தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க நவம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் ஏலகிரி மலையை நோக்கியிருந்தது.
ஏலகிரியும் ஜவ்வாது மலையும் என்று முதலில் அமைந்த திட்டம் நேரமின்மை காரணமாகவும், ஏலகிரிக்கு ஒத்த கவர்ச்சி இன்னும் ஜவ்வாது மலைக்கு கிடைக்கவில்லை என்ற காரணங்களாலும் பயணம் முழுவதும் ஏலகிரியை மட்டுமே சுற்றியிருந்தது.
பரப்பளவில் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போல பரந்து விரியாமல் மூர்த்தி சிறியதாக இருந்தாலும், திருப்பத்தூர் வாணியம்பாடி சுற்றுபுறங்களில் உள்ள எளிய மக்களுக்கு ஒரு மலைவாசஸ்தலம் என்றால் எப்படி இருக்கும் என்ற உண்மையை எளிய முறையில் சிக்கனமாக பறைசாற்றும் ஏலகிரியின் கீர்த்தி பெரியது.
வாய்ப்புக்காக ஏங்கித்தவிக்கும் பிரபலம் அடையாத கலைஞனைப்போல சில வருடங்களுக்கு முன் இருந்த ஏலகிரி, இன்று திறமைக்கும் மேலாக வருமானம் பெறும் திரைநடிகனைப்போல ஒரு மாயைக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்பட்டிருப்பதை சில வருடங்களுக்கு முன்னரே அங்கு சென்றிருந்தவர்கள் உணரலாம்.
பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல்வியாதிகளால் ஏலகிரி அதன் உண்மையான நிறத்தை இழக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தன் கற்பை முற்றிலும் இழக்கும் முன்னரே அதன் அழகை காண கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஊர் சுற்ற வந்திருந்த தமிழ் ஸ்டுடியோ ஆர்வலர்கள் குழு வேலூரை அடுத்த ஜோலார்பேட்டை ரயில் நிறுத்தத்தில் ஒன்றாக சந்திப்பதாக இருந்தது.
ஜோலார்பேட்டையிலிருந்து ஆடடோரிக்ஷா மூலம் மலையை சென்றடையலாம், அப்படிச்செல்கையில் மலைப்பாதையில் தேவைப்படுகிற இடத்தில் இறங்கி இயற்கை அழகை ரசிக்கலாம் என்ற திட்டம் மாற்றப்பட்டு, அவ்வழியே சென்ற ஒரு வேன் மூலம் மலையேறினோம்.
மலைப்பாதையின் 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தமிழ் இலக்கியங்கள் கொண்டாடுகிற வள்ளல்கள் பெயரையும், அறிஞர்கள் பெயரையும் தாங்கி ஆரம்பமே சுகமாயிருந்தது. இருபது நிமிட பயணத்திற்குப்பின் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகளுக்கு சென்று சிறிது களைப்பாறி, வந்து சேராத சில ஆர்வலர்களுக்காக சிறிது நேர காத்திருப்பு, மதிய உணவு என நேரம் உருண்டோடி, பயணத்தின் முக்கிய நோக்கமான ஜலகாம்பாறை அருவியை நடந்தே சென்றடையும் மலைப்பாதை பயணம் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்தது.
மூன்று மணி நேரம் பிடிக்கும் அந்த நடைப்பயணத்தை இவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்று ஐயப்பட்ட சில ஆர்வலர்கள் இலக்கை முதலில் அடைந்து அதுவும் 2 மணி நேரத்திற்குள்ளேயே சென்றடைந்தது இன்ப அதிர்ச்சி. நிறமின்றி புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட அனைத்துமே குடிதண்ணீர்தான் என்ற பொதுவான எண்ணம் தவறு என்பதையும் சிலருக்கு இந்தப்பயணம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று.
பயணத்தின் முக்கால்வாசி தூரத்தை ஒற்றையடிப்பாதையிலேயே தன்னகத்தே கொண்டு தன் இருப்பை அமைதியாக அதே நேரத்தில் ஒய்யாரமாக எங்களுக்கு காட்டியது ஏலகிரி. ஒற்றையடிப்பாதையை ஒட்டி எங்களுடனே பயணம் செய்த அருவித்தண்ணீர் முதலில் யார் மலையைவிட்டு கீழே இறங்குவது என்ற எங்களுடன் பெருத்த ஆரவாரத்துடன் போட்டியிட்டுகொண்டே சென்று கடைசியில் வென்றது.
பெயர் தெரியாத பூக்களும், முன்பின் கேள்வியேபட்டிராத மரங்களும் வந்திருந்த ஒளிப்படவியலாளர்களை இடைவிடாமல் வேலை வாங்கிக்கொண்டிருந்தது.
பூச்சி மற்றும் விலங்குகளின் அச்சுறுத்தல் இல்லாமல், குறுகலாக சற்றே சரிவாக இருந்தாலும் இந்த காட்டு வழிப்பயணத்தை வந்திருந்த நண்பர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். போகும் வழியில் இருந்த சில பாறைகள் தங்கள் மீதேறி சற்றே ஓய்வெடுத்துக்கொள்ளச்சொன்னதை தட்டாமல் கேட்டதன் மூலம் மலையையும் மலையடிவார கிராமங்களையும் பல அடி உயரத்திலிருந்து காணமுடிந்தது.
ஒரு வழியாக கீழிறங்கி நம்முடைய நோக்கமான ஜலகாம்பாறை அருவியை வந்தடைந்தோம். மெல்லிய கீற்றாக தண்ணீர் விழுந்தாலும் 20 அடி உயரத்தில் இருந்து ஆரவாரமாக நம்மீது பொத்தென்று விழுவதால் அதன் ஆக்ரோஷத்தை தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. இடைவெளி விட்டு அதன் பிறகே அருவியின் சவாலுக்கு வீரத்துடன் முதுகு காண்பிக்க முடிந்தது. வீரியத்துடன் விழும் தண்ணீரை 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எளிய நடனத்துடன் வரவேற்று ஏற்றுக்கொண்டதையும் மறக்காமல் குறிப்பிடவேண்டும்.
அருமையான பயணம், குளுமையான குளியல் என்று பொழுது ஓடியபிறகு இரவு உணவு முடித்து திரும்ப மலை மீது ஏறுவதற்கு பேருந்து பயணம் தயாராகயிருந்தது.
இரவு நேரத்தில் திருப்பத்தூரிலிருந்து மலைக்கு பேருந்து செல்லும்போது மலைப்பாதையிலிருந்து கீழே இருக்கும் ஊர்களில் எரியும் மின்விளக்குகளின் வெளிச்சம் கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகளின் இருப்பை ஒன்றாக காட்டியதுபோலிருந்தது.
அறைக்கு வந்தபிறகு ஆரம்பித்தது அடுத்த கச்சேரி. உள்ளூர் அரசியலில் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பமான விவாதம் கடைசியாக ஹாலிவுட் திரைப்படங்களில் சென்று முடிவடைந்தபோது விவாதக்காரர்களில் பலர் நித்திரையடைந்திருந்தார்கள். ஆனாலும் அந்த சிறிய அறையையும், குறைந்த எண்ணிக்கையிலான படுக்கை விரிப்புகளையும் சில மணி நேரங்களுக்கு முன்வரை யாரேன்றே தெரியாத நபர்களோடு எந்தவித சங்கோஜமும் அங்கலாய்ப்புகளுமின்றி மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டதும் தவிர்க்கமுடியாத இடைஞ்சல்களை பொறுத்துக்கொண்டதும் இந்தப்பயணத்தின் இடைச்செறுகல்களாக வந்த பிற நன்மைகளாகும்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (20.11.2011) சிலருக்கு சூரியன் 6:30 மணிக்கும், சிலருக்கு ஏழு மணிக்கும், இன்னும் சிலருக்கு ஒன்பது மணிக்கும் உதித்தது. நீண்ட நடைபயணமும், குளிர்காற்றும் சிலரை எழவிடாமல் நன்றாக உறங்கச்செய்தது. விரைவில் விழித்துக்கொண்டவர்கள் அந்த அதிகாலை பனிப்பொழிவின் அழகை விடாது அணைத்துக்கொண்டார்கள்.
பின் எல்லாருடனும் சேர்ந்து காலை உணவு முடிந்தபிறகு ஏரிக்கு சென்றோம். ஏரிப்பூங்கா வாயிலருகில் கிடைத்த மலைப்பழங்களை நம் நண்பர்கள் உண்டு மகிழ்ந்தனர். எளிதில் கிடைக்கப்பெறாத அத்திப்பழமும் நண்பர்களுக்கு விருந்தாயிற்று.
மலையில் இருக்கும் பிரபலமான ஒரே பொழுதுபோக்கு இடம் இதுதான். கொஞ்சம் காத்திருப்புகளுக்குப்பிறகு மூன்று படகுகளை வாடகைக்கு அமர்த்தி அதில் ஏறி ஏரியினை சுற்றி வந்தோம். நேரம் கடந்துவிட்டபடியால் அறையை காலிசெய்து மதிய உணவு உண்டு ஊர் திரும்ப பேருந்தில் இடம் பிடித்தோம். எந்தவித இன்னல்களும் இன்றி வந்திருந்த 17 ஆர்வலர்களுக்கும் மன நிறைவைத் தந்த ஏலகிரி மலை எங்கள் வருகைக்கு நன்றி தெரிவித்து மீண்டும் வருகைப்புரிய வேண்டியது.
நேர்த்தியான திட்டமிடல், நேர அட்டவணையை முறையாக பின்பற்றுதல் என்ற எந்தவிதமான வழக்கமான சடங்குகளிலும் சிக்காமல் கடைசி நிமிட உள்ளத்தின் உந்துதலினாலேயே வழிநடத்தப்பட்டு முழுமை பெற்றது இனிமையான இந்த பயணம்.
முற்றிலும் மனமகிழ்வும், அருமையான குளிர்தென்றலும், எந்த சிறு இடையூறும் இல்லாமல் நிறைவாக இருந்த இந்தப்பயணத்தைப் போல எல்லா பயணங்களும் வாழ்க்கையில் அவ்வளவு சுகமாயிருந்துவிடுவதில்லை.
பயணத்தை பயனுள்ளதாக்கி நல்ல ஒரு வாய்ப்பைத்தந்த பண்பாள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
மேலும் அருமையான இந்த பயணத்தை ஏற்பாடு செய்த நண்பர் குணசீலன் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பில் நன்றி.
மேலும் ஒளிப்படங்களைக் காண:
https://picasaweb.google.com/105647173808629498658/qdCXPH#
https://picasaweb.google.com/105647173808629498658/qdCXPH02
https://picasaweb.google.com/105647173808629498658/qdCXPH03#
ஒளிப்படங்கள்: சோமசுந்தர், சிலம்பரசன், ஆர்ம்ஸ்ட்ராங்
-------------------------------------------------------------------------------------------
நாள்: நவம்பர் 19 -20 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
இடம்: ஏலகிரி, ஜவ்வாது மலை
கட்டணம்: 1200/-
வணக்கம் நண்பர்களே,
தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏலகிரியில் தொடங்குகிறது. குளிர்காலத்தில் ஏலகிரி செல்வது என்பது கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கும். ஆனால் நவம்பர், டிசம்பர் மாதம் மட்டுமே அங்கே உருவாகும் சில அருவிகளைப் பார்ப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். முக்கியமாக ஜலகம்பாறை அருவி இந்த மாதத்தில் பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். மேலும் குளிர்காலத்தில் கோடை வாசஸ்தலங்களை பார்ப்பதும் ஒரு வித புது அனுபவத்தை தரும். குறும்படம் / இலக்கியம் என விவாதங்கள் தொடங்கி நல்ல நண்பர்களை பெறுவதற்கு இந்த பயணத்தை ஒரு காரணியாகவும் கொள்ளலாம். வாருங்கள் பயணிப்போம்.
மிக முக்கியமாக இந்தப் பயணம் மிக அழகாக திட்டமிட்டு தெளிவான, சுகமான பேருந்து அல்லது இரயில் பயணமாக இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சக நண்பர்களுடன், அரசுப் பேருந்தைப் பிடித்து (எந்தப் பேருந்து கிடைக்கிறதோ, எந்த நிலையில் கிடைக்கிறதோ) , ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு கடைகளில் உணவருந்தி, கிடைப்பவற்றை கொண்டு செய்யும் பயணமாகவே இருக்கும். எனவே சுகவாசிகள் இந்தப் பயணத்தை தவிர்க்கவும்.
ஆனால் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களுடன் குளிர் காற்றும், சாரல் மழையும் இணைந்த இடத்தில் ஒரு கோப்பை தேநீர் பருகிக் கொண்டே பிடித்த விசயங்களை பற்றி விவாதிப்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் வைக்காது. அந்த அனுபவமே தமிழ் ஸ்டுடியோவின் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வின் பிரதான நோக்கம். நண்பர்களோடு விவாதிப்பதோடு மட்டுமின்றி இந்த இரண்டு நாட்களில் எல்லோரும் சேர்ந்து ஒரு குறும்படத்தை உருவாக்கிவிட்டு வீடு திரும்புவோம் வாருங்கள்.
மேலும் இந்தப் பயணம் முழுக்க முழுக்க மலை ஏறுதலை (Treking) அடிப்படையாகக் கொண்டது.
தமிழ் ஸ்டுடியோவின் வாசக நண்பர் குணசீலன் இந்த பயண ஏற்பாடுகளை ஏலகிரியில் கவனித்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அவருக்கு நமது நன்றியினை தெரிவித்துக் கொள்வோம்.
மேலும் விவரங்களுக்கு: 9840698236 |