‘The Tramp’ (வழிப்போக்கன்)
ஒரு வழியாக சாப்ளின் ’கீ ஸ்டோன்’ ஸ்டியோவில் வாரக் கூலிக்கு நடிகராக, அதன் அதிபர் மெக் செனட்டால் அமர்த்தப்பட்டார். சாப்ளின் அந்த ஸ்டியோவை சுற்றி சுற்றி வந்தார். அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த சினிமா சம்பந்தப்பட்ட பல தொழில்நுட்பங்களை உற்று கவனித்தார், ஆர்வமாக பல சந்தேகங்களை கேட்டு தெரிந்துக்கொண்டார். சினிமாவின் பல தொழில்நுட்பங்கள் சாப்ளினுக்கு புரிய தொடங்கின.
 |
1914ல் சாப்ளின் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். அவரது முதல் திரைப்படம் ஹென்றி லெமெனால் இயக்கப்பட்டது. அதில் சாப்ளின் சாதாரண தோற்றத்தில் -அதாவது ஒரு அமெரிக்கரை போல உடை உடுத்தி தான் நடிதிருந்தார். அப்பொழுது Tramp கதாபாத்திரம் உருவாகவில்லை.அப்பொழுது சாப்ளின் நடித்தெல்லாம் ஐந்திலிருந்து 15 நிமிடங்கள் ஓடக்கூடிய படங்கள் தாம். |
அதனால் அத்திரைப்படங்கள் ஒன்று நகைச்சுவையாகவோ அல்லது சிறிய வகை சாகச படங்களாகவோ தான் இருக்கும். அப்படி சிறிய படங்களில் நடித்தாலும், சாப்ளினுக்கு அந்த படங்கள் பிடிக்கவில்லை. அவர்கள் செய்த நகைச்சுவை அவருக்கு சுத்தாமாக பிடிக்கவில்லை. இததனைக்கும் மெக்செனட் ஒரு இயக்குனரும் கூட. அமெரிக்க சினிமாவில் “நகைச்சுவை சினிமாவின் மன்னர்” என்றழைக்கபட்டவர். ஆனால் சாப்ளினுக்கு அந்த நகைச்சுவை பிடிக்கவில்லை, ஏற்கனவே மேடைகளில் நகைச்சுவை பாத்திரம் ஏற்றவர், அவருடைய ரசனையும் எண்ணமும் முற்றிலும் மாறுப்பட்டிருந்தது.
அப்பொழுது சாப்ளினின் கற்பனையில் உருவான கதாபத்திரம் தான் Tramp. தொல தொல கால்சட்டை, அதற்கு நேர்மாறான இறுக்கமான சட்டை, கொஞ்சம் அழுக்கேறிப் போன கோட், தொப்பி, கைத்தடி, சற்றே கால்களை கோனையாக்கி பெங்குவின் போல ஒரு நடை, மூக்கின் கீழே அரை அங்குல மீசை. அந்த வேடத்தை பார்த்த அனைவருக்கும் சிரிப்பு வந்தது உண்மைதான. ஆனால், அவர்கள் நிச்சயம், அந்த கதாபத்திரம் உலகை ஆளப்போவதையோ , அது நகைச்சுவையின் சின்னமாகும் என்பதையோ ஊகிக்கவில்லை. ஆனால் சாப்ளின் ஊகித்தார்.அந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. சாப்ளின் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் ஆர்பரித்தனர். அப்படி Tramp ஆக சாப்ளின் திரையில் தோன்றிய முதல் படம் “Kid Auto Races at Venice“.
குழந்தைகள் பங்குபெறும் ஒரு கார் பந்தயத்தை, ஒருவர் படம் பிடிக்க முயலுவார். அவர் படம் பிடிக்கும்பொழுது சாப்ளினின் Tramp கதாபத்திரம் அவரை படம்பிடிக்கவிடாமல் வெறுப்பேற்றும். கதை அவ்வளவுதான், படத்தின் இயக்குனர் ஹென்றி லெமெனே இந்த படத்தில் சாப்ளினுடன் நடித்திருந்தார். அந்த பதினைந்து நிமிட படத்தில் சாப்ளின் செய்யும் சேட்டைகளை பார்ர்க்கும் யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது.
Tramp என்றால் தமிழில் நாடோடி அல்லது வழிப்போக்கன் என்று பொருள்.பெரும்பாலான படங்களில் இந்த கதாபத்திரம் ஒரு நாடோடியாக நடந்துவரும் ஆனால் அந்த பாத்திரம் காதல் நிரம்பி இருக்கும் காதலன், விழுந்தவுடனேயே எழுந்து வாழ்க்கை பயணத்தை தொடரும், பாடும், ஆடும், ஒரு வெகுளி, கள்ளத்தனம் இருக்காது, ஒரு அப்பாவி, எல்லோருக்கும் உதவி புரியும், சிரிக்கும், சிரிக்க வைக்கும்.
பொதுவாகவே மெக்செனட்டின் திரைப்படங்கள் சற்று அதீத நடிப்புடன், ஒரு வித செயற்கைத்தனமான காட்சிகளுடன் இருக்கும். அந்த நகைச்சுவை சாப்ளினுக்கு பிடிக்கவில்லை. சாப்ளின் திரைப்படம் இயல்பாக இருக்க வேண்டும், இயல்பாக நடிக்க வேண்டும் என்ற எண்னம் கொண்டிருந்தார். அதனால் சாப்ளினுக்கு அந்த படங்களை பிடிக்கவில்லை, ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். தினமும் இயக்குனர்களுக்கும் சாப்ளினுக்கும் சண்டை வர துவங்கியது. மெக்செனட்டிடம் சாப்ளின் பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புகார்கள் குவிய தொடங்கின. மெக்செனட் கோபபட்டாலும் சாப்ளினை வேலை விட்டு நீக்கவில்லை, காரணம் ஒரு விநியோகஸ்தர்!
சாப்ளினின் படம் ரிலிசானதும், ஒரு பட விநியோகஸ்தர் மெக்கை தொலைபேசியில் அழைத்து, தயவு செய்து அந்த ஒல்லியான மனிதர் (சாப்ளின்) நடித்த படங்கள் நிறைய அனுப்புங்கள் (அப்பொழுது சாப்ளின் சில படங்கள் தான் நடித்திருந்தார்) மக்கள் அவர் திரையில் தோன்றினாலே சிரிக்கிறார்கள், இங்கு கூட்டம் குவிகிறது என்று சொல்லிவிட்டார். மெக் கனிப்பு தவறவில்லை, ஆனால் இப்பொழுது சாப்ளின் மீது ஏகப்பட்ட புகார்கள். மெக் இறுதியாக சாப்ளினை அழைத்து பேசிவிட்டார்.
 |
சாப்ளின் ஒரே அடியாக சொன்னது, ”நீங்கள் எடுக்கும் படங்கள் சரியில்லை, அதனால் நானே படம் இயக்குகிறேன்”. நேற்று வரை நாடகங்கள் நடித்துக்கொண்டிருந்தவனுக்கு சினிமா பற்றி என்ன தெரியும் என்ற எண்ணம் மெக்கின் மனதில் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மாறாக இன்னொரு கேள்வியை கேட்டார், “நீ இயக்கினால் யார் பொறுப்பேர்ப்பது, யார் பணம் கொடுப்பது?” |
சாப்ளின் இந்த கேள்விகளுக்கெல்லாம் அசரவில்லை, அவருக்கு அவர் திறமை மீது முழு நம்பிக்கை இருந்தது. “நான் கொடுக்கிறேன்” என்று ஒத்துக்கொண்டார். ஒப்பந்தம் இதுதான், சாப்ளின் இயக்கும் படத்திற்க்கு சாப்ளினுக்கு சம்பளமில்லை. படம் வெற்றி பெற்றால் தான் சம்பளம். அப்படி சாப்ளின் இயக்கிய முதல் படம் “Caught in the Rain”. சாப்ளின் நடித்த பதிமூன்றாவது திரைப்படம். படம் வெற்றி! சாப்ளின் ஒரு வெற்றிகரமான இயக்குனராக, தன்னுடைய கலைப் பயணத்தை தொடங்கினார்.
சாப்ளின் அமெரிக்க சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகாராகிவிட்டார். மரத்தின் கனிகள் பழுக்க தொடங்கிவிட்டனவே, கல்லடியில்லாமலா? சாப்ளினுக்கு கல்லடிகள் கிடைக்க தோன்றின. சாப்ளினை விமர்சித்தவர்கள் விட்ட பிரம்மாஸ்த்திரம், சாப்ளினின் திரைப்படங்களில் வன்முறை நிறைந்துள்ளது!?
நீங்கள் சாப்ளினின் பல பழைய படங்களை பார்த்தால், ஒரு விஷயத்தை கவனிக்கலாம், படத்தில் சாப்ளின் யாரையாவது பின் புறத்தில் ஓங்கி ஒரு உதை விடுவார். படத்தில் அப்படி உதைப்பது சில சமயம், பல காட்சிகளில் இடம்பெறும். அதை தான் இவர்கள் வன்முறை என்று சத்தம் போட்டார்கள் காரணம், அப்பொழுது சாப்ளினின் பெருவாரியான ரசிகர்கள் குழந்தைகள். அவர்கள் படம் பார்த்துவிட்டு வந்து அதே மாதிரியாக உதைத்து சிரித்தார்கள். அவ்வளவு தான் சாப்ளின் மீது கனைகள் பாய்ந்தன. சாப்ளினுக்கும் அதில் உடன்பாடில்லை தான். அவர் மனதிலும் சினிமாவின் அடுத்தகட்ட முயற்சிகள் பற்றிய சிந்த்னைகள் ஓடிக்கொண்டிருந்தன.
சாப்ளினின் சகோதரர் சிட்னி சாப்ளின், சாப்ளினின் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொண்டார். இதனால் சாப்ளின் நிம்மதியாக தன் படங்களை பற்றி யோசிக்க முடிந்தது. அப்பொழுது தான் சிட்னி ஒரு விஷயத்தை கவனித்தார், சாப்ளினின் படங்கள் அதிக லாபத்தை ’கீ ஸ்டோனுக்கு’ ஈட்டி கொடுக்க! சாப்ளினோ குறைந்த சம்பளத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தார். இதனை கவனித்த சிட்னி, மெக்கிடம் அடுத்த ஒப்பந்தம் போடுமுன் சம்பளத்தை ஏற்றி கொடுக்க சொன்னார். ஆனால், மெக் பிடிவாதமாக மறுக்கவே, கீஸ்டோனுடனான் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. எஸ்னி என்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் துவங்கியது.
கீ ஸ்டோனில் சாப்ளின் மொத்தம் 35 படங்களிள் நடித்திருந்தார் அத்தனையும் குறும்படங்கள். அந்த படங்கள் பின்வருமாறு,
- Making a Living
- Kid Auto Races at Venice
- Mabel's Strange Predicament
- Between Showers
- A Film Johnnie
- Tango Tangles
- His Favorite Pastime
- Cruel, Cruel Love
- The Star Boarder
- Mabel at the Wheel
- Twenty Minutes of Love
- Caught in a Cabaret
சாப்ளின் இயக்கிய படங்கள்
- Caught in the Rain (பச்சை வண்ணம்
- A Busy Day
- The Fatal Mallet
- Her Friend the Bandit (படம் தொலைந்துவிட்டது)
- The Knockout
- Mabel's Busy Day
- Mabel's Married Life
- Laughing Gas
- The Property Man
- The Face on the Bar Room Floor
- Recreation
- The Masquerader
- His New Profession
- The Rounder
- The New Janitor
- Those Love Pangs
- Dough and Dynamite
- Gentlemen of Nerve
- His Musical Career
- His Trysting Place
- Tillie's Punctured Romance
- Getting Acquainted
- His Prehistoric Past
சாப்ளின் வருவார்....