படிப்பு எதற்கு?
அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில்,
அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில
நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். அது வழக்கமான கதையாகிவிட்டது இருவருக்கும்.
ஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார்.
என்ன செய்வார் பீர்பால். தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி வேறு துன்புறுத்தியது; சோர்ந்து ஒரு
வீட்டின் திண்ணை மீது உட்கார்ந்து விட்டார். அவரைப் பார்த்த ஒருவர், இவர் பீர்பால் அல்லவா ! ஏன்
இப்படியாகி விட்டார் என எண்ணி, அவருக்கு ஆகாரம் கொடுத்து ஆறுதல் கூறி, அவ்வூர் ஜமீன்தாரிடம்
அழைத்துக்கொண்டு போய் அறிமுகப்படுத்தினார்.
ஜமீன்தார் படிப்பு வாசனையே அறியாதவர். ஆனாலும், பரம்பரையாக வந்த ஜமீன்தார் ! மிகவும் கஞ்சன்.
தம் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பீர்பாலை நியமிக்கலாம் எனக் கருதினார்.
'என்னிடம் வேலையாட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், எம் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக
உம்மை வைத்துக் கொள்கிறேன்' என்றார் ஜமீன்தார்.
'எவ்வளவு ஊதியம் கொடுப்பிர்கள்?' என்று கேட்டார் பீர்பால்.
'என் வீட்டில் சாப்பாடு போட்டு உமக்கு மாதம் பத்து ரூபாய் தருகிறேன். நீர் பெரிய கல்விமான் என்று
கூறினார் என் நண்பர். ஆனாலும், இதற்கு அதிகமாக என்னால் தர −இயலாது' என கண்டிப்பாகச்
சொன்னார் ஜமீன்தார்.
பீர்பாலுக்கு கோபம் அதிகரித்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவன் நின்று
கொண்டிருந்தான்.'அவன் யார்?' என்று கேட்டார் பீர்பால்.
'என்னுடைய குதிரை வண்டியை ஓட்டுபவன்' என்றார்.
'அவனுக்கு என்ன ஊதியம்?' என்று கேட்டார் பீர்பால்.
'மாதம் பதினைந்து ரூபாய் கொடுத்து சாப்பாடும் போட்டு வருகிறேன்' என்றார் ஜமீன்தார்.
பீர்பால் கோபமுற்றார். ஜமீன்தாரை நோக்கி, 'உங்கள் மகன் பத்து ஆண்டுகள் படித்து என்ன செய்யப்
போகிறான்? என்னைப் போல பத்து ரூபாய் தானே ஊதியம் பெற முடியும்? ஆகையால், அவனுக்குக்
குதிரை வண்டி ஓட்டுவதற்குக் கற்றக் கொடுத்தால், மாதம் பதினைந்து ரூபாய் ஊதியம் கிடைக்குமே,
அதை முதலில் செய்யுங்கள்' என்று கூறி எழுந்தார் பீர்பால்.
தன்னுடைய கஞ்சத்தனத்துக்குச் சரியான சூடு கொடுத்தார் பீர்பால் என வெட்கப்பட்டார் ஜமீன்தார். ஆனால்,
என்னுடைய சுபாவத்தை நான் மாற்றிக் கொள்ள முடியுமா என எண்ணிக் கொண்டு மெளனமாக இருந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படுக்கை அறையில் திருடன்
ஒரு நாள் அக்பர் சபையில் அனைவரையும் பார்த்து "நேற்றிரவு எனது படுக்கை அறைக்கு ஒரு திருடன் வந்து எனது மார்பில் உதைத்தான், கன்னத்தில் அறைந்தான் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்" என்று வினவினார்.
உடனே அனைவரும் அவன் கால்களை வெட்டவேண்டும், கைகளை வெட்டவேண்டும், மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறினர், ஆனால் பீர்பால் எதும் கூறாமல் இருந்தார்.
உடனே அரசர் பீர்பாலை நோக்கி "நீர் என்ன கூறுகிறீர்?" என்றார்.
பீர்பால் "அவன் கைகளுக்கு தங்க வளையலும்,கால்களுக்கு தங்க கொலுசும் போடவேண்டும்" என்றார்.
அக்பர் கோபமாக "என்ன சொன்னீர்" என வினவினர், பீர்பாலின் எதிரிகள் அனைவரும் பீர்பால் அவ்வளவுதான் என்று மகிழ்ச்சியடைந்தனர்.
பீர்பாலோ சிரிதும் கலங்காமல் தான் கூறியதை மீண்டும் கூறினார்.அக்பர் உடனே ஏன் என்று கேட்டார். அதற்கு பீர்பால் "மாட்சிமைதாங்கிய பேரரசர் அக்பரின் அரண்மனைக்குள் கட்டுக்காவளை மீறி உள்ளே வருவது இயலாத காரியம், மேலும் படுக்கைஅறை அந்தப்புறத்தில் உள்ளது அங்கும் காவல் பலமாக உள்ளது இதை மீறிஉள்ளே வருவது நடவாதகாரியம்.மேலும் அரசரின் மெய்காப்பாளர் உள்ளனர், தன்னை கள்வன் தாக்கும் வரை அரசர் வளாவாவிருக்கமாட்டார். இதையேல்லம் நோக்கும் போது அந்த திருடன் மாட்சிமைதாங்கிய அரசரின் ஒருவயது புதல்வன் ஆவான், அவனுக்கு தங்கத்தில் வளையலும் , கொலுசும் தானே போடவேண்டும்" என வினவ, அனைவரும் பீர்பாலை வெற்றி கொள்வது முடியாத காரியாம் என்று மனம் நொந்தனர்.
அரசர் பீர்பாலின் புத்திசாதுர்யத்தை மெச்சி பொன்முடிப்பு பரிசளித்தார்.
|