘பெருந்தச்சன்’ போன்ற படங்கள் செய்திருக்கிறேன். பின் தெலுங்கில் சில படங்களுக்கு வேலை செய்துள்ளேன்.
தமிழில் ஏன் படம் செய்யவில்லை?
தொடர்ந்து சீரியஸ் படங்களாகவே செய்தேன். 20 வருஷங்களாக பிறமொழிப் படங்களிலே வேலை செய்தேன். ஏனென்றால் அந்த ஸ்கிரிப்ட் பிடிச்சது. இன்னொன்று வாய்ப்பும் அப்படி அமைந்தது.
எந்தப் படம் மூலம் தமிழுக்கு வந்தீங்க?
நடிகை திவ்யபாரதி நடித்த நிலாப் பெண்ணே(1990) என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தேன். பின் இந்திரா பார்த்தசாரதியின் கதையான ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற படம் கூத்துப்பட்டறை நா. முத்துசாமி வசனத்தில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு கலை இயக்கம் பார்த்தேன். அடுத்து பிரதாப் போத்தன் இயக்கத்தில் ‘ஆத்மா’ என்ற படத்தில் பணிபுரிந்தேன்.
பின் எப்படி பாரதிராஜா படங்களுக்கு வேலை செஞ்சீங்க?
1992-இல் நாடோடித் தென்றல் படத்திற்கு பாரதிராஜா அழைத்தார். தொடர்ந்து அவருடன் பசும்பொன், தமிழ்ச்செல்வன், தாஜ்மஹால் போன்ற படங்களில் பணிப்புரிந்தேன். இதில் தாஜ்மஹால் படம் சற்று வித்தியாசமான முயற்சியுடன் செய்யப்பட்ட படம். ஃபேன்டஸியான கிராமத்தைக் கொண்டு வந்திருப்போம். பத்திரிகைகள் எல்லாம் பாராட்டினாங்க. ஆனால் படம் பெரிய அளவில் ஓடலை. அடுத்து சுஹாசினி இயக்கத்தில் இந்திரா, தங்கர் பச்சானின் ‘அழகி’, ஞானராஜசேகரனின் ‘பாரதி’ சேரனின் ‘பாண்டவர் பூமி’ சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி போன்ற படங்களுக்குப் பணிபுரிந்துள்ளேன். இப்போது பாலாவோடு ‘நான் கடவுள்’.
பாரதி படத்துக்கு பணிபுரிந்த அனுபவம் பற்றி?
 |
ஞானராஜசேகரனுடன் ஏற்கனவே ‘மோகமுள்’ படத்துக்கு வேலை செய்துள்ளேன். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் பாரதி. பாரதி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர். அந்தக் காலகட்டத்தைக் கொண்டு வந்ததற்காகவே எனக்கு சிறந்த கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்புக்காக தேசிய விருது கிடைத்தது.
இவ்வளவு சிறப்பான (யதார்த்தமான) படங்கள் செய்திருக்கிறீர்கள்? பெரிய அளவில் அறியப்படவில்லையே ஏன்?
நான் வியாபாரி அல்ல. எல்லாம் வந்து என் படத்தைப் பாருங்க என்று கூவி அழைக்க. நான் கலைஞன். எனக்குப் பிடிச்ச |
யதார்த்தமான விஷயங்களை படங்களில் நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்கிறேன்.
அதை மற்றவர்கள் பார்த்துதான் எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டும். அதேபோல் நான் விமர்சகனும் இல்லை. என்ன பண்றது ஒரு கல்லூரி பேராசிரியர்கள் கூட மூன்றாம் தர பாடல்களை விரும்பிக் கேட்கும் சமூகத்தில் நாம் இருக்கிறோம்.
அப்படியென்றால் மக்களுக்கு ரசனை இல்லை என்கிறீர்களா?
நிச்சயமாக. . . யதார்த்த வாழ்வில் ஒரு வீட்டைக் கூட சுத்தமாக வச்சுக்கத் தெரியவில்லையென்றால் கலை சார்ந்த ரசனை எப்படி வளரும். அழகியல்(Aesthetics) வளரணும். அது வளரவில்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.
இங்கு நிறைய பேருக்கு Skill ஐயும் Creativityஐயும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியமாட்டேங்குது. ஒருத்தன் சுசீலா பாட்டை அப்படியே பாடினால் அது க்ரியேட்டிவிட்டி கிடையாது. அதே மாதிரி கம்பராமாயணத்தில் வருகிற பாடலை ஒருத்தன் எழுதினால் அது க்ரியேட்டிவிட்டி கிடையாது. Skill. ஆனால் Skill இனுடைய எல்லைதான் அடுத்து க்ரியேட்டிவிட்டியாக மாறும். ஆனால் நிறைய பேர் இன்னும் ஒருத்தர் திறமையாக இருப்பதையே க்ரியேட்டிவிட்டியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். What is skill? What is creativity? இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிய வேண்டும். வீட்டை சுத்தமாக வச்சுக்கிறது ஒரு Skill. ஆனால் அதை ரசனையோடு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளும் போதுதான் அதிலிருந்து அழகியல் பிறக்கும். மற்ற விஷயங்களையும் அழகியலோடு(ரசனையோடு) பார்க்க முடியும். துணி தைப்பது, ஒரே மாதிரியான சிற்பம் செய்வது, இலக்கணத்தோடு ஒரு மரபுக் கவிதை இயற்றுவது இவற்றையெல்லாம் எப்படி கலை என்று சொல்ல முடியும். ஒரு சட்டை தைப்பதற்கான Systamatic முறையை வைத்துக் கொண்டு ஒரு சட்டையைத் தைக்கிறீர்கள் என்றால் எப்படி அது கலை ஆகும். அது தொழில்(Craft) என்று தான் சொல்ல முடியும். ஒரு உருவத்தைப் பார்த்து களிமண்ணால் அதே உருவத்தை செய்தால் அதுவும் தொழில்தான். இலக்கணத்தோடு ஒரு மரபுக் கவிதையை இயற்றினால் அதற்கு அது கவிதை ஆகாது. அதில் நீ என்ன புதிய Concept கொண்டு வந்திருக்கிறாய் என்பதைப் பொறுத்துதான் அதை களையாகும். இருக்கிற விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதினால் எப்படி படைப்புத் திறனைச் சாரும்.
சரியான கலை விமர்சகர்கள் இல்லையென்பதுதான் காரணம் என நினைக்கிறீர்களா?
சரியான கலை விமர்சகர்கள் இப்போது இல்லை; எப்போதும் தமிழில் இருந்தது இல்லை. ஏனென்றால் கலையை விமர்சிப்பவர்களுக்குக் கலை என்றாலே என்னவென்று தெரியாது. தற்போது ஆங்கிலத்தில் கூட விமர்சகர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் எல்லாம் இங்கே Artificial ஆகிக் கொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றியே இப்போதெல்லாம் எவ்வளவு விஷயங்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை கவனிக்க முடிகிறதா? கலாச்சாரக் கலவை(Culture Mixture) என்று சொல்வார்களே? அதுபோன்று. வீட்டில் 10, 20 வருஷங்களுக்கு முன் வாங்கிய போன் இருக்கும். மகன் நேற்று நியூயார்க் நகரில் வாங்கி வந்த விலையுயர்ந்த புதிய செல்போன் வைத்திருப்பான். அப்பா சாதாரண செல்ஃபோன் வைத்திருப்பார். அதேமாதிரி தான் தாத்தா பாரம்பாரியமான வேட்டி கட்டிக்கொண்டிருப்பார். மகன் 70, 80களின் மாடல்களில் ஃபேண்ட் போட்டிருப்பார். பேத்தி புத்தம் புதிய ஜீன்ஸ் போட்டிருக்கும். நம் வீட்டுக்குள்ளே இவ்வளவு வேறுபாடுகள் உள்ளன.
ஏன் இப்படி?
கலை, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. கலை பற்றிய விழிப்புணர்வு கொடுத்தால் தான் கலை பற்றிய ஒரு பொதுவான ‘கான்செப்ட்’ உருவாகும். படைப்புத் திறன் வளரும். உருவாகும். சினிமா, ஓவியம், இலக்கியம் எல்லாத்திலும் வளர்ச்சி உண்டாகும். அவற்றின் வளர்ச்சி இல்லாமல் எப்படி மனித இனத்தின் வளர்ச்சி சாத்தியமாகும்.
சரிங்க. சினிமாவில் கலை இயக்குனரின் பணி என்ன?
ஸ்கிரிப்ட்டை நல்லா படிக்கணும். அது நமக்கு சரிப்பட்டு வருகிற கதையா? என்பதைப் பார்க்க வேண்டும். பின் கதையில் எதையெதை லைவா(Live) எடுக்கப்போறோம், எதை செட் போட்டு எடுக்கப் போறோம் என்பதை பிரிச்சிக்கணும். செட் போட்டு எடுக்கப்போவதை வரைந்து கொடுக்கணும். லைவ்வா எடுக்கப் போறதை போட்டோஸ் கொடுக்கணும்.
அடுத்து கேரக்டர், கேரக்டர் யார்? வக்கீலா. . . வக்கீலுக்கு எந்த வயசு, 40 வயசுக்கு மேற்பட்ட வக்கீலா. முடி, நரைச்ச முடியா. நரைக்காத முடியா. எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது. 1920, 1950, 2009. அடுத்து எந்தப் பொழுது. எந்த இடம்? ரோடா, கோர்ட் நுழைவாயிலா, அந்த இடத்திற்கு என்ன ஒளி வேண்டும். என்ன நிறம் வேண்டும் என எல்லாமே முடிவு செய்வது ஒரு கலை இயக்குனரின் பணியாகும்.
இது மட்டும் போதுமானதா?
Things Properties, Atmosphere Properties என இருவகை உண்டு. ஒரு கேரக்டர் கையில் என்ன வைத்திருக்க வேண்டும். அதே கேரக்டர் எந்த மனநிலை Mood-இல் உள்ளார் என்பதை கவனித்து அதற்குத் தகுந்த மாதிரி பின்புறங்களை(Backdrops) அமைப்பது கலை இயக்குனரின் முக்கிய பணியாகும்.
நான் கடவுள் படத்தில் வரும் காசி சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்தந்த இடங்களிலே எடுக்கப்பட்டதா அல்லது செட் போட்டு எடுக்கப்பட்டதா?
எல்லாமே செட் போட்டு எடுக்கப்பட்டதுதான். அகோரிகள் வணங்கும் வீரபத்திர சாமி, பிணங்களை எரிக்கும் படித்துறை, மக்கள் நடமாடும் பகுதிகள் எனப் பல இடங்கள் செட் போட்டு எடுக்கப்பட்டவை.
பிச்சைக்காரர்களை கொடுமைப்படுத்தும் பூமிக்கடியில் உள்ள இடம் இருக்கிறதா?
அது காஞ்சிபுரத்துக்கு அருகில் செட்டாக அமைக்கப்பட்டது. அதேபோன்று மலைக்கோயில் கதாநாயகன் இருக்கும் இடமும் வேரோடு இருந்த மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்டது.
அதேமாதிரி 23ஆம் புலிகேசியில் அரங்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. எப்படி அமைத்தீர்கள்?
இம்சை அரசனில் வெளிப்புறக் காட்சிகள் (Exterior) அரண்மனை முன் நடக்கும் இறுதிக் காட்சி, குதிரை சண்டை எல்லாம் செங்கல்பட்டு அருகில் அமைக்கப்பட்டது. பீரியட் படம் என்பதால் முகப்புகளுக்கு பழுப்பு நிறம் பூசப்பட்டது. உட்புறக் (Interior) காட்சிகளான அந்தப்புரம், தர்பார் எல்லாம் பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டது.
ஏன்? உங்கள் படங்களில் யதார்த்த சூழ்நிலையே அதிகம் பிரதிபலிக்கப்படுகிறது?
அதுதானே உண்மைநிலை(Authentity). அதுதானே இங்கே இருக்கிறது. ஒரு வேலை இல்லாதவன் காரில் வருவது போன்ற காட்சியோ, வசதியானவன் போல் சட்டை அணிவதோ யதார்த்த நிலையை மீறியவை. யதார்த்தமான சூழ்நிலையைத்தான் என் கதையில் நான் பிரதிபலிக்கிறேன். அதனால் எனக்குப் பொருந்தி வருகிற யதார்த்தக் கதையைத் தேர்வு செய்து பணிபுரிகிறேன்.
அதேபோன்று பீரியட் படமும் செய்கிறீர்கள் எப்படி?
 |
தமிழ்நாட்டின் 400 ஆண்டுக்கால காலகட்டத்தை இருண்ட காலம் என்பேன். பல பிராந்தியங்களிலிருந்து வந்து தமிழகத்தை ஆட்சி செய்தார்கள். இஸ்லாமியர்கள், தெலுங்கர், கன்னடக்காரர்கள், மராட்டியர்கள், ராஜஸ்தானியர்கள், ஆங்கிலேயர்கள் எல்லாம் மாறி மாறி ஆட்சி செய்ததால் நம்முடை கலாச்சாரத்தை, பண்பாட்டை இழந்துவிட்டோம். முதலில் நம்மூர் பெண்கள் ரவிக்கை அணிய மாட்டார்கள். இஸ்லாமியர்களின் வருகைக்குப் பின்தான் ரவிக்கை போடும் வழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன் வெறும் கச்சைதான் கட்டியிருப்பார்கள். இதேபோன்று ஒவ்வொருவரது ஆட்சிக் காலத்திலும் ஒவ்வொரு விஷயங்கள் நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்டது. இதுபோன்ற விஷயங்கள்தான் பீரியட் படம் எடுக்க உதவியாக இருக்கிறது. |
வண்ணம்(Colour) சார்ந்து கலை இயக்கத்தில் அதன் பங்கு என்ன?
கலர் தான் ஒரு படத்திற்கு காட்சித் துல்லியத்தை(Visual Quality) கொடுக்கிறது. அதேசமயம் கலர் காலகட்டத்தைக் குறிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பாரதி படத்தில் மஞ்சள், பழுப்பு இரண்டும் பயன்படுத்தியிருப்போம். இம்சை அரசனில் பழுப்பு நிறத்தைப் பயன்படுத்தியிருப்போம். அதேபோன்று வெள்ளை நிறப் புடவையை தமிழ்நாட்டில் அபசகுனமா பார்ப்பார்கள்; விதவையைக் குறிக்கிறது. கேரளாவில் மங்களமாக பார்ப்பார்கள். மேற்கு வங்காளத்தில் ஒரு மாதிரி குறிப்பார்கள். பொதுவாகக் கறுப்பு துக்கத்தின் அடையாளமாகக் குறிக்கப்படுகிறது. அதற்குத்தான் சபரிமலை கோயிலுக்குக் கறுப்புத் துணி அணிந்து செல்பவர்கள் தங்களுடைய துக்கங்களை அங்கயே விட்டுச் செல்லவேண்டும் என்பது ஐதீகம். அதேமாதிரி காவி நிறம் நெருப்பைக் குறிக்கும். அதாவது தீயவைகளைச் சுட்டு எரிப்பது என்ற அர்த்தத்தில் குறிக்கப்படுகிறது.
Ethnic colour, Country colour, Religious colour எனப் பல வகைகளில் நிறங்களைப் பயன்படுத்துகிறோம்.
நிறங்களை மேற்கு நாடுகளின் படங்களில் குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள்? இங்கே ஏன் அதுபோன்று செய்யப்படுவதில்லை?
இயக்குனர்கள் யாரும் அது மாதிரி விருப்பப்படுவதில்லை. மலையாளத்தில் ஓரளவு ஏற்றுக்கொள்கிறார்கள். நான் செய்த மலையாளப் படமொன்றில் தாமரைப் பூவை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருப்பேன். தொடர்ந்து அதுபோன்ற விஷயங்களுக்கு இங்கே வரவேற்பு இல்லை.
கலை இயக்குனர் ஆவதற்கு ஓவியராக இருப்பதுதான் அடிப்படைத் தகுதியா?
அப்படிச் சொல்லிட முடியாது. ஏனென்றால் சினிமாவில் நிறைய பேர் ஓவியராக இல்லாமலே கலை இயக்குனராக இருக்கிறார்கள். அவர்கள் பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓவியன் என்பது மட்டுமே அடிப்படைத் தகுதியாக இருக்க முடியாது. பார்த்தல், கேட்டல், நுகர்தல் போன்ற பல விஷயங்கள் சேர்ந்த ‘கவனித்தல்’(Observation) என்னும் விஷயத்தில் இருக்கிறது. எந்த விஷயத்தையும் நுணுக்கமாக கவனிக்கத் தொடங்கினாலே போதும், க்ரியேட்டிவ் வளரும். தனியாக இருட்டில் உட்கார்ந்து யோசித்தால் வராது. சூனியத்திலிருந்து எதுவும் வராது.
ஃபேன்டஸியான செட், மரபு ரீதியிலானது (Traditional) எதை அமைப்பதில் சிரமம்?
சிரமம் எல்லாத்திலேயும் இருக்கு. சிரமமில்லாமல் எதுவும் இல்லையே. அதேபோன்று அமைப்பதில் அழகியல் இருக்க வேண்டும்.
சரி. மக்களிடம் ரசனை வளர என்னதான் செய்ய வேண்டும்?
சரியான கல்வியை(Proper Education) கொடுங்க. நல்ல சினிமாவை எடுங்க. தொடர்ந்து மக்களை Cultivate செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உங்களின் ஓவியப் பங்களிப்பு பற்றிச் சொல்லுங்க?
சோழமண்டல் ஆர்ட் அண்ட் கல்ச்சர் என்னும் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவன். தொடர்ந்து ஓவியங்கள் வரைந்து வருகிறேன். நானும் ஆதிமூலமும் ஒரே காலத்தில் பத்திரிகைகளில் ஓவியம் வரைய வந்தவர்கள். கசடதபறவில் வரைய அறிமுகப்படுத்தியதே நான்தான். தொடர்ந்து அவர் அதுபோன்ற சிற்றிதழ்களில் இயங்கினார். நாங்கள் சினிமா, பத்திரிகை எனப் பல தளங்களுக்குச் சென்றுவிட்டோம். நல்ல மனிதர் என்று ஆதிமூலத்தைச் சொல்வேன். தனபால், தண்டபாணி எனப் பல ஓவியர்கள் எனக்கு நண்பர்கள். லலித் கலா அகாடமியில் 1920-40 காலகட்டத்தில் சென்னை எப்படி இருந்தது என்பது பற்றிய ஓவியக் கண்காட்சியை நடத்தியுள்ளேன். தொடர்ந்து ஓவியத்தில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.
உங்களுக்குக் கலை இயக்குனர், ஓவியன் இரண்டில் எதுவாக இருப்பதில் திருப்தி?
ஓவியனாக இருப்பதில் மட்டுமே திருப்தி காண முடியும். சினிமாவில் சில காம்ப்ரமைஸ் இருக்கிறது. ஓவியத்தில் அதற்குள் இடமில்லை.
எந்தளவிற்கு வாசிப்புப் பழக்கம் உள்ளது?
நிறைய படிப்பேன். பல எழுத்தாளர்கள் எனக்கு நண்பர்களாக உள்ளனர். ஆனால் இப்போது படிப்பதற்கு நேரம் இல்லாமையால் வாசிப்பது குறைந்து வருகிறது. இருப்பினும் சுந்தர ராமசாமியின் ‘புளிய மரத்தின் கதை’ யை ஸ்கிரிப்ட்டாக எழுதி வைத்திருக்கிறேன். அவ்வப்போது பல ஸ்கிரிப்ட்டுகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஒரு சிலருடை ஓவியங்கள் நன்றாகப் புரிகிறது. சிலருடைய ஓவியங்கள் புரியமாட்டேங்குது ஏன்?
ஓவியம்(Painting) உள் மனதைச் சொல்வது. சிலருடைய ஓவியங்கள் புரியவில்லையென்றால் தொடர்ந்து அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதும், அவர்களின் ஓவியங்களைப் பார்ப்பதுமே அவர்களின் ஓவியங்களைப் புரிய வைக்கும்.
கலை என்பது என்ன செய்கிறது?
ஒரு நிதானத்தைக் கொடுக்கும். வாழ்க்கை என்னவென்று புரிய வைக்கும்.
நன்றி: உயிரோசை
இன்னும் படிப்போம்...
|