சாப்ளின் படங்கள்
Easy Street
படம்: ஈஸி ஸ்ட்ரீட்.
வருடம்: 1917
நடிகர்கள்: சாப்ளின், எட்னா, எரிக் கேம்பில் மற்றும் பலர்.
இயக்கம்: சாப்ளின்.
நேரம்: 19 நிமிடங்கள்.
தயாரிப்பு: மீச்சுவல் பிலிம் கார்ப்பெரேஷன். (Mutual Film Corporation)
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன் / காவல் அதிகாரி.
கதைச் சுருக்கம்:
சாப்ளின், மிகுந்த சோகமான நேரத்தில் எட்னாவை ஒரு மனித நலக் காப்பகத்தில் சந்திப்பார். அங்கே வாழ்க்கை மீது நம்பிக்கை பெற்று, வேலை தேடி காவல் அதிகாரி ஆகிவிடுவார். அவர் பணியிடம் ஈஸி ஸ்ட்ரீட். அந்த தெருவில் வசிக்கும் ரவுடி ’எரிக்’கை கண்டு போலிஸே அஞ்சுகிறது. அனைவரையும் தாக்கும் எரிக்கை நூதனமாக சாப்ளின் பிடித்துவிடுகிறார். எட்னாவை கற்பழிப்பிலிருந்து காப்பாற்றி அந்த தெருவையே தன் கட்டுக்குள் கொண்டுவருகிறார். இறுதியில் அன்பால் அனைவரையும் வென்று, ஒரு மதிப்பிற்க்குரிய மனிதராகுகிறார். அந்த தெருவும் அமைதிப் பொங்க, மக்களும் அமையுதியுடன் உலாவ, படம் முடிவடைகிறது.
 |
படத்தை பற்றி பார்க்கும் முன், அமெரிக்காவை பற்றி சில விஷயங்கள். அமெரிக்க என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வானளவு கட்டிடங்கள், எங்கும் பணக்காரர்கள், கேளிக்கைகள். சந்தோஷமான வாழ்க்கை, ஒரு முன்னேறிய நாடு மொத்ததில் ’பூலோக சொர்கம்’. சரிதான், இதை தான் அமெரிக்க படங்கள், நமக்கு அமெரிக்கவை பற்றி முன் வைக்கும் பிம்பம். |
இப்பொழுது கூட ஹாலிவுட் படங்களை பாருங்கள், படத்தின் ஹீரோக்கள், உலக மக்களை எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.
உண்மையில் அமெரிக்காவிலும் ஏழைகள் உள்ளனர். முதலாக அமெரிக்கா என்பதே ஒரு குடியேரிகளின் நாடு. உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கிருக்கும் பூர்வ குடி சிவப்பிந்தியர்களை கொன்றும், ஓரம்கட்டியும் அவர்கள் நிலங்களையும் வளங்களையும் அபகரித்து கட்டிய தேசம் தான் அமெரிக்கா. அந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் அமெரிக்காவில் குடியேரிகள்தான் அதிகம்.
அப்படி குடியேரியவர்கள், அங்கு ஏழைகளாக சோற்றுக்கே வழி இல்லாமல், சேரியில் வாழ்ந்து, அவதிபடுவதை எந்த அமெரிக்க மீடியாவும் வெளியே சொல்வதில்லை. திரைப்படங்கள் உட்பட.
அப்படியிருக்க பூலோக சொர்கமாக பாவிக்கப்படும் அமெரிக்காவின் நிஜ ஏழ்மையும், விளிம்பு நிலை மக்களையும் சற்றே தன் நகைச்சுவை உதவியுடன் பதிவிட்டவர் சாப்ளின். அதில் மிக முக்கியமான படம் ’ஈஸீ ஸ்ட்ரீட்’.
முதல் காட்சியில் சோகமாக காப்பகத்தில் நுழையும் சாப்ளின், வழக்கமான தன் வேடிக்கைகளை தொடங்கிவிடுவார். அவர் கூச்சமாக உட்கார்ந்திருக்க, எட்னாவும், இன்னொருவரும் அவரிடம் அன்பாக பேசி வாழ்க்கை மீது பிடிப்பு ஏற்படுத்த, மெல்ல தன் பேண்டில் ஒளித்துவைத்திருக்கும் திருடிய உண்டியலை எடுத்து எட்னாவிடம் நீட்டுவார், கம்பீரமாக மேலே பார்த்து, நிமிர்ந்து நடக்கும் போது படி இடரி கீழே விழுவார்.
அவசரமாக போலிஸாகி, ஈஸி ஸ்ட்ரிட்டில் அவர் நடக்கும் காட்சி நகைச்சுவையின் உச்சம். படம் முடியும் பொழுது, கெட்டவரான எரிக் தன் மனைவியுடன் பிரார்த்தனைக்கு செல்லுவார், அத்தனை மணி நேரம் சண்டை போட்டுக்கொண்டிருந்த மக்கள் பிரார்த்தனைக்கு செல்லுவார்கள். கிட்டதட்ட வில்லன் திருந்தும் காட்சி தான் என்றாலும் சாப்ளின் அன்பின் அவசியத்தை நேர்த்தியாகவும், விளிம்பு நிலை மக்களை காட்டியவிதமும் இன்றளவும் இந்த படத்தை முக்கிய படமாக்குகிறது.
அடுத்த முறை குழந்தைகளுடன் சாப்ளின் படங்களை பார்க்கும் பொழுது, அவர்களின் சிரிப்பின் நடுவே இந்த கருத்துகளை பற்றியும் விளக்குவது நம் கடமையாக இருக்க வேண்டும். என்னை கேட்டால் பெரியவர்களே இன்னும் சாப்ளின் படங்காளை ஏதோ ஜோக்கர் நகைச்சுவையை போல பார்ப்பது வியப்பாக தான் உள்ளது.
THE IMMIGRANT
படம் : தி இமிக்ரன்ட்.
வருடம்: 1917
நடிகர்கள்: சாப்ளின், எட்னா, எரிக் கேம்பில் மற்றும் பலர்.
இயக்கம்: சாப்ளின்
நேரம் : 20 நிமிடங்கள்.
தயாரிப்பு : மீச்சுவல் பிலிம் கார்ப்பெரேஷன். (Mutual Film Corporation)
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன்.
கதைச் சுருக்கம்:
அமெரிக்காவிற்கு குடியேரியாக கப்பல் பயணத்தில் சாப்ளின் வாருகிறார். கப்பலின் மோசமான பயணத்தின் நடுவே எட்னாவையும் அவரின் நோயுற்ற அம்மாவையும் சந்திக்கிறார். பின்பு அமெரிக்கா வந்தவுடன், இருவரும் பிரிகிறார்கள். கையில் காசில்லாமல் ஒரு உணவகத்திற்க்கு செல்லும் சாப்ளின், அங்கே மீண்டும் எட்னாவை சந்திக்கிறார். எட்னாவின் தாயார் இறந்த விஷயத்தை அறிகிறார். அங்கு வரும் ஒரு ஓவியர் அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைக்கொடுக்கிறார். வெளியே வரும் எட்னாவும், சாப்ளினும் மழைக்கு ஒதுங்கி திருமணம் செய்யபடும் அலுவலகத்திற்கு செல்லுகிறார்கள்.
இந்த முறை சாப்ளின் அமெரிக்கவிற்க்கு வரும் குடியேரிகளை பற்றியும் அவார்களின் துயரங்கள் பற்றியும் விளக்கியிருந்தார். நெடும் கப்பல் பயணம், கடல் பயண ஒவ்வாமை, ஏழை மக்களின் வாழ்க்கை, என தன் பங்கிற்க்கு ஏழைகள் பக்கம் சாய்ந்திருந்தார்.
 |
கப்பலின் நிலையற்ற ஆட்டம் இவருக்கு நல்ல நகைச்சுவை களத்தை அமைத்துக்கொடுத்தது. கப்பலின் நிலையற்ற ஆட்டத்தை உலகின் ஸ்திரத்தன்மையற்ற நிலையாக காட்சிப்படுத்தினார். கப்பல் ஆடும் பொழுது உண்ணப்படும் உணவு, கப்பலின் நோயுற்ற நிலை போன்றவற்றை வைத்து அவர் செய்த நகைச்சுவை காட்சிகள் படத்திற்க்கு மெறுகேற்றின. |
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை பார்க்கும் பார்வை, அந்த காட்சியின் அமைப்பும் நம் மனதை தொடும். சில நாட்கள் கழித்து பணமில்லாமல் ரோட்டில் கிடக்கும் பணத்தை எடுத்து தன் பாக்கெட்டில் போட, பாக்கெட் ஓட்டையில் பணம் விழுந்தது அறியாமல் உணவகத்தில் இவர் சாப்பிட புரியம் சேஷ்ட்டைகள், நம் வயிறை பதம் பார்க்கும்.
அங்கே எட்னாவை கணும் போது, எட்னா சோகமாக ஒரு துணியை காட்ட எட்னாவின் தாய் இறந்த்தை சிம்பாலிக்காக புரியவைப்பார். பின்பு இருவரும் உணவருந்த, தன்னிடம் காசு இல்லாததையும் கீழே விழந்த காசை எடுக்கவும் அவர் செய்யும் லீலைகள் அருமையான காட்சிகள். பின்பு ஒரு வழியாக அங்கு வரும் ஓவியரான பெர்க்மென் இவர்களுக்கு வேலை கொடுத்து தன் பில்லை கட்டிவிட்டு டிப்ஸ் வைக்க, அந்த டிப்ஸ் காசையே சாப்ளின் நைசாக அவர் பில்லுக்கு வைக்க, வரும் மீதி பணத்தை சாப்ளின் டிப்ஸாக கொடுத்துவிட்டு தப்பிபார்.
வெளியே நாளை வரப்போகும் சந்தோஷத்துடன், மழை பொழிய காதலர்களாக திருமண அலுவலகத்திற்கு நுழைவது இனிமையான முடிவு. சாப்ளின் திரைப்படங்களில் இந்த மாதிரியான இனிமையான முடிவுகள் கொண்ட படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த படத்தில் அமெரிக்காவிற்குள் நுழையும் போது அங்கு வரும் ஒரு அதிகாரியை சாப்ளின் உதைப்பார், இந்த காட்சி ஆரம்பத்தில் தணிக்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெளியிடப்பட்டாலும், பின்னாளில் சாப்ளின் அமெரிக்க எதிர்ப்பிற்கு சாட்சியாக போனது கலையின் உச்ச சாபம்.
இந்த படத்தில் காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக பல டேக்குகள் வாங்கிய எட்னா அத்தனை டேக்குகளிலும் உணவை உண்டு எரிச்சலடைந்தார். முதலில் சாப்ளின் இதன் உணவகக் காட்சியை தான் படமாக எடுத்தார். பின்புதான் கப்பல் காட்சிகளை எடுத்துப் பொருத்தினார்.
1917 குடியேரிகளின் கஷ்டங்களை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் சொன்ன சமுக பொறுப்பினால் இன்றளவும் சாப்ளினின் இந்த படம் மிக முக்கிய படங்களுள் ஒன்றாக இருக்கிறது.
அடுத்து சாப்ளினின் படமான “A Dog’s Life” பற்றியும். சாப்ளின் பற்றி ப்ரென்சு திரை மேதை ‘ப்ரான்ஸிஸ் த்ரொபௌட்’ என்ன சொல்லுகிறார் என்பதயும் பார்போம்.
சாப்ளின் வருவார்....