வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 22

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

'பொதுவாக 1857 -இல் இந்தியாவில் வெடித்த சிப்பாய்க் கலகத்தைத்தான் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் வடஇந்தியா விழித்துக்கொண்டு பிரிட்டிஷ் வல்லரசையும், அந்நிய ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு வெகு காலத்துக்கு முன்பாக இங்கு உங்கள் பூமியில் நீங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பெற்றிருக்கிறீர்கள்" - 1997 -இல் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த திரு. எல்.கே. அத்வானி அவர்கள் நமது கட்டபொம்மனைப் பற்றி கூறிய வார்த்தைகள் இவை.

"வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து அவரும் அவரது தம்பி ஊமைத்துரையும் போராடிய போராட்டங்கள், புரிந்த மெய்சிலிர்க்கவைக்கும் வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் வடஇந்தியாவில் வாழும் மக்களால் இன்னமும் அறிந்துகொள்ளப் படாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்" - 2000 மாவது ஆண்டில் அன்றைய பாரதப் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தமது தென்னக விஜயத்தின்போது கட்டபொம்மனின் நினைவகமான கயத்தாற்றில் தமது உரையில் குறிப்பிட்ட தகவல் இது.

1760 -இல் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாக முடிசூட்டிக்கொண்டு ஆட்சி புரிந்ததென்னவோ ஒன்பது ஆண்டுகள் தான். அந்த ஒன்பது வருடங்களும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி தனது முப்பத்தொன்பதாவது வயதில் 1799-இல் கயத்தாற்றில் ஆங்கிலேயரால்
தூக்கிலிடப்பட்டு மரணத்தை தழுவிய மாவீரன். (அவனுக்கு பிறகு நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு பிறகுதான் வங்காளத்தில் சிப்பாய்க் கலகம் வெடித்தது.)

நான் ஐந்தாம் வகுப்பு படித்த காலகட்டத்தில் தமிழ் பாடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி உரைநடைப் பாடம் இடம் பெற்றபோது, பள்ளியில் ஆசிரியர் அந்தப் பாடத்தை நடத்திய போதெல்லாம் எங்கள் மனக்கண் முன்னாள் தோன்றியதெல்லாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் பேசியதாக பாடப் புத்தகத்திலேயே 'வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்கவேண்டும் வரி" என்ற சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் தான் இடம் பெற்றிருந்தன. உண்மையில் கட்டபொம்மன் அப்படித்தான் கர்ஜித்தானா என்பதெல்லாம் யாருக்கு தெரியும்.? ஆனால் கட்டபொம்மன் என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிம்மக்குரல் கர்ஜனை தான் நினைவுக்கு வரும்.

அதனால் தானோ என்னவோ திரு. அத்வானி அவர்கள் ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார்:

"நான் அவ்வளவாக தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. ஆனால் நீண்ட காலத்திற்கு முன்னால் "கட்டபொம்மன்" என்ற தமிழ்த் திரைப்படத்தை பார்த்தேன். அதில் உங்கள் மண்ணின் வீரக் கதாநாயகனை திரு. சிவாஜி கணேசன் அவர்கள் சித்தரித்துக் காட்டிய விதம் உண்மையிலேயே அபாரமானது."

1957 -இல் நம் நாடு சுதந்திரம் அடைந்து பத்தாண்டுகள் ஆனா பிறகு அப்போதைய மத்திய அரசாங்கம் தேச விடுதலைக்காக பாடுபட்ட மாவீரர்களை நினைவு கூறும் விதமாக தலைநகர் புதுடில்லியில் ஒரு கண்காட்சி நடத்தியது. ஆனால் அந்தக் கண்காட்சியில் நமது வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் இருட்ட்டடிப்பு செய்யப்பட்ட பொழுது "சிலம்புச் செல்வர்" திரு. ம. பொ, சிவஞானம் அவர்கள் உள்ளம் வெதும்பிய சம்பவமும் நடந்தது.

அது சரி.. அப்படியானால் கட்டபொம்மன் கதை நமக்கு எப்படி கிடைத்தது? பாஞ்சாலங்குறிச்சி சீமையில் நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்றான அம்மானைப் பாடல் வடிவில் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்த கட்டபொம்மனின் கதையை நாடக ஆசிரியர் திரு. சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் நாடகமாக வடிவமைத்து மேடை ஏற்றினார். தனது பாய்ஸ் கம்பெனி நாடக வாழ்க்கையில் தனது வாழ்வைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மன் நாடகத்தில் ஆரம்பத்தில் வெள்ளைக்காரச் சிப்பாய்களுள் ஒருவராக ஆரம்பித்து (அப்படி
வெள்ளைக்கார சிப்பாயாக வேடம் ஏற்று நடித்ததற்காக சுதந்திரப் போராட்ட வீரரான அவரது தந்தையார் அவரை அடி பின்னி எடுத்து விட்டாராம்) - படிப்படியாக உயர்ந்து கட்டபொம்மனாக மெய் சிலிர்க்கவைத்தார்.

சிவாஜிக்கு முன்னால் கூட கட்டபொம்மனாக வேறு யாரெல்லாமோ நடித்திருக்கலாம். ஆனால்.. அவர் அந்த வேடத்தை ஏற்றதன் பிறகு அதற்கு முன்னால் அந்த நடித்தவர்கள் யாராக இருந்தாலும் சரி .. அனைவரும் மக்கள் மனதில் இருந்து சுத்தமாக மறைந்தே போனதுதான் நிஜம்.

இப்படி அம்மானைப் பாடல்களில் ஆரம்பித்து மேடை நாடகமாகப் பிரபலமாகிய "வீரபாண்டிய கட்டபொம்மன்"கதையை திரைப்படமாக தயாரிக்க திரு. பி. ஆர். பந்துலு அவர்கள் முடிவு செய்து கட்டபொம்மனாக நடிக்க சிவாஜி கணேசனையே தேர்ந்தெடுத்தார்.

படத்துக்காக கட்டபொம்மனின் திரைக்கதையை வடிவமைக்க திரு. பி.ஆர். பந்துலு அவர்கள் "வரலாற்று திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு" என்ற அமைப்பை சிலம்புச் செல்வர் திரு. ம. பொ.சி. அவர்கள் தலைமையில் உருவாக்கி அதில் கதை வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி, சிவாஜி கணேசன், பி. ஆர். பந்துலு, சிங்கமுத்து, குமார் ஆகியோர் அங்கத்தினர்களாக பங்கேற்க நன்றாக அலசி ஆராய்ந்து கவனமாக திரைக்கதையை வடிவமைத்தார்.

காலத்தால் அழிக்கமுடியாத அளவுக்கு சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் அருமையான வசனங்களோடு அற்புதமான திரைக்கதை அமைக்கப்பட்டதும், தமிழ்த் திரை உலகின் தலை சிறந்த நட்சத்திரங்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்து பணத்தை தண்ணீராக வாரி இறைத்து படத்தை தயாரித்தார் பி. ஆர். பந்துலு அவர்கள். தமிழ் திரை உலகின் முதல் "டெக்னிக் கலர்" சித்திரம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களோடு இணையாக எஸ். வரலக்ஷ்மி கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாவாக நடிக்க மற்ற வேடங்களில் ஜெமினி கணேசன், ஓ.ஏ.கே. தேவர், பத்மினி, ராகினி, எம். ஆர். சந்தானம், பார்த்திபன், ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால்,
டி. பி. முத்துலட்சுமி, தாம்பரம் லலிதா என்று திறமையான நடிகர் நடிகையர் பங்கேற்றனர்.

ஆர்ட் டைரக்டர் கங்காவின் கலை அமைப்பு கட்டபொம்மனின் காலத்துக்கே பார்த்தவர்களைக் கொண்டு சென்றது.

ஒளிப்பதிவிற்கு டபிள்யூ. ஆர். சுப்பாராவ், மற்றும் காமிரா மேதை கர்ணன்.

இப்படி ஒவ்வொன்றிலும் அந்த அந்தத் துறை நுணுக்கங்களில் கைதேர்ந்தவர்கள் பங்கு கொண்ட ஒரு படத்தில் இசை அமைப்பில் மட்டும் குறை இருக்கலாமா?

ஆகவே.. ஜி. ராமநாதன் தான் இசை அமைக்க வேண்டும் என்று பந்துலு விரும்பி அவரிடமே பொறுப்பை ஒப்படைத்தார். பாடல்களை பந்துலுவின் ஆஸ்தான பாடலாசிரியராக ஆரம்பத்தில் இருந்த கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதினர்.

அவரது தேர்வு சரிதான் என்பதை தனது அற்புதமான பாடல்களாலும், பின்னணி இசையாலும் நிரூபித்துக் காட்டிவிட்டார் ஜி. ராமநாதன்.

சமீபத்தில் கோவை பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளியில் இசைத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு. நாராயணசுவாமி அவர்களை சந்தித்த வேளையில் ஜி. ராமநாதனைப் பற்றியும், கட்டபொம்மன் திரைப் படத்தைப் பற்றியும் அவருடன் பேசியபொழுது "அற்புதமான படம் சார். நான் அந்தப் படத்தை ஜி. ராமநாதனோட பின்னணி இசைக்காகவே (BACKGROUND ) நாலு தடவை பார்த்திருக்கேன் சார்" என்று கண்கள் விரியக் குறிப்பிட்டார்.

அவர் மட்டும் என்று இல்லை. இந்தப் படத்தை சிவாஜி கணேசன் அவர்களின் அபாரமான நடிப்பிற்காக திரும்பத் திரும்பப் பார்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் என்றால், இசைக்காகவும் படத்தைப் பார்த்தவர்களும் அநேகம் பேர் உண்டு.

அனைத்து அம்சத்திலும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கும் வண்ணம் தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தில் ஜி. ராமநாதனின் இசையின் திறத்தை எப்படி அளவிடுவது? நினைத்துப் பார்க்கவே பிரமிக்க வைக்கிறது.

பாடல்களுக்காக அவர் தேர்ந்தெடுத்த பாடகர்கள் அனைவருமே - பாராட்டுக்களை
அள்ளிக் குவித்தார்கள்.

கள்ளர் கூட்டத்தை அடக்க கட்டபொம்மன் தனது தம்பி மற்றும் வீரர்கள் சகிதம் மாறுவேடத்தில் கிளம்பிச் செல்லும்போது இடம்பெறும்
பாடல் "மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாமனையும் சேத்துக்கிட்டு - இந்தப் பாடல் ஒரு அப்பட்டமான கிராமிய மணம் வீசும் பாடல். சங்கராபரணம் ராகத்தின் நோட்ஸை அடிப்படையாக கொண்டு எளிமையிலும் எளிமையாக கையாண்டு மரபிசைக்கு புது வடிவம் கொடுத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

சிவாஜி கணேசனுக்கு டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைத்தவர் பாடலில் பெண் குரலுக்கு டி.வி. ரத்னத்தை பாடவைத்தார். பாடகி ரத்னத்தின் குரலுக்கு வாயசைத்து நடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் ஏ. கருணாநிதி.

கட்டபொம்மனின் அரசவை தொடங்கும் முன்பாக வரும் விருத்தம் "சீர் மேவும் பாஞ்சை நகர்" என்ற பாடல். இந்தப் பாடலை வி.என். சுந்தரம் அவர்களுடன் இணைந்து பாடியவர் ஜி. ராமநாதனின் உதவியாளர் திரு. வி. டி. ராஜகோபால் அவர்கள்.

"அஞ்சாத சிங்கம் என் காளை" - பி. சுசீலாவின் இந்தப் பாடலும், ஜி. ராமநாதனின் இசையும் வெகு அற்புதமாக இணைந்த பாடல். இணைப்பிசையில் வரும் ஷெனாய் - பொதுவாக படவுலகில் சோகத்துக்கு என்றே இதை பயன்படுத்துவார்கள் - இந்தப் பாடலில் வெள்ளையம்மாவின் உற்சாகத்துக்கு அழகாக இணை சேர்கிறது.

அடுத்து ஒரு ஜோடிப்பாடல். கவிஞர் கு. மா. பா. அவர்களின் பெயர் சொல்லும் பாடல் இது. பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களும் பி. சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல் என்ற பெருமையைப் பெற்ற பாடல். ஆம்.. "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே" பாடல் தான். ராமநாதனின் பேரபிமானத்துக்குரிய "பீம்ப்ளாஸ்' வெண்ணிலாவின் குளிர்ச்சியோடு தென்றலின் மென்மையும் பொங்க இருவர் குரலில் வெளிப்படும் இனிமை. காலத்தை வென்று இன்றளவும் நிலைத்திருக்கிறதே!.

"கறந்த பாலையும்" டி.எம். எஸ். அவர்கள் குழுவினருடன் பாடும் இந்தப் பாடல் ஜாக்சன்துரையை சந்திக்க கட்டபொம்மன் அணிவகுத்துச் செல்லும்போது பாடும் ஒரு "மார்ச்" பாடல். பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு இந்தப் பாடலில் "முசலும் நாயைக் கடிந்திடுமே வெகு முனைபபுள்ள பாஞ்சால நாட்டினிலே" என்ற எளிமையான வரிகளில் அழகாக பொருந்த அந்த அழகு சற்றும் கெடாதவாறு ராமநாதனின் இசை அமைந்திருக்கிறது.

'சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி" - பிருந்தாவன சாரங்காவில் ராமநாதன் அமைத்த இந்தப் பாடல் நடிகை எஸ். வரலக்ஷ்மி அவர்களின் சொந்தக் குரலில் ஒரு அருமையான இனிமை நிறைந்த பாடல். இந்தப் பாடலைப் பற்றி நடிகை எஸ். வரலக்ஷ்மி அவர்கள் தொலைகாட்சி பேட்டியில் கூறியதாக திரு. வாமனன் அவர்கள் தனது "திரை இசை அலைகள்" கட்டுரைத் தொடரில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்"

"சிங்காரக் கண்ணேன்னு கட்டபொம்மன் படத்துலே ஒரு பாட்டு பாடியிருப்பேன். ரொம்ப "மெலடியா", ரொம்ப "ஸ்வீட்டா" அமைஞ்ச பாட்டு அது. ராத்திரி கேட்டாலும் நல்லா இருக்கும். பகல்லே கேட்டாலும் நாளாருக்கும். அப்படிப்பட்ட ராகத்துலே அழகா அமைச்சிருக்கார் ராமநாத அய்யர். அதனாலே அந்தப் பாட்டுக்கு அப்படி ஒரு வரவேற்பு கெடைச்சது. என் மனசெல்லாம் நெறைஞ்ச பாட்டு அது"

'வெற்றிவடிவேலனே" என்ற விருத்தத்துடன் வி.என். சுந்தரம் துவங்க "மனம் கனிந்தருள் வேல்முருகா" என்று குறிஞ்சி ராகத்தில் தொடர்வார் எஸ். வரலக்ஷ்மி. அருமையான பாடல் இது. ஒவ்வொரு முறை பல்லவிக்கு வரலக்ஷ்மி வரும் போதெல்லாம் ஒவ்வொரு புதிய சங்கதி வெளிப்படும். பாடலின் இறுதியில் வரும் விறுவிறுப்பான வயலின்களின் சேர்க்கைகளும், பாடல் முடியும்போது வரலக்ஷ்மியின் குரல் தொடும் உச்சமும் அமைதியாக தொடங்கி வேகமாக முடியும் காட்சி இது. பாடியவரின் திறமையை வியப்பதா, இசை அமைத்தவரின் திறமையை வியப்பதா - ராமநாதனின் இசை சாம்ராஜ்யத்திற்கு பொருத்தமான இசையரசியாக வரலக்ஷ்மி ஜொலிக்கும் பாடல் இது.

விடுகதைப் பாடலால "டக்கு டக்கு என அடிக்கடித் துடிக்கும்" - பி. சுசீலா, ஏ.பி. கோமளா, எஸ். வரலக்ஷ்மி மூவரின் குரல்களும் இணையும் ஒரு உற்சாகமான பாடல்.

வெள்ளையத்தேவன் போருக்கு புறப்படுகிறபோது அவன் மனைவி வெள்ளையம்மா தான் கண்ட கனவைச் சொல்லி தடுக்கும் பாடல் "போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" - பாடியவர் ஏ.ஜி. ரத்னமாலா. அவலச்சுவை நிறைந்த இந்தப் பாடல் நாடகமேடையின் பாதிப்பால் படத்தில் இடம் பெற்றது என்றாலும் நினைவில் நிற்கத் தவறவில்லை.

அடுத்து முதல் நாள் போரின் தோல்விக்கு பிறகு தங்கள் குல தெய்வமான ஜக்கம்மாவிடம் மக்கள் கட்டபொம்மனின் வெற்றிக்காக வேண்டிப் பாடும் "ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா" - இந்தப் பாடலை பாட - அதுவும் காட்சிக்கேற்ற மன நிலையை காண்பவர் மனதிலும், கேட்பவர் நினைவிலும் பிரதிபலிக்க வைக்கும்படி பாட - சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் மட்டும் தான் முடியும். பாட வைத்தார் ராமநாதன். பாடினார் சீர்காழி என்று சொல்வதை விட கேட்பவரை ஒன்ற வைத்தார் என்று சொல்லலாமா? இந்தப் பாடலின் சிறப்பை விளக்க முடியவில்லை. ராமநாதனின் இசை சிகரத்தை எட்டியது இந்தப் பாடலில்.

இறுதியில் கட்டபொம்மன் தூக்கிலிடப் பட்டதும் "வீரத்தின் சின்னமே" என்ற சீர்காழியின் விருத்தத்தோடு படம் முடிவடைகிறது.

ஆனால் அதன் பாதிப்பு..... இன்று வரை பார்ப்பவர் நினைவை விட்டு அகல மறுக்கிறது.

*******

திரையிட்ட இடங்களில் எல்லாம் வெள்ளிவிழாவைத்தாண்டி இருநூறு நாட்களுக்கு மேல் ஓடியது வீரபாண்டிய கட்டபொம்மன் படம்.

அதோடு மட்டும் அல்ல அடுத்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நான்கு பரிசுகளை - முதல் பரிசுகளை வாங்கிக் குவித்து தமிழ் திரை உலகை மட்டும் அல்ல .. அனைத்து தமிழர்களையும் பெருமை கொள்ளவைத்தது இந்தப் படம்.

அதில் சிறந்த இசைக்காக ஜி. ராமநாதனுக்கு பரிசு கிடைத்தது.

ராமநாதனின் கலை உலக வாழ்வில் அவருக்கு கிடைத்த மிகச் சிறப்பான அங்கீகாரம் இது.

ஆனால் அந்த மேதையின் உள்ளத்தில் இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே இல்லை.. "அது வேற ஒன்னும் இல்லே.. நம்ம வரலக்ஷ்மியோட குரலிலே மயங்கி கொடுத்துருப்பா" என்று மிகச் சாதாரணமாகவே இதனை எடுத்துக்கொண்டார். என்றாலும்.. இப்படி ஒரு கௌரவத்தை தனக்கு கொடுத்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது அவரை வரவேற்று தனது நினைவுப் பரிசாக ஒரு வெள்ளி வீணையை பரிசாக வழங்கினார் அவர்.

அதன் பிறகு....

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</