2000/ஹிந்தி/120 நிமிடங்கள்
மக்கள் திரைப்பட இயக்கம் அல்லையன்ஸ் பிரான்சைஸுடன் இணைந்து 4 நாட்கள் திரையிடல்களை நிகழ்த்தியது. அதில் முதல் நாள் திரையிடப்பட்ட பவாந்தர் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. உயர்சாதியைச் சேர்ந்தவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சன்வாரிதேவியின் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் பவாந்தர்.
சன்வாரி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் சாதின என்ற அரசு வளர்ச்சித் திட்டத்தோடு இணைந்த ஒரு அமைப்பில் உறுப்பினராகச் செயல்படுகிறாள். அவளைப்போலவே அக்கிராமத்தில் பல பெண்கள் அந்த அமைப்பில் உறுப்பினராகிறார்கள். அந்த அமைப்பு உயர் சாதியினரால் நடத்தப்படும் பழங்கால வழக்கமான குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் வழக்கத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடுகிறது. தங்களுக்கு எதிர்ப்பு அதிகமாவதை உணரும் சாதியினரின் கோபம் அனைத்தும் சன்வாரி மீது திரும்புகிறது. சன்வாரி, தன் கணவனுடன் ஊருக்கு வெளியே தனியே வந்துகொண்டிருக்கும்போது கணவனைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, சன்வாரியை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்கள். சன்வாரி, பாதிக்கப்பட்டு அதிர்ச்சியடைந்தாலும், மனம் தளரவில்லை. அவமானத்தால் பின்வாங்கி மூலையில் போய் முடங்கிவிடாமல், எதிர்த்துப் போராட முடிவெடுத்து, களத்தில் இறங்குகிறாள். கணவனின் உதவுயுடன் காவல்துறையில் புகார் செய்கிறாள். தனக்கு நீதி கிடைக்க அரசு இயந்திரத்தின் உதவியை நாடுகிறாள். அவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால், காவல்நிலையம், மருத்துவமனை, நீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் அவள் ஏளனமாகப் பார்க்கப்படுகிறாள். இருந்தாலும் உறுதியுடன் போராடுகிறாள்.
வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. சன்வாரியை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய உயர்சாதியினர் நால்வரும் அமைச்சரின் உதவியை நாடுகின்றனர். விஷயம் ஆளும்கட்சி-எதிர்கட்சி விஷயமாக்கப்படுகிறது. வழக்கைச் சீர்குலைக்க திரைமறைவு வேலைகள் நடைபெறுகிறது. சன்வாரிக்கு ஆதரவாக வாதாட பல தடைகளைத் தாண்டி உயர்சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரே முன்வருகிறார். வழக்கு நடைபெறும்போது, விசாரணை என்ற பெயரில் சன்வாரி அவமானப்படுத்தப்படுகிறாள். நீதிக்கான அவளது போராட்டம், அவளுக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரத்தைவிடக் கொடுமையாக இருக்கிறது.
அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்கிறாள். இறுதியில், நீதிமன்றத்தில் சன்வாரிக்கு நீதி கிடைக்கவில்லை. இதனாலெல்லாம் தளராத சன்வாரி ஆதிக்கச் சாதியினரின் தகாத நடவடிக்கைகளை-அம்பலப்படுத்த-பெண்களை ஒருங்கிணைத்து போராட்டக் களத்தில் ஈடுபடுத்த களம் இறங்குகிறாள்.
காலம் காலமாக, வளர்ச்சியடையாத பாலைவனக் கலாச்சாரம் நம் கண்முன்னே உயிரோட்டமாய் நிறுத்தப்படுகிறது.
நவீன ஜனநாயக யுகத்தில் நிலவுகின்ற நிலப்பிரபத்துவ, ஆணாதிக்கக் கலாச்சாரத்தைப் படம் ஆழமாகச் சித்தரிக்கிறது. பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. ஆதிக்க சக்திகளுக்கே எப்போதும் ஆதரவாகச் செயல்படும் அரசு இயந்திரத்தையும் நீதிமன்றத்தையும் படம் அம்பலப்படுத்துகிறது.
தலித் பெண் சாதி, வர்க்கம், பால் ஆகியவற்றின் அடிப்படையிலான மூன்றுவித சுமைகளைச் சுமப்பதைப் படம் காட்டுகிறது.
தலித் மக்களுக்கு அரசியல் பாடம் புகட்டவும், சமூகத்திற்குள் இருக்கின்ற எதிர்ப்புணர்வுகளை நசுக்கவும்-நிலவுடமையாளர்களும் காவல் துறையினரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் பிற வன்முறைகளில் ஈடுபடுவது படம் பிடித்துக் காட்டப்படுகிறது.
தமிழர்களாகிய நமக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணையுடன் நீதிமன்றத்திலும் களத்திலும் போராடி வெற்றி பெற்ற சிதம்பரம் பத்மினியின் மனஉறுதி நினைவுக்கு வருகிறது.
நந்திதாதாஸ், சன்வாரி பாத்திரத்திற்குத் தன் பண்பட்ட நடிப்பாற்றலால் உயிருட்டுகிறார்.
ராகுல் கண்ணா, குல்ஷன் குரோவர், ரகுவீர் யாதவ், தீப்தி நாவல் அழுத்தமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.
லாஸ் ஏஞ்செல்ஸைத் தளமாகக் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை இயக்கிய ஜக்மோஹன் முந்த்ரா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
கிராம்மி விருது பெற்றுள்ள விஷ்வ மோஹன்பட் நாட்டுப்புற இசையைப்h படம் முழுவதும் நெய்திருக்கிறார்.
|