கேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல்
கனடாவின் இளம் எழுத்தாளர்களுள் நம்பிக்கை அளிக்கின்ற ஒருவராக விளங்கும் கேரென், 'ஒரு நாடோடிக்கவி' என்று அழைக்கப்படுபவர். தாய்லாந்து, பர்மா, ஸ்பெயின் என்று அலைந்து திரிந்து, கவிதைகளும், பயண நூலும், நாவல்களும் எழுதி இருப்பவர். தீவிரமான வாழ்க்கை அனுபவங்களுக்குள்-பரிசோதகைளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பவர். அடுத்த கட்டத்தில், "வீடென்பது குழந்தை வளரும் இடம் மட்டுமல்ல, அகம், விரியும் ஆழமும் கொள்ளும் இடமுமாகும்" என்று உணர்ந்திருப்பவர்.
கேரெனின் தந்தை ரோமன் கத்தோலிக்கர்; தாய் Jehovah's witness-பிரிவைச் சேர்ந்தவர். கேரெனின் குடும்பத்தில் சதா பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்து வந்து கொண்டிருப்பது இந்த சமய உட்பிரிவு பேதம். அத்துடன் தந்தை குடிகாரர். மூத்த சகோதரி ட்ரெஸி போதை மருந்துக்கு அடிமையாகி, 24-வது வயதில் தற்கொலை செய்து கொண்டவர். கேரென் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து, தாய்லாந்து சென்றவர். அடுத்து, ஸ்பெயினில் ஆங்கிலம் கற்றுத் தந்து கொண்டிருந்தார்.
இவரின் முதல் கவிதைத் தொகுதி 'The small words in my Body'. பிற பண்பாடுகள் பற்றி எழுதுகையில், பார்வையாளரா தன்னை உணர்ந்து கொள்ளும் கேரென், "கவிதை என் குருதியிலிருந்து வெளிப்படுகின்றது. அது ஒவ்வொன்றினுடைய நாடியாகவும் சுவாசிப்பாகவும் உள்ளது" என்கிறார்.
"இது ஐந்தாம் பருவம்
வரலாறு போய்விடும்போது
வார்த்தைகளுக்கு எதிரொலிகளோ
அர்த்தங்களோ இல்லாதபோது
எனது தந்தை காணாதுபோகும்போது
என் அக்கா தனித்து வதைபடும்போது ..."
என்று தொடங்குகிறது அவரது ஒரு கவிதை.
"மக்கள் என்னிடம் கதைகள் சொல்லும்போது, அவற்றை உலகிற்குக் கூறும்படி கேட்டுக் கொள்கின்றனர். அவ்வாறு நான் கூறும்போது, அவை பல்வேறு மக்களின் பல்வேறு காலங்களின் கதைகளாகின்றன" என்று கருதும் கேரென், 1996-இல் பர்மாவுக்கு ஒரு பயணியாக வந்தார். அங்கிருந்த இராணுவ ஆட்சி, அதற்கெதிரான விடுதலைப் போராட்டம், ஆங்-ஸான்-சூ-கீ போன்ற போராளிகள், பௌத்த மதத்தினரும் விலகி நிற்காமல் போராட்ட குணம் கொண்டவர்களாக மாறுவது, நாடெங்கிலும் நிலவிய வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்கள் அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து பர்மா மீது அவரது கவனம் குவிந்திருந்தது. Pencanada அமைப்புக்காக 1994-95 இல் அவர் பணியாற்றியபோது, அதில் உறுப்பினராயிருந்த மாதிடா என்னும் எழுத்தாளர் பர்மா அரசுக்கு எதிர்நிலையில் எழுதிவந்தமையால், 20 ஆண்டுகள் தனிக் கொட்டடியில் வைக்கப்பட்டிருந்ததும், அவருக்குள் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
காட்டில் பதுங்கிப் போராட்ட வாழ்வு நடத்தும் போராளிகளைச் சந்தித்தபோது, புரட்சியாளர்களுள் ஒருவருடன் அவர் காதல் வயப்படவும் நேர்கிறது. பல்கலைக்கழகங்கள், மடாலயங்கள், தேனீர்க்கடைகள் என மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை எங்கும் இரகசிய கண்காணிப்பும் அச்சுறுத்தலும் இருந்த சூழலை வைத்து அவர் எழுதியுள்ள நாவலே Lizard Cage.
கனடாவில் கொள்ளையடித்ததற்காக, மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வந்த தனது தம்பி டேவிட்டிற்கு தன் நாவலின் கையெழுத்துப்படிகளை அனுப்பி வைத்திருந்தார் கேரென். ஏன்?
சீர்திருத்தப் பள்ளியின் வண்ணம் பூசிய செங்கற்சுவர்கள், எப்போதும் அணையாத இரவு வெளிச்சம் என்னும் சூழலில் அரைபாதி நினைவுள்ள சொர்க்கமாக வெளி உலகைக் கருதிய டேவிட், அதனுடன் தொடர்பு கொண்டிருப்பதற்காக, இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தவன். யாருக்கு? பாதியார்களுக்கும், கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும்.
நோட்டுப் புத்தகத்தில் கிழிந்த பக்கங்களில் எழுதப்பட்ட தம்பியின் இக்கடிதங்கள், சிறை வாழ்வின் சலிப்பையும் விரக்தியையும் படிநிலை அமைப்பின் அதிகாரத்தையும் பேசுகின்ற வேளையில், அடைபட்டிருக்கும்போது, தாக்குப் பிடிப்பதற்காக, மனம் என்னவெல்லாம் செய்கின்றது என்பதை உணர்த்தியவை.
மாதியா என்னும் எழுத்தாளர், அடுத்து தன் தம்பி, இப்போது பர்மாவின் புரட்சிகர இளைஞன் என இவர்கள் புத்திசாலித்தனத்துடன், படைப்பாற்றலுடன் சிறைவாசத்தை எப்படி எதிர்கொள்கின்றனர் என்னும் பரிசீலனை Lizard Cage நாவலுக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கிறது.
என்றாலும், அப்போது தனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது, ஒரு பால்ய காலக்கதை என்கிறார் கேரென். அக்கதை : சிறுவயதில் புதர்கள் பூங்கா நிலங்களில் சுற்றித் திரியும்போது, ஒரு தவளையின் கத்தலைக் கேட்டு, அதனைத் தேடிப் போகிறார். தனியாக ஒரு தவளையைப் பார்ப்பது அரிதான விஷயம். மனிதர்கள் நெருங்கினால் தவளைகள் கத்துவதை நிறுத்தி விடும். கேரென் நெருங்கிச் செல்ல ஆரம்பித்ததும், கத்துதல் நின்று போகிறது. பொறுமையாகக் காத்திருக்கிறார். ஒருவழியாக அதனைப் பார்த்து விடுகிறார். அத்தவளையின் கழுத்துச் சருமம் ஊடுருவித் தெரியும் அளவுக்கு, அது தன் கழுத்தை விரிக்கின்றது. திரும்பவும் சுருக்கிக் கொள்கிறது. தவளையின் கூழாங்கல் நிற முதுகும், சதுப்பின் வாசமும், அப்புல்வெளியின் பிற்பகல் கதகதப்பும் அவர் மனதில் பதிந்து விடுகிறது. வீட்டுக்கு வந்து அத்தருணத்தை கச்சிதமாகப் பதிவு செய்யும் வரை, திரும்பத் திரும்ப எழுதிப் பார்க்கிறார். அப்பக்கத்தை வாசிக்கும் யாரும் அத்தவளை தன் சுதந்திரத்தைப் பாடுவதைக் கேட்கக் கூடும் என்பது கேரெனின் எண்ணம்.
மிமி. கேரெனின் கவிதைகள்
1. மீண்டும் உன் கைகளில் இருக்க விரும்புகிறேன்.
வாழக்கை தனிமை பெற்றுள்ளது
உனது முத்தமில்லாமல்,
மற்றும் உனது மெல்லிய தழுவலை
இழந்து வாடுகின்றேன்.
நான் ஆசைப்படுகிறேன்
உன் பிடிக்குள் இருந்திருக்க,
முதுமை வரும்வரை
அங்கே நான் இருந்திருப்பேன்.
உன்னை நிஜமாகவே நேசிக்கிறேன்.
என் நெஞ்சார
நாம் சேர்ந்திருந்தால்
நாம் பிரிந்திருக்க விரும்பியே இருக்க மாட்டேன்.
என்னிடம் நீ சொன்னவை
பொய்களாய் இருந்திக்கலாம்,
ஆனால் உன் விழிகளில் நோக்கியபோது
மிகவும் நேர்மையாய் இருந்தாய்.
எதிர்காலத்தில் மீண்டும்
நாம் சந்திக்க நேர்ந்தால்
என்னை உன் கைகளில் வைத்துக்கொள்
நம் நேசம் ஒருபோதும் முடிவுறாது.
2. கருஞ்சிவப்பு ஆடையின் வீதிகள்
கருஞ்சிவப்பாடை தாமிரச் சருமத்தின்
வீதியில் அவள் தன் பாதையைத் தவற விட்டிருக்கிறாள்.
நகரில் தனியே அலைந்து கொண்டிருந்தவள்,
பட்டு மற்றும் பொன்னின் நரம்புகளைத் தொட்டிருக்கிறாள்.
மலைவாசிகள் நகைக்கின்றனர்.
அவளது கூரிய மூக்கையும் சாக்கட்டி
விரல்களையும் பார்த்து,
துத்தநாகக்குகைகளிலிருந்து பிச்சைக்காரர்கள் புன்னகைக்கின்றனர்
பசிய விழி வெள்ளாடுகள் திரியும் பாதைகளுக்கும் ப்போது நொறுங்கிக் கொண்டிருக்கும் பழமையான வீடுகளுக்கும் கனவுகாணும் ஆவிகளுக்கும் சாலைகள் விலகி நிற்கின்றன.
மணிகள் மற்றும் காற்றின் வெண்கல நாதமிசைக்கும்,
ரோஜா ஒளியால் கதகதக்கும் கோயில் முற்றங்களுக்கு
அவை இட்டுச் செல்கின்றன.
அரக்கர்களின் கல்தோள்கள் தாழ்கின்றன தூங்குவதற்கு.
பளபளக்கும் கண்ணாடித் செதில்கள் கொண்ட டிராகன்கள்
ஓய்ந்துவிட்ட தாடைகளை மூடிக் கொள்கின்றன.
எருதுகளின் குளம்படிகள் மண்டியுள்ள
வண்டிப் பாதைகள் இருள்கின்றன.
பூக்களும் சகதியும் இருபுறமுள்ள
நீலக்கயிறிணைந்த ஆறுகளின் அடிக்கு
அவை சுழன்று போகின்றன
அங்கே பெண்கள் நிற்கின்றனர். இடுப்பளவு நீரில்
தம் தலைகளின் வெள்ளியை சிலுப்பியபடி.
ஒரு பிரகாசத்தினை நோக்கி அவள் நடந்தேகி,
திரும்பிப் பார்க்கிறாள் நகரில் பழைய முகத்தை.
வயலின் பசிய ஒளி நடுக்கமுறுகிறது அவளைச் சுற்றி,
தவளைகளின் சில் வண்டுகளின் சப்தங்களைக்
கேட்பவள், தன் குருதியின் பாடலைக் கவனிக்கின்றாள்.
முதல்முறையாய், அவள் புரிந்து கொள்கிறாள், வார்த்தைகளை.
3. ஓ கனடா (வான்கூவர் தீவின் மீது பாடியபடி)
கற்கள் சிதறிய கரையில் கடற்காகங்கள்
ஜீவனுள்ள சிப்பிகளை நழுவ விட்டு,
சதையைக் குத்திக் கிழிக்க இறங்கும்போது,
பாறைகள் மீது
இன்னொரு வசந்தம் பிளந்து திறக்கின்றது.
நானறிவேன் கடும் கடல் காகத்தினை -
நானறிவேன்
தன் கூட்டிலிருந்த கிழிபட்ட அவ்வுயிரை.
இப்படுகொலையின் மத்தியிலே
கடல் அலையடிக்கிறது, அலையடிக்கிறது,
நக்குகிறது, வீட்டின் கலபாதத்தை,
ஒரு மிருகமெனக் கடல்
நானறிந்த ஒரு மிருகமெனக் கடல்.
நான் குழந்தையாயிருந்த வேளை
என்னைக் கொன்றுவிட்டது அநேகமாய்
முன்னர் சென்றிருந்த
என் மச்சகன்னித் தங்கை
மூழ்கிப் போனாள்.
நேசிக்க கற்றிருக்கிறேன்
நீரினை, அளவீடைத் தாண்டிய சமுத்திரத்தையும்
ஒவ்வொரு கடலினையும்,
நான் பிறந்த ஆற்றினையும்
ஞாபகத்திற்குள் என்னை
இழுத்துப் போன ஏரியினையும்
ஆகக் கடைசியில் நேசிக்கிறோம்
நம்மை வாழவிட்ட மிருகத்தினை.
சிவப்பு டுலிப்கன் விரிகுடாமேல் தகிக்கின்றன,
பாறைச் செடிகள் கருஞ்சிவப்பாயும்
வெள்ளையாயம் தொங்குகின்றன.
ஒரு முட்டாளின் வண்ணப்பாடலை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
எதுவும் இங்கே நிஜமில்லை நான் நிஜமில்லை
என் தலை மிதக்கின்றது என் பாதங்களைத் தாண்டி
என்னால் அதனை மீட்க முடியவில்லை.
ஓ கனடா.
உன்னுடன் முயன்று பார்க்கிறேன். கடுமையாய்
உனது அடங்கிய பிருமாண்டத்தையும்,
உனது கருணையற்ற காற்றினையும் உனது மரணங்களையும்
எதுவும் விளக்க முடியாது போகிறது இவ்வளவுக்கு
அவை எனக்குரியவை.
ஒரு நாடென்பது
ஒரு குடும்பம் என்று உணர்த்தத் தேவையில்லை
ஆனால் பட்டவர்த்தனமாய் தெரிவிப்பதெனில்
ஒரு நாடென்பது, ஒரு குடும்பமே.
என் நாடு
என் குடும்பம்.
இப்போதுதான் அவற்றிடம் திரும்புகிறேன். தண்ணீர் எப்போதும் திரும்புவதென. எவ்விதம் வாழ்வதென்று நமக்குப் போதிப்பது இறந்தவர்களே. சரியாகவோ! மோசமாகவோ! எவ்விதம் நீந்துவதென்று நமக்குப் போதிப்பது இறந்தவர்களே! சரியாகவோ! மோசமாகவோ! இறந்தவர்களே.
நம்மிடையே நடப்பது அவர்களே
ஆனால் நம் பெயர்களை உச்சரிக்க ஆகாது.
வீடுவந்து சேர்வதற்கும்
அங்கிருந்து நீங்குவதற்கும் இடையில் சிக்கி,
ஏதேனும் மாறியாக வேண்டும் அல்லது
எதுவும் எப்போதும் மாறாது என்பதை
அறிந்துள்ள குற்றவாளியென
கடற்கரை மீது நிற்கிறேன்
நிலப்பரப்பைப் பார்த்தபடி.
ஓ கனடா, கனடா.
இருண்ட நீரினை நோக்குகிறேன் உணர்வுபாலமின்றி
என்னை அது நோக்குவதுபோல்.
ஸீல்கள் பேசுவதில்லை மானுட மொழியை,
நாரைகளும்.
எனக்குப் புரிபடுவதில்லை
எத்தகைய மிருகம் நானென்று !
எனது மொழி எதுவென்று !
ஒன்று மட்டுமே எனக்குத் தெரியும் ;
சில்லிட்ட எனது கரையில்
உண்மையை நான் அறியாது போயின்
என்னால் சரிவத நீந்த முடியாது
இவ்வுலகினூடே.
நேர்முகம் (அட்ரியேன் பிலிப்ஸ் கண்ட நேர்முகம்)
கே : உங்களின் முதல் புத்தகம் Tough the Dragon கவர்னர் ஜெனரலின் பரிசைப் பெற்றது மற்றும் தேசிய அளவில் நன்கு விற்பனையானது. கவர்னர் ஜெனரலின் பரிசைப் பெற்றுள்ளவர்களுள் நீங்கள் மிகவும் இளையவர். பரிசு பெற்றது எப்படி இருந்தது?
பதில் : பரிசைப் பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலிதான். எழுத்தாளர் என்ற வகையிலும் என் எழுத்துக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டை அனுபவித்தது அற்புதமானது. மறுபக்கத்தில், திடீரென்று கிடைத்த கவனம், மிகவும் குழப்பத்தை உண்டுபண்ணிற்று. மிகவும் இளையவளான நான், எங்கோ ஊர் - பேர் தெரியாதபடி, அதிகமுகம் அந்நிய நாடுகளில், பக்கத்தை நிரப்பும் பொருட்டும், கலைஞன் என்ற வகையில் என் வளர்ச்சிக்கும் எழுதிக் கொண்டிருந்தேன். இப்படி ஒதுங்கியிருந்தும் தனிமை கொண்டதும் என் கல்விக்கும், என் பணிக்கும் முக்கியமாயிருந்தன. இவ்வகையில் பொது வாழ்க்கைக்குரிய நபராவதன் அழுத்தங்கள் - சிறிய அளவிலே என்றாலும் - அறுதியாய் என்னை நிலைகுலையச் செய்தன. ஆகவே என் வாழ்வில் அப்போது நான் மிகவும் விரும்பியதைச் செய்தேன். திரும்பவும் நாட்டை விட்டுக் கிளம்பினேன்.
கே :Tough the Dragon 1992 ஈல் வெளியானது - Tough the Dragon-லிருந்து The Lizard Cage - வரையிலான உங்களின் தசாப்தகால கலைப் பயணம் குறித்து சிறிது சொல்ல முடியுமா?
ப : அப்போது நான்One Room in a Castle என்னும் பயணநூல், தாய்லாந்து - பர்மா எல்லை மற்றும் பர்மா குறித்த கவிதைத் தொகுப்பு உள்ளிட்ட வேறு பல நூல்கள் வெளியிட்டேன். ஆக, சாராம்சத்தில், Touch the Dragon தந்திருந்த கவன ஈர்ப்பு இல்லாமலேயே எழுதிக் கொண்டிருந்தேன். வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு அது நல்லதாக இருந்தது - பாராட்டில்லாது நிறைய நேரத்தைச் செலவிடுவது. 1995-இல் தாய்லாந்துக்கு நான் திரும்பியது. பர்மாவுக்கு இட்டுச் செல்ல, அங்கே இருவாரங்களுக்குள், நாசமாக்கப்பட்டிருந்த அந்த அழகிய தேசத்தில் நடந்து கொண்டிருந்தவை குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று உணர்ந்து விட்டேன். 1994 மற்றும் 1995-இல் Pen Canada அமைப்புக்காகச் சில பணிகள் ஆற்றினேன் - அதன் கௌரவ உறுப்பினர்களுள் - ஒருவர் மாதிடா. பர்மிய அரசுக்கு எதிரான நிலையில் சிறுகதைகள் எழுதியதற்காக 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட இளம் எழுத்தாளர். ஆக அங்கே என்ன நடந்து கொண்டிருந்தது என்பதில் ஏற்கனவே ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அந்நாட்டிற்கு நான் செய்த அம்முதல் வருகையே தூண்டுதல் செய்வதாய், வாழ்க்கையினை மாற்றிப் போடுவதால் இருந்தது. மறுமுறை சென்று, மாணவர் ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுத்தபின், பர்மாவுக்குள் மீண்டும் நுழைய முடியாதபடி கறுப்புப்பட்டியலில் இடம் பெற்றேன். எனவே தாய்லாந்துக்கு பக்கத்திலிருந்து எல்லைப் பகுதிக்குப் போய், அங்கு வசித்த அதிருப்தியாளர்கள், அகதிகள் மற்றும் புரட்சியாளர்களை அறிந்து கொள்ளலானேன். அக்காலகட்டத்தில் (சுமார் 2 ஆண்டுகள் அங்கிருந்தேன்) The Lizard Cage-ன் கையெழுத்துப் படிகளை எழுதிக் கொண்டிருந்தேன்.
கே : பல கவிதைத் தொகுதிகளிலும் இரண்டு அ-கதை நூல்களும் வெளியிடப்பட்டிருந்தாலும், The Lizard Cage உங்களுக்கு முதல் நாவல். இது நாவலாகவே வர வேண்டும் எனறு எப்போதுமே உத்தேசம் இருந்ததா? கவிதை மற்றும் அ-கதைகள் எழுதுவதிலிருந்து உங்களது கதை எழுத்துப் போக்கு வித்தியாசமானதா?
ப : சர்வாதிகாரத்தின் கீழாக பர்மிய எழுத்தாளர்களும் பிற கலைஞர்களும் எப்படி உயிர்த்திருக்கிறார்கள். அவர்கள் எவ்விதம் தணிக்கையாளர்களை வெளியில் உள்ளவர்கள் மற்றும் நீண்ட நெடுங்காலம் ஒடுக்குமுறையின் கீழ் வாழ்ந்தவன் தமக்குள்ளே தகவமைத்துக் கொள்வது - எதிர்கொள்கின்றனர் என்பது குறித்த கட்டுரைகளாக இந்நூல் இருக்கும் என்று முதலில் எண்ணினேன். பர்மிய அரசு ஆர்வெல்லியத் தன்மை கொண்டது - தொடர்ந்து எழுதவும், தணிக்கையாளர்களை மீறிச் செல்லவும், தொடர்ந்து சிந்திப்பதும் பேசுவதும், வளர்ந்து கொள்ளவும் - சுருங்கச் சொன்னால், வாழ்க்கையை வற்புறுத்திக் கொண்டிருக்க - பல தந்திரமான வழிமுறைகளைக் கண்டு கொண்ட ஆளுமைகளையும் கலைஞர்களையும் சந்திக்க அது எனக்கு உத்வேக மூட்டியது, கவர்ந்திழுத்தது. அவர்களின் கலக உணர்வு தீவிரமானது, மற்றவர்களிடம் தொற்றிக் கொள்வது ; அவர்களிடம் அற்புதமான நகைச்சுவை உணர்வும் இருந்தது. பல ஆண்டுகளில் நான் சந்தித்திருந்தவர்களில் மிகவும் வேட்கை கொண்டவர்கள் - இருப்பினும், ஏராளமான சிரமங்கள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்தனர். படைப்பூக்கமும், ஒடுக்குமுறைக்கு எதிரான கலக உணர்வும் - அல்லது குறைந்தபட்சம் ஆன்மா அளவிலே அதனால் அழிந்துபடாதிருப்பதும் - எவ்விதம ஒரே தோற்றுவாயிலிருந்து - அசலான வாழ்க்கை வாழ்தல், உண்மையில் நிகழும் வாழ்தலிலிருந்து பெறப்படுகின்றன என்பதைப் பார்த்தேன். எனவேதான் ஏராளமான அரசாங்கங்கள் (அனைத்து அரசாங்கங்களுமாக இருக்கக்கூடும்) கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் குறித்து சந்தேகம் கொள்கின்றன. அதீதமான அரசியல் நிலவரங்களில் - உதாரணமாக, சர்வாதிகாரத்தின் கீழ் - அச்சந்தேகம், அச்சமாகவும், வன்முறையாகவும் உருமாறுகின்றது.
|
ஆனால் இதற்கிடையே, பர்மாவுக்குள் நுழைய முடியாதவாறு, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டேன். அங்குள்ளவர்களுடன் என் நேர்முகங்களைத் தொடர முடியாது போயிற்று. ஆகவே நான் எல்லைக்குச் சென்றேன். என் புத்தகத்தைத் தொடர்ந்து எழுத வேண்டும் ஆனால் அது நாவலாயிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டன் - பர்மாவின் படைப்பாகக மற்றும் அரசியல் பிரஜைகளின் பொது அனுபவங்களை - சிறையில் வாழும் அனுபவங்களை - பதிவு செய்வதாய் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். மாதிடாவைப் பற்றியும், பிரக்ஞையும் சிறைகள் தொடர்பான எனது நீண்ட நாளைய ஆர்வமும் காரணமாக, தனிக் கொட்டடி வாழ்க்கை பற்றிப் பேசுகின்ற குரல் எனக்குள் ஏற்கனவே இருந்தது.
கே: பர்மாவில் ஜனநாயகத்திற்காகப் போராபவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங்-ஸான்-சூ-கீ உங்கள் நாவலில் பிரதானமாக இடம் பெறுகின்றார். சர்வதேச தலைவி ஒருவரைப் பற்றி நாவல் எழுதியது எப்படி இருந்தது ?
ப : மிகவும் தாராளமும் பரிவும் கொண்டவரான ஆங-சாங்-சூ-கீ மிகவும் தனிப்பட்ட தன்மையும் நிறைந்தவர் - அவர் பேசுவதாக நாவலில் ஓர் அத்தியாசம் உள்ளது - அவரின் சிந்தனைகளை நாம் கேட்க முடிகிறது மற்றும் ரங்கூனுக்குள் புயல் திரள்வதென அவரைக் கவனிக்கின்றோம். அதுபற்றி எழுதியதும், நான் எழுதியதை நம்பியதும் அற்புதமாயிருந்தது. ஆனால் அது எந்த அளவுக்கு நிஜமானது? அப்புத்தக்த்திற்கு அவசியமான அளவுக்கு அது நிஜம். அவர் அதனை வாசிக்கும் போது வருத்தப்படவில்லை. முனகவில்லை என்று மட்டுமே நம்ப முடிகிறது. பிரிட்டிஷாரிடமிருந்து பர்மா விடுதலை பெற்றதற்குக் காரண கர்த்தாவான அவரது தந்தை ஆங்-ஸான் அளவுக்குப் பர்மாவில் போற்றப்படும் அவர், ஒரு தேசிய அடையாளமே. நோபல் பரிசை வெல்வதற்கு முன்பு கூட, தன் நாட்டின் ஆளும் தளபதிகளுக்கு எதிராக, காந்திய வழியிலான அஹிம்சைப் போராட்டம் நடத்தி, புகழ்பெற்றிருந்தார். நண்பர்கள் மூலமாக அவரைப்பற்றி நான் தெரிந்து கொண்டது மற்றும் அவருடன் அவரது நெருங்கிய சகாக்களுடனும் நான் நடத்திய நேர்முகங்களில் திரட்டிய விஷயங்கள் ஆகியவற்றின் மீது அவரைப் பற்றி புனைந்து எழுதினேன்.
கே : உலகெங்கிலும் சிறைவாசத்திலுள்ள எழுத்தாளர்களின் உரிமைகளுக்காக வாதாடும் Pen Canada அமைப்புடன் சேர்ந்து விரிவான பணியாற்றியுள்ளீர்கள். உங்களது போராட்டம் உங்கள் எழுத்துக்கு எவ்விதம் உதவுகின்றது?
ப : எழுத்தாளர் என்பதைவிடவும் கூடுதலான வகையில் போராளியாகவே இருக்க ஆசைப்படுகிறேன். நாவல் எழுதும் ஆரம்ப நிலையில், ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எனது ஆசைகள், தனிமை மற்றும் ப¬ப்பின் மெதுவான சிரமம்தரும் போக்கு ஆகியவற்றுக்கு எதிர்நிலையில் இருந்தன. ஒவ்வொரு மனிதனும், அவன் விரும்புகிறானோ, இல்லையோ, புரிந்து கொள்கிறானோ, இல்லையோ, அவன் ஒரு அரசியல் ஜீவி. தன்னை வெளிப்படுத்திக் கொள்வது மற்றும் உண்மையை - நம்மிடமுள்ள அகவயமான சாதாரணமான உண்மைகூட - வெளிப்படுத்திக் கொள்வது மற்றும் உண்மையை கூறுவது என்னும் போராட்டம் - பெரிதும் ஓர் அரசியல் போராட்டமே. அரசியல் என்பது நமது அன்றாட வாழவின் அங்கம் என்பதை மேற்கில் பெரும்பாலானோர் ஏற்பதில்லை. மேலும் நமது அசாதாரணமான விடுதலைகளுக்கு நாமே நேரிடையான பொறுப்பு என்பதும் நமக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை, அவ்விடுதலையின் ஒரு பகுதி... மற்றும் அப்பொறுப்பின் ஒரு பகுதி ... எனது உடனடி அகத்தைத் தாண்டி நோக்குவதும், பெரும்பாலானவர்களின் நன்மைக்காக செயல்படுவதும் ஆகும். இது மிகப் பழமையானதாக ஒலிக்கும், இது பழமையானதே. அத்துடன் இது பௌத்தத் தன்மை கொண்டது. மற்றும் கிறித்துவத் தன்மை கொண்டது. அத்துடன் வேறுபல மதத் தன்மைகளும் கொண்டது. அது நிச்சயம்.
ஏனெனில், போராட்டத்திற்கு ஆன்மீக அம்சம் இருக்கிறது என்று நான் கருதுவதால், இம்மதங்களைக் குறிப்பிடுகிறேன். குறிப்பாக வட அமெரிக்கரும், கனடியரும் பாலியலை விடவும், ஆன்மீகம் குறித்து மிகவும் அசூயை கொள்கின்றனர். வாழுகின்ற அரசியல் மற்றும் வாழுகின்ற ஆன்மீகத்திலிருந்து நாம் அந்நியப்பட்டிருப்பதையே, மதச்சார்பற்ற, நடுத்தர வெள்ளைக் கனடிய நிலைப்பாடு உணர்த்துகிறது. ஆனால், இலத்தீன், அமெரிக்காவில் பல பாதியார்களும், கன்னிகாஸ்திரிகளும் புகழ்பெற்ற அரசியல் போராளிகளாக இருந்து வந்துள்ளனர். பர்மாவில் எடுத்த எடுப்பிலேயே பௌத்தம் என்றால், அது முக்கிய அரசியல் பரிமாணம் பெற்றிருக்க வேண்டும் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதுகுறித்து ஆங்-ஸான்-சூ-கீ தன் நூல்களில் நிறையவே எழுதுகிறார்.
உலகம் குறித்த எனது அதிகப்படியான புரிதல் பிற பண்பாடுகளில் வாழ்ந்ததன் காரணமாகக் கிடைத்துள்ளது என்பதால், மக்கள் பொறுப்புணர்வு பற்றி நான் எண்ணும்போது, என்னுடைய நாடு மற்றும் பண்பாட்டைப் போலவே, பிற நாடுகளையும் பண்பாடுகளையும் எண்ணிப் பார்க்கிறேன். தாங்கள் எழுதுபவை -செய்பவை - சிந்திப்பவை - யின் பொருட்டு, மக்கள் சிறைக்கு அனுப்பப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் கொலை செய்யப்படுவதுமான இடங்கள் இப்புவிக்கோளத்தில் நிறைய இருப்பதை அறிந்து, குழந்தையாயிருந்தபோதே அதிர்ச்சியுற்றேன். எனவே, PEN மற்றும் Amnesty போன்றவற்றை ஆதரித்து அந்நிறுவனங்களுக்காக ஆண்டுக்கணக்கில் பணியாற்றி இருக்கிறேன்.
சில சமயஙகளில் நம்மால் அதிகபட்சம் செய்ய முடிவது - இதுதான் அதிகம் - பாராமுகமாய் இருப்பதைவிடவும் மற்றவரின் துக்கங்களில் நெருக்கத்தை உணர்வதுதான். சில வேளைகளில் நம்மால் எதுவும் செய்ய முடியாது - உணர மட்டுமே முடியும் - இருப்பதை அறிய வரும்போது எனக்குச் சிரமமாய் இருந்துள்ளது. இந்த நாவலை எழுதியபோது, பர்மாவில் நிகழ்ந்து கொண்டிருப்பவற்றிற்காக, நான் மிகவும் உணர்வு நெகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் அவ்வனுபவம் என் சமூகத்தை நெருங்கிக் கவனிக்குமாறு செய்து விட்டது. எல்லாவிதமான துயரங்களின் --- மென்மை கொள்ளவும் செய்துவிட்டது. கருணை என்பது ஆன்மிக மற்றும் அரசியல் நடவடிக்கையின் அன்றா வடிவம்; அதன் விஷயமாக, ஓர் அரசியல் கைதியா சுனாமியால் பாதிக்கப்பட்டவரோ இருக்கத் தேவையில்லை.
கே : தேஜா தன் வலுவான பௌத்த நம்பிக்கையைச் சார்ந்திருக்கிறான் - குறிப்பாக தன் தியான முறையை - தன் மோசமான சிறை அனுபவங்களிலிருந்து தாக்குப் பிடித்து இருப்பதற்காக.Lizard Cafe-னை எந்த வகையில் பௌத்த நூலாகக் கருதுகிறீர்கள்?
ப : அதன் முக்கிய மையக் கருத்துக்களுள் ஒன்று, பௌத்தம் என்பது அஹிம்சை மற்றும் விடுதலையின் மதம், தத்துவம். ஆனால் நாவலின் ஆன்மீக அம்சம் கறாராக பௌத்தம் சார்ந்ததில்லை. "உயிருக்கான (Spirit) சிறுவனின் போராட்டம், தேஜாவினுடையதை விடவும், சித்தாந்தத்தன்மையும் மரபார்த்தமும் குறைந்ததே. சிறியதொரு தெய்வமென நிறமாற்றிக் கொள்ளும் ஓணாணை அவன் நம்புகிறான் மற்றும் மரத்தின் மர்மமான ஆற்றலை நம்புகிறான். புத்தரையும் நம்புகிறான். அதிகாலையில் தொழுகின்ற தந்தையை நினைவுகூர்கின்றான். தொடர்ந்து தோற்றுவருகின்ற (அ) தன்னைப் புண்படுத்துகின்ற வயதுவந்தவர்களை விடவும், தேஜா மிகவும் நம்பகமான, எதனையும் நம்பி விடுவதில் தீவிரம் காட்டும் சிறுவனாக நாவலில் இருந்தபோதிலும், மிகவும் சிக்கல் வாய்ந்த ஒருங்கிணைப்பின் உருவாக்கம் ஆவான்.
தேஜாவின் நிலை எளியது ; பௌத்தனாகப் பிறந்து வளர்ந்தவன். பௌத்தம் என்பது அஹிம்சை, கருணை, சாந்தம் ஆகியவற்றின் மதம் - தேஜா தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் பெறுமதிகளும் இவைதான் - --- வந்த முன்னாள் அரசியல் கைதிகள் பலர் சிறைவாசத்தின்போது, குறிப்பாக தணித்திருந்த போது, தியானத்தின் மதிப்பைப் பற்றி எடுத்துரைத்தனர். பைத்தியம் பிடிக்காமலோ (அ) மனச் சிதைவுக்கு ஆளாகமலோ தங்களைக் காத்தது தியானம் என்றனர். தொடர்ந்தும் விடாப் பிடியாகவும், பதட்டமாகவும் சிந்திக்காமல், ஆடாது - அசையாது - அமர்ந்து சுவாசிப்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த செயல்பாடாகும்.
சந்தர்ப்பம் வாய்க்கையில் அச்சிறுவன் உடனடியாகவும் வேகத்துடனும் பௌத்தத்தை தழுவிக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் அவன் அதிகமும் ஆவிகளை வழிபடுபவன். தனக்கு முன் நிலவியிருந்த சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், மிகவும் குறிப்பாக கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டரை, தனக்குள் ஈர்த்துக் கொண்ட கிறித்தவத்தைப் போல, தென்கிழக்கு ஆசியாவின் பௌத்தம், இயற்கை உலகம், அதன் எண்ணற்ற ஆவிகள் மற்றும் ஆற்றல்களைப் போற்றும் ஆவி உலக மரபுகளும் நம்பிக்கைகளும் நிறைந்தது. என்னைப் பொறுத்தவரை சிறைப் பொறுப்பாளர்களும் அச்சிறுவனும் நம்புகின்ற, மரமும் அதன் நல்ல ஆவியும் குறித்த அம்சங்கள், பௌத்த அம்சங்களைப் போல முக்கியமானவையே.
கே : ஆன்மிக மற்றும் இயற்பியல் என்னும் இரு தளத்திலான பசி, இப்புத்தகத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. இதுபற்றி மேலும் கூற முடியுமா?
ப : The Lizard Cage-இல் நான் எழுதுவது போலவே, எனது பிற நூல்களில் உணவு பற்றி நிறையவே எழுதியுள்ளேன். ஒருவர் - மற்றவருக்கு இடையே மட்டுமல்லாமல், நமக்கும் பூமிக்கும் இடையே உணவு, கொடையாக, பிணைக்கும் திசுவாக, ஒன்று கலந்திடும் வடிவமாக இருப்பதை எழுதியுள்ளேன். மயக்கி ஆழ்த்திவிடும் வழிமுறையாக உணவு இருப்பதை எழுதியுள்ளேன்.
ஒரு பர்மியனின் இறை வாழ்வில், உணவு முதலாவதும் மையமானதுமான அன்றாட வாழ்க்கை விஷயமாய் உள்ளது. கைதிகளுக்குப் போதுமான உணவை சிறைகள் வழங்குவதில்லை என்பதால், பர்மாவில் சிறைவாழ்க்கை, பசி-பசி பற்றிய பயத்தை சுற்றியதாக இருக்கிறது. குறிப்பிட்ட சில உணவு வகைகளுக்கான ஏக்கம், பொதுமைப்படுத்தப்பட்ட பசி போலவே, எங்கும் உள்ள சிறை வாழ்வின் முக்கிய அங்கமாகியுள்ளது. சரிவர உணவில்லாமல், கோபங்கொண்ட மற்றும் காயம்பட்டவர்களை கான்க்ரீட் பெட்டிகளில் அடைத்து, அறிவார்த்த, பாலியல், உணர்வோட்ட, ஆன்மிக இழப்புகளுக்கு உள்ளாக்கிவிட்டு, நல்லவர்களாக வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது மோசமானதாகவும் குற்றவியல் தன்மைமிக்கதாகவும் எனக்குத் தோன்றியுள்ளது. பசி நம்மையெல்லாம் ஒன்றுபடுத்துகிறது என்று கருதுகிறேன். நாம் பசி கொண்டு, அலைக்கழிக்கப்படும் உயிரினம். எனது பெரும்பாலான எழுத்து, உருமாற்றத்திற்கான, இன்னொரு உலகத்திற்குள் தாண்டிச் செல்வதற்கான பசி பற்றியது, எனவே, என் முதல் நாவலில் மீண்டும் இடம்பெறுவது இயற்கையானதே.
யாரேனும், ஒருவர் பௌதிகப் பசியைத் தெரிவு செய்யும்போது, என்னால் அதனை ஒருபோதும், எப்போதும் செய்ய இயலாது - என்ன நிகழ்கின்றது என்பதில் நான் ஆர்வம் கொண்டிருந்தேன். பர்மாவில் பட்டினிப் போராட்டம், ஊழல் மண்டிய மன்னர்களிடம் பிச்சை பெற மறுதலித்த பௌத்த துறவிகள் வாழ்ந்த பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றினைக் கொண்டது. தேஜா நிகழ்த்திக் காட்டுவதுபோல, பசியும் அரசியல் நடவடிக்கையாகும்.
கே : சிறையில் வளர்க்கப்பட்டுள்ள அநாதையும், குழந்தைத் தொழிலாளியுமான தேஜாவும், Little Brother-ம் அசாதாரண உறவுநிலை கொண்டுள்ளனர். அதற்கான உந்துதல் எங்கிருந்த வந்தது?
ப : பர்மாவெங்கிலும், நம்ப முடியாத குழந்தைகளைச் சந்தித்தேன். விடாமுயற்சியுள்ளவர்கள், தைரியசாலிகள், ஆச்சரியப்படத்தக்க அளவு புத்திசாலிகள், குறிப்பிடத்தக்க நகைச்சுவை உணர்வும் அகமும் கொண்டவர்கள் என, தங்களால் நடக்க முடிந்ததிலிருந்து வேலை செய்துவரும் சிறுவர்கள், அடுத்தடுத்து வரும் சிரமங்களின் வரிசையாயுள்ள ஜீவிதங்களையும் பெற்றுள்ளவர்கள் என சந்தை நகரங்களிலும், டீக்கடைகளிலும் உள்ள ஏழைக் குழந்தைகளைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இவர்களில் பலர் அநாதைகள் (அ) கைவிடப்பட்டிருந்தவர்கள் (அ) தங்களால் கவனிக்க முடியாத அளவுக்கு ஓய்ந்துபோன பெற்றோரால், வேலை பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.
அச்சிறுவனை உருவாக்க துரதிருஷ்டசாலிகளான இரு பர்மியச் சிறுவர்கள் ஒன்று சேர வேண்டியிருந்தது. பர்மாவில் சில சிறுவர்கள் தம் பெற்றோருடன் சேர்ந்து சிறைகளில் வாழ்ந்து போவார்கள் - குற்றம் நிரூபணமான குற்றவாளிகள், தம் பிள்ளைகளை ஒப்படைக்க வேறுவழிவகை இல்லாதுபோனால், தங்களுடன் சிறைக்குள் கொண்டு செல்லலாம். எனக்குத் தெரிந்த அதிருப்தியாளர்களுள் ஒருவர், தான் சிறையில் சந்தித்த ஒரு குழந்தை பற்றி என்னிடம் கூறினார். தன் தந்தையுடன் தனிக் கொட்டடியில் வசித்த அவன், சிறை நிர்வாகிகளுக்காக பலதினுசான வேலைகள் செய்தான். ஒரு பெண் எத்தகையவள் என்னும் எண்ணம் இல்லாமலேயே இருந்திருந்தவன்; குழந்தையாய் இருந்ததிலிருந்து சிறையில் இருந்து வருபவன்; தன் தாய் பற்றியும் அறியாதவன். ஒரு தாயினை உணர்ந்திராதவன் - குறைந்தபட்சம் பெண் வடிவில், இது என்னை வசீகரித்தது. வேதனைப்பட வைத்தது. சிறைபோன்றதான, மூடுண்ட ஒரு சமூகத்திற்கு (அ) ஒரு குழந்தைக்கு, பெண் இல்லாதுபோனால் என்ன நிகழும்?
பிற்பாடு ஒரு இரவில் இரங்கூனில் நடந்து திரிந்து கொண்டிருந்து, பாதையைத் தவறவிட்டு, மலையடிவாரத்தில் ஒரு பாலத்தின் அருகிலுள்ள டீக்கடைக்கு வந்து சேர்ந்தேன். அங்கே சிலர் புகைத்துக் கொண்டும், தேநீர் அருந்திக் கொண்டும் இருந்தனர். அவர்களுள் பெரிய கண்களுடன் கூடிய சிறுவன் ஒருவன், அவர்களைப் போலவே சுருட்டுப் பிடித்துக் கொண்டும், தேநீர் அருந்திக் கொண்டும் இருந்தான். அங்கிருந்த ஒரே பெண் நான் மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டேன். இவனுக்கு வயது பத்து - பதினொன்றுக்கு மேல் இருக்காது. இவனுடன் சிறிது நேரம் பேசினேன். இவன் என்னை நேராகவும், இமைக்காமலும் பார்த்தான். அது என்னை மேலும் நடுக்கம் கொள்ள வைத்தது. எனக்குப் பர்மிய மொழியும் சரிவரத் தெரியாது. நாங்கள் என்ன பேசினோம் என்று இப்போது நினைவில் இல்லை. ஆனால், அவனது பெரிய விழிகளும் எலும்புதுருத்தி நின்ற தாடையும், சுருட்டைப் பற்றியிருந்த அழுக்கு விரல்களும் நினைவில் உள்ளன. அவனது இருட்தோற்றம் நினைவில் உள்ளது. அவன் இந்த வெள்ளை யுவதிக்காக புன்னகைக்கப் போவதில்லை. வசீகரமாய் இருக்கப் போவதில்லை. அவன் மனதில் மேலும் முக்கிய விஷயங்கள் இருந்தன. அவனிடம் நிறையமரியான உணர்வு கொண்டேன். நான் ஒருபோதும், எப்போதும் மறக்க முடியாத அகத்தின் கருமை அவனிடத்தே இருந்தது. அவனே நியிலே ஆக, Little Brother ஆக மாறினான்.
கே : பர்மாவில் உங்களால் எடுக்கப்பட்ட நிழற்படங்கள், The Lizard Cage பிரதியெங்கும் விரவிக் கிடக்கின்றன. பர்மாவில் புகைப்படக்காரராக நீங்கள் இருந்தது பற்றியும், எழுதுவதற்கும் நிழற்படம் எடுப்பதற்குமான உறவுநிலைப் பற்றியும் சிறிது சொல்ல முடியுமா?
ப : புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பொறுத்தவரை, பெரும்பாலான பர்மியர்கள் தாராளமானவர்கள். அனுமதி தந்து விடுவார்கள். எனக்குப் பிடித்தமானது, மனித உருவங்களைப் பதிவு செய்வது; அதிலுள்ள நெருக்கம் ஸ்பரிசிக்கக் கூடியதாய், நெகிழ வைப்பதாய் இருக்கும். சிக்கலானதும், முழுவதும் தனிவகையானதுமான கதை கொண்டுள்ள மனித முகத்தை விடவும் அழகானது எதுவுமில்லை. இந்நாவலின் பல முகங்கள் பல ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்திருப்பவை. தங்களைப் புகைப்படம் எடுக்க விட்டவர்களுக்கு இன்னமும் நன்றி பாராட்டுகிறேன். அவர்கள் இப்புத்தகம் எழுதிட எனக்கு உதவினர்.
படிமங்களில் படிம அழகில் என்னை இழந்திட விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, புகைப்படம் எடுத்தல், கவிதை எழுதுதல் போன்றது. ஆனால் இன்னும வேடிக்கையானது - ஏனெனில் அச்சாதனத்துடன் அதிகம் பரிச்சயம் இல்லை. நான் புகைப்படங்கள் எடுக்கும்போது அவை பரிபூரணமாயிருக்க வேண்டும் என்னும் நெருக்கடி கிடையாது; அதிக வெளிச்சம் பட்டிருக்கலாம் (அ) மங்கி இருக்கலாம், இருப்பினும் அவை எனக்குச் சுவராஸ்யமானவை. தொழில்முறையில் இல்லாத ஆர்வலனின் நேசம் அது. எனது பர்மியப் புகைப்படங்கள் அந்நாடு பற்றிய குறிப்புகளின் காட்சி வரிசைகள் ஆகின. ஏனெனில் ஜிலீமீ லிவீக்ஷ்ணீக்ஷீபீ சிணீரீமீ எழுத நீண்ட காலம் பிடித்தது - அதில் பெரும்பகுதியை ஆசியாவுக்கு வெளியில் எழுதினேன் - பர்மாவுடனான எனது காட்சித் தொடர்பாக என் புகைப்படங்களைச் சார்ந்திருந்தேன். நான் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 1997க்குப் பின் இதுவரை அந்நாட்டுக்குப் போக முடிந்தது - ஒவ்வொரு முறையும் புகைப்படங்கள் எடுத்தது. என் பயணத்தின் முக்கிய அம்சமாயிருந்தது. தீவிர கதியில் புகைப்படம் எடுக்கையில், நீங்கள் கண்ணாகவே ஆகிவிடுகிறீர்கள். அதனை விரும்புகிறேன் - சிந்திக்காமல், பார்த்துக் கொண்டும், இன்னும் சரியாக ஆழமாகப் பார்க்க முயன்று கொண்டும், அலைந்து திரிவதை விரும்புகிறேன். வெளியே வந்து தெருக் காட்சிகளையோ, நிலவியல் காட்சிகளையோ படம் எடுப்பதற்கு, ஒருவர் முற்றிலுமாக திறந்த மனதும் இக்கணம் மீதான கவனக் குவிப்பும் கொண்டிருக்க வேண்டும். அத்தருணம் வரும் வேளையில், அதனை எடுத்திட ஆயத்தமாய் இருக்க வேண்டும். அந்நிகழ்கணமாக, அவ்விழிப்புணர்வாக, அத்திறந்த மனதுடன் எல்லா நேரத்தையும் வாழ்ந்திடவே விரும்புவேன்.
கே : இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ? அடுத்தது என்ன ?
ப : கொஞ்சம் கவிதைகள் உள்ளன. அவற்றை ஒழுங்கமைப் பதற்கான நேரம் இல்லை. தாய்லாந்து - பர்மா பற்றிய கட்டுரைத் தொகுதியும், இன்னொரு நாவலும் எழுதிக் கொண்டிருக்கி««ன். "இறந்து போனவளின் குரலை யார் ஞாபகம் வைத்திருப்பது? " என Lizard Cag இல் இடம் பெறும் வரியிலிருந்து, இந்நாவல் தன் மையக் கருத்தினை எடுத்துக் கொண்டுள்ளது. காணாது போய்விடும் ஒரு பெண்ணைப் பற்றியது ...The Lizard Cage ஓர் ஆண் புத்தகம். அதில் பெண்களின் இருப்பு உணரப்படுவதில்லை. எனது அடுத்த நாவலில் அவர்கள் உயிர்ப்புள்ள இருப்பாக இருக்க விரும்புகிறேன். உயிர்த்திருக்கும் ஒரு பெண்ணே மேலேயுள்ள கேள்வியை வினவுகின்றதாக இருக்கும், அவள் அதற்குரிய விடையைக் கண்டறிவாள் என்றே நம்புகிறேன்.
ஆதாரங்கள் :-
1. Read / september 2005 / Interview with karen connelly by Adrienne Philips
2. Karen Connelly - Gypsy poet / chris Tenove
3. Karen Connelly. ca.
4. Genuine Article / Elaine Kalman Haves / Gazette Montreal Gazette, June 11, 1994.
|