சிதறிக் கிடக்கும் படைப்பாளிகளை ஒன்றிணைத்து அவர்களின் படைப்புகளை தங்களின் சொந்த செலவிலேயே கொண்டுவரும் முதல் முயற்சியே இந்த குறும்பட வட்டம். மேலும் அனைத்து விதமான படைப்பாளிகளையும் ஒன்றிணைத்து ஒருவரின் படைப்புத் திறனை இன்னொருவர் அறியவும், குறும்பட ஆவணப்படங்கள் பற்றி தொடர்ந்து கலந்துரையாடவும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மாதம் ஒருமுறை நடைபெறும் இந்த சந்திப்பில் கலந்துரையாடலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். குறும்படங்கள் எடுத்து அதில் அனுபவம் பெற்ற ஒரு குறும்பட இயக்குனரின் அனுபங்கள், அதில் அவர் சந்தித்த இடையூறுகள், அவர் தேர்ந்தெடுத்த களம், அதில் பங்குபெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அனுபவம் என இயக்குனர்களின் அனுபவங்களை நம்மோடு பகிரலாம். இது புதிதாக குறும்படம் எடுக்க வரும் ஆர்வலர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும்.
மேலும், தனக்குத் தேவைப்படும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை மற்ற இயக்குனர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும் இது சிறந்த வாய்ப்பாக அமையும். இதில் குறும்பட இயக்குனர்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்கிற நீதி இல்லை. குறும்பட ஆர்வலர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம். உதாரணமாக, குறும்பட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், அது பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்கள் என இத்துறையில் ஆர்வம் உள்ள யாவரும் இதில் பங்கேற்கலாம்.
குறும்பட வட்டத்தின் சிறப்புகள்:
1. உங்கள் நட்பு வட்டம் பெருகி அதன் மூலம் உங்கள் படைப்புகளை வெளியில் கொண்டுவருவது எளிதாகிறது.
2. உங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களும் இந்தக் குறும்பட வட்டத்தில் கிடைக்கும். உதாரணமாக, நீங்கள் பிடல் காஸ்ட்ரோ பற்றிய ஆவணப்படம் எடுக்க திட்டமிருந்தால், அவர் பற்றி படக் காட்சிகள், அவர் பற்றிய முழு விவரம், அரிய புகைப்படம், தொழில்நுட்ப உதவி என உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் இடமாக அமையும்.
3. மாதம் ஒருமுறை மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டு அவை பற்றிய திறனாய்வு நடத்தப்படும். இது உலகப் படங்கள் திரையிடப்படும் மேடை அல்ல. உங்கள் சொந்த படைப்புகள் உலகத்தரத்தை அடைய மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி. இங்கு நீங்கள் உருவாக்கிய உங்கள் திரைப்படம் திரையிடப்பட்டு அதுப் பற்றிய திறனாய்வு நிகழ்த்தப்படும்.
4. ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு விருந்தினர் நம்மோடு குறும்பட வட்டத்தில் கலந்து கொள்வார். அவருடைய ஆலோசனைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.
5. தேவையான அளவு நிதி சேர்ந்த பின்னர் குறும்பட வட்டம் தனது சொந்த நிதியிலேயே, தனது உறுப்பினர்களின் குறும்பட தயாரிப்பு செலவை ஏற்கும். தேவையான நிதி சேர்ந்த பின்னர், வயது முதிர்வு அடிப்படையில் உறுப்பினர்களின் குறும்பட தயாரிப்பு செலவு ஏற்கப்படும். உதராணமாக ராம் இருபத்திநான்கு வருடம் நாற்பது நாட்கள் வயதுடையவர் என்று வைத்துக்கொள்வோம். சேது இருபத்திநான்கு வருடம் ஐம்பது நாட்கள் வயதுடையவர் என்றல், சேதுவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், மகி எனும் மற்றொருவர் இருபத்தி ஆறு வருடம் வயதுடையவர், ஆனால் அவர் சேதுவுக்கே பின்னரே குறும்பட வட்டத்தில் சேர்ந்தவர் என்றால், இந்த இடத்தில் சேதுவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். உறுப்பினர்கள், குறும்பட வட்டத்தில் சேர்ந்த முதிர்வும் கணக்கில் கொள்ளப்படும்.
6. அப்படி எடுக்கப்பட்ட குறும்பட விற்பனையில் கிடைக்கும் மேற்பணம் (லாபம்) குறும்பட வட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும்.
7. தமிழ் ஸ்டுடியோ நடத்தும் விழாக்களில், விழாக் குழு நிர்வாகிகளாக குறும்பட வட்டத்தில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதன் மூலம் கிடைக்கும் மேற்பணமும், ஸ்டுடியோவிற்கு போக மீதமுள்ளவை சமமாக பகிர்ந்து அளிக்கப்படும்.
8. தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்யும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலாவுக்கு, குறும்பட வட்ட உறுப்பினர்கள் பாதிக் கட்டணம் செலுத்தினால் போதும்.
நிபந்தனைகள்:
1. உறுப்பினர்கள் மாதம் ஐம்பது ரூபாய் சந்தா கட்ட வேண்டும். சந்தா கட்ட தவறும் உறுப்பினர்கள் இயல்பாகவே தங்களின் உறுப்பினர் தகுதியை இழந்து விடுவர்.
2. ஒவ்வொரு குறும்பட வட்டத்திற்கும் தவறாமல் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
எனவே வாருங்கள் ஒரு புதிய பாதை அமைப்போம். ஒற்றுமை எனும் கோல்பிடித்து கலை உலகை ஆளும் தகுதியை வளர்த்துக் கொள்வோம்.
முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
|