The Circus
படம் : த சர்கஸ்
வருடம்: 1928
நடிகர்கள்: சாப்ளின், மெரினா கென்னடி,பெர்க்மேன்
இயக்கம்: சாப்ளின்.
நேரம் : 71 நிமிடங்கள்.
தயாரிப்பு : பர்ஸ்ட் நேஷனல் கார்ப்பெரேஷன்.
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன்
’த சர்கஸ்’. கோல்ட் ரஷின் பெறும் வெற்றிக்கு பின் சாப்ளின் எடுத்த திரைப்படம், இந்த திரைப்படத்தை எடுக்கும் பொழுது சாப்ளினுக்கு பைத்தியமே பிடித்துவிட்டது நியூயார்க் நகரில் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அளவுக்கு நெருக்கடி. அவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் மலர்ந்த இந்த திரைப்படத்தில் நகைச்சுவை, காதல், சோகம் என்று ஒரு மெலட்ராமிவிற்க்கு தேவையான அத்தனை விசயங்களையும் நிரப்பியிருந்தார் சாப்ளின்.
 |
கதைச்சுருக்கம்:
வழிப்போக்கனான சாப்ளின் ஒரு சுற்றுலா பொருட்காட்சியில் எதிர்பாராதவிதமாக திருட்டு பழிபெற்று போலிசிடம் சிக்கிவிடுவார்.ஒரு வழியாக போலிசிடமிருந்து தப்பிக்கும் சாப்ளின் எதேச்சையாக ஒரு சர்கஸ் கூடாரத்தினுள் நுழைந்துவிடுவார். அங்கு கடுமையான வறுமையாலும், ரசிகர்களின் ஆதரவில்லாமலும் இயங்கும் சர்கஸ் குழுவின் நடுவில் புகும் சாப்ளினும் போலிஸும் அடிக்கும் கூத்தில் மக்கள் அவர்களை கோமாளிகள் என்று நினைத்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதை அறிந்துக்கொள்ளும், முதலாளி சாப்ளினை குறைந்த வேலைக்கு ஊதியத்தில் சேர்த்து அவர் மூலமாக நிறைய சம்பாதிப்பார். சர்கஸ் குழுவின் முதலாளியின் வளர்ப்பு மகள் மீது சாப்ளின் காதல் கொள்வார். |
ஆனால் அவரோ அந்த குழுவிற்கு புதியவராக வருபவரை காதலிப்பார். இறுதியில் அவர்களின் காதலை சேர்த்துவைத்துவிட்டு சாப்ளின் தன் வழிப்போக்கன் வாழ்க்கையை தொடருவார்.
சர்கஸ் கோமாளி:
முதல் காட்சியில் ஒரு சர்கஸ் கூடாரத்தில், சோர்வடைந்த கதாநாயகி உயரமான கயிற்றில் தொங்கியபடி இருக்க, சர்கஸ் படம் தொடங்கும். பின்னாளில் சாப்லின் குரலில் ”சோர்வடயும் பெண்ணே, தலை குனியாதே; வானவில்லை தவறவிடுவாய்” என்ற பாடல் வரும்.
நஷ்டத்தில் இயங்கும் சர்கஸ், கோமளிகள் என்ன செய்தாலும் மக்கள் சிரிக்க மறுக்கிறார்கள். கோமாளிகள் நிலை அதுதான், மக்கள் அவர்களை பார்த்து சிரிக்கவில்லையென்றால், அவ்ர்கள் கண்ணீர் விட வேண்டிவரும்.
அறிமுக பொருட்காட்சியில் பசியில் இருக்கும் சாப்ளின், ஒரு குழந்தையிடம் ரொட்டியை சாப்பிடும் காட்சியும் அதை தொடர்ந்து திருட்டு பழியில் போலிஸிடம் மாட்டும் காட்சியும் ஆரம்பத்திலேயே நம்மை படத்துடன் ஒன்ற செய்துவிடும்.
 |
குறிப்பாக இந்த படத்தில் போலிஸடமிருந்து தப்பிக்க சாப்ளின் ஒரு கண்னாடி கூண்டில் சிக்கி கொள்வார். அந்த கூண்டை பார்க்கும் பொழுது பல சாப்ளின், பல போலிஸ் பிம்பங்களில் எது உண்மை என்று நமக்கே குழப்பம் வரும். ஒரு நிமிடம் கொஞ்சம் யோசித்து பாருங்கள், அந்த காலத்தில் தொட்நுட்பங்கள் வளர்ந்துக்கொண்டிருந்த நேரத்தில் எப்படி அந்த காட்சியை படம் பிடித்திருப்பார்கள்? |
சுற்றிலும் கண்ணாடிகள் ஒரே கோணத்தில் நின்றால் மட்டும் தான் கண்ணாடியில் கேமரா தெரியாது, ஒரு கோணத்தில் நின்றபடி அனைத்து கோணங்களிலும் எடுக்க வேண்டும்.
அதை தொடர்ந்து சாப்ளின் போலிஸிடம் தப்பிக்க சர்கஸ் கூடாரத்தினுள் நுழைய, அவர்கள் இருவரையும் பார்த்து கோமாளிகள் என்று நினைத்துக்கொண்டு மக்கள் ஆர்பரிக்க தொடங்குவார்கள். இதை அறிந்துக்கொள்ளும் சர்கஸ் முதலாளி சாப்ளினை மிகுந்த குறைவான சம்பளத்திற்கு அங்கு சுத்தம் செய்பவராக பணியில் அமர்த்தி, காட்சி வேளைகளில் மாத்திரம் சாப்ளினை உபயோகப் படுத்திக்கொள்வார்.
முதலாளியின் வளர்ப்பு மகளுக்கும் சாப்ளினுக்கும் ஒரு நட்பு உருவாக, அந்த நட்பில் சாப்ளினை வைத்து தான் சர்கஸ் லாபகரமாக நடத்தப்படுகிறது என்ற உண்மையை கூறிவிடுவார். அதனால் சாப்ளின் மூன்று மடங்கு சம்பளம் வாங்கி சர்கஸில் அசைக்க முடியாத நபராகிவிடுவார்.
வழக்கமான சாப்ளின் திரைபடங்களில் ஏற்படுவது போல் இந்த படத்திலும் சாப்ளின் நாயகியை காதலிக்க அவரோ சாப்ளினை விட அழகான இன்னொரு சர்கஸ் கலைஞரை காதலிப்பார். அவர் உயரமான கயிற்றின் மீது நடப்பவர், அதனால் சாப்ளினும் கயிற்றின் மீது நடக்கும் முயற்சிகளை தொடருவார்.
இறுதியில் அந்த கலைஞர் ஒரு அவசர வேலையாக காட்சி நேரத்தில் வெளியே சென்றுவிட, கயிற்றின் மீது நடக்கும் வித்தையை சாப்ளின் செய்வதாக ஒப்புக்கொள்வார். முதலாளிக்கு மகிழ்ச்சி. காரணம் இந்த முயற்ச்சி ஒழுங்காக நடந்தால், அந்த கலைஞருக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு பதில் சாப்ளினையே செய்ய சொல்லிவிடலாம். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது இன்சூரன்ஸ்.
 |
கயிற்றின் மேலே நிற்கும் சாப்ளின் எதிர்பாராமல் ஒரு குரங்கு கூட்டத்திடம் மாட்டிக்கொள்வார். சிரிப்பின் உட்சம் இந்த காட்சி என்றாலும் மறைமுகமாக சாப்ளின் சொல்ல நினைத்தது, கயிற்றின் மேல் நடக்கும் மனிதனுக்கு சமுதாயம் என்கிற குரங்குகளினால் எவ்வளவு பிரச்சனைகள். அதனால் மனிதனின் வாழ்வே, பெரும்பாலும் வாழ்வா? சாவா? என்கிற பிரச்சனையில் கழிந்துவிடுகிறது. |
ஒரு வழியாக காட்சியை நல்லபடியாக முடித்துவிடுவார். ஒரு இரவு வேளையில் அந்த பெண் சர்கஸைவிட்டு ஓடிப் போய் விடுவார். இதனால் முதலாளி கோபம் கொள்ளும் அதே வேளையில், அந்த பெண் அடைக்கலம் தேடி சாப்ளினிடம் வர, சாப்ளினோ அவளையும், அவளின் காதலனையும் சேர்த்து வைப்பார்.
அவர்களை அழைத்துக்கொண்டு சர்கஸ் நடக்கும் இடத்திற்கு வர, அங்கு சர்கஸ் காலி செய்யப்ட்டு அடுத்த இடத்திற்கு புறப்பட தயாராக இருப்பார்கள். முதலாளி சமாதானம் அடைந்து அனைவரையும் ஏற்றுக்கொள்வார். ஒரு வண்டியில், திருமணமான இருவரும் ஏற, அவர்கள் சாப்ளினை அவர்களுடன் வருமாறு அழைப்பார்கள், சாப்ளின் மறுத்துவிட்டு கடைசி வண்டியில் வருவதாக சொல்லிவிடுவார். அனைத்து வண்டிகளும் புறப்பட்டுவிட, அந்த சாயும்கால வேலையில், ஒரு பெட்டியின் மீது அமர்ந்து சோகமாக அங்கு கிழித்து வீசப்பட்டிருக்கும் ஒரு காகிதத்தை எடுப்பார். அதில் ஒரு நட்சத்திரமிருக்கும். அதை கசக்கி போட்டுவிட்டு எழுந்து எதிர்திசையில் நடக்க தொடங்குவார். இசையில் சோகம் தும்ப அவரின் அந்த வழிப்போக்கன் உருவம் திரையில் சுருங்கி கொண்டே வர.. திரை இருளும்..
படம் முழுவதும் அனைவரையும் சிரிக்க வைக்கவும், தேவைபட்டால் அழவைக்கவும் சாப்ளினுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரிடம் அவ்வளவு நகைச்சுவையின் நடுவே ஒரு சோகம் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருந்தது. அதை அவரின் படத்தில் நன்றாக பிரதிபலித்தார் சாப்ளின்.
இந்த படத்தின் இறுதி காட்சியை மட்டுமே நான் இதுவரை 1000 க்கும் அதிகமான முறை பார்த்திருக்கிறேன். இன்னும் பார்ப்பேன். அந்த காட்சி கவிதையானது. காட்சியினூடே நம் மனதை எளிதாக அதிர்ச்சிக்குள்ளாக்குவது சாப்ளினின் திறமை.
நாம் அதிகமாக சிரிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு சோகம் நம் மனதை கவ்வுகிறது. நாம் அதிகமாக அழும்போதெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கை நம் மனதில் ஏற்படுகிறது. உண்மையில் நம் மனதின் இந்த எதிர்மறை உணர்ச்சித்தானே நம் வாழ்க்கையை அழகாக்கிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் சாப்ளினின் அனுபவங்கள் அடுத்தவாரம்.
சாப்ளின் வருவார்....