1972 ஆம் ஆண்டு சாப்ளினுக்கு இன்னொரு சிறப்பு ஆஸ்கர் விருது வழங்க ஆஸ்கர் குழு முடிவு செய்தது. முதல் சிறப்பு விருதை அவர் 1928 ம் ஆண்டு ’த சர்கஸ்” திரைப்படத்திற்காக வாங்கியிருந்தார். ஆனால், இந்த விருதுக்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது, தன்னை எந்த நட்டினுள் நுழைய வேண்டாம் என விரட்டி அடித்தனரோ அந்த நாட்டின் உயரிய விருது அவரை தேடி வந்ததுதான். உற்சாகமாக அமெரிக்கா கிளம்பினார். மக்களின் ஆரவார வரவேற்பில் அசந்து போனார். பண பற்றாக் குறையினால், அவருக்கு அமெரிக்காவில் செலவு செய்து தங்குவது சிரமமாக இருந்ததே தவிற அமெரிக்க மக்களின் வரவேற்பு அவர் மனதை குளிர்வித்திருந்தது.
 |
தன்னுடைய இறுதி நாட்களை தன் குடும்பத்தாருடன் அமைதியாக கழித்தார். சாப்ளினுக்கு நான்கு மனைவிகள் என்றாலும் கடைசியாக அவரை பார்த்துகொண்டது அவரின் நான்கவது மனைவியான ’ஊனா ஒ நீல்’. சாப்ளின் தன் குழந்தைகளை மகிழ்விப்பதிலும் எந்த குறையும் வைக்கவில்லை. அவரது குழந்தைகள் யாரும் பெரிதாக சினிமா உலகில் சோபிக்கவில்லை. |
மைக்கல் சாப்ளின் ‘எ கிங் இன் நியுயார்க்’ உடன் சேர்த்து சில படங்களுடன் நிறுத்திக்கொண்டார். சாப்ளின் நடிக்காமல் இயக்கிய இரண்டு படங்கள் ‘எ வுமன் இன் பேரிஸ்”, “எ கவுண்டஸ் ஃபிரம் ஹாங்காங்’. முதல் படத்தில் அவர் இயக்கியது எட்னா என்றால் தன் கடைசி படத்தில் அவர் இயக்கியது மர்லன் பிராண்டோவை. இந்த இரண்டு படங்களுமே விமர்சகர்களால் பாராட்டபட்டாலும், பெரும் வெற்றி பெறவில்லை. அதனால் சாப்ளின் திரைவுலகத்தை விட்டு மெல்ல விலகினார்.
1977ம் ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நாளில் சாப்ளின் இதயம் நின்றது. தன் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த சாப்ளின் அமைதியான உறக்கத்தில் தன் உடலை பிரிந்தார்.
சாப்ளின் இறந்த பின்பும் சர்ச்சைகள் தொடர்ந்தன. புதைக்கபட்ட அவரது உடலை சிலர் திருடி வைத்துக்கொண்டு பணம் கேட்டனர். நல்ல வேளை உடல் கைப்பற்றப்பட்டு மீண்டும் புதைக்கபட்டது. இறந்தும் அவரது மதிப்பு குறையவில்லை.
இன்றளவும் சாப்ளின் நகைச்சுவையின் பிராண்டாக பார்க்கபடுகிறார்.ஆண்டுகள் கடந்து இந்த தலை முறை குழந்தைகளும் அவர் படங்களை பார்த்து சிரிக்கின்றனர். சினிமா உலகில் அவர் புகுத்திய புதுமைகள், கதைகள், கருத்துகள், கலகங்களும் இன்றளவும் மற்ற சினிமா கற்கும் மாணவனுக்கு பாலபடம். சினிமா இயக்குனருக்கு வேத வாக்கு.
சாப்ளின் படங்களை பார்க்காமல் ஒருவர் நல்ல படத்தை எடுத்தார் என்றால் என்னளவில் அவர் கின்னஸ் சாதனைக்கு தகுதியானவர். சாப்ளினை உலகின் பல தலை சிறந்த இயக்குனர்களும் கொண்டாடினார்கள். அவருக்கு ரசிகரகளாயிருந்தனர். அவர் படங்களிலிருந்து பாடம் படித்தனர்.
அவரை வெறுத்தாலும், அவர் படத்தில் ஒரு காட்சியை பார்த்து ரசிக்கமுடியாமல் இருக்க முடியாது. சிரிக்க முடியாமல் நிச்சய்ம் இருக்கவே முடியாது. இன்றளவும் உலக பட விழக்களில் சாப்ளினின் ஏதாவது ஒரு படம் திரையிடப்படுகிறது. எல்லா திரைத்துறை மாணவர்களுக்கும் பாடமாக வைக்கபட்டிருக்கிறது.
சாப்ளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு வந்த படம் ரிச்சர் அட்டன்பரெஹோ இயக்கிய “சாப்ளின்” அதில் சாப்ளினாக நடித்தவர் ஆஸ்திரேலிய நடிகரான ராபர் டவுனி ஜூனியர். தன் பங்கை சிறப்பாகவே செய்திருந்தார்.
சாப்ளினை போன்று அவரை மிமிக்ரி செய்யும் பல கலைஞர்கள் உலக அளவில் குழந்தைகளை மகிழ்விக்கின்றனர். அப்படி பார்த்தால் சாப்ளின் இன்றளவும் உயிருடன் இருக்கிறார்.
தமிழ் படத்தை பொருத்தவரை சாப்ளின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் அவரின் பெரும்பாலான படங்களும், காட்சிகளும் தமிழ் படத்தில் இடம் பெற்றுள்ளன. சாப்ளினை போன்று தமிழ் படத்தில் நிறைய பேர் நடித்திருந்தாலும், மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் கமலஹாசன். புன்னகை மன்னன் எனும் திரைப்படத்தில் அவர் ’சாப்ளின்’ செல்லப்பாவாக நடித்திருப்பார். நேரம் கிடைத்தால் பாருங்கள் அதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் சாப்ளின் போன்ற உடை, நடை செய்துவிடலாம். கொஞ்சம் கவனித்தால் அவரை போன்று முகத்தில் உணர்ச்சிகளை காட்டுவதில் தான் கமல் நடிப்பின் நுட்பத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு கருத்தை சொல்ல அழுது வடிந்து கொண்டிருக்காமல், மக்களை சிரிக்க வைத்து அதே கருத்தை அவர் மனதில் பதியவைக்க வேண்டும். இதை சாப்ளின் தொடங்கி வைக்க, அவர் வழியை வெற்றிகரமாக கடைபிடித்த நடிகர்களில் முக்கியமான இந்திய நடிகர் கலைவானர் என்.எஸ்.கே.
அதேபோல் ஹிட்லர் நடத்திய யூத கொடுமைகளை பற்றி சோகமாகவும், அழுது வடிந்துக்கொண்டிருக்கும் படங்களின் நடுவே, சிரிப்பை முதன்மையாக வைத்து அதே சோகத்தை மக்கள் மனங்களில் உணர செய்த ‘லைப் இஸ் பியுட்டிபுல்’ படத்தின் இயக்குனரும் நடிகருமான பெனினி ஆதாரமாக கொண்டது சாப்ளின் திரைப்படத்தை தான். என்ன படம் என்று எல்லாருக்குமே தெரிந்திருக்கும்.
இந்த தொடரை எழுத ஆரம்பித்து இப்பொழுது முடிக்கும் போது நான் உணர்ந்த விஷயம், சாப்ளினின் படங்களை பார்ப்பது போல் அவர் படங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் கூட சுவாரசியம் மிகுந்த ஒன்றுதான்.
முற்றும்.