 |
நாகரீகம் மாற கிராமங்கள் நகரமாக நகர்ந்து கொண்டு இருக்கும் வேளையில். மழையை தேக்கி வைத்த மண்சாலைகள் இப்போது இறுக்கமான தார்ச்சாலைகள் ஆகிப்போனதே. பெருமழை பெய்தபோதும் சரி, பேய்க்காற்று வீசியபோதும், பாதம் மண்ணில்பட பயமுறுத்தும் வெயில் துரத்தும்போதும் சரி, சாலையோர மரத்துக்கடியில் நிற்கும்போது புளிக்கும் மாங்காயையும் பழுத்தபின் இனிக்கும் தேன் கனியாகவும் தரும் அரிய வகை மரங்களை வெட்டிவிட்டு, சாலையை பெருக்க, நம் தவறால் நம்மை விட்டுபோன அறியவகை மரங்கள், இனி வரும் காலத்தில் நம் கனவில் மட்டுமே அம்மரங்கள் அனைத்தும் காய்த்து குழுங்கப்போகிறது. பிரகாசமான பிறந்த நாளை கொண்டாட எரியும் மெழுகுவர்த்தியை அனைத்து இரவை வரவழைக்கும் நாம், கலாச்சாரம் அழிவில் பெரும் விழுக்காடாகிப்போனோம். “டூரிங் டாக்கீஸீல்” முதலில் பார்த்த படம் “இன்றுபோல் என்றும் வாழ்க” அதுவும் மணலை மலையாக கைகளால் கூப்பி அதன்மீது அமர்ந்து வறுகடலையை சாப்பிட்டு முடியும்போது பாதிபடம் முடிந்ததே தெரியாமல் போனது. மீதிப்படம் நான் குவித்த மணல் சிறுக சிறுக சறுக்கியபோது காட்சி முடிந்து வீடு திரும்பி இருக்கின்றேன். நான் களிப்பதும், கொண்டாடுவதும், அழுது புரண்டதும், ஆர்பரித்ததும், என் எண்ணங்கள் விரிவடைந்ததும் அந்த டூரிங் சினிமாவின் தாக்கத்தில் தான். அங்கே கண்ட கனாக்கள் இன்று நிஜமாகி திரையில் படர விதை வித்திட்டது. தென்னங்கீற்றுகளாளும், பனை மட்டைகளாளும், நாணலை வடம்பிடித்து வேய்ந்த கூரை கொட்டகைக்குள் குழுமிய மணல் மேடும். கந்தலாகிப்போன வெண்திரையில் காட்சி பரிமாற்றங்களால் அடைந்த களிப்பு, இது நாள் வரை என்னை ஏதும் விஞ்சவில்லையே என்ற ஏக்கம் இப்போதும் என்னை தொடந்து கொண்டுதான் இருக்கின்றன.
டீ கிளாஸில் சாதி இருந்தது. வகுப்பறையில் சாதி பகுதியாய் இருக்கிறது. கடைத்தெருவில் கூட கீழ்ச்சாதிக்காரன் தாழ்ந்துதான் நின்றான். காலில் போடும் செருப்பை கைகளால் சுமந்து சென்ற சாதியையும் கண்டேன். பணக்காரன், ஏழை, கருப்பு, சிவப்பு இதுவெல்லாம் டூரிங்டாக்கீஸில் கருமையாக இருந்த திரை. வெளிச்சத்தால் வெண்திரையில் கலர் காட்சிகள் விரிந்த போது ஏற்றதாழ்வும், சாதிபேதமும், பணக்கார பகட்டும் டூரிங்டாக்கீஸின் மணலுக்குள் மக்கிப்போனதே. எஞ்சியுள்ளவைகளை காதல் காட்சிகளில் முதுமைகூட இளகி அருகில் அமர்ந்துள்ளவர் மீது ஊடல் ஏற்படுவதும், பிறகு திரையில் சோக காட்சியில் தான் அழுது அருகில் உள்ளவரை கட்டியணைத்தும், சண்டை காட்சியில் மொத்த கூட்டமும் ஒரே ரிதத்தில் கை தட்டி கரகோஷம் எழுப்ப சாதியெல்லாம் வந்த சுவடு அறியாமல் ஒளிந்து கொள்ளுமே. இடைவேளை முடிந்து கார என்னையில் செய்த சூடான முட்டை பஜ்ஜிக்கும், டீ கடைக்காரன் தன் தலைக்குமேல் கையில் உள்ள குவளையை தூக்கி கவிழ்க்க குயின் நீர்வீழ்ச்சிப்போல் குவளையில் இருந்து டீ குதித்துவரும் அழகு.... கொள்ளைஅழகு.
ஒரு கையில் முட்டை பஜ்ஜியை கடித்து மறு கையில் டீயை குடித்துக்கொண்டு (அந்த டீகடை காட்சிகள் புதுக்கவிதைகள்) எம்.ஜி.ஆர். நடித்த சண்டை காட்சியை பற்றி பேசியே டீ கடைக்காரனுக்கு காசு கொடுக்க மறந்து, அடிதடி நடத்தி அடுத்த நாள் முகம் முழுவதும் வீக்கத்துடன். முடிவேயில்லாமல் மீண்டும் தொடர்ந்ததே. சிவாஜியின் “பட்டிக்காடா? பட்டணமா?” படம் பார்க்க கூடாது என்ற வீட்டாரின் கட்டளையை உடைக்க வீட்டில் படுத்து உறங்குவதாக அழுக்கு துணி மூட்டைகளை கயித்து கட்டிலில் அழுக்கை சுமந்த போர்வையால் போர்த்தி, உயிரற்ற உருவத்தை உருவாக்கி, தான் அயர்ந்து உறங்குவதாக உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி, ஊர் அடங்க, ஒரு சைக்கிளில் நால்வர் கழுதை சவாரி செய்து சினிமா காண, படம் ஒடிக்கொண்டு இருக்கும்போதே என்னை மறந்து பாதி நாட்கள் உறங்கியதும் அந்த டூரிங்டாக்கீஸில் தான். ஒருமுறை சகலகலா வல்லவன் படம் பார்த்துவிட்டு, சாப்பிட வைத்திருந்த கையிருப்பை முரட்டுக்காளை படம் பார்க்க செலவு செய்து, 24 கிலோமீட்டர் இரவு முழுக்க பசியோட நடந்து திருட்டுத் தனமாக பனை மரம் ஏறி, பசியைபோக்க கள்ளு திருடி குடித்து, போதையில் தன்னை மறந்து, தஞ்சை - பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் நடுவில் படுத்து உறங்கிய போது சாலையில் சென்ற வாகனங்கள் எல்லாம் ரோட்டில் ஒரு விபத்து என்று சிலவாகனங்ககள் காத்து நிற்க.பல வாகனங்கள் வேறு சாலை நோக்க, இரவும் கலைந்து, போதையும் தெளிந்து, கண்விழித்து வயல்வெளிகளில் தலைதெரிக்க ஒடியதை நினைக்க என் நினைவு அதை தவிர்த்து தாவுகிறது.
சுத்துப்பட்டு கிராமம் நடுவே வயல்வெளி. செம்மண் சாலை, அந்த சாலை முடியும்போது டூரிங் டாக்கீஸின் முகப்பு, படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது கோடைகாலங்களில் கடலை, சோளம், கம்பு, கேழ்வரகு, என பறித்து தின்று, பசியை மறந்ததும் உண்டு. முதல்மரியாதை படம் பார்க்க. ஊரில் இருந்து திருவிழாவுக்கு செல்வது போன்று மாட்டு வண்டிகள் பூட்டி செம்மண் புழுதி பறக்க, போட்டி போட்டுக்கொண்டு சவாரி செய்து படம் பார்த்துவிட்டு திரும்பி வரும் போது முதல்மரியாதையின் கடைசி காட்சியில் ராதா படகைவிட்டு தரையில் கால்பட, அதை உணர்ந்த நடிகர் திலகத்தின் விசும்பலில் கண்களின் ஒரத்தில் உருண்டோடும் கண்ணீர் துளியை கண்ட சோகம், என்னை மட்டும் தாக்கவில்லையே, எங்களை அழைத்து சென்ற டாக்கீஸின் வெளியே நின்று செவியின் மூலமாக ஒலியால் கதை அறிந்த என் காளைகளும் அல்லவா சோகமாக வந்தன.
பாசமலர் படம் கிராமங்களில் அண்ணன் தங்கை பாசத்தை பலமாக்கியது, திருடனின் வாழ்க்கையைகூட சினிமா மிகைப்படுத்தி வீரவசனம் பேசவைக்க மக்களும் வீரம்செறிந்தனர், பெண் வீட்டினர் கமல் மாதிரிஅழகா. ரஜினி மாதிரி ஸ்டைலா. சிவாஜி மாதிரி கம்பீரமா. எம். ஜி. ஆர். மாதிரி தும்பப்பூ கலரா, மாப்பிள்ளை பாருங்கடா... என்று இன்றும் நம்மில் பலர் சொல்வதுண்டு. (சில ஆண்டுகளாக தமிழ் சினிமா ஊனமுற்றவர்களை காட்சியாக்கி. காசும் விருதுகளும். பெற்றுக்கொண்டு இருக்கிறது) நாடகத்தன்மையுடன் கத்திப்பேசி காதை செவிடாக்கிய சினிமாவை, சத்தமின்றி ரத்தமின்றி சொற்ப வார்த்தைகாளால் காட்சிகளை பிணைத்து சில உண்மைகளை உரைக்கசொல்லி. புதியகோணத்தில் மணிரத்னம் இயக்கிய படங்களையும் காட்டி, கடந்த காலங்களில் வழிகாட்டியாய் இருந்த டூரிங்டாக்கீஸ் இன்று இல்லையா...? என்று எண்ணிப்பார்க்கையில் பல வருடங்கள் கடந்துவிட்டன. “சின்ன பயலே, சின்ன பயலே, சேதிகேலடா, நல்லபொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்" இவை போன்ற புத்துணர்ச்சியூட்டும் பாடல்களும், ஏவிஎம் லோகோவில் வள்ளுவனின் முயற்ச்சி திருவினையாக்கும் சொல்லும், காதலை, கனவை, அறிமுகப்படுத்திய டூரிங்டாக்கீஸ், இருந்த இடம் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டு, எனக்குள் ஏற்பட்ட உணர்வுகள், எண்ண விஷ்தரிப்புகள் எஞ்சி, இருந்தஇடம் தெரியாமல் மறைந்துபோனது அந்த டூரிங்டாக்கீஸ் மட்டுமல்ல நம் கலாச்சாரமும் தான், மணல் குவித்து அதன் மீது ஆசனமிட்டு படம் பார்த்தவன், ஒளிப்பதிவு கருவியை இயக்க முடிந்தவனுக்கு, வேட்டி கட்ட மறந்துபோனதும். நகரத்தின் தெருவில் அடுக்குமாடி வீட்டு என் வாசல் கோலமின்றி வெறுச்சோடிக்கிடப்பதும்.
நான் தமிழ் கற்றுத்தர எனது பிறப்புகள் தமிலாய் பேசுகிறார்கள்,,,? எனக்குள் கேள்வி எழ. நம் நாட்டில் ஆங்கில புலமை பெருகினால் அறிவியல் வளரும் பிறகு நாமும் வளம்பெறுவோம் என்று பெரியாரின் கூற்றாக என்னை செம்மைபடுத்த எம்தேடலால் எம்மொழியை விட்டு வேற்றுமொழிக்கு தாவியபோது இழந்ததை விட. ஈன்றவை ஏராளம் .........? அவ்வழியே பல போராட்டங்களுக்கு பிறகு. சினிமா என்னை அரவணைத்தது, சினிமா கொஞ்ச காலம் பசியை போக்கியது. பசியாரிய வேலை. அறிவை தூண்ட தேவைகளை மிஞ்சி தேடல்கள் பெருகிக் கொண்டேபோகிறது. சினிமா என் வசப்படும், என்று எண்ணியவனை. டேய் முட்டாளே என்னுடன் வா என்று முகப்பை காட்டியது. முகப்பே முடிவில்லா தொடராக.படித்தவனை முட்டாளாக்குது, பாமரனை கவிஞனாக்குது, சினிமா வாழ்ந்து, சினிமாக்காரர்களை அழித்துகொண்டு, உண்மையை ,நேர்மையை, தமிழ்பற்றை, திரைப்படங்களில் மட்டுமே காணமுடிகிறது. தகடு தத்தம் கிராமங்களில் கேள்வி பட்டதோடுசரி, அதன் அர்த்தமாக தமிழ்சினிமா இருக்கிறது. சிலபேர் ஒருநாள் புகழில் அரசர் பிறகு,,,அவ்வழியே பல பேர்கள் போராடிதோல்வியை சுமக்கின்றனர். காதல் தோல்வியுற்று காவியமாகியது. பலபேர்கள் தோல்விக்கு பிறகு சினிமாவும் காவியமாகிறது? நம் ஊரில் உலக சினிமா செய்கிறோம் என்கிறார்கள் சிலர். உலகத்துல அதிகமான படத்தாயரிப்பில் இரண்டாவது இடம் இந்தியா. அம்பதாவது இடத்துல உள்ள கொரியா, பத்து சதவிதமே உள்ள ஈரானிய சினிமா, உலகில் முதல்தரமான படங்களை தருது. நமது அழுக்கான வாழ்க்கையை பிரிச்சுமேஞ்ச, வெள்ளைக்காரங்க இரண்டு தடவை அதிகபடியான உலகவிருதுகளை வாங்கிட்டு பொயிட்டாங்க.(“காந்தி” சிலம்டாக் மில்லினியர்”) ஆன நாம் கேன்ஸ் திரைப்படவிழாவில பரிசுக்காக போட்டி இட்டு பதினாலு வருஷமாச்சு (பன்டிட் குயின் ஒரே படம்) ஒரு முறை ரோம் நகரில் ஒரு வீடியோ கடைக்குள் சென்று பல வெளிநாட்டு படங்கள் வாங்கியபொழுது நம்நாட்டு படங்கள் இருக்கிறதா என்று தேடினேன். பல மணிநேர விரயத்துக்கு பின்பு ஒரே ஒரு நல்லப்படம் கிடைத்தது. அது “குரு”. இதுபோன்றவையால் வெட்கி. வெட்கத்தின் வெளிப்பாட்டால் தேடல்களை நோக்கி ஒடுகிறேன். ஒருவேளை தேடல்கள் பூர்த்தியாகமல் பூச்சியத்துடன், நான் புதையுண்டோ அல்லது சிதையுண்டோ போனால். எனக்குப்பின் வருபவகர்ளுக்கு நாமும் வழிக்காட்டியாய் இருப்போமே. எனக்கு வழிகாட்டிய டூரிங்டாக்கிஸ் போல் .....
----------------------------------------------------------------------------------
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது ஹிந்திப் படங்களிலும், பெரும்பாலான விளம்பரப் படங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:
2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.
|
எத்தனை காத்திரமான வரிகள். உங்கள் அனுபவங்கள் நிச்சயம் எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது. இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும். உங்களின் யாவரும் கேளிர் இப்போது கூட படித்துக் கொண்டிருக்கிறேன்.. மறுமுறை. அருமையான சொல் அமைப்புகள்.
அனுப்பியவர் நந்தகுமார் on Thursday, 27.10.11 @ 07:45am
அருமையான கட்டுரை.... டூரிங் டாக்கீஸ் எளிய மக்களின் சந்தோஷமாய் இருந்தது. இன்றைய மல்டிப்ளெக்ஸ்கள் பணக்காரர்கள் மட்டுமே படம் பார்க்க முடியும் கோட்டைகளாய் உள்ளன. 100 ரூபாய்.... சராசரி இந்தியனின் ஒரு நாள் சம்பளம். சினிமா எனும் கலைச் சாதனம் எளிய மனிதனுக்கு எட்டாத நாட்டில், இம்முதலாளிகள் ஒரு போதும் உலக சினிமாக்களை எடுக்கப் போவதில்லை.
அனுப்பியவர் ஸ்ரீகணேஷ் on Thursday, 27.10.11 @ 19:11pm
நல்ல தேடல் உள்ள கலைஞனே இதுப் போன்ற அனுபவங்களை வடிக்க முடியும். இலக்கியத்திற்கும், திரைப்படங்களுக்கும் இருக்கும் இடைவெளியை உங்களைப் போன்ற ஒருசிலரே இப்படி உடைத்து வருகிறீர்கள். தொடருங்கள். நன்றி.
அனுப்பியவர் ஜானகி ராமன் on Thursday, 27.10.11 @ 19:56pm
நிறைய இடங்களில் பளிச்சென எழுதுகிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் இப்படி எழுதுவதே பெரிய விஷயம். உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் படித்து வருகிறேன். அட்டகாசம் சார்.
அனுப்பியவர் கமல் (மலேசியா) on Thursday, 27.10.11 @ 20:01pm
நீங்கள் நிறையப் படிகிறீர்கள் என்று நினைக்கிறேன். இல்லாமல் இப்படியான எழுத்து சாத்தியமில்லை. வாழ்த்துக்கள்.
அனுப்பியவர் வசந்த ராஜன் on Thursday, 27.10.11 @ 20:12pm
உங்களின் சிறப்பான அனுபவங்கள் தமிழ் திரையுலகை கொஞ்சம் மாற்றலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மாற்று சினிமா உருவாகட்டும்.
அனுப்பியவர் சிவச்சந்திரன் on Thursday, 27.10.11 @ 23:05pm
தெளிவான நடை. தெளிவான கருத்துக்கள். குழப்பமே இல்லாமல் படிக்க முடிந்தது. புதிய உத்வேகத்துடன் எழுதுகிறீர்கள். அருமையாக இருக்கிறது.
அனுப்பியவர் செல்வம் on Thursday, 27.10.11 @ 23:34pm
எந்த திரைப்பட ஒளிப்பதிவாலர்களிடத்திலும் காணாத ஒரு இலக்கியத் தரம் உங்களிடம் இருக்கிறது. செழியன் கூட உலகப் படங்களைப் பற்றிதான் எழுதினர். நீங்க இலக்கிய ஆளுமை போல பிச்சி உதருகிரீர்கள். படிக்கவே வியப்பாக இருக்கிறது. இன்னும் ஒரு தொடரே ஆரம்பிக்கலாம் சார்.
அனுப்பியவர் முருகன் on Thursday, 27.10.11 @ 23:50pm
நான் தமிழ் கற்றுத்தர எனது பிறப்புகள் தமிலாய் பேசுகிறார்கள்/// அப்படியாவது தமிழ் வளர்ந்தால் சரி சார். உங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். நாளை நேரில் sandhiப்பொம் .
அனுப்பியவர் விமல் on Friday, 28.10.11 @ 00:10am
திறமையான ஒரு ஒளிப்பதிவாளரின் செறிவான வார்த்தைகளோடு படிக்கும்போது சிறப்பாகவே இருக்கிறது.
அனுப்பியவர் வேலன் on Friday, 28.10.11 @ 00:31am
மொழியர்வில்லாகவர்களுக்கும் புரியும் எழுத்து. ஆனால் இன்னும் கொஞ்சம் நீங்கள் உழைத்தால் சிறப்பான எழுத்தை வெளிப்படுத்தலாம்.
அனுப்பியவர் பிரபு on Friday, 28.10.11 @ 00:33am
பாசமலர் படம் கிராமங்களில் அண்ணன் தங்கை பாசத்தை பலமாக்கியது/// நிஜம்தாம். எனக்கே கூட இந்த அனுபவம் உள்ளது.
அனுப்பியவர் ரவி கிருஷ்ணா on Friday, 28.10.11 @ 00:36am
நல்ல ஆக்கம்.. தொடர்ந்து நிறைய எழுதுகிறீர்கள். உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது. வசந்த் தியாகராஜன்
அனுப்பியவர் வசந்த் தியாகராஜன் on Friday, 28.10.11 @ 03:26am
அப்படியே நான் சின்ன வயதில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை படித்ததுப் போல் இருந்தது. மலரும் நினைவுகள் சார். கலக்கல் கட்டுரை.
அனுப்பியவர் சண்முகவேல் on Friday, 28.10.11 @ 03:51am
ஐயா உங்கள் கட்டுரையை எப்போதும் விரும்பிப் படிப்பேன். தொழில்நுட்பத்தை விட்டு இப்படி இலக்கியம் பக்கம் ஒதுநிகி அதகளப் படுத்துகிறீர்கள். கலக்குங்கள் ஐயா.
அனுப்பியவர் சந்திரன் on Friday, 28.10.11 @ 04:04am
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஒலிப்பதிவாளரா? அருமையான கட்டுரை சார்.
அனுப்பியவர் செந்தில் on Friday, 28.10.11 @ 05:02am
எத்தனை விஷயங்கள் ஒரு கட்டுரையில்.. மிக விரும்பிப் படித்தேன். இன்னும் கூட கொஞ்சம் விவரித்து இருக்கலாமோ என்று என்ன வைத்துவிட்டது.
அனுப்பியவர் பூபதி on Friday, 28.10.11 @ 09:01am
இலக்கியத்திலும் புகுந்து விளையாடுகிறீர்கள். அப்படியே அந்த அந்த காலக் கட்டங்களையும், படங்களின் உன்னதங்களையும் சேர்த்தே பதிவு செய்கிறீர்கள். நான் மிக விரும்பிப் பார்க்கும் படம் பாசமலர். நன்றி.
அனுப்பியவர் நீலகண்டன் on Friday, 28.10.11 @ 09:05am
கதை சிறப்பான ஒன்று. எப்போதும் மிகப் பெரிய உயரத்தில் இருப்பவர்கள் இப்படியெல்லாம் இலக்கியம் பக்கம் வருவது கிடையாது. ரவிவர்மன் மிக அழகாக அதனை செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்..
அனுப்பியவர் ராஜேந்திரன் on Saturday, 29.10.11 @ 08:02am
இன்னும் நிறைய கலைஞர்களின் அனுபவங்களை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.
அனுப்பியவர் யாழினி on Saturday, 29.10.11 @ 08:06am
மிக சிறப்பான கட்டுரை. இப்படி ஒரு அனுபவம் இப்போதைய தலைமுறைக்கு வைப்பதற்கு வழியே இல்லை. அருமை சார்.
அனுப்பியவர் சரவணன் on Sunday, 30.10.11 @ 22:53pm
இன்னும் எத்தனை அனுபவங்களை வைத்திருக்கிறீர்கள். நல்லகட்டுரை.
அனுப்பியவர் முரளி on Sunday, 30.10.11 @ 23:23pm
நல்ல அருமையான கட்டுரை. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் சார். மணியன்
அனுப்பியவர் மணியன் on Monday, 31.10.11 @ 23:28pm
ரவிவர்மன் எழுத்துக்களால் படம்பிடிக்கிறார்.
அனுப்பியவர் தேவன் on Monday, 31.10.11 @ 23:58pm