30/09/08 ஆம் தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரை நம்மை சற்றே சிந்திக்க வைத்திருக்கிறது. தலைநகரம் சென்னையில் கூட என் அரசாங்கம் இத்தனை மெத்தனப்போக்கோடு நடந்துக்கொண்டது என்று நம்மை சிந்திகக் வைக்கிறது. கட்டுரையை இங்கு உங்களுக்காக பதிவு செய்கிறோம்.. படியுங்கள் சிந்தியுங்கள்..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குப்பை மேட்டில் ஒரு வேடந்தாங்கல்
சென்னை, வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லப்படும் பிரம்மாண்டமான குப்பைமேடு!
சென்னையின் குப்பைகளைக் கிண்டிப் பசியாற பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறது பெலிக்கன் பறவை. விரையும் வாகன இரைச்சல்களுக்கு இடையே இன்னும் பல நூறு வெளிநாட்டுப் பறவைகள் திடுக்கிட்டுத் தவிக்கின்றன. காகத்தைத் தவிர வேறு பறவையை பார்க்கமுடியாத சென்னை நகரத்துக்குள் விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான பறவைகள் எப்படி வந்தன? குப்பைமேட்டில் இவற்றுக்கு என்ன வேலை?
வேடந்தாங்கலை விட இரண்டு மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த பள்ளிக்கரணை! என்கிறார் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
"கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோ பில்டர். வேண்டாததை உறிஞ்சுவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால் குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன" என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.
"1970 களின் தொடக்கத்தில், வேளச்சேரியில் இருக்கும் என் தாத்தா வீட்டுக்கு வருவேன். பேருந்தில் வரும்போது சைதாப்பேட்டை முடிகிற இடம்தான் கடைசி நிறுத்தம். அங்கே தொடங்கி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் தண்ணீர்தான் இருக்கும். ஏரிக் கரையில் நடந்தபடியே ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் சிறப்பான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாக தண்ணீர் இருக்கும், உயிர் வலம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மாற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால் பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி. 2002 இல் இருந்து இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மற்ற வேண்டுமெனப் பல போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இப்போதுதான் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றி இருக்கிறார்கள்". என்றவர், இவ்வளவு வளமிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாழான கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
"சென்னை நகரம் விரிவடைந்துக்கொண்டே போனபோது, வட சென்னை கிட்டத்தட்ட ஆந்திர எல்லையைத் தொட்டுவிட, தென் சென்னையின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. வெள்ளைக்காரன் காலத்திலேயே 'புறம்போக்கு மேய்ச்சல் நிலம்' என அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சீரழிக்கும் பணி அப்போது மும்முரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 'புதுசா காலனி போடனுமா...பட்டா போடனுமா... பள்ளிக்கரணையில் போடலாம்' என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிவேகமாக நடந்தன. இது எல்லாமே அரசாங்கத்தின் ஆதரவோடுதான் நடந்தது. உண்மையில் பள்ளிக்கரணையைச் சீரளித்ததே அரசாங்கம்தான்.
பெருங்குடியில் குப்பை கொட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியார் கல்லூரிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும் கொடுத்துவிட்டு, வளமான தண்ணீர் உள்ள பகுதியில் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் இஷ்டப்படி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறது சென்னை மாநகராட்சி. ஏறக்குறைய ஐந்து ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலத்தில், இப்போது உயிர்ப்போடு இருப்பது 420 ஹெக்டேர் மட்டும்தான். ஆக்கிரமிப்புகள் போக மீதி இருக்கிற 132 ஹெக்டேர் அளவுக்கு குப்பைகளைக் கொட்டிப் பாழடித்து வைத்திருக்கிறார்கள். சென்ற மாதம் ஏதோ ரசாயனத்தைக் கொட்டியதால் இந்தப் பகுதி தண்ணீர் முழுக்க சிவப்பு நிறமாக மாறிவிட்டது; கூடவே சகிக்க முடியாத நாற்றம் வேறு. மக்கும் குப்பை, மக்காத குப்பை என எல்லாமே ஒன்றாகக் கொட்டி அமுக்கிவைத்திருக்கிறார்கள். குப்பை பொருக்கிறவர்கள் டயர் போன்ற பொருட்களில் இருக்கும் இரும்பைப் பிரித்தெடுக்க நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள். அந்த நெருப்பு எல்லா இடங்களுக்கும் பரவி, ஏரியாவே எப்போதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புகை விடுவதற்குச் சமமான அளவு, புற்றுநோய் உண்டாக்கும் டயாக்சின் உள்பட நச்சு வாயுக்கள், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகிறது. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்னையை எத்தனையோ முறை எடுத்து சொல்லி விட்டோம். இன்னும் நடவடிக்கைதான் இல்லை!" என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ.
தற்போது பள்ளிக்கரணையில் குப்பைமேட்டில் குப்பை போருக்கிறவர்களுகுத் தடை விதித்திருக்கிறது ஒக்கியம் நகராட்சி. ஆனாலும் நூறு சிறுவர்களுக்கு மேல் குப்பை பொறுக்க தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார் குப்பை மேட்டில் காவல் காக்கும் அரசு ஊழியர் ஒருவர். அந்தப் பகுதியைக் கடக்கும்போதே நுனி நாசிவரை நாற்றம் ஏறுகிறபோது, அதிலேயே உழலும் குப்பை பொறுக்கிற சிறுவர்களின் உடல் நலனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்று தெரியவில்லை.
குண்டு ஊசி குத்துமளவுக்குக் கூட இடம் தெரியாமல் மொய்த்துக் கொண்டிருக்கும் ஈக்களோடு நாள் முழுக்க காவலில் இருக்கும் அரசாங்க ஊழியர்களின் நிலைமையும் பரிதாபம்தான்.
"மாநகராட்சி இப்போது கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் மட்டுமே குப்பை கொட்டுகிறது. இந்தக் குப்பைகளிலிருந்து உரம், மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் பெருங்குடியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது" என்கிறார் சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன்.
சென்னையின் நீர்வளம் குறையவோ கூடவோ காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாடுக்கப்படுவதில்தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியளார்கள். இன்னொரு அதிர்ச்சியான விசயமும் தெரிய வந்தது. 2005 இல் சென்னையில் ஏற்றப்பட்ட வெள்ளப்பெருக்குக்குக் காரணம் பள்ளிக்கரனைச் சதுப்பு நிலம் பாழடிக்கப்பட்டதுதான்!
"சென்னையின் ஒட்டுமொத்த மழைநீருக்கும் வடிகாலாக இருப்பது பள்ளிக்கரனைச் சதுப்பு நிலம்தான். ஒரு பக்கம் நீரைத் தேக்கிவைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிறிது சிறிதாக மீதி இருக்கிற நீர் ஒக்கியம் மடுவுக்குச் செல்கிறது. அந்த மடுவிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. அந்த வழியாகத்தான் கடல் நீரும் உள்ளே வரும். ஆனால் ஒக்கியம் மடுவு இருந்த இடத்தை முற்றிலுமாக அடைத்துவிட்டது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. தண்ணீரைத் தேக்கிவைக்கும் இடத்திலும் குப்பைகளைக் கொட்டி சின்ன சின்ன மலைகளை உருவாக்கிவிட்டார்கள். பிறகு எப்படி வெள்ளம் வடியும்? வெள்ளப்பெருக்கு வராமல் இருக்கும்?
ஒட்டுமொத்தமாக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கத்தின் மீது மட்டுமே சொல்லி விட முடியாது. நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால்
போதும் என்று அத்தனை குப்பைகளையும் வீதியில் சேர்க்கிற நாமும்தான் குற்றவாளிகள். எத்தனை பேர் மக்கும் குப்பை, மாகாத குப்பை என்று வீட்டிலேயே தரம் பிரித்து அனுப்புகிறோம்?! நாமே தவறுக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, எல்லாம் பாழான பிறகு உச்சுக்கொட்டுவதில் என்ன பயன்?" - நாளைய சந்ததி கேட்கப்போகும் கேள்வியை இப்போதே கேட்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ.
நன்றி: ஆனந்த விகடன்
இன்னும் படிப்போம்...
|