வணக்கம்,
நமது ஒவ்வொரு மனதிலும் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் நினைவுகளில் திரைப்படங்கள் சார்ந்த அனுபவமும் ஒன்று.. சிறுவயதில் வீட்டின் அருகில்.. அல்லது சில பர்லாங்குகள் தள்ளி அமைத்திருந்த கொட்டகை போன்ற திரையரங்குகள் அல்லது ஒவ்வொரு ஊராக நகர்ந்து செல்லும் டூரிங் டாக்கீஸ் போன்ற திரையரங்குகளில் எவ்வித மனச்சலனமுமின்றி நாம் பார்த்த சலனப்படங்கள் இப்போதும் நம் மனதை சலனப்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் அன்று நாம் பார்த்த அந்தக் கொட்டகைகள் இன்று நாம் பார்க்க கிடைப்பதில்லை.
நகரின் மையப்பகுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் சகல வசதிகளுடன் இன்று நாம் பார்க்கும் படங்கள் என்னதான் நமக்கு பிடித்திருந்தாலும், அந்தக் கொட்டகையில் மணலில் அமர்ந்து, முன்னே அமர்ந்திருப்பவர் முதுகு மறைத்தாலும், அவரிடம் சண்டைப் போட்டு பார்த்த அனுபவத்தையோ, அல்லது பரவசத்தையோ நமக்கு கொடுப்பதில்லை. அதுதான் பழமையின் வெற்றி.
இப்படியிருக்க, நாம் நேசிக்கும் பிரபலங்கள், இதுப் போன்ற கொட்டகைகளில் படம் பார்த்த தங்கள் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே இந்தப் பகுதி. இதில் மறைமுகமாக அந்தந்த ஊரில் இருந்த கொட்டகைகளின் வரலாறும் பதிவு செய்யப்படுகிறது. இது எதிர்கால திரைப்பட வரலாற்றினை எழுத பயன்படும் என்பது திண்ணம். |