காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.
கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882 ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.
 |
கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளு |
மன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.
இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.
பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.
பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.
ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”
ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.
 |
மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்? |
கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.
கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு - குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.
அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.
கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?
ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.
தி.
இராசகோபாலன் (கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).
நன்றி: சுப்ரா
கச்சத் தீவுப் பற்றி (20/08/2008) தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளிவந்த செய்தி:
போக முடியுமா? போனால் திரும்ப முடியுமான்னு உறுதியாச் சொல்ல முடியாது! போகும் பொழுது இலங்கை ராணுவம் சுடலாம்; வரும் பொழுது நம்ம ராணுவம் சுடலாம். யார் எல்லையில நாம் இருக்கிறோம் என்பதே துப்பாக்கிச் சத்தம் வர்ற திசையைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்... சும்மா, உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை... சூடு பட்டதால சொல்கிறேன்'' - சட்டையை உயர்த்தி விலாப்புறத்தைக் காட்டினார் மிக்கேல். இடதுபுறம் துளைத்த குண்டை வலதுபுறம் ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள்.
``சிங்கள ராணுவம் சுட்டது... கச்சத்தீவு பக்கத்துல நம்ம எல்லைக்குள்ள நின்று மீன் பிடிச்சிக்கிட்டிருந்தப்போ நடந்தது... இப்பவும் வலி. தொழிலுக்குப் போக முடியல...
இதுக்கப்புறமும் கச்சத்தீவுக்குப் போகணுமான்னு யோசிச்சுக்குங்க! சிங்கள ராணுவம் இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் இலங்கை ஜெயில்ல சித்திரவதை அனுபவிச்சிட்டிருக்காங்க. இதுவரைக்கும் 400 க்கும் மேற்பட்ட படகுகளை நடுக்கடலில் சிங்கள ராணுவம் மூழ்கடிச்சிருக்கு!'' என்று கச்சத்தீவை அச்சத்தீவாகச் சித்திரித்த தங்கச்சி மடம் மிக்கேலின் வார்த்தைகள் நம் மனதுக்குள் கொஞ்சம் பீதியை ஏற்படுத்தியது! அதுவும், செய்யாத தப்புக்கு சிங்கள ராணுவம் போட்ட சிக்னேச்சர், மிக்கேலின் இடுப்பில் தழும்பாகி இருப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது. 
ஒருவாரம் ராமேஸ்வரத்தில் முகாம்! ஆனால் நம் முயற்சிக்கு ஒத்துழைக்க ஒருவரும் முன்வரவில்லை... இறுதியாக எப்போதாவது தொழிலுக்குச் செல்லும் இளைஞர்கள் மூவர் நம் முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வந்தனர்... அரசின் அடையாள அட்டையும் வைத்திருந்தனர்.
மீனவர்களுக் கான அடையாள அட்டைஇருந் தால் கச்சத் தீவுக்கு அருகே யுள்ள நம் எல்லைவரை போய் வரலாம். ஆனால்அந்த மீனவர்களுடன் நாம் இருப்பது எல்லா விதத்திலும் அவர்களுக்கு ஆபத்தானதே! இருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை...
``ரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி!'' என்று வடிவேலு ஸ்டைலில் நம்மை உற்சாகப்படுத்தியவர்கள், ``உங்கள் உயிரைப் பணயம் வைக்க நீங்கள் தயாராக இருந்தால் சரி!'' என்றதும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்குப் படகில் ஏறினோம்.
கைலி, சட்டை, தலையில துண்டு என முடிந்த மட்டும் மீனவர்கள் கெட்டப்புக்கு மாறியிருந்தாலும், ரோந்துப் படகுகள் கண்ணில் படும்பொழுதெல்லாம் கொஞ்சம் உதறல்தான்... ஒருமுறை கடலோரக் காவல் படையின் ரோந்துப் படகு கொஞ்சம் நெருக்கமாகவே கடந்து சென்றது... அது கண்ணை விட்டு மறைந்த சில வினாடிகள்ல கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாகப் பறந்து தாண்டிப் போனது... இப்படியே மூன்று மணிநேர திக் திக் பயணம்... தீவை நெருங்கினோம்....
தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது `ஆற்றி ல் குளிக்கும்போது அவிழ்ந்து போன பச்சைக் கோவணம் மிதப்பது மாதிரி' தெரிந்தது கச்சத் தீவு... படகை ஒதுக்கி, தீவின் கரையில் காலடி வைத்ததுமே பயமெல்லாம் பறந்துபோக, இழந்த ஒரு தேசத்தை மீட்டெடுத்த உற்சாகம்...
தீவின் மொத்தப் பரப்பளவே சுமார் முந்நூறு ஏக்கர்தான்... இன்று நம்மூரில் பல அரசியல்வாதிகளுக்கு இதைவிட சொத்து பலமடங்கு அதிகமாக இருக்கலாம்... தீவு முழுக்க சின்னச் சின்ன மரங்கள், முட்புதர்கள், பனைமரங்கள்... இப்படித்தான். கட்டடம் என்று சொல்ல ஒரேயொரு சர்ச்... புனித அந்தோணியார் ஆலயம். நாற்பதுக்கு இருபது சைஸில் ஒரு ஓட்டுக் கட்டிடம்தான். சுண்ணாம்புக் காரை பெயர்ந்த நிலையிலும் அந்தக் கோயில் சுனாமிகளையும், புயல்களையும் கடந்து நிற்பது ஆச்சர்யம்தான்.
அந்தோணியாரைப் போலவே ஆட்களே இல்லாத தீவில் நாமும் தனியாக நிற்கிறோம் என்பதை நினைத்தபோதே மனதுக்குள் ஒரு வெறுமை நிறைந்தது... தீவு முழுக்க முடிந்தவரை அலைந்தும் பார்த்தோம். அண்மைக்காலத்தில் மக்கள் பெரிய அளவில் வந்துபோனதற்கான தடயமே இல்லை... ``அந்தோணியார் கோயில் திருவிழாவிற்குக் கூட யாரும் இப்பொழுது வருவதில்லை!'' என்றார் நம்முடன் வந்த மீனவர்...
``தீவைப் போராடிப் பெற்ற இலங்கையும் கடந்த இருபத்து நான்கு ஆண்டுகால ஆதிக்கத்தில் ஆக்கபூர்வமாகவோ, இருநாட்டு மீனவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்படியோ ஒரு துரும்பைக்கூட நகர்த்தவில்லை...
நம் தமிழ்நாட்டு மீனவர்களை, எல்லைப் பிரச்னைகளைக் காரணம்காட்டி போட்டுத் தள்ளும் கொலைக்களமாக மட்டுமே கச்சத்தீவைப் பயன்படுத்தி வந்துள்ளது...
இலங்கை வசம் இந்தத் தீவு இருக்கும் வரையில் மீனவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை...'' தன் ஆற்றாமையை எம்மிடம் இறக்கிவைத்தார் உடன் வந்த மற்றொரு மீனவர்...
தீவுக்கு வந்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக ஆனது. இனி இலங்கை ரோந்துப் படகுகள் திரும்பி வந்து நம் படகைப் பார்ப்பதற்குள் புறப்பட்டு விட வேண்டும் என்ற அவசரத்துடன் கிளம்பத் தயாரானோம். அதற்குமுன் கச்சத்தீவின் காவல்தெய்வம் புனித அந்தோணியாரை வழிபட்டு வரலாம் என்று கோயிலுக்குள் நுழைந்தோம்...
கருணையே வடிவான கர்த்தர்... யுத்தகளத்தின் தனிமையில்... இதயத்தில் நமக்கும் ரத்தம் கசிந்தது... ஏற்றி வழிபட ஒரு மெழுகுவர்த்தி வாங்காமல் வந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு நம்மை குடைந்தெடுத்தது... அப்பொழுதுதான் நம் கண்ணில் பட்டது, பட்டப் பகலில் எரிந்து கொண்டிருக்கும் அந்த அரிக்கேன் விளக்கு... துருப்பிடித்திருந்தாலும் சிம்னி துடைக்கப்பட்டு, சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கை ஏற்றியது யார்?
``கச்சத்தீவின் பக்கம் படகில் யார் வந்தாலும் அந்தோணியார் ஆலயத்திற்கு வந்து இந்த விளக்கை ஏற்றி விட்டு கோயிலைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டுச் செல்வது வழக்கமாம்... அப்படிச் செய்தால் காவலுக்கு அந்தோணியார் உடன் வருவார், உயிர் பயம் தேவையில்லை என்பது நம்பிக்கை. அப்படித்தான் யாரோ நாம் வருவதற்கு சற்றுமுன் வந்து சென்றிருக்க வேண்டும்!'' என்றனர் நம்முடன் வந்த மீனவர்கள்...
`போகிற உயிர் போகட்டும். கச்சத்தீவின் இருளைவிரட்ட நம் பங்குக்கு ஒரு சுடரை ஏற்றுவோம்' என்ற இந்த அப்பாவி மீனவ மக்களின் முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது....
|