சாப்ளின் படங்கள்
A Dog’s Life
படம் : எ டாக்ஸ் லைஃப்
வருடம்: 1918
நடிகர்கள்: சாப்ளின், எட்னா, இங்கர் பெர்க்மென்.
இயக்கம்: சாப்ளின்.
நேரம் : 40 நிமிடங்கள்.
தயாரிப்பு : பர்ஸ்ட் நேஷனல் கார்ப்பெரேஷன். (First National Corporation)
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன்.
ம்யூட்சல் (Mutual) நிறுவனம் பல லட்சங்கள் கொடுக்க முன் வந்தும், சாப்ளின் பர்ஸ்ட் நேஷனல் கார்ப்பெரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார். அதற்கு முக்கிய காரணம், ஐந்து வருடங்கள் பின்பு படத்தின் உரிமை முழுவதும் சாப்ளினுக்கு சொந்தம் என பர்ஸ்ட் நேஷனல் கார்ப்பெரேஷன் ஒரு சலுகை அளித்ததுதான்.
விறுவிறுவென தன் முதல் பட வேலையை தொடங்கினார். இந்த முறை சாப்ளின், விலங்கிற்கும் மனிதனுக்குமான உறவை கையிலெடுத்தார். பொதுவாகவே அமெரிக்க மக்கள் வளர்ப்பு விலங்குகள் மீது நிறைய அன்பை பொழிவார்கள். இந்த முறை சாப்ளின் அதையே தன் படத்தின் மைய கருவாக வைத்தார்.
இந்த படத்தில் தன் ஆஸ்த்தான நடிகை எட்னாவுடன், இந்த முறை சாப்ளின் நம்பியிருந்தது இங்மர் பெர்க்மேனை. அதுவரை சாப்ளினுக்கு நகைச்சுவை காட்சிகளுக்கு உதவியாக இருந்த எரிக் கேம்பல் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். எரிக்கின் இழப்பு சாப்ளினை சற்றே சோர்வடைய செய்தது. ஆயினும் விரைவாக எழுந்துக்கொண்டார், அது தானே அவரின் வழக்கம்.
அதுவரை எரிக்கின் ஆஜானுபாகமான உடலும், சாப்ளினின் நோஞ்சான் உடலும் அவர்களுக்குள்ளான ஒரு வித நகைச்சுவை காட்சியை ஏற்படுத்தியது. எரிக்கும் சிறந்த நடிகர்தான், ஆனால், விதி விளையாடிவிட்டது. இங்மர் பெர்க்மேன். இவர், சாப்ளினுக்கு பட சம்பந்தப்பட்ட உதவிகள் செய்பவராகவும் இருந்தார்.
சாப்ளின், ஒரு பெரிய ஸ்டூயோவை நிர்மானித்திருந்தார். பொதுவாகவே சாப்ளின் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகள் பெரும்பாலும் செட்டில் வைத்தே படமாக்கப்படும். அதனாலயேக் கூட சில நேரங்களில் ஒரு படத்தை தயாரிக்க நீண்ட டேக்குகளும், நீண்ட நாட்களும் ஆகிவிடுவதுண்டு.
A Dog’s Life --- கதைச் சுருக்கம்:
 |
உணவில்லாமல் அலையும் வழிப்போக்கனான சாப்ளின், ஒருத் தெரு நாயைக் காப்பாற்றுவார். பின்பு தனக்கு கிடைக்கும் உணவை அதற்கும் அளித்து தன்னுடன் வைத்துக்கொள்வார். ஒரு கேபிரே விடுதியில் முதலாளியால் கொடுமை படுத்தபடும் எட்னாவை பார்த்து காதல் வயப்படுவார்.
அதே நேரம் வீதியில் இரு திருடர்கள் ஒரு பணக்காரரிடம் வழிப்பறி செய்து, போலிஸிடமிருந்து தப்பிக்க அந்த பணத்தை மண்ணில் புதைத்து வைப்பார்கள். அங்கு படுக்க வரும் சாப்ளினின் நாய் மூலம் சாப்ளினுக்கு அந்தப் பணம் கிடைக்கும். அந்த பணத்தை சாப்ளினிடமிருந்து அந்த திருடர்கள் பறித்துக்கொள்ள, அவர்களிடமிருந்த அதை தந்திரமாக மீட்டு, எட்னாவுடன் ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை சாப்ளின் அமைத்துக்கொள்வார். |
விலங்குகள் மீதான அன்பு:
படத்தின் ஒன் லைன் எளிமையானது. சாப்ளின் நாயைக் காப்பாற்றுவார், பின்பு நாய் சாப்ளினை காப்பாற்றும். படம் மூன்று பேரை சுற்றிவரும. ஆதரவில்லாமல் இருக்கும் சாப்ளின், நாய் மற்றும் எட்னா.
படத்தின் முதல் காட்சியில் ஒரு சேரி பகுதியை காட்டுவார், அடுத்த காட்சியில் பசியோடு குப்பை போன்ற ஒரு இடத்தில் படுத்திருக்கும் சாப்ளினை காட்டுவார். அமெரிக்காவில் சேரியா! குப்பையான இடாமா! அமெரிக்காவில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்க, சாப்ளின் வேண்டுமென்றே ஏழ்மையை காட்டுகிறார் என்ற குற்றச் சாட்டு வைக்கப்பட்டது. பின்னாளில் இந்த காட்சிகள் சாப்ளினை கம்யூனிஸ்ட் என்று குற்றம சாற்ற உதவின.
இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை பீறிட்டது. எட்னா குறித்த அறிமுகக் காட்சியில், அந்தக் கேபிரே விடுதியில் அப்பாவியான எட்னா ஒரு சோகமான பாடலை பாடுவார். அதனை அடுத்து அங்கு நடக்கும் காட்சிகள் அனைத்துமே நம் விலா எலும்பை நோக வைக்கும். நீங்கள் கொஞ்சம் கவனித்தால் அதில் சாப்ளின் தன் தாயரை பற்றி காட்சிப்படுத்தியிருப்பது புரியும்.
இதில் ஒரு சின்ன காட்சியில் ஒரு தள்ளுவண்டி கடைக்கு சொந்தக்காரராக சிட்னி சாப்ளின் நடித்திருந்தார். திருடர்களிடமிருந்து பணத்தை தந்திரமாக மீட்கும் காட்சியமைப்பு சாப்ளினின் மேதமைத்தனத்திற்கு இன்னொரு உதாரணம்.
இறுதியில் சாப்ளினும், எட்னாவும் திருமணம் செய்துக்கொண்டு ஒரு கிராமத்தில் வாழ்வார்கள். அந்த கற்பனையை சாப்ளின் நடிப்பில் வெளிபடுத்திய விதம் பரவலாக பாராட்டப்பட்டது. இறுதியில் சாப்ளின் விவசாயியாக மாறி ஒரு பெரிய நிலத்தில் ஒவ்வொரு விதையை விதைப்பார், அந்த நாய் குட்டிகளுடன் இருக்க, சாப்ளின் எட்னாவுடன் சேர்ந்திருக்க படம் முடிவடையும்.
நாம் இந்த படத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், கதையில் ஏற்கனவே சொன்னது போல, ஒரு பணக்காரரை அடித்து அவரிடம் திருடும் பணத்தை தான், சாப்ளினின் நாய் அவருக்கு கண்டுபிடித்துக் கொடுக்கும், அதைதான் சாப்ளின் மூலமாக (Source) வைத்து, கிராமத்தில் நிலம் வாங்கி வாழ்க்கை நடத்துவார். பிரச்சனை என்னவென்று உங்களுக்கே புரிந்திருக்கும். அந்த பணத்தை சாப்ளின், போலிஸிடம் கொடுத்திருக்க வேண்டும். அவர் அப்படி செய்யாமல் எடுத்துக்கொள்வார்.
அவ்வளவுதான், அனைத்து அறிவுஜீவிகளும் கொதித்தெழுந்தனர். சாப்ளின் அந்த கருத்தை தெரிந்து வைத்தாரா? அல்லது தெரியாமல் படத்தில் அமைந்ததா? என்று நமக்கு நிச்சயமாக தெரியவில்லை.
 |
ஒரு பணக்காரனின் பணத்தைக்கொண்டு ஒரு ஏழை வாழ்க்கையை மேம்படுத்திகொண்டால், பணக்காரர்களின் பணத்தைக் கொண்டு ஏழைகள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம், என்ற அந்தப் பொதுவுடமை கருத்து, பின்னாளில் இல்லை இல்லை அன்றே அவரை கம்யூனிஸ்ட் என்று முத்திரைக் குத்தியது. இன்னொரு பக்கம் சாப்ளின் லட்சங்கள் சம்பாதித்தாலும் அதை தன் படங்களுக்காகவே செலவு செய்தார். |
ஏனென்றால் பர்ஸ்ட் நேஷனல் கம்பெனியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், சாப்ளின் படங்களுக்கான தயாரிப்பு செலவை அவரே செய்துக்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் சாப்ளின் பணத்தின் பின்னால் ஓடியதற்கு காரணம் அவரின் பணத்தாசையல்ல, நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற கலை தாகம் தான்.
சாப்ளின் என்றாலே வெற்றிதானா? நிச்சயமாக இல்லை. அடுத்து சாப்ளின் பெற்ற தோல்விகளை பார்க்கலாம்.
(குறிப்பு: சாப்ளினை பற்றிய த்ருஃபாவுட்டின் கருத்துக்கள் பின்பு விரிவாக எழுதப்படும்.)
சாப்ளின் வருவார்....