வயலின் மேதை மைசூர் சௌடையா - லலிதா ராம்
 |
இசை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமெனில், புவியியலின் ஒரு மூலையில் கிடக்கும் பெயரைச் சரித்திரம் படைக்க வைத்த பலரைக் காணமுடியும். கோனேரிராஜபுரம், அரியக்குடி, செம்மங்குடி, உமையாள்புரம் என்று இதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு மாறாக, இசைச் சரித்திரத்தில் இடம்பிடித்து, பல தலைமுறைப் பாடகர்களுக்கு பக்க பலமாக விளங்கிய ஒருவர் இன்று புவியியலின் ஒரு பகுதியானதால், மக்களிடையில் பிரபலமாக விளங்குகிறார். |
மேற்கூறிய பீடிகையிலிருந்து, நான் குறிப்பிடும் கலைஞர் வயலின் மேதை மைசூர் சௌடையாதான் என்பதை நீங்கள் பெங்களூர் வாசியெனில் உணர்ந்திருப்பீர்கள். சௌடையா சாலையும், வயலின் வடிவில் அமைந்த சௌடையா ஹாலும் புழக்கத்தில் வைத்திருக்கும் மைசூர் சௌடையாவின் வாழ்வைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.
1894-ஆம் வருடத்து புத்தாண்டு தினத்தை உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தது. அவ்வேளையில், காவேரிக் கரையையொட்டிய கர்நாடக மாநிலத்து நரசிபுரா தாலுகாவில் உள்ள திருமகூடலு கிராமத்தில் வசித்த அகஸ்திய கௌடா - சுந்தரம்மா தம்பதியினர், தங்கள் வீட்டில் பிறந்த ஆண் மகவான சௌடையாவை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். சமஸ்கிருதத்திலும் இசையிலும் தேர்ச்சி பெற்ற தகப்பனாருக்கும், நாட்டியத்தில் (அபிநய சாஸ்திரத்தில் தேர்ந்தவர் என்று அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன) நல்ல பாண்டித்யம் பெற்றிருந்த தாயாருக்கும் பிறந்த சௌடையாவுக்கு இசையின் பால் நாட்டம் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
சௌடையாவின் முதல் இசை ஆசிரியையாக சுந்தரம்மா விளங்கினாலும், மற்ற குழந்தைகளைப் போல சௌடையாவும், தனது கிராமத்திலிருந்து காவேரியின் கிளை நதியான கபில நதியைத் தினமும் கடந்து சென்று பள்ளிக்குச் சென்று வந்தார். பள்ளிப் படிப்பைவிட இசையின் பால் நாட்டம் அதிகம் கொண்டிருந்த இளம் சௌடையாவின் ஒன்பதாவது வயதில் நடந்த நிகழ்ச்சி அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல வேண்டி, கபில நதியின் கரையில் படகுக்காக காத்திருந்த வேளையில், அவ்வூர் மடத்தைச் சேர்ந்த ஆச்சாரியரும் அங்கு காத்திருந்தார். படகு வர தாமதமானதும், சிறுவனுக்கும் ஆச்சாரியருக்கும் உரையாடல் தொடங்கியது. அவ்வுரையாடலின் மூலம் சிறுவன் சௌடையாவிற்குப் பள்ளிக்கூடம் செல்வதில் நாட்டமில்லாததை உணர்ந்த ஆச்சாரியர், சௌடையாவின் கைரேகைகளை ஆராய்ந்த பின், சிறுவனின் கையில் இருந்த புத்தகங்களைப் பிடுங்கி கபிலை நதியில் எறிந்தார். " உனக்கு நாட்டமில்லாத ஏட்டுக் கல்வியால் எந்த பயனும் இராது. இசைத் துறையின் நீ செல்வாயெனில் பெரும் புகழடைவாய்", என்று கூறியதோடல்லாமல் சௌடையாவின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு அவன் தாயிடம் சென்றார். பள்ளிக் கூடத்திற்குச் செல்லாமல் திரும்பி வரும் மகனைப் பார்த்து குழம்பியபடி, மகனுடன் வந்த ஆச்சாரியரை நமஸ்கரித்தார் சுந்தரம்மா. கபிலை நதிக் கரையின் நடந்தவற்றையெல்லாம் கூறி சௌடையாவின் புகழ் இசையால் இசைவுரும் என்பதைத் தன் கணிப்பாகக் கூறினார் ஆச்சாரியர். ஆச்சாரியரின் கணிப்பை சுந்தரம்மா முழுமையாக நம்பியதால், சௌடையாவின் பள்ளிப் படிப்பு அவரது ஒன்பதாவது வயதில் முடிவிற்கு வந்தது.
இசையையே வாழ்வாக்கிக் கொள்ளத் துடிக்கும் மகனுக்கு அவர் குடும்பத்தார் ஒருவரிடமே இசை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இசைத் துறையில் இருந்த சௌடையாவின் ஒன்று விட்ட சகோதரரான பக்கண்ணா, தம் குடும்ப பெரியவர்களின் வார்த்தையைத் தட்ட இயலாமல் சௌடையாவிற்கு பாடம் சொல்ல ஆரம்பித்தார். சௌடையாவின் கூர் மதியைக் கண்டு கொண்ட பக்கண்ணாவிற்கு, தன்னை மிஞ்சிவிட தமது சிஷ்யனுக்கு அதிக நாள் பிடிக்காது என்பது புரிந்தது. இதனால் பொறாமை கொண்டு, சௌடையாவின் இசைப் பயிற்சியை நிறுத்த ஒரு உபாயம் செய்தார். அஹோபில மடத்திலிருந்து ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்து " சௌடையாவால் இசைத் துறையில் சோபிக்க முடியாது, வேறெதாவது துறையில் கவனம் செலுத்துவது நல்லது" என்று சோதிடம் சொல்ல வைத்தார். இதனால் சற்றும் மனம் தளராத சௌடையா, " எப்பாடு பட்டாவது இசைத் துறையில் முன்னேறிக் காட்டுவேன்" என்று சபதம் இட்டார். இதனால், பக்கண்ணாவின் சிக்ஷை முடிவிற்கு வந்தது.
பள்ளிக்கும் செல்லாமல், இசை பயில்வதையும் நிறுத்திவிட்ட சௌடையாவைக் கண்டு சுந்தரம்மா கவலையுற்றார். இந்நிலையில், சுந்தரம்மாவின் சகோதரரான சௌடையா (!), தம் மருமகனை அழைத்துப் போய், மைசூரில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சேர்ப்பதாக வாக்களித்தார். இதனால் 1910-ஆம் வருடம் தம் மாமாவுடன் மைசூரை நோக்கிப் பிரயாணித்தார் இளம் சௌடையா. அவரது 16-ஆவது வயதில் தொடங்கிய குரு-சிஷ்ய பாவம், 21 வருடங்கள் தொடர்ந்தது. முதலில் சிஷ்யனாக சேர்ந்த்த சௌடையா, சில ஆண்டுகளிலேயே குருவிற்குச் சமமாய் மேடையில் அமர்ந்து வாசிக்கும் பக்க வாத்தியக் கலைஞராய் தேர்ச்சி பெற்றார்.
தனது குரலால் நாடெங்கும் புகழ் பெற்றிருந்த பிடாரம் கிருஷ்ணப்பா, வயலின் வாசிப்பதிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். 1901-ஆம் ஆண்டு நிகழ்ந்த அவரது கச்சேரி ஒன்றுக்கு உடன் வாசித்த திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரின் வாசிப்பே, இவரை வயலினில் தேர்ச்சி பெற உந்தியது என்பர். சௌடையாவின் குரல் வாய்பாட்டிற்கு தோதானதாக அமையாததை உணர்ந்த கிருஷ்ணப்பா, அவருக்கு வயலின் வாசிக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
நல்ல குரு கிடைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ அதே அளவு புண்ணியம், நல்ல சிஷ்யன் அமையவும் தேவைப்படும். அப்பேறினைப் பெற்றிருந்த கிருஷ்ணப்பாவிற்கு சௌடையாவின் மேல் தனிப்பட்ட முறையில் அளவு கடந்த அன்பிருப்பினும், தனது சிட்சையில் மிகவும் கண்டிப்பாகவே இருந்தார். கிருஷ்ணப்பாவின் குருகுலத்தில் பயின்ற அனைத்து மாணவர்களும் அதிகாலை நான்கு மணிக்குள் விழித்து, இசை வளத்தைப் பெருக்கிக் கொள்ள சாதகம் செய்வதுடன், தேக/மன அரோக்கியத்தைத் திடப்படுத்த உடற்பயிற்சி, பிராணாயமம், யோகா போன்றவைகளையிம் செய்தனர். "ஒரு நாளைக்கு குறைந்தது, 9-10 மணி நேரம் சாதகம் செய்ய வேண்டியிருக்கும். பல சமயங்களில் சாதகம் நள்ளிரவு வரை நீடிக்கும். எத்தனை நேரம் ஆனாலும், காலையில் நான்கு மணிக்கு எழுவதில் எந்த மாற்றமும் இருக்காது. பல சமயங்களில் போதுமான அளவு தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறேன். எனது ஆரம்ப காலப் பயிற்சியில். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரங்கள் போன்ற விஷயங்களை இயந்திர கதியில் கற்காமல், அவற்றின் பயன் உணர்ந்து பல் வேறு ராகங்களில் பல முறை சாதகம் செய்திருக்கிறேன். இப்பொழுதும் கூட எனது சாதகங்களில் இவ்விஷயங்களுக்கு இடம் பெரும்.", என்று சௌடையா தனது புகழின் உச்சியில் இருந்த பொழுது கொடுத்திருந்த பேட்டியில் கூறுகிறார்.
இசையின் அடிப்படைகளில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், வாரம் ஒரு ராகம் என சௌடையாவை சாதகம் செய்யச் சொல்வார் கிருஷ்ணப்பா. அந்த ஒரு வாரத்தில், ராக ஆலாபனை, கீர்த்தனைகள், ஸ்வரப் ப்ரஸ்தாரம், தானம், பல்லவி இசைத்தல் போன்ற அனைத்தையும் வாசித்துப் பழக வேண்டுமென்பது அவரது ஆக்ஞை. ஒரு முறை, அந்த வார ராகமாக கரஹரப்ரியாவைத் தேர்வு செய்து வாசிக்கச் சொல்லியிருந்தார் பிடாரம் கிருஷ்ணப்பா. கிருஷ்ணப்பாவின் வீட்டு மாடியில் சௌடையா சாதகம் செய்து கொண்டிருக்க, கிருஷ்ணப்பா தனது நண்பர் ஒருவருடன் மும்முரமாய் உரையாடிக் கொண்டிருந்தார். கரஹரப்ரியாவை இரண்டு நாட்கள் வாசித்துவிட்ட நிலையில், குரு அருகில் இல்லையென நினைத்து, வேறொரு ராகத்தை வாசிக்க ஆரம்பித்தார் சௌடையா. அவரது போதாத காலம்,கிருஷ்ணப்பாவின் வாய் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவரது காதுகள் சிஷ்யரின் வாசிப்பை கவனித்தபடியே இருந்தன. ராகம் மாறியதும், சௌடையாவை கீழே அழைத்து " கரஹரப்ரியாவில் கரை கண்டுவிட்டாயா நீ? வேறொரு ராகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டாய்?" என்று கேட்டார். அம்புகள் போல சீறிய வார்த்தைகளால் தாக்கப்பட்டு கலங்கி நின்ற சௌடையாவைப் பார்த்து, "போ! கரஹரப்ரியாவை வாசி", என்று பணித்தார். மன வருதத்துடன் சென்ற சௌடையாவின் வயலினிலிருந்து கரஹரப்ரியாவின் பல புதிய பரிமாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வர ஆரம்பித்தன. சற்றைக்கெல்லாம், பிடாரம் கிருஷ்ணப்பா மாடிக்கு விரைந்து வந்து சிஷ்யனை மனதாரப் பாராட்டி, " இசை என்பது ஒரு தவம். அவ்வேள்வியில் 'நான்' என்ற எண்ணத்தை ஒழித்து, நம்மை மறந்த நிலையில் ஒன்றரக் கலக்கும் பொழுதுதான், இசையின் உண்மையான அழகு வெளிப்படுகிறது. உனது நன்மைக்காகத்தான் கடிந்து கொண்டேன்", என்றார் நா தழுதழுக்க.
அன்பைப் பொழிவதில் தந்தையைப் போய் விளங்கினாலும், கிருஷ்ணப்பாவின் பாராட்டைப் பெற கடின உழைப்புத் தேவைப்பட்டது. கிருஷ்ணப்பாவின் இல்லத்திலேயே தங்கி கடுமையாக உழைத்ததின் பயனாய், சௌடையாவின் வில் வித்தை நல்ல தேர்ச்சியையடைந்தது. சிஷ்யனின் இசை முதிர்ச்சியை உணர்ந்த கிருஷ்ணப்பா, தனது கச்சேரிகளிலேயே அதை உபயோகப்படுத்திக் கொண்டார். சௌடையாவின் 21-ஆவது வயதில், மைசூரில் சிவகங்கை மடாதிபதியின் வருகையை கௌரவிக்கும் பொருட்டு நடந்த கிருஷ்ணப்பாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அக்கச்சேரிக்கு வாசிக்க இருந்த வயலின் வித்வான் வராததால் அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய சௌடையாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. (வரலாற்றைப் பார்க்கும் பொழுது, அரியக்குடி, ஜி.என்.பி போன்ற பல ஜாம்பவான்களின் அரங்கேற்றம் எதிர்பாராத கணத்திலேயே அமைந்திருக்கின்றது!)அக்கச்சேரியில் மடாதிபதி மற்றும் பிடாரம் கிருஷ்ணப்பாவின் திருப்திக்குப் பாத்திரமாய் சௌடையாவின் வாசிப்பு அமைந்தது. அன்று தொடங்கி, கிருஷ்ணப்பாவின் கடைசி காலம் வரை பக்கபலமாகத் சௌடையாவின் வாசிப்பு திகழ்ந்தது. கிருஷ்ணப்பா, தனது மேடையிலேயே சிஷ்யருக்கு இடமளித்த போதும், தனது கண்டிப்பைச் சற்றும் தளர்த்தாதவராய் விளங்கினார். ஒருமுறை, மைசூர் பிரசன்ன சீதா ராம ஆலயத்தில் நடந்த கச்சேரியில் தவறுதலாய் சில அபஸ்வரங்கள் சௌடையாவின் வயலினிலிருந்து வெளிப்பட, கொதிப்படைந்த கிருஷ்ணப்பாவின் கைகள் சௌடையாவின் கன்னத்தைப் பதம் பார்த்தன. அதனைப் பொருட்படுத்தாது, புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டு கச்சேரியினைத் தொடர்ந்தார் சௌடையா. தனது செயலால் மனம் வருந்திய கிருஷ்ணப்பா "அடி பலமாக பட்டுவிட்டதா" என்று வினவ, "அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் என் நன்மைக்குத்தானே", என்றார் சௌடையா. (இதே போன்ற நிகழ்வு இராஜரத்னம் பிள்ளை போன்ற பல வித்வான்கள் வாழ்விலும் நடந்திருப்பதிலிருந்து அக்கால குருகுலவாசத்தைப் பற்றி தெரிய வருகிறது).
1920-களில், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு எளிதில் கேட்க கூடிய வகையில் நான்கு கட்டைக்கு குறையாமல் இருந்த பாடகரின் ஆதார ஸ்ருதி, படிப்படியாக குறைய ஆரம்பித்தது. 'sound amplification' பற்றியெல்லாம் நினைத்தும் பார்க்க முடியா அக்காலகட்டத்தில், வயலின் வித்வான்களுக்கு இந்த ஸ்ருதி குறைவு பெரிய பிரச்சனையாக இருந்தது. வயலினிலிருந்து வெளிப்படும் இசை எத்தனை நன்றாயிருப்பினும், அவ்விசை ரசிகரைச் சென்றடைய, அவ்விசையின் அளவு (volume) போதுமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் சௌடையா. அதனால், வயலினைப் பழது பார்ப்பதில் தேர்ந்த மைசூர் ரங்கப்பாவின் உதவியுடன் சப்த-தந்தி வயலினை உருவாக்கினார். இவரது ஏழு தந்தி வயலினில், வழக்கமாய் இருக்கும் நான்கு தந்திகளுள் முதல் மூன்றினை இரட்டித்து, நான்காவதை ஒற்றைத் தந்தியாகவே அமைத்திருக்கிறார். இரட்டிக்கப் பட்ட தந்திகளில், இரண்டாவது தந்தி, முதல் தந்தியின் ஸ்வரத்திலிருந்து சரியாக ஒரு ஸ்தாயி (octave) குறைவான ஸ்வரத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். இதன் மூலம், ரசிகர்களின் காதுகளுக்கு சௌடையாவின் இசை எட்டினாலும், இவ்வயிலினை இசைப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. வயலினை ஸ்ருதி சேர்க்கும் பொழுது இரட்டிக்கப்பட்ட தந்திகளின் ஸ்ருதி சரியாக ஒரு ஸ்தாயி வேறுபட வேண்டும். இதில் இம்மி பிசகினால்கூட வாசிப்பில் அபஸ்வரம் வெளிப்பட்டுவிடும். இவ்வயிலினை வாசிக்கும் பொழுது, வித்வானின் இடது கை விரல்கள் finger board-இல் வைக்கப்படும் பொழுது, இரண்டு தந்திகளுக்கு பொதுவான bridge-க்கு 100% parallel-ஆக இருந்தாக வேண்டும். அப்படியில்லையெனில், ஒரே ஸ்வரத்தில் வெவ்வேறு ஸ்தாயிகளில் கூட்டப்பட்டிருக்கும் இரு தந்திகளில் ஒரே ஸ்வரம் பேசாமல் போய்விடும். சப்த ஸ்வர தேவதைகளை மனதில் கொண்டே ஏழு தந்தி வயலினை சௌடையா உருவாக்கினார் என்கிறார் அவரது பிரதம சிஷ்யர் வி.சேதுராமையா.
சௌடையாவின் கற்பனையில் உருவான ஏழு தந்தி வயலினில் பல காலம் சாதகம் செய்து நல்ல தேர்ச்சி பெற்றிருப்பினும், பாரம்பரியத்தில் ஊரிப்போன குருவிற்கு முன்னால் இதைக் காட்டத் தயங்கினார். ஒருமுறை, பிடாரம் கிருஷ்ணப்பாவின் குருவான வீணை சேஷண்ணாவின் வீட்டில் கிருஷ்ணப்பாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. கச்சேரியின் கடைப் பகுதியில், வழக்கமான நான்கு தந்தி வயலினை கீழே வைத்துவிட்டு, தனது கண்டுபிடிப்பான ஏழு தந்தி வயலினை வாசிக்க தனது குருவிடம் அனுமதி வேண்டினார் சௌடையா. இதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பா, "முதலில் நான்கு தந்தி வயலினில் முழுமையாகத் தேர்ச்சி பெறு. அப்புறம் புதிய கண்டுபிடிப்புகளில் எல்லாம் உன் கைவரிசையைக் காட்டலாம்", என்றார். மேடையில் நடந்து கொண்டிருந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வீணை சேஷண்ணா, விஷயத்தை விசாரிக்க, சௌடையா தனது கற்பனையில் உருவான புதிய வயலினை அவருக்கு விளக்கினார். புதிய வயலினிலிருந்து எழும் இசையைக் கேட்க ஆவலடைந்த சேஷண்ணா கிருஷ்ணப்பாவிடம், சௌடையாவை வாசிக்க அனுமதிக்குமாறு கோரினார். குருவின் கோரிக்கையை மீற முடியாத கிருஷ்ணப்பாவும், வேறு வழியின்றி இணங்கினார். அன்று ரசிகர்களின் காதில் விழ ஆரம்பித்த ஏழிசை விரைவில் மிகுந்த பிராபல்யத்தை அடைந்தது. பிடாரம் கிருஷ்ணப்பா, தன்னளவில், சப்த தந்தி வயலினை ஏற்க மறுத்தாலும், தனது குருவின் ஒப்புதலையும், மக்களின் ஆதரவையும் பெற்றுவிட்ட வயலினை தன் சிஷ்யன் வாசிப்பதற்கு தடையேதும் சொல்லவில்லை.
முதலில் பிடாரம் கிருஷ்ணப்பாவின் பக்க வாத்தியமாக தொடங்கிய சௌடையா, நாளடைவின் பக்கா வாத்தியக் கலைஞராக உருவானதும், அக்காலத்தில் பிரபலமாயிருந்த மற்ற சங்கீத வித்வான்களுக்கும் வாசிக்க ஆரம்பித்தார். கிருஷ்ணப்பாவின் மதிப்பைப் பெற்றிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கு சௌடையா வாசிக்க ஏற்பாடு செய்தார் கிருஷ்ணப்பா. கூடிய விரைவில், சௌடையா வாசிக்காத செம்பைக் கச்சேரிகளைப் பார்ப்பதே அபூர்வம் என்ற நிலை ஏற்பட்டது. அந்நேரத்தில்தான் கர்நாடக இசையுலகின் முடிசூடா மன்னன் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், தனது புகழ்ப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார். ஒருமுறை, சென்னையில் முனிசாமி நாயுடு ஏற்பாடு செய்திருந்த அரியக்குடியின் கச்சேரிக்கு வாசிக்க இருந்த வயலின் வித்வான் கடைசி நிமிடத்தில் வரமுடியாமல் போய்விட்டது. சௌடையா அப்பொழுது சென்னையில் இருந்ததால், அவர் உடன் வாசிக்கலாமா என்று முனிசாமி நாயுடு விண்ணப்பிக்க, அ
|