கலைகளுக்கென்று தனி வரலாறு இல்லை. மனித வரலாறுகளே கலைகளின் வரலாறுகளுமாகும். நிர்வாண மனிதனுக்கு உணர்ச்சியேற்பட்ட தருணத்திலேயே கலையும் பிறந்துவிட்டது. அன்றிலிருந்து, மூச்சுக்காற்றைப்போல, மனித சமூகத்தின் வாழ்க்கை தடங்களிலேயே காலாகாலத்துக்கும் பயணிக்கின்றன கலைகள். சோகங்கள், மகிழ்ச்சிகள், கொடூரங்கள் என அத்தனை மனித உணர்ச்சிகளையும் கிரகித்துக் கொண்டே அவைகளுக்கு தகுந்தவாறு தன்னை அரிதரித்துக் கொள்கிறது கலை. வீட்டானை பின் தொடரும் நாய்க்குட்டி போல கலைகளும் மனித சமூகத்தை பின் தொடர்கின்றன. காலமும், சூழலும் மனிதனை மாற்றியது போலவே கலைகளையும் மாற்றுகின்றன. கலைகள் மனிதனை விட்டு விலகும்போதோ, அல்லது மனிதன் தனக்கான வாழ்வியல் கூறுகளை விட்டு விலகும் போதே கலைகளுக்கும், மனிதனுக்குமான உறவுகளில் விரிசல் நேர்கிறது. அந்தக் கணமே இரண்டும் அடையாளம் இழந்து விடுகின்றன. அந்த விபத்து தான் தமிழினத்தின் அடையாளத்தை தகர்த்திருக்கிறது.
காலகாலமாக, வாழ்வியல் அடையாளங்களை அழித்துக்கொண்டே தமிழ் சமூகம் மாற்றங்களை எய்தி வந்திருக்கிறது. உதாரணத்துக்கு, சமீப காலத்தில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என பல்வேறு அநீதி கொள்கைகள், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பல்வேறு ஆதி சமூகங்களின் அடையாளங்களை அழித்துப் போட்டதை சொல்லலாம். உலக நீரோட்டத்தில் குப்பத்து பாமரனை இணைத்த உலகமய இயக்கங்கள் அவனின் ஜீவனத்தை கேள்விக்குள்ளாக்கின. வாழ்க்கை கூறுகள் சிதைந்து போயின. எல்லோருக்கும் எல்லாமும் தந்த கிராமிய சூழலை உபயோகம் இல்லாததாக மாற்றி நகரத்தை ஜொலிக்க வைத்தது தாராளமயமாக்கல். உழவும், தொழிலுமாக செழித்திருந்த கிராமத்தான், கல்தோன்றாக் காலத்தே முன் தோற்றியதாக பிதற்றியபடியே கல்குவாரிகளில் கொத்தடிமை தொழிலுக்குள் திணிக்கப்படுகிறான். அல்லது நசநசத்த நகரத்து அறைகளில் அமர்ந்து பனியன் மடிக்கிறான்.
விவசாய நலிவு, கிராமப்புற தொழில்கள் சீரழிவு என கிராமிய வாழ்க்கைசூழல் நசிந்த தருணத்தில் தான் கலைகள் பிராதானம் இழக்க தொடங்கின. விவசாய நிலத்தில் நாற்று நடும்போது களைப்பை நீக்கி வேலையை விரைவுபடுத்த பாடப்பட்ட முளைப்பாரிக்கு இன்று என்ன தேவை இருக்கிறது? விவசாயமே இயந்திரமயமாகி மனித தேவை குறைந்து விட்டக் காலத்தில் யாருக்கு தேவை இருக்கிறது முளைப்பாரிப்பாட்டு. பதிமூன்று நாள்கள் நடந்த ஆலயத்திருவிழாக்களில் விடிய, விடிய நடந்த கூத்துக்களை பார்க்க இப்போது எவனுக்கு நேரமிருக்கிறது. இப்போது சினிமாக்கள் அல்லவா திருவிழா கேளிக்கைகளாகி விட்டன. பணமும், பசியும் போட்டி போட்டுத்துரத்தும் இந்தக்காலத்தில் யாருக்கு வேண்டும் கலைகள். வளர் இளம் பருவ பெண்களுக்கு கம்ப்யூட்டர்களும், புத்தகங்களும் செக்ஸ் கல்வி அளிக்கும் போது ஒளவைநோன்பு எப்படி வாழும். ஷகிலாக்கள் வெண்திரையில் தங்கள் உறுப்புகளை கடைவிரிக்கும்போது குறவன் குறத்தி ஆட்டத்துக்கு என்ன தேவை?
மொழியியல் ரீதியாக, வாழ்வியல் ரீதியாக தமிழ் சமூகத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தி வரும் மேலைக்கலாச்சாரம், இப்போது நம்மிடம் எதை மிச்சம் வைத்திருக்கிறது. கிட்டிப்புல்லை வீசிவிட்டு நம் குழந்தைகள் கிரிக்கெட் பேட்டோடு அலைகிறார்கள். பல்லாங்குழியைப் பற்றி யாருக்கு கவலை? கிச்சிக்கிச்சு தாம்பூலம் விளையாட, நம் சுட்டி குழந்தைகளுக்கு ஏது நேரம்?
இதுபோன்ற சூழல் ஏற்படுத்திய விளைவுகளில் முதன்மையானது கலைக்குழப்பங்கள் தான். தெய்வீக கலையான கரகாட்டம் ஆடிய கலைஞர்களுக்கு வயிற்றுப்பாடு. கரகாட்டம் காபரேயாக சோரம் போனது. மார்பை குலுக்கி, குனிந்தாடாவிட்டால் பேசிய ரேட் கிடைக்காது. வள்ளி திருமணத்தில் முருகன் வள்ளியைப்பார்த்து, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?, புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா? என்று டூயட் பாடாவிட்டால் ஆர்மோனியம் மிஞ்சாது.
கலைகள் காலத்துக்கு தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியதி. அவ்விதம் தகவமைத்துக் கொள்ள வாய்ப்பற்ற சூழலில் சமூகம் இயங்கி கொண்டிருக்கிறது. இரண்டு மணி நேர திரைப்படத்தில் கிடைக்கிற பாலியல் சுகானுபவத்தை 5மணி நேர கலையாடல்களில் எதிர்பார்க்கும் நாகரீக மனிதர்கள் நாம். வரவேற்பறைக்குள் நுழைந்து, திரைக்குள்ளேயே மனிதர்களை மூழ்கடித்துவிடுகிற தொலைக்காட்சிகளைத் தாண்டி இங்கே வேறெது வளர்ந்து தளைக்கும்?
கடைசி வரை கலையாடல்களிலேயே தங்களை தேய்த்து கரைந்த கலைஞர்களில் மிஞ்சிய சில பெரிசுகள, இப்போது வாரிய அலுவலகங்களின் முன் வரிசையில் நின்று கூத்தாடுகிறார்கள் உதவித்தொகை வாங்க. இவர்களோடு முடிந்து போகப்போகின்றன அரும்பெரும் கலைகளும்.
தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சக்கையாட்டம், சிலம்பாட்டம் என வீரமும், மண்ணும் மணக்கும் நூற்றுக்கணக்கான அரும்பெரும் தமிழ்க்கலைகள் பற்றி அடுத்த தலைமுறை அறிய யார் என்ன செய்திருக்கிறார்கள்?. இநத்க் கேள்வி தான் எங்களை உந்தி தள்ளுகிறது, அப்படியான ஒரு முயற்சிக்கு. கலைகள் பற்றிய திரட்டலில் உயிர்ப்பான ஈடுபாடு கொண்ட சிலரின் உதவியோடு நாங்களே அந்த முயற்சியில் இறங்குகி¢றோம். கலையாடல்கள் (எந்த கலையாடலாக இருந்தாலும்) பற்றிய .புகைப்படங்¢கள், கலைஞர்கள் பற்றிய தகவல்களை அனுப்பி நீங்களும் இந்த முயற்சியில் கை கோருங்கள்.
அழிந்து போனவற்றை அல்லது அழிந்துக் கொண்டு இருப்பவற்றை மீட்டெடுக்க வாருங்கள்...
வாருங்கள் மீட்போம்....
|